ஞாயிறு, 3 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 25 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 14

ஆசார்யனே அடியேனை ஆட்கொள்ள வேண்டும்:

நீர் எல்லாவற்றையும் நம்மிடமே கேட்கிறீர். ஏதோ ஞானத்தைக் கொடுக்க ஆசார்யன் இருக்கின்றேன் என்றால், பாபத்தையும் போக்குவதற்கு, ஶரீரத்தில் ருசி போக்குவதற்கும் நாமே, விஷயாந்தர ப்ராவண்யத்தைப் போக்குவதும் நாமே என்று கேட்கிறீரே? எல்லாம் நாம், நாம் என்கிறீரே, உம் முயற்சி என்ன? நீர் ஏதாவது முயற்சி செய்ய வேண்டாமா? உம் க்ருபையைத் தவிர வேறு எந்த முயற்சியும் என்னால் இயலாது. அடியேன் ஒரு பாதி, தேவரீர் ஒரு பாதி என்றெல்லாம் இல்லை. தேவரீரே வந்து என்னை ஆட்கொள்ளவேண்டும். இதில் ஒரு துளியும் நம்முடையது இல்லை, சக்தியும் இல்லை எனக்கு. அடியேனுக்கு ப்ராப்தியும் இல்லை, சக்தியும் இல்லை. இதைத்தான் 14 மற்றும் 15வது ஸ்லோகத்தில் ஸாதிக்கிறார்.

தங்கள் குற்றங்களை பகவானிடம் சொல்லிக்கொள்ளுங்கள்:

இந்த இரண்டு ஸ்லோகங்களுமே பூர்வாசார்யர்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்களோ அதைப் பற்றிய ஸ்லோகம். கூரத்தாழ்வான், அவருக்கு முன்னால் இருந்த ஆளவந்தார், கூரத்தாழ்வானுடைய திருக்குமாரரான பராசர பட்டர். இவர்கள் மூவருமே தங்கள் கஷ்டத்தைச் சொல்லிச் சொல்லி பகவானிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஒரு வித்யாசம் பார்க்கப் போகிறோம். ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் சொல்லிப் ப்ரார்த்தித்ததும், கூரத்தாழ்வான் வரதராஜஸ்தவத்தில் சொல்லிக் கொண்டதும், பராசர பட்டர் ரங்கராஜஸ்தவம், உத்தர சதகத்தில் சொன்னதும் பகவானைக் குறித்தது. ஆனால் மணவாள மாமுனிகள் இப்பொழுது சொல்லிக் கொண்டிருப்பது ஆசார்யனைக் குறித்தது. வித்யாசம் ஞாபகத்தில் கொள்ளவும். அவர்கள் மூவருமே எம்பெருமானைக் குறித்துப் பாடி இருக்கின்றனர். இவரோ எம்பெருமானாரைக் (ஆசார்யரைக்) குறித்து பாடுகிறார். 

ஆசைப்படுவதற்கு தகுதி வேண்டாம்:

என்னிடம் குற்றங்கள் நிறைய இருக்கிறது. வரவேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது. அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்றால் இல்லை. எத்தனையோ விஷயங்களுக்கு ஆசைப்படலாம். தகுதி இல்லாவிட்டால் ஆசைப் படக்கூடாதா என்ன? அது கிடைக்காம இருந்தா இருக்கட்டும் ஆசைப்படுவதற்கே தகுதி இல்லை என்று எப்படிச் சொல்லலாம். 

திருமங்கை ஆழ்வாருடைய ஆசை:

