ஐந்தாவது ஸ்கந்தம் – பதினொன்றாவது அத்தியாயம்
(பரதன் ரஹோகணனுக்குத் தத்வோபதேசம் செய்தல்)
ப்ராஹ்மணர் சொல்லுகிறார்:- நீ, ப்ரக்ருதியைக் (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணரான (வேறுபட்டவரான) ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாதவனாயினும் அதை அறிந்தாற்போல் பேசுகின்றாய். ஆகையால் நீ அறிஞர்களில் மிகவும் சிறப்புடையவன் ஆகமாட்டாய். தேஹத்தை (இவ்வுடலை) ஆத்மாவென்று நினைக்கை, ஆத்மாவை ஸ்வதந்த்ரனென்று (தன் விருப்பப்படி செயல்படக்கூடியவன் என்று) நினைக்கை ஆகிய இந்த அஜ்ஞானங்களால் (அறிவின்மையால்) பருமன் இளைப்பு யௌவனம் (இளமை) மூப்பு போதல் வருதல் முதலிய இந்த தர்மங்களை ஆத்மாவினிடத்தில் ஏறிட்டு ஒருவனை ஸ்வாமியாகவும் மற்றொருவனை அவனுக்குத் தாஸனாகவும் ஜனங்கள் வழங்குகிறார்கள். தத்வங்களை அறிந்த பெரியோர்கள் அவர்களுடைய நினைவு தத்வ விசாரத்தினால் (அசேதனமான ப்ரக்ருதி, ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய தத்வங்களைப் பற்றிய சிந்தனை, ஆலோசனை ஆகியவற்றால்) பிறந்ததென்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
க்ருஹஸ்தாச்ரமத்தில் (இல்லற வாழ்வில்) இருப்பவர் அனுஷ்டிக்கத் தக்கவைகளான பலவகை யஜ்ஞாதி கர்மங்களின் விரிவை அறிவிக்கையால் மிகவும் வளர்ந்திருக்கிற வேத வாக்யங்களில் தத்வநிர்ணயம் (எது பரதத்வம் என்பது) பெரும்பாலும் நன்றாக ஏற்படாது. ஸ்வப்னத்தில் (கனவில்) உண்டாகும் அனுபவங்களெல்லாம் அல்பமும் (அளவுடையதாகவும்) அஸ்திரமுமாய் (நெடுநாள் நீடிக்காததாகவும்) இருப்பதை அறிந்து க்ருஹஸ்தாச்ரமத்தைப் பற்றின இஹலோக (இவ்வுலக) ஸுகங்களும் பரலோக (ஸ்வர்கம் போன்ற வேறு உலக) ஸுகங்களும் அங்கனமே அல்பங்களும் அஸ்திரங்களுமாய் இருக்குமாகையால் அவை பற்றத்தகுந்தவை அல்ல என அறியாமல் அவற்றில் விருப்புற்றிருக்கும் புருஷனுக்குப் பெருமை பொருந்திய வேதாந்த வாக்யங்களாலும் தத்வஜ்ஞானம் (தத்வங்களைப் பற்றிய அறிவு) நன்றாக உண்டாகாது. இந்த ஜீவனுடைய மனம் ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களில் ஏதேனுமொன்றால் தொடரப்பெற்றிருக்கும் வரையில் அந்தந்தக் குணங்களுக்குத் தகுந்தபடி ஞானேந்திரியங்கள் மூலமாகவும் கர்மேந்த்ரியங்கள் மூலமாகவும் விளைகிற புண்ய பாப ரூபமான கர்மங்களால் மேன்மையும் தாழ்மையுமான தேஹபந்தத்தைத் (சரீரத்தால் உண்டாகும் உலக வாழ்விலுள்ள பற்றை) தடையின்றி விளைத்துக்கொண்டிருக்கும். வாஸனைக்குட்பட்டு அவற்றிற்குரியபடி வெள்ளம்போல் பெருகுவதும் விகாரமுற்றிருப்பதும் (மாறுபாடு அடைவதும்) பஞ்சபூதங்கள் பதினொரு இந்த்ரியங்கள் ஆகிய பதினாறு த்ரவ்யங்களில் தலைமையுடையதுமாகிய மனம் ஆத்மாக்களுக்குத் தேவ மனுஷ்யாதி சரீரங்களையும் (உடல்களையும்) நாமங்களையும் (உருவங்களையும்) விளைத்து ஜ்ஞானானந்த ஸ்வரூபர்களாகையால் (ஞானம் – அறிவு; ஆனந்தம் – இன்பம் உடையவர்களாகையால்) ஒருவாறாயிருக்கின்ற அவ்வாத்மாக்களை அச்சரீரங்களாலும் ராகத்வேஷாதி (விருப்பு, வேறுப்பு முதலிய) குணங்களாலும் வேறுபட்டவர்போல் தோற்றும்படி செய்கின்றது. இத்தகைய ஸம்ஸாரமாகிற சக்ரத்தில் பர்வத சிகரம்போல அசையாதிருந்து கொண்டு ப்ரக்ருதியின் பரிணாமமான மனமுடைய ஜீவன் தன்னைச் சரீரமாகவுடைய பரமாத்மாவை அணைத்துக்கொண்டிருப்பினும் அவனை அறியாமல், தடுக்கமுடியாதபடி தெய்வாதீனமாய் ஏற்பட்ட துக்கம் ஸுகம் மோஹம் ஆகிற கர்மபலனை அனுபவிக்கின்றான். “நான் தேவன், நான் மனுஷ்யன், நான் பருத்திருக்கிறேன், இளைத்திருக்கிறேன்” என்று வெளியாகாரத்தைப் (வெளியில் தெரியும் உருவத்தைப்) பற்றின வ்யவஹாரங்களும் (நடத்தை, வ்யாபாரங்களும்) “நான் ஸுகிக்கிறேன், நான் துக்கிக்கிறேன்” என்ற உள் ஆகாரத்தைப் (மனதைப்) பற்றின ஸூக்ஷ்ம (வெளியில் தெரியாத) வ்யவஹாரங்களும், தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்ற தவறான அறிவால்) உண்டானவை.
தேவத்வ மனுஷயத்வாதிகளும் பருமன் இளைப்பு முதலியவைகளும் ஸுகதுக்காதிகளும் தேஹ (உடலின்) தர்மங்களேயாயினும் மூடஜனங்கள் அஜ்ஞானத்தினால் அவற்றை ஜ்ஞானானந்த ஸ்வரூபனான ஆத்மாவினிடத்தில் ஏறிட்டுச் சொல்லுகிறார்கள். அந்த அஜ்ஞானம், மனோமூலமான இக்கர்ம ஸம்பந்தம் மாறாதவரையில் நீங்காது. ஆகையால் தாழ்மையான ஸம்ஸாரத்திற்கும் மேன்மையான மோக்ஷத்திற்கும், மேன்மைக்கிடமான தேவாதி தேஹங்களைப் பெறுதற்கும் தாழ்மைக்கிடமான பசு பக்ஷி முதலிய தேஹங்களைப் பெறுதற்கும் இம்மனமே காரணமென்று சொல்லுகிறார்கள். மனம் ஸத்வாதி (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற) மூன்று குணங்களால் தீண்டப்பட்டு அக்குணங்களுக்குரிய செயல்களில் ஆழ்ந்திருக்குமாயின் பல துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்திற்கும், குணங்களால் தீண்டப்பெறாமல் செயலற்றிருக்குமாயின் மஹாநந்த ரூபமான மோக்ஷத்திற்கும் காரணமாம். விளக்கு நெய்யில் நனைத்த திரியில் பற்றி எரியுமாயின் புகையோடு கூடின ஜ்வாலையைப் (தீக்கொழுந்தைப்) பெறுகின்றது. அங்கனமே மனது ஸத்வாதி குணங்களால் தீண்டப்பட்டுப் புண்ய பாப கர்மங்களால் கலக்கமுற்று ராகத்வேஷாதிகளையும் (விருப்பு, வெறுப்புகளையும்), குணங்களால் தீண்டப்படாமல் செயலற்றிருக்குமாயின் தனக்கு இயற்கையான சுத்த ஸத்வத்தையும் பெறுகின்றது. மனத்திற்குப் பதினொரு வியாபாரங்கள் உண்டு. அவற்றில் ஐந்து கர்மேந்திரியங்களின் மூலமாய் உண்டாகின்றன, அவை க்ரியாரூபமாயிருக்கும். ஐந்து ஞானேந்திரியங்களின் மூலமாய் உண்டாகின்றன. அவை ஜ்ஞானரூபமாயிருக்கும். மற்றொன்று அஹங்கார (நான்) மமகாராதி (எனது) ரூபமாயிருக்கும். சப்தாதி விஷயங்களைந்தும் (ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை, மணம்) கர்மங்களைந்தும் சரீரமொன்றுமாகிய இப்பதினொன்றும் மனோ வ்யாபாரங்கள் பதினொன்றுக்கும் விஷயங்களென்று சொல்லுகிறார்கள். ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை, மணம் இவ்வைந்தும் ஜ்ஞானேந்த்ரியங்களின் மூலமான மனோவ்யாபாரங்களின் விஷயங்கள். மலத்தை விடுதல், ஸம்போகம் (ஆண் பெண் சேர்க்கை), நடை, பேச்சு, பிடித்தல்/விடுதல் இவ்வைந்தும் கர்மேந்திரியங்களின் மூலமான மனோவ்யாபாரங்களுக்கு விஷயங்களாம். சரீரத்தை என்னுடையதென்று நினைக்கை மனத்திற்கு நேரே உண்டாகும் வ்யாபாரம். அதற்கு சரீரம் விஷயம். தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை மனத்திற்குப் பன்னிரண்டாம் வ்யாபாரமென்றும், இது நேரே உண்டாகிறதென்றும், இதற்குச் சரீரம் விஷயமென்றும் சிலர் சொல்லுகிறார்கள்.
ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்கள், அவற்றின் ஸ்வபாவம் வாஸனை புண்யபாபகர்மங்கள் காலம் இவைகளால் இந்த மனத்தின் வ்யாபாரங்கள் பதினொன்றும், “நான்” உம் பலஆயிரமும் கோடியுமாகின்றன. இவை கேவல (வெறும்) மனத்தின் கார்யங்களன்று. ஜீவனால் அதிஷ்டானம் செய்யப்பெற்ற (நியமிக்கப்படும்) மனத்தின் கார்யங்கள். ஜீவனுடைய அதிஷ்டானத்தினால் மனத்திற்கு உண்டாகின்றனவன்றி மனத்தினுடைய அதிஷ்டானத்தினால் ஜீவனுக்கு உண்டாகின்றனவன்று. ஆனால் ஜீவனுடைய அதிஷ்டானம் இருந்தாலும் தானே உண்டாகமாட்டாது. கர்மஸம்பந்தமே இவற்றிற்குக்காரணம். அசுத்தமான கர்மங்களைச் செய்வதும் அவற்றின் பலன்களை அனுபவிப்பதுமாயிருக்கிற ஜீவனால் அதிஷ்டானம் செய்யப்பெற்ற மனத்தில் ப்ரக்ருதியின் மூலமாய் உண்டாகிற இந்த வியாபாரங்கள் ப்ரவாஹம்போல் (ஓடும் வெள்ளம் போல்) நித்யமாயிருக்கும். ஒருகால் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுது) தோற்றி, ஒருகால் (உறங்கும் பொழுது) மறைந்திருக்கும், பரமாத்மா இம்மனோ வ்யாபாரங்களைப் பரிசுத்தனாகவே பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்பரமாத்மா சரீரத்தை உள்ளபடி அறிந்தவன்; ப்ரக்ருதி புருஷர்களுக்கு உள்ளே புகுந்து நியமித்துத் தரிப்பவன்; ஜகத்திற்கெல்லாம் ஆதிகாரணனான புராணபுருஷன் ஸ்வயம்ப்ரகாசன். அத்தன்மை ஜீவனுக்கும் உண்டேயாயினும் அது பரமாத்மவின் நித்ய ஸங்கல்பத்தினால் உண்டானது. பரமாத்மாவிற்குள்ள ஸ்வயம் ப்ரகாசத்வம் மற்றொருவனுடைய ஸங்கல்பத்தினால் உண்டானதன்று. இயற்கையாகவே ஏற்பட்டிருக்கும். மற்றும், அவன் பிறவியற்றவன்; மேன்மையுடைய ப்ரஹ்மாதிகளுக்கும் ஈச்வரன். நாராயணன், பகவான் வாஸுதேவனென்னும் இந்நாமங்கள் அவனுக்கு அஸாதாரணமாயிருப்பவை. அவன் தனது ஆச்சர்ய சக்தியால் ஜீவனுக்குள் புகுந்து மறைந்திருப்பவன்; வாயு ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த பூதங்களிலும் தன் ஸ்வரூபத்தினால் உட்புகுந்து அவற்றைத் தூண்டுவதுபோல், ஷாட்குண்ய பூர்ணனான வாஸுதேவன் சேதனாசேதன ரூபமான இந்த ஜகத்திற்குள் புகுந்து நிறைந்து நியமித்துக் கொண்டிருக்கிறான்.
மன்னவனே! அஹங்கார (நான்) மமகார (எனது) ரூபமான இந்த மாயையை ஜ்ஞானோதயத்தினால் போக்கி, தேஹம் வீடு முதலியவற்றில் பற்றின்றிப் பஞ்சேந்திரியங்களும் மனமுமாகிய ஆறு சத்ருக்களையும் வென்று பரமாத்மாவின் உண்மையை அறியாதவரையில் ஜீவன் இந்த ஸம்ஸாரத்தில் சுற்றிக்கொண்டிருப்பான். ஸம்ஸார தாபங்களுக்கு விளை நிலமும் ஜீவனுடைய ஸம்ஸார மோக்ஷங்களுக்குக் காரணமுமாகிய இம்மனத்துக்கு மமகாரமும் அதைத் தொடர்ந்த சோகம் (துக்கம்), மோஹம் (அறியாமை, மயக்கம்), வியாதி (நோய்), ராகம் (விருப்பு), லோபம் (பேராசை), வைரம் (விரோதம், வெறுப்பு) ஆகிய இவைகளும் மாறப்பெறாதிருக்கும் வரையில் ஜீவன் பரமாத்ம தத்வத்தை அறிய வல்லவனாக மாட்டான். ஆகையால் மனம் ஜீவனுக்கு ஸஹஜ (இயற்கையாகவே அமைந்த, கூடவே பிறந்த) சத்ரு; அடக்காமல் உபேக்ஷித்தமையால் (அலட்சியமாக இருந்ததால்) மேன்மேலும் வளர்ந்திருக்கின்றது; ஆகையால் அழிவில்லாத பெருவீர்யமுடையது; மாயையான பொய்யான தோற்றமுடைய இந்த மனது ஆத்மாவைத் திருடி பறித்துக்கொண்டு போய்விடும். இத்தகைய மனத்தை நீ ஸ்வயமாகவே ஆசார்யஸ்வரூபியான பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகையாகிற அஸ்த்ரத்தினால் வதம் செய்வாயாக.
பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.