ஆடுகிறான் கண்ணன்
அன்று இரவும் அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறதா என்று கவனிப்பதற்காக கிருஷ்ண பக்தரான ரகுநாதர் உறங்காமல் காத்திருந்தார். திருப்பதியில், கணிகை புரந்தரி வீட்டில் தானே அவர், சில நாட்களாகத் தங்கியிருக்கிறார்!
இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். வழக்கம்போல் புரந்தரி அழகாக ஒப்பனை செய்துகொண்டாள். கூந்தலில் பூச்சரம் சூடி, கையில் வீணையை எடுத்துக்கொண்டாள். வாயில் கதவை மெதுவாய்த் திறந்து வீணையோடு வெளியே நடந்தாள்.
உறங்குவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்த ரகுநாதர் கடைக்கண்ணால் பார்த்தார். புரந்தரியின் முகத்தில் தென்பட்ட தூய ஒளியைக் கண்டு அவளை வணங்க வேண்டும்போல் தோன்றியது. வீணையோடு அவள் செல்லும் காட்சி வீணையே வீணையைத் தூக்கிக் கொண்டு நடப்பதுபோல் தோற்றமளித்தது.
அர்த்தராத்திரியில் அவள் வழக்கம்போல் அன்றும் எங்கோ செல்வது கண்டு அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்....
கர்நாடக சங்கீதத்தில் பெரும்புலமை பெற்றவர் ரகுநாதர். புரந்தரியின் பாட்டு அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. கோடிக்குயில்களின் குரலைச் சேர்த்துக் குழைத்தாலும் அவளது ஒரு குரலின் தேனினிமைக்கு ஈடாகாதே!
ரகுநாதர் கர்நாடக இசை வல்லுநர் மட்டுமல்ல, திருப்பதிக்கு, ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்திருப்பதும், அவரது சொந்தப் பிரதேசமான கர்நாடக மாநிலத்திலிருந்துதான். ஏழுமலையானை தரிசனம் செய்வது அவரது வாழ்நாள் வேட்கை. இப்போதுதான் வேளை வாய்த்தது. வெகுநாள் பயணம் செய்து திருப்பதி வந்து சேர்ந்தார். ஏழுமலையானை தரிசித்தார். வேங்கடவன், "இன்னும் கொஞ்சநாள் இங்கேயே இருந்து என்னைக் கண்ணாரக் காண்" என்று சொல்வதுபோல் நகைத்தான். அவருக்கு வேங்கடவனை உடனே பிரிய மனமில்லை.
ஆனால், திருப்பதியில் எங்கே தங்குவது? அவர் தங்குமிடம் தேடித் தவித்தபோதுதான் அந்த மதுரகானம் செவியில் விழுந்தது. யார் இந்த தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர் என்றறியும் விருப்பத்தோடு, குரல் வந்த வீட்டில் படியேறினார்.
அங்கே ஓர் இளம்பெண் இசையாராதனை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கையில் வீணையை மீட்டியவாறு அவள் பாடியபோது எது வீணையின் நாதம், எது அவள் குரல் என்று கண்டறிவது சிரமமாக இருந்தது!
நெற்றியில் திருமண் துலங்க, அவர் வீட்டின் உள்ளே வந்தது கண்டு அவள் வீணையைக் கீழே வைத்துவிட்டு அவரை நமஸ்கரித்தாள்.
"சுவாமி! என் பெயர் புரந்தரி. வேங்கடவனின் அடியாள்! ஒரு கிருஷ்ண பக்தை! திருமால் அடியவரான தங்கள் வருகையால் என் இல்லம் புனிதமடைந்தது''.
"பெண்ணே! உன் குரலும் இசையும் பிரமாதம். நான் கர்நாடகப் பிரதேசத்திலிருந்து வேங்கடவன் தரிசனத்திற்காகத் திருப்பதி வந்தேன். நானும் இசைப் பாடல்களால் கண்ணனை ஆராதிப்பவன் தான். நீ பாடியும் யாழிசைத்தும் ஆராதிக்கிறாய். நான் எழுதியும் பாடியும் போற்றுகிறேன். திருப்பதியில் மேலும் சில நாட்கள் தங்கி வேங்கடவனைக் காண ஆவல். ஆனால், எங்கு தங்குவதுஎன்றுதான் தெரியவில்லை''.
"என் இல்லத்திலேயே தங்கலாமே சுவாமி? ஆனால், நான் கணிகை குலத்தவள். என் குலம் கருதித் தாங்கள் தயங்குவீர்களோ என்னவோ?''
"கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் ஒரே குலம்தான் பெண்ணே! நீ என் மகளைப் போன்றவள். இங்கேயே சில நாட்கள் தங்கிக் கொள்கிறேன். உன் பக்தி கலந்த பாடல்கள் என் செவிக்குணவு''.
"வயிற்றுக்குணவு பற்றியும் கவலை வேண்டாம். எனக்குத் தயார் செய்வதில் உங்களுக்கும் சிறிது பரிமாறக் கிட்டுவது என் பாக்கியம்!''
இப்படியாக அவர் அங்கே தங்கலானார். புரந்தரியின் விருந்தோம்பலோடு, வேங்கடவன் தரிசனமும் அடிக்கடிக் கிட்டியது. கலிநாளுக்கிரங்கி, கல்லிலே இறங்கி, நிலையாகக் கோயிலில் நிற்கின்ற கோவிந்தனைக் கண்டபோதெல்லாம் அவர் விழிகளில் பக்திக் கண்ணீர் பெருகியது.
"எல்லாம் சரி. ஆனால், இந்தப் புரந்தரி வீட்டில் நாம் தங்கியிருப்பது சரியா? இவளோ கணிகைக் குலத்தவள். இவளைத் தேடி இரவில் யாரும் வருவார்களோ! நாம் இருப்பதால் அவ்விதம் அவர்களால் வரமுடியவில்லையோ? அதனால்தான் அவர்களைத் தேடி, புரந்தரி நள்ளிரவில் வெளியே செல்கிறாளோ? நள்ளிரவில் அவள் வெளியே செல்வதன் பின்னணி என்ன?...''
ரகுநாதர் பல்வேறு சிந்தனைகளுடன் உறங்கிவிட்டார். மறுநாள், அவர் எழுந்திருக்கும்போது புரந்தரி, அவருக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள்.
புரந்தரி! நான் ஒன்று கேட்டால் நீ வெளிப்படையாகப் பதில் சொல்ல வேண்டும்!
புரந்தரி கலகலவென நகைத்தாள்.
"நாள்தோறும் இரவில் நான் வெளியே செல்வது பற்றிக் கேட்கப் போகிறீர்கள். அப்படித்தானே?''
ரகுநாதர் அவளது புத்திக்கூர்மையை வியந்தார்.
"ஆம். அதுவே தான்''.
"சுவாமி! தாங்களும் கிருஷ்ண பக்தர். நான் சொல்லும் இச்செய்தி அந்தரங்கமானது. வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இந்த ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் இருக்கிறார். அவருக்கு என் பாடலில் நாட்டம். நான் பாடும்போது என் பாடலுக்கேற்ப அவர் ஆடி மகிழ்வார். உண்மையில், அவரது தங்கை கணவர் தான் பெரிய நடனக் கலைஞர். என்றாலும் இவரும் அவ்வப்போது ஆடுவதுண்டு. நான் கணிகையர் குலத்தில் பிறந்தாலும், இந்த ஒரு செல்வந்தரை மட்டுமே சார்ந்திருக்கிறேன். எனக்குத் தேவையான எல்லாவற்றையும் அவரே தந்துவிடுகிறார். நாள்தோறும் இரவில் நான் வந்து பாடவேண்டும். அதற்கு அவர் மகிழ்ச்சியோடு ஆடுவார். இதுவே எங்களிடையேயான ஒப்பந்தம். தாங்கள் விரும்பினால் இன்றிரவு என்னுடன் வந்து அவரது நடனத்தைக் காணலாம்''.
ரகுநாதர் திகைப்புடன் கேட்டார்.
"அவர் வீடு எங்கே இருக்கிறது?''
"இந்த ஊரிலேயே பெரிய வீடு அவருடையதுதான்!''
அன்று நள்ளிரவில் கையில் வீணையோடு நடந்த புரந்தரியைப் பின்பற்றித் தாமும் நடந்தார் ரகுநாதர். புரந்தரி வேங்கடவன் கோயில் முன் போய் நின்றாள். அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. பூட்டியிருந்த ஆலயக் கதவுகள் தாமே திறந்துகொண்டன. அவள் உள்ளே புகுந்தபோது சடாரென ரகுநாதரும் உள்ளே சென்றார். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் ஒரு தூணின் மறைவில் காத்திருந்தார்.
புரந்தரி தரையில் அமர்ந்து வீணை இசைத்தவாறே, கண்ணனைப் பற்றிப் பாடலானாள். அப்போது ஜல் ஜல் எனச் சலங்கைகளின் ஒலி கேட்டது. ரகுநாதர் மெதுவாகத் தூண் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தார். அவர் உடல் புல்லரித்தது.
தலையில் மயில் பீலி. இடையில் பட்டுப் பீதாம்பரம். அதில் செருகிய புல்லாங்குழல். காதில் குண்டலங்கள். கண்விழிகள் இரண்டும் கண்ணனுக்குப் பிடித்த நாவல் பழங்களைப் போல் உருண்டன. பிள்ளையார் எறும்பு வரிசை போல் மெல்லிய புருவங்கள்! நீலத்தாமரைப் பூப்போன்ற கன்னங்கள்! ரோஜாப் பூப்போன்ற உதடுகள்! இடுப்பில் கைவைத்துக் கொண்டு பாலகிருஷ்ணன் குதித்தபடி ஆடலானான். அவன் ஆடிய அழகில் உலகமே சொக்குமென்றால் ரகுநாதரின் மனம் சொக்காதா! ரகுநாதர் விழிகளால் அந்தக் காட்சியைப் பருகி ஆனந்தம் கொண்டார்.
சற்று நேரம் கடந்தது. புரந்தரியின் இசை நன்றாகத்தான் தேன்போல் செவிகளில் பாய்ந்து கொண்டிருந்தது. திடீரென அவள் சங்கீதத்தில் அபஸ்வரம் தட்டியது. ரகுநாதரின் இசை மனம் அபஸ்வரத்தைக் கேட்டுப் பதறியது. இறைவன் ஆடும்போது பாடலில் அபஸ்வரம் தட்டலாமா?
"புரந்தரி! என்ன இது? என் கண்ணன் ஆடும்போது அபஸ்வரத்தோடு பாடுகிறாய்?''
சீற்றத்தோடு கூவியவாறே தூணின் மறைவிலிருந்து வெளிப்பட்டார். கண்ணன் ஆட்டத்தை நிறுத்தினான். அவரையே கனிவோடு பார்த்தான். மறுகணம் பார்வையிலிருந்து மறைந்தான்.
"என் கண்ணனை எங்கே காணோம்?'' - ரகுநாதர் கதறி அழுதார். புரந்தரி அவரை சமாதானப் படுத்தினாள்.
"சுவாமி! உங்கள் பக்தியின் மேன்மையை நான் அறிவேன். நீங்கள் ஒளிந்திருந்து கண்ணனைப் பார்த்தால் போதாது. நேரில் காணவேண்டும் என விரும்பினேன். கண்ணனும் உங்களை நேரில் பார்த்துத் தன் கடாட்சத்தை உங்களுக்கு அருள வேண்டும் என்றும் எண்ணினேன்.
என் இசையின் அபஸ்வரம், அறியாமல் தானாக நேர்ந்ததல்ல சுவாமி! அறிந்து நானே உண்டு பண்ணியது. உங்கள் இசைமனம் அபஸ்வரத்தைத் தாங்காது என்பதை அறிவேன். நான் எதிர்பார்த்தது போலவே நீங்கள் தூண் மறைவிலிருந்து வெளிப்பட்டு நேரில் வந்து கிருஷ்ண தரிசனம் பெற்றீர்கள். தூணிலிருந்து கண்ணன் மட்டும்தான் நரசிம்மமாக வெளிப்படுவானா என்ன! தூண் மறைவிலிருந்து பக்தரும் கூட வெளிப்படலாம் அல்லவா!''
புரந்தரி கலகலவென மகிழ்ச்சியுடன் நகைத்தாள்.
"எனக்குக் கிருஷ்ண தரிசனம் செய்துவைத்த நீயே என் குரு. இனி ரகுநாதன் என்ற என் பெயரை உன் நினைவாக புரந்தரதாசன் என்று மாற்றிக் கொண்டுவிட்டேன்,'' என்று சொல்லி நெகிழ்ந்தார் புரந்தரதாசர்.
"தாசி குலத்தைச் சேர்ந்த எனக்கும் ஒரு தாசரா! எல்லாம் கண்ணன் அருள். குலம் பாராது அருள்செய்பவன் அல்லவா அவன்!'' என நெகிழ்ந்தாள் புரந்தரி.
"கிருஷ்ணா நீ பேகனே பாரோ! - கிருஷ்ணா நீ விரைவாக வருவாய்" என்று யமுனா கல்யாணி ராகத்தில் புரந்தரதாசர் பாடிய உன்னதமான கீர்த்தனை திருப்பதி ஆலயப் பிரகாரங்களில் எதிரொலித்தது.
நன்றி - தினமலர் ஆகஸ்டு 2012