ஒவ்வொருத்தருக்கும் பகவானை அணைப்பதற்கு தகுதி இருக்கிறது. மஹாலக்ஷ்மிக்கு மட்டும் அல்ல. மஹாலக்ஷ்மி திருமார்பில் இருக்கிறாள். அவரிடம் போய் தைரியமாக உம் கணவரோடே எனக்கு கல்யாணம் செய்து வையும் என்று தைரியமாக நாம் பிரார்த்திக்கலாம். கோவித்துக் கொள்ள மாட்டாரோ. இவன் கேட்கவில்லையே என்றுதான் கோவித்துக் கொள்கிறார். “கடிமாமலர் பாவையோடு சாம்ய ஷட்கத்தாலே” என்று ஆசார்ய ஹ்ருதயத்திலே நாயனார் ஸாதிக்கிறார். திருவிடவெந்தை என்ற திவ்ய தேசம். கடிமாமலர் பாவை. திருமங்கையாழ்வாருக்கு அந்தப் பெருமானிடம் அதீதக் காதல். சென்னையிலிருந்து கிளம்பி மகாபலிபுரம் போகிற மார்க்கத்தில் உள்ள திவ்ய தேசம். நித்ய கல்யாணப் பெருமான். ஆதிவராஹப் பெருமான். தன் இடது திருமடியில் லக்ஷ்மிதேவியை, பூமாதேவியை எழுந்தருளி வைத்துக் கொண்டிருக்கிற பெருமாள்.

அந்தப் பெருமாளிடம்தான் திருமங்கையாழ்வாருக்குக் காதல். ஆழ்வாரை பரகால நாயகி என்று சொல்வர். பெண் பாவம், நாயகி. பெருமானை கல்யாணம் செய்துகொள்ள ஆசை. 

பரகால நாயகியின் திருத்தாயார் சொல்கிறார், “அவர் கல்யாணம் ஆனவர் பெண்ணே. கொஞ்சம் புரிந்துகொள்” என்று சொல்லிச், சொல்லிப் பார்த்தாள், புரிந்துகொள்ளவில்லை. நேரே போய் சேவி. அவர் திருமடியில் மஹாலக்ஷ்மியைப் பார்த்தவுடன் இவர் ஆசையை விட்டுவிடுவார் என்று கருதி தாயார் பரகால நாயகியைக் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். 

போனார் பெருமாளைச் சேவித்தார். வீட்டிற்குத் திரும்பினார். தாயே நாட்குறிக்கலாம் என்றார். 

நிச்சயதார்த்தம் போனவுடன் ஆகிவிட்டது, இனி கல்யாணத்திற்கு நாள் குறிக்கவேண்டியது தான் என்றாள் பரகால நாயகி. ஏதோ தப்பு நடந்திருக்குமோ. போய்ப் பார்த்துக் கல்யாணம் ஆனவர் என்று தெரிந்துகொண்டு வரட்டும் என்றால் இவர் நிச்சயம் ஆயிடுத்து என்கிறாரே. இவர் லக்ஷ்மியைப் பார்க்கவில்லையா. அன்றைக்குப் பார்த்து லக்ஷ்மி பிறந்தகத்துக்கு போயிருந்தாளா? என்று தாயார் சந்தேஹப் பட்டாள்.

நீ நன்றாக சேவிச்சயோ. திருமார்பை நன்றாக ஊன்றி கவனித்தாயோ என்று திரும்ப தாயார் பரகாலனிடம் கேட்கிறாள். அங்க ஒருத்தி உட்கார்ந்திருப்பாளே பார்த்தியோ. அதற்கு ஆழ்வார் சொல்கிறார்,

“திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினில் பிறந்த 
அவளும் நின்னாகத்திருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் 
குவளையங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின்தாள் நயந்திருந்த 
இவளை உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே” 

நான் போய் பார்த்தேன். திருமார்பில் தாயார் அமர்ந்திருந்தாள். அதனாலதான் தாயே கல்யாணம் நிச்சயம். அவளே பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி விட்டாள். மஹாலக்ஷ்மிதேவி நம்மைச் சேர்த்து வைப்பள் என்றால் எல்லோருக்கும் சமமான உரிமை உள்ளது. அனைவரும் பெண்களே. பகவான் புருஷோத்தமன். அவன் திருமார்போடு அணைப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. இருக்கு என்பது தெரியாமல் போய்விட்டதுதான் நம் ஒவ்வொருவருடைய குற்றம். நீர் என் ரக்ஷணத்துக்கு பாடுபட வேண்டுமென்றால் உம்ம க்ருபையைத் தவிர வேறொன்றும் கிடையாது. 

உபயவிபூதியும் உடையவரிடமே:

ஆளவந்தாரும் கூரத்தாழ்வானும் பிரார்த்தித்து இருக்கிறார்கள். நம்மிடம் இத்தனை குற்றங்கள் இருக்கிறது. நீரே ரக்ஷிக்கணும் என்று பிரார்த்திக்கிறார்கள். “உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை பிரானே.” திருமங்கையாழ்வாருடைய பிரார்த்தனை. இப்பொழுது மணவாள மாமுனிகள் கேட்கிறது, “ராமானுஜா நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” பகவான் என்ன நினைக்கிறாரோ நினைக்கட்டும். அவர் ஸ்வதந்திரர். ஆனால் நீர் நினைத்துவிட்டால் அவர் நினைத்துவிடுவார் அன்றோ. உம்மிடம்தான் உடையவர் என்ற பட்டத்தையும் கொடுத்து உபயவிபூதியையும் சொத்தாக ஸ்வாமி கொடுத்திருக்கிறாரே. அப்ப நீர் ஒரு நினைவு நினைத்தால் எதுதான் நடக்காது. பிரம்மரக்ஷஸையும் ஓட்டிவிடுவீர். மோக்ஷத்தையும் கொடுக்கிறீர். அது அத்தனையும் அடியேனிடம் காட்டிவிடக்கூடாதா? 

वाचामगोचरमहागुणदेशिकाग्रयकूराधिनाथकथिताकिलनैच्यपात्रम्।
एषोहमेव न् पुनर्जगतीद्रुशस्तद् रामानुजार्य करुणैव तु मद्गतिस्ते ॥ (14)

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய 
கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம்|
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் 
ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)

ஹே ராமாநுஜார்ய – ஹே ராமாநுஜ ஆர்யரே, ஆர்யரே என்றால் உயர்ந்த குணமுடையவர் என்று அர்த்தம். குணத்தில் தாழ்ந்திருக்கிற எங்களையும் உயர்த்தக் கூடியவர் என்று அர்த்தம். 

மத்கதி: தே கருணா ஏவ – அடியேனுக்கு ஒரே கதி எது தெரியுமோ, உம்முடைய கருணையே எனக்கு கதி, உபாயம்.

வாசாம் அகோசர – (இந்த ஸ்லோகத்தில் கூரத்தாழ்வானைப் பற்றி ஸாதிக்கப் போகிறார்.) மொழியைக் கடக்கும் பெரும் புகழான். வாக்குக்கு எட்டாத பெருமை படைத்தவர். அவருக்கு இருக்கும் சொத்தைச் சொல்லவா? அழகைச் சொல்லவா? ஞானபூர்த்தியை சொல்லவா? 

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் நம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்
பழியைக் கடத்தும் நம் ராமானுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே. 

என்று திருவரங்கத்தமுதானார், (பெரிய கோவில் நம்பி) ராமானுஜ நூற்றந்தாதியில் பாடியிருக்கிறார். இவருக்கு ஆசாரியர் கூரத்தாழ்வான். இந்த பதிகத்தின் 7வது பாசுரத்தில் ஸாதிக்கிறார். மொழியைக் கடக்கும் பெரும் புகழ், வாக்கால் அவர் புகழைப் பாடிவிட முடியாது. ராமனுஜருக்கு ஒரு நாள் சந்தோஷமாம். பெருமாளிடம்போய் கூரத்தாழ்வான், அடியேனுக்கு மோக்ஷம் கொடுக்கவேணும் என்று பிரார்த்தித்தார். கொடுத்தோம் என்றார். அடியேனுடன் ஸம்பந்தப் பட்டவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கொடுத்தோம் கொடுத்தோம் என்றார். 

இந்தசெய்தி ராமானுஜருக்கு எட்டியது. உடனே அவர் நமக்கும் மோக்ஷம் உண்டு என்றாராம். நீர் பெரியநம்பிகளின் சிஷ்யர். உம் சிஷ்யன் அல்லவோ கூரத்தாழ்வான் என்றால் , “சம்பந்தம் இருக்கிறவர்களுக்கும் கொடுக்கிறேன் என்று சொன்னார் அல்லவோ. சம்பந்தம் ஆசார்ய சம்பந்தமாகவோ, சிஷய் சம்பந்தமாகவோ இருக்கலாம். கூரத்தாழ்வான் சம்பந்தத்தால் நான் மோக்ஷம்போனால் கசக்கிறதா. 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக