செவ்வாய், 5 மே, 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 24 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

அரங்கனைக் கண்ட கண்கள்


உறையூரில் அன்று வாழ்ந்து வந்த குடிகளில் பாணர் குடியும் ஒன்றாகும். இவர்கள் இசைக் கருவிகளை தயாரிப்பதிலும் இசைப்பதிலும் வல்லவர்கள். அந்தக்காலத்தில் இவர்கள் தாழ்ந்த குலத்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.


ஒரு நாள் பாணன் ஒருவன் அரங்கனின் மீது அருமையான பாடல் ஒன்றினை இசைத்துக் கொண்டே வயல்களின் வரப்பு வழியே சென்று கொண்டிருக்கும்போது ஓங்கி வளர்ந்திருந்த நெற்பயிர்களின் இடையிலே அழகான குழந்தையைக் கண்டான். கடவுள் திருவுள்ளம்தான் இது என்று குழந்தையை அன்போடு மார்பணைத்தபடி வீடு வந்து சேர்ந்தான். பாணனும் அவன் மனைவியும் தங்கள் பிள்ளையில்லாத குறை தீர்ந்ததாகக் கருதி எல்லையற்ற அன்புடன் குழந்தையை வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைதான் திருப்பாணாழ்வார். அரங்கனின் மீது அப்பழுக்கற்ற பக்தி உடையவர். ஆழ்வாரின் திருவவதார நன்னாள் கார்த்திகை ரோகிணி. பகவானின் ஸ்ரீவத்ஸ அம்சமாக அவதரித்தவர்.


“சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண்பெருமாள்” என்பார் அமுதனார். அரங்கன் தமது மேனியழகை ஒவ்வொரு அவயமாகக் காட்டியருள, அதனை வேதாந்தசார விஷயமாக வர்ணித்து “அமலன் ஆதிபிரான்” எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களைப் பாட ஆரம்பித்தார். பாடிய பத்துப் பாசுரங்களும் ரகசியத்ரய அர்த்தத்தையும், அர்த்த பஞ்சக சாரார்த்தத்தையும் சொல்வதால் இப்பிரபந்தத்திற்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும், வேதாந்த தேசிகரும், பெரியவாச்சான் பிள்ளையும் அதி அற்புதமான உரைகளை அருளிச் செய்திருக்கிறார்கள். முதல் மூன்று பாசுரங்களின் அ உ ம என்ற முதலெழுத்துக்கள் வேதசாரமாக ஓங்காரத்தில் அடங்கியுள்ள எழுத்துக்களாய் இருப்பதிலிருந்து வேதாந்தசாரம் இப்பிரபந்தம் என்பது வெளிப்படையாகத் தெரியும்.


பிரமேயசாரம் எம்பெருமானுடைய திருவடியே என்பதை 5,6,7 ஆவது பாசுரங்களின் முதல் எழுத்துக்களால் (பாதுகை) உணர்த்துகின்றார். நடுவில் உள்ள நான்காவது பாசுரத்தின் முதல் எழுத்தான “சீ” பிரமாண சாரத்தையும் பிரமேய சாரத்தையும் இணைத்து வழங்குகின்றது. பத்தாவது பாசுரமான "அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே" என்று உருக்கமாகப் பாட, ஒளிமயமாகிய அவர் ஊன் உடம்பு இறைவனிடத்தில் அப்படியே புகுந்து ஐக்கியமானது. இனி அவர் பாடியருளிய அமலனாதிபிரான் பிரபந்தத்தின் சாரமான விஷயத்தைச் சற்று அனுபவிப்போம்.


வைணவர்களால் பெரிய கோயில் என்று போற்றப்படுவது திருவரங்கம். பெரிய பெருமாள் என்று ஆராதிக்கப்படுபவர் திருவரங்கநாதர். ஆழ்வார்கள் அனைவராலும் போற்றப்பட்ட புண்ணிய மூர்த்தி இவர். இப்படிப் பல்வகையாலும் சிறப்புற்ற திருவரங்கநாதரை திருவடி முதல் திருமுடி வரை பாதாதி கேசமாக வர்ணித்த ஆழ்வார், நிறைவாக அவன் சமுதாய சோபையான முழு அழகையும் அற்புதமாகப் பாடி, அவனோடு லயித்தார். அந்த நிறைவான பாசுரம் இது. 


“கொண்டல் வண்ணனைக் கோவலனாய்
வெண்ணெய் உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை 
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட 
கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”  - அமலனாதிபிரான் 10 


இனி, இந்த பாசுரத்தின் அர்த்த பாவத்தை கொஞ்சம் அனுபவிப்போம். கொண்டல் வண்ணன் என்று பெருமாளை ஆசையோடு அழைக்கிறார். மழைக்குரிய மேகம், கருமையுடன் திரண்டு வரும் போது வாடிய பயிர்கள் எல்லாம் வாட்டம் நீங்குகிறது.


தேடிய மாமுதலாகிய இறைவன் திருவரங்கக் கருவறையில் தன்னை ஆழ்வாருக்குக் காட்டும் போது வாட்டம் நீங்குகிறார் ஆழ்வார். கொண்டல் வண்ணனை என்று அவனுடைய பரம கருணையைச் சொன்னவர், கோவலனாய் என்று அடுத்து அவனுடைய எளிமையையும் எண்ணுகிறார். கண்ணன் பிறப்பதற்கு முன் ஆய்ப்பாடியிலே தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். என்ன புண்ணியம்? அனுபவிக்க ஆள் இல்லை. வெண்ணெய், தாழியில் திரண்டு வீணாகத் தரையில் வழியும். கண்ணன் பிறந்த பின் தான் வெண்ணை வீணாவதில்லை.


"கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆளாயன் கண்ணன்".


பெரிய பெருமாளின் திருவாய் இன்றைக்கும் வெண்ணெய் வாசத்தோடு இருக்குமாம். வெண்ணை ஆய்ச்சியர் கைபட்டது. ஆய்ப்பாடியிலே இடைச்சிகள் வைத்திருந்த வெண்ணெயைக் கவர்ந்தான். இங்கே ஆழ்வாரின் உள்ளத்தைக் (வெண்ணெயைக் கவர்ந்தது போல்) கவர்ந்தான். ஆழ்வாருடைய உள்ளம் பெரிய பெருமாளுக்கு நவநீதம் ஆயிற்று என்பார் ஸ்வாமி தேசிகன். ஞானம் பிறக்குமுன் உள்ளம் நம்முடையது. ஞானம் பிறந்தபின் உள்ளம் இறைவனுடையது.


அதென்ன கவர்ந்தான். அவன் கவர்ந்ததை ஆழ்வார் அறிய வில்லையா...? ஆயர்பாடியிலே என்ன நடந்தது தெரியுமா? உறிகளிலே வெண்ணெய் வைத்து அதனைச் சுருக்குக் கயிற்றில் கட்டி, யாருக்கும் தெரியாத இடத்தில் தொங்கவிட்டு இருப்பார்கள். அது இருக்குமிடம் யாருக்கும் தெரியாது என்பதால் கள்ளக்கயிறு என்று அந்தக் கயிற்றுக்கு பெயர். ஆனால் அந்த உறியை எடுத்தது தெரியாது. கள்ளக் கயிறு உருவியது தெரியாது.


கண்ணனின் கை வண்ணத்திலே கலயம் வெறுங்கலயமாக இருக்கும். கலயமிருக்க வெண்ணெய் களவு போனது அங்கே! (கிருஷ்ணாவதாரத்திலே). இங்கே ஆழ்வாரின் உடல் இருக்கிறது. உள்ளம் கவரப்பட்டு விட்டது. இதைத்தான் “உள்ளம் கவர்ந்தானை” என்று அழகுறப்பாடுகிறார் ஆழ்வார்.

இப்படி கவர்ந்து சென்றவன் சாதாரணமானவனா? அண்டமாம் எண்டிசைக்கும் ஆதியான நீதி தேவன் அல்லவா அவன்? சராசரங்களுக்கெல்லாம் தலைவன்.


பாரினை உண்டவன். பின் உமிழ்ந்தவன். பரவாசுதேவன். கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டானாகிலும் இமையோர்க்கும் எண்ணற்கரியவன். இங்கே சுவாமித்துவமும் ஸ்வாதீனமும் பேசப்படுகிறது. அண்டர் என்பதற்கு இடையர் என்றும் பொருள் உண்டு.


அங்கே அண்டர்கோனான அவனை வணங்க பிரம்மாதி தேவர்கள் தவமாய் தவமிருக்க, இங்கே எளியனாய் ஆயர் குடிலிலே வெண்ணெயைக் களவு கண்டு சுகம் காண்கிறானே, அதனை நினைத்து வியந்து போகிறார் ஆழ்வார்.


யோசித்துப் பார்க்கிறார். அவன் யார்? அரங்கன். அதுவும் நேரில் எதிரில்.


அவதிப்படும் உயிர்கள் தங்களைக் காப்பதற்கு யாருமில்லை என்று நினைத்து விடாதபடி, அவர்களைக் காப்பதற்கென்றே இந்த பொன்னி சூழ் திருவரங்கத்தில் கிடையாய் கிடக்கிறான் என்பதால் "அணி அரங்கன்" என்று அழைக்கிறார் ஆழ்வார். அது மட்டும் அல்ல அமுதம் போன்றவன். அமிழ்தம் - அமுதம் மிக உயர்வான பொருள்.


தேவர்களும் அசுரர்களுமாகத் திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். திருமால் இதற்குப் பேருதவி செய்கிறார். திருமால் அருளால் தேவர்கள் அமுதத்தைப் பெறுகிறார்கள். அது உயர்ந்த பொருளா... என்ன? அமுதம் உண்ட தேவர்களுக்கும் கூட காலக்கிரமத்தில் அழிவு வரத்தானே செய்கிறது. நித்தியப் பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணனே எதிரிலே இருப்பதை அறிந்தும், அவனை அடைய முடியாத அல்லது அடைய விரும்பாத அஞ்ஞானிகளாக ஆகிவிட்ட தேவர்கள். திருப்பாற்கடல் கடைசலில் பெற்ற உப்புச் சாற்றையல்லவோ பயனாகப் பெற்றார்கள். அப்படியானால் உண்மையான அமுதம் எது? ஸ்ரீமந்நாராயணன் என்ற மூல புருஷனுக்கும் வேராக விளங்கும், பரம்பொருளின் அம்சத்துடன் அர்ச்சாரூபமாக யுகம் யுகாந்திரமாக எழுந்தருளியிருக்கும் திருவரங்கச் செல்வன் அல்லவா?


குறைந்தது அமுதத்தினை தேவர்கள் படாதபாடு பட்டுப் பெற்றனர். உயர்வான உண்மை அமுதமோ ஆழ்வாருக்கு எடுத்துப் பருகு என்று தானே வந்தது. தானே வந்த அமுதம் மட்டுமல்ல எடுத்துத்தானே தந்த அமுதம் அரங்கன். அமுதம் சாப்பிட்டவர்களுக்குப் பசிக்காது; பாலையும் சோற்றையும் நாடாது; உயர்ந்த விஷயத்தை ரசித்த பிறகு கேவல விஷயங்கள் சுவைக்காது.


நித்ய தரித்திரனானவன் நிதியைக் கண்டாப்போலே என்பார் ஸ்வாமிதேசிகன் முனிவாஹன போகத்தில். எல்லா திவ்ய தேசங்களையும், எல்லா அவதார குணங்களையும் இணைத்துச் சேவித்த திருப்தியில் தம்மை மறந்து அற்புதமாக திருப்பாணாழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் நம் பிறவி நோயை தீர்க்கும்.


திருப்பாணாழ்வார் வாழ்வு காட்டும் நெறி இது தான். பகவானை உணரவும், பக்தி செலுத்தவும் பிறந்த குலம் தடையாக இருக்க முடியாது. சுயநலமற்ற பக்தனைத் தானே தேடி வந்து தன்னை உணர வைக்கிறான் பகவான். 


திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.


வாழ்க்கை நெறிகள் முற்றும்.


நன்றி - சப்தகிரி டிசம்பர் 2019


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக