ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 22 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

சிந்து பூ மகிழும் வேங்கடம்

இதோ பிரம்மோத்ஸவம் வந்து விட்டது. ஒவ்வொரு ஆலயங்களிலும் பிரம்மோத்ஸவம் நடந்தாலும், திருமலை பிரம்மோத்ஸவம் என்பது, உலகப்புகழ் பெற்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். 

எண்ணங்களுக்கும் எட்டாத இறைவன், வண்ணப் பேரழகிலும், வற்றாத வடிவழகிலும், கண் குளிரக் குளிரக் காட்சி தர இருக்கின்றான். மதுரகவியாழ்வாரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும் தவிர அனைத்து ஆழ்வார்களும் இப்பெருமானைப் பாடிப் பரவி இருக்கின்றனர். சுவாமி நம்மாழ்வார், தம்முடைய சரணாகதியைத் திருமலையப்பன் திருவடிகளிலே செய்கிறார். “புகல் ஒன்றும் இல்லாத அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்பது அவருடைய சரணாகதி. விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு நிதியாக விளங்குகின்ற எம்பெருமான், இங்கே நம்மாழ்வாருக்குத் திருக்காட்சி தந்து, சரணாகதியை அங்கீகரிக்கிறான். அதன் விளைவாக, உயிர் இருக்கும் வரை, இந்த எம்பெருமான் திருவடிகளிலே, இடைவிடாது தொண்டு (அடிமை) செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார். மூன்றாம் பத்து மூன்றாம் திருமொழி முதல் பாசுரத்திலே இந்த எண்ணம் அவர் மனதில் ஆழங்கால் பட்டு இருந்ததை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

"ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்"

இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் அர்த்த பாவம் நிறைந்தது. எல்லாக் காலங்களிலும், எல்லா தேசங்களிலும், எல்லா நிலைகளிலும், ஒரு விநாடியும் விடாது, தொண்டு செய்ய வேண்டும் என்று மனம் பாரிக்கிறார்.

இந்தத் தூய தொண்டுக்கு இலக்கணமாக யாரைச் சொல்லலாம். ஆதிசேஷன் அம்சமான இளைய பெருமாளைச் சொல்லலாம். இந்த எண்ணம் தான் வைணவத் தத்துவத்தின் ஆணி வேராகும். சகல சாத்திரங்களின் திரண்ட பொருளாகும். ஆன்மா பெறுகின்ற பேறாகும்.

ஒவ்வொரு ஆத்மாவும் முதலில் தன்னை உணர வேண்டும். அடுத்து தம் தேவையை உணர வேண்டும். தேவை யாரிடம் எங்கே யாரால் நிறைவேறும் என்பதை அறிய வேண்டும். இப்படிப்பட்ட அறிவைப் பெறுவதை வைணவத்தில் ‘அர்த்த பஞ்சக ஞானம் பெறுதல்’ என்று கூறுவார்கள்.

நம்மாழ்வார், முதலில் தன்னுடைய ஆன்மாவின் இயல்பை உணர்கிறார். அதாவது ஆன்மா என்பது எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதற்கே ஏற்பட்டது. அவருக்கே அடிமையானது. சேஷத்துவமே ஆன்ம லட்சணம் என்பதை முதலில் உணர்ந்து கொள்கின்றார்.அவன் தலைவன்; நாம் அடிமை என்பது ஒன்பது வகை உறவில் (நவவித சம்பந்தத்தில்) ஒரு உறவாகச் சொல் வது மரபு. அவனுக்கும் நமக்குமான உறவை தெரிந்து கொள்வதன் மூலம், நாம் மிகப்பெறும் பேறாக அவனுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பினைப் பெறுகிறோம். இதை உணர்த்தி, ஒவ்வொரு ஆன்மாவையும் உய்வு பெற வைப்பதற்காகவே, பகவான் முதலில் சாஸ்திரங்களைக் கொடுத்தான். வேதாந்தங்களைக் கொடுத்தான். இவை யாவும் பயன்படாது போகவே, தானே அவதாரம் செய்தான்.  ஆழ்வார், இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். 


“ஐயோ, பகவான் தந்த அத்தனை வழிகளும் நம் விஷயத்தில் பயனற்றுப் போய்விட்டதே” என்பதை நினைத்து, உள்ளம் வெம்மி துடித்த அவர், இனி இவ்வுலகில் வாழ்ந்து பெறுவது என்? என்று நினைக்கின்ற பொழுது, எம்பெருமான் அவருக்குத் திருமலையப்பனாகக் காட்சி தந்து ஆறுதல் சொல்கின்றான். 

“ஆழ்வீர் கவலைப்படாதீர்! உமக்காகவே நான் இந்தத் திருமலையில் வந்து தங்கி இருக்கின்றேன். நித்ய சூரிகளுக்கும் கிடைக்காத அருட்காட்சியை கொடுப்பதற்காகவே இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். இது உமக்கு எத்தனை அருமை தெரியுமா... உமக்கு மட்டுமல்ல எல்லா ஆன்மாக்களுக்கும் இது என்னை அடைந்து அனுபவிக்கக் கூடிய எளிய நிலையல்லவா...?” 

“மிகுந்த வான் போகம் (மோக்ஷம்) பெறலாம் என்று ஆத்மாக்கள் நினைத்தாலும் கூட அதற்குச் சில தடைகள் உண்டு. 1) முதலில் இந்த உடம்போடு (ப்ராக்ருத) அங்கு செல்ல முடியாது. 2) புற உடம்பும் (ஸ்தூல தேகம்) அக உடம்பும் (சூக்கும தேகம்) ஆகிய விரோதிகள் கழிந்து, அற்புதமானதோர் அப்ராக்ருத தேகம் (புனிதமான அழிவற்ற ஒளி உடம்பு) பெற்றுத்தான், நித்ய விபூதியில் (வைகுந்தத்தில்) கைங்கரியம் செய்ய முடியும். 3) அதற்கு வேண்டிய ஞான, பக்தி வைராக்கியங்களைப் பெற்று வைகுந்தம் சேர்ந்து கிட்டி நிற்பது என்பது எல்லா ஆத்மாக்களுக்கும் அரிதான செயல். ஆனால், அதை எண்ணித் துடிப்பவர்க்கு உபாய உபேயமாக (ஆறும் பேறுமாக) நாமே வந்து இங்கு திருமலையில் காட்சி தந்து கொண்டிருக்கிறோம். இங்கு, நித்ய சூரிகள் சோலைகளும், காடுகளும், மரம், செடி, கொடி, மந்தி, யானை, பறவை, உள்ளிட்ட உயிரினங்களுமாக நம்மோடு இருக்கின்றார்கள். இடைவிடாது, நம் நாமத்தைச் சொல்லுகின்றனர். அழிவில்லாத ஆனந்தமான தொண்டினைச் செய்கின்றனர்.”

“குயில்கள் கீதத்தை இசைக்கின்றன. நறுமணமிக்க பூக்கள் நம் மீது சொரிந்து ஆனந்தம் அடைகின்றன. அருவிகள் நம்மைத் தழுவி நலம் பெறுகின்றன. மலைகளும் நம்மைச் சுமந்து விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஒளிர்ந்து நிற்கின்றன. இங்கே உம் கைங்கர்யத்தை நாம் கொள்ள இருக்கின்றோம்” என்று சொன்ன உடனே ஆழ்வார் மனம் மகிழ்ந்து பாடுகிறார்.

"திருமலையப்பனே சர்வ ரட்சகன்" என உணர்ந்த நம்மாழ்வார், வேங்கட மலையில் தங்கி, திருமலையப்பனுக்கு, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று விரும்பிய விருப்பமே மூன்றாம் பத்து மூன்றாம் திருமொழியாக மலர்கிறது.
எம்பெருமானுக்குத் தான் அடிமை செய்ய வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் அடிமையை செய்வதற்காகத் தான் தன்னுடைய ஏழு தலைமுறையும் இருந்தது என்பதை ஒரு அருமையான பாசுரத்தால் விளக்குகின்றார்.

“எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் 
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே”   - திருவாய் 3.3.2. 

ஆழ்வார், அவர் தந்தை, தந்தைக்கு தந்தை, என்று ஏழு தலைமுறைகளைக் காட்டுகின்றார். காரணம் திருமலையப்பனோடு உள்ள ஒழிக்க “ஒண்ணா உறவு” தலைமுறை தலைமுறையாக வருகிறது. ஆத்மா உணர வேண்டிய அரிதான மெய்யான உறவு இது.

“எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழியாட் செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்” என்று நம்மாழ்வாரின் கருத்தை பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாசுரத்தில் வழி மொழிகிறார். இதிலே - ‘திருவோணத்திருவிழா’ என்பது மறைமுகமாகத் திருமலையப்பனின் பிரம்மோத்ஸவத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பெரியாழ்வார் திருமலையப்பனிடம் கொண்ட ஈடுபாட்டைத் தான் "சென்னியோங்கு தன் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பி" என்று கொண்டாடுகிறார். தந்தையான பெரியாழ்வாரின் அடி ஒற்றி, ஆண்டாள் பிராட்டியும்,

"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தனக்கு 
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்று"

என்று பாடுகிறாள், காரணம் வேங்கடவற்கு என்னை விதி என்று இருந்தவளல்லவா ஆண்டாள். திருமலையானை ஏழுமலையான் என்றே சொல்கிறோம். ஏழு மலைகள் யுகம் யுகமாக அவனைத் தாங்கி நிற்கின்றன.

சேஷாத்திரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி என்றெல்லாம் மலைகளுக்குத் திருநாமமிட்ட பின்னணியைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த பிரம்ம உற்சவத்தில் கருட மலை பகவானைச் சுமப்பதை கருட சேவையாக நாம் அனுபவிக்க இருக்கிறோம்.

அஞ்சனாத்ரி மலை சுமப்பதை அனுமத் வாகனமாக நாம் சேவிக்க இருக்கிறோம். சேஷாத்திரி எனப்படும் ஆதிசேஷன் மலை வடிவம் தாங்கி அஞ்சன வண்ணனைச் சுமப்பதை நாம் பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம் என்று இரண்டு வாகனங்களாகக் காண இருக்கின்றோம். சூரிய, சந்திரர்களும் அவனுடைய அருள் பெற்று ஒளி பெறுவதை, சூரிய பிரபைகளிலும், சந்திர பிரபைகளிலும் காண இருக்கின்றோம். காடுகளில், அவனையே நம்பித் திரிகின்ற யானைகளுக்கும், குதிரைகளுக்கும், அருள் தரும் வள்ளலான அவன் கஜ வாகனத்தின் மீதும், குதிரை வாகனத்தின் மீதும் கோலாகலமாக அமர்ந்து வீதி வலம் காண இருக்கிறான். திருமலையில் இருக்கக்கூடிய சோலைகள், கற்பகச் சோலைகள் என்பதைக் காட்டும் அடையாளமாக, கற்பக விருட்ச வாகனத்தில் காட்சி தர இருக்கின்றான்.

இப்படி உலகத்தின் இயற்கையிலிருந்து, ஒவ்வொரு உயிர்களும், அந்த உத்தமனை அண்டி, அவன் மீது கொண்ட அளவற்ற அன்பால், தொண்டு செய்ய பாரிப்பதைத்தான் "செம்பவள வாயால் திருவேங்கட மென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே" என்று பாடிப்பரவினார் குலசேகர ஆழ்வார். ஒவ்வொரு உயிரையும், அவன் அங்கீகரிக்கிற விதம் தான், பிரம்மோத்ஸவத்தின் வாகனக் காட்சிகளாக விரிகின்றன.

நம்மாழ்வார் இப்பாசுரத்தில் "வானவர் வானவர் கோனொடும்" என்று பாடுகின்றார். இதிலே வானவர் என்பது நித்ய சூரிகளையும், வானவர்கோன் என்பது அந்த நித்ய சூரிகளின் தலைவராகவும், எம்பெருமானுடைய சேனாதிபதியாகவும் விளங்கக்கூடிய விஷ்வக்சேனர் என்கிற சேனை முதலிகளைக் குறிக்கும். வைணவத்திலே எந்த பூஜை, வழிபாடு செய்தாலும் முதல் ஆராதனையானது விஷ்வக்சேனருக்கு உரியது. இறைவனை, "வானின் இளவரசு" என்று ஆழ்வார் கொண்டாடும்போது, எம்பெருமானின் ஆணைகளைப் பெற்று அண்டாதி அண்டங்களுக்கு ஏற்ற சட்ட திட்டங்களையெல்லாம் இயற்றி, மண் நாட்டையும், விண்ணாட்டையும் ஆள்பவர் விஷ்வக்சேனர்.

ஒவ்வொரு வழிபாட்டிலும், அவரை மஞ்சளிலோ, தர்ப்பை கூர்ச்சத்திலோ, நாம் ஆவாகனம் செய்து ஆராதித்த பின்னே தான், பெருமாளிடம் செல்லுகின்றோம். இந்த மரபைத்தான், பிரம்மோத்ஸவத்தின் முதல் நாள் விஷ்வக்சேனர், வீதி புறப்பாடாக நடத்தி, அவர் அனுமதி பெற்று, பெருமாள் புறப்பாடு நடத்துவதைக் காணலாம். இதை ஆழ்வார் காட்டுகின்றார் "வானவர் வானவர் கோனொடும்" என்று.

ஒழிவில் காலமெல்லாம் எம்பெருமானோடு இருப்பதால், அவரோடு சேர்ந்து இந்த பிரம்மோற்சவ காட்சியைக் காணவும், எம்பெருமானுடைய திருவடிவாரத்தில் தஞ்சம் புகும்போது, புருஷகாரம் வேண்டியும், நம்மாழ்வார் சேனை முதலியாராகிய விஷ்வக்சேனரைப்பற்றிக் கொண்டு "வானவர் வானவர் கோனொடும்" என்கிறார். இந்தத் திருமலையில் பூக்கள் சிந்திக்கிடப்பதை "சிந்து பூ மகிழும்" என்கிறார். பூக்கள் தங்களுக்கு கிடைத்த கைங்கர்யப் பேற்றினை எண்ணி மகிழ்ந்து சிந்துகின்றன. இது ஒரு பொருள். இன்னொரு பொருள் உண்டு. அனுபவிக்கப்படும் பொருள் பூக்கள். அனுபவிப்பவன் திருமலையப்பன். மகிழ்ச்சி அனுபவிப்பவனுக்குரியது. இந்தக் கைங்கர்யத்தை அவன் உகந்து ஏற்றுக் கொள்வதால், பூக்கள் கொத்து கொத்தாகச் சிந்தும் திருவேங்கடம் என்றும் எண்ணலாம்.

திருமலையில் பூக்கும் பூக்கள் (சிந்து பூ) எல்லாம் திருமலையப்பனுக்கே உரியது என்பதால் இன்று வரை யாரும் சொந்த உபயோகத்திற்கு அப்பூக்களைப் பயன்படுத்துவதில்லை. இதிலிருந்து நம்மாழ்வார் நமக்குத் தெளிவுபடுத்தும் விஷயம் மூன்று. 1) புஷ்ப கைங்கர்யமே உயர்ந்தது. (சிந்து பூ மகிழும்), 2) திருமலையப்பனுக்கே அத்தொண்டு உரியது. (வழுவிலா அடிமை) 3) அவனை பிரம்மோற்சவத்தில் சேவிப்பது சிறந்தது. (வானவர் கோனொடும்) இப்பாசுரத்தை மனதில் கொண்டு, சிந்து பூ மகிழும் திருவேங்கடம் சென்று, எதிர் வரும் பிரம்மோற்சவத்தில் நம்மாழ்வார் வழி நின்று, திருமலையப்பனைச் சேவித்து அவர் திருவடிகளில் சரணம் புகுவோம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்.....

நன்றி - சப்தகிரி அக்டோபர் 2019

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை