ஏழாவது ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்
(ஹிரண்யகசிபுவின் வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)
நாரதர் சொல்லுகிறார்:- தேவதைகளிடத்தில் பக்ஷபாதமுடைய (சார்ந்த) பகவான், வராஹ உருவங்கொண்டு தன் ப்ராதாவான (ஸஹோதரனான) ஹிரண்யாக்ஷனை வதிக்கையில், ஹிரண்யகசிபு கோபத்தினாலும், சோகத்தினாலும் பரிதவித்தான். அவன் கோபத்தினால் உதட்டைக் கடித்து, கண்கள் மிகவும் ஜ்வலிக்கப் பெற்றுக் கோபாக்னியின் புகையால் அழுக்கடைந்த ஆகாயத்தைப் பார்த்துப் பயங்கரமான கோரைப் பற்களாலும், கொடிய கண்ணோக்கத்தினாலும் பார்க்க முடியாமல் புருவ நெரிப்புடன் கூடின முகமுடையவனாகி, ஸபையில் சூலத்தை உயரத் தூக்கிக்கொண்டு, தானவர்களைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான். “ஓ தானவர்களே! தைத்யர்களே! த்ரிமூர்த்தனே! த்ரியக்ஷனே! சம்பரா! சதபாஹூ! ஹயக்ரீவா! நமுசீ! பாகனே! இல்வலா! விப்ரசித்தீ! புலோமா! மற்றும், சகுனாதிகளே, நீங்கள் எல்லோரும் என் வார்த்தையைக் கேட்பீர்களாக. உடனே நான் சொன்னபடியும் செய்வீர்களாக. காலதாமதம் செய்யவேண்டாம்.
ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர் கூட்டத்திலும், அஸுரர் கூட்டத்திலும் ஸமனாயிருப்பவன். ஆயினும், நமது சத்ருக்களான தேவதைகள், ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் அணுகிப் பழகுவது, சேவை புரிவது இவற்றின் வாயிலாகத் தேவர்கள் அவரை அனுவர்த்தித்துத் (பின்பற்றித்) தங்களுக்கு ஸஹாயமாக (உதவியாக) ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் பலத்தில் அற்பர்களாயினும் (குறைந்தவர்களாயினும்), அவனைக்கொண்டு எனது நண்பனும், அன்புள்ள சகோதரனுமாகிய ஹிரண்யாக்ஷனைக் கொல்வித்தார்கள். ஸூர்யன் போல் தேஜோமயமான உருவமுடையவனாயினும், மாயையினால் வராஹ உருவங்கொண்டு, தனக்கு இயற்கையான தேவதாரூபத்தைத் துறந்து தன்னைத் தொடர்கிறவனைத் தொடர்ந்து, பாலன் போல் மன நிலைமையின்றி, என் ப்ராதாவைக் கொன்ற அவ்விஷ்ணுவின் கழுத்தை என் சூலத்தினால் முறித்து, நான் மன வருத்தம் தீர்ந்து, அந்த ரக்த ப்ரவாஹத்தினால் (ரத்த வெள்ளத்தினால்), ரக்தத்தில் (ரத்தத்தில்) ப்ரீதியுடைய என் ப்ராதாவை த்ருப்தி அடையச் செய்யும் வரையில், நீங்கள் ப்ராஹ்மணர்களும், க்ஷத்ரியர்களும் நிறைந்த பூமியில் சென்று, தவம், யாகம், வேதம் ஓதுதல், விரதம், தானம் முதலிய தர்மங்களைச் செய்யும் தன்மையுடையவர்கள் அனைவரையும் வதித்துக் கொண்டிருப்பீர்களாக.
நமது சத்ருவும், தேவதைகளுக்கு ஆதாரபூதனுமாகிய அவ்விஷ்ணு முடிந்து போவானாயின், வ்ருக்ஷத்தின் வேரைக் களைந்தால் அதன் கிளைகள் தாமே உலர்ந்து வாடுவது போல, அவ்விஷ்ணுவையே ப்ராணனாகவுடைய தேவதைகள், தாமே நசித்துப் போவார்கள். ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ராஹ்மணர்கள் செய்யும் ஸந்த்யாவந்தனாதி கர்மங்களையே வேராகவுடையவன்; யஜ்ஞ, தர்ம ஸ்வரூபன். அவன் ச்ருதிகளிலும், ஸ்ம்ருதிகளிலும் சொல்லப்பட்ட தர்மங்களையே சரீரமாகவுடையவன். தேவதைகளையும், ரிஷிகளையும், பித்ருக்களையும், மற்ற பூதங்களையும் குறித்துச் செய்கிற தர்மங்களையெல்லாம் அவனே நிறைவேற்றுகிறான். ஆகையால், ப்ராஹ்மணர்களையும் யஜ்ஞ, தானாதி தர்மங்களையும் அழித்தால், அவற்றைச் சரீரமாகவுடைய விஷ்ணுவும் அழிந்து போவான்.
விஷ்ணுவின் நாசத்தினாலும், யஜ்ஞங்களில் கொடுக்கிற சரு, புரோடாசம் (யாகங்களில் அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருட்கள்) முதலிய ஹவிர்ப்பாகமாகிற ஜீவனமில்லாமையாலும், தேவதைகள் தாமே அழிந்து போவார்கள். ஆகையால், எந்தெந்த இடங்களில் ப்ராஹ்மணர்கள் வாஸம் செய்கின்றார்களோ, பசுக்கள் இருக்கின்றனவோ, வேதங்களும் வர்ணாச்ரம தர்மங்களும் நடக்கின்றனவோ, அந்தந்த தேசங்களுக்குச் சென்று அவற்றைக் கொளுத்துங்கள். வேருடன் பிடுங்கிப் பாழ்செய்யுங்கள்” என்றான்.
அவர்களும், தம் ப்ரபுவின் கட்டளையை ப்ரீதியுடன் தலையால் தரித்து, ப்ராணி ஹிம்ஸையில் ப்ரீதியுடையவர்களாகையால், ப்ரஜைகளை ஹிம்ஸித்தார்கள். கடைத்தெருவுள்ள பெரிய க்ராமங்களையும், அஃதில்லாத ஸாதாரண க்ராமங்களையும், பசுக்கள் இருக்குமிடங்களையும், வைத்து வளர்த்த உத்யானங்களையும் (தோட்டங்களையும்), கழனிகளையும் (வயல்களையும்) வைத்து வளர்க்காத தோட்டங்களையும், ஆச்ரமங்களையும், ரத்னங்கள் விளையுமிடங்களையும், பயிர்செய்பவர் வஸிக்கும் க்ராமங்களையும், மலைச் செறிவுகளிலுள்ள க்ராமங்களையும், இடைச்சேரிகளையும், பட்டணங்களையும், சிலர் கொளுத்தினார்கள். சிலர் மண் வெட்டி முதலியவற்றால் அணைக்கட்டுகளையும், மதிள்களையும், கோபுரங்களையும் இடித்தார்கள். சிலர், கோடாலிகளைக் கையில் ஏந்தி காய், பழம் முதலியவற்றால் ப்ராணிகளுக்கு உபயோகப்படுகிற வ்ருக்ஷங்களை வெட்டித்தள்ளினார்கள். சிலர், வீடுகளைக் கொளுத்தினார்கள். மற்றும் சிலர், கொள்ளிக்கட்டைகளால் ஜனங்களை எரித்தார்கள். இவ்வாறு, ஹிரண்யகசிபுவின் ப்ருத்யர்கள் (சேவகர்கள்), மூன்று லோகங்களையும் பீடித்துக்கொண்டிருக்கையில், தேவதைகள் அனைவரும் ஸ்வர்க்கத்தைத் துறந்து, அஸுரர்களுக்குத் தெரியாதபடி பூமியில் ஆங்காங்கு ஸஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு தேச காலங்களை அறிந்த அஸுர ச்ரேஷ்டனான ஹிரண்யகசிபு, மனவருத்தத்துடன், மரணம் அடைந்த தன் ப்ராதாவான ஹிரண்யாக்ஷனுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் முதலிய கார்யங்களைச் செய்து முடித்து, சகுனி, சம்பரன், த்ருஷ்டன், பூதஸந்தாபனன், வ்ருகன், காலநாபன், மஹாநாபன், ஹரிச்மச்ரு, மதோத்கசன் என்கிற அவன் பிள்ளைகளையும். தன் தம்பியின் பார்யையாகிய ருஷத்பானுவையும், தன் தாயான திதியையும் இனிய உரைகளால் இவ்வாறு ஸமாதானப்படுத்தினான்.
ஹிரண்யகசிபு சொல்லுகிறான்:- ஓ அன்னையே! ஓ மருமகளே! ஓ புதல்வர்களே! நீங்கள், வீரனான ஹிரண்யாக்ஷனைப் பற்றிச் சோகிக்கலாகாது. வீரர்களுக்குச் சத்ருவின் எதிரில் மாள்வது புகழத்தக்கது. ஆகையால், அவர்கள் அதை விரும்புவார்கள். தண்ணீர்ப் பந்தலில் வழிப்போக்கர்கள் சேர்ந்து, பிரிவது போல், இவ்வுலகத்தில் ப்ராணிகள் தமது கர்மங்களுக்குத் தகுந்தபடி, ஈச்வரனால் ஓரிடத்தில் சேர்க்கப்படுவதும், பிரிக்கப்படுவதுமாய் இருக்கிறார்கள். நல்ல வ்ரதமுடையவர்களே! அவர்கள், ஓரிடத்தில் சேர்ந்திருப்பது நிலையற்றதேயாகையால், அதைப்பற்றி வருந்தலாகாது. ஆத்மா நித்யன். அவனுக்கு அழிவு முதலிய அவஸ்தைகள் கிடையாது. அவன் ப்ரக்ருதியின் பரிணாமங்களுக்கிடமல்லாத பரிசுத்தன்; தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); தேஹம், இந்திரியம், மனம், ப்ராணம் இவற்றை உணர்ந்தவன்; ஜ்ஞானத்தினால் எங்கும் நிறைந்திருப்பவன். அவன் இத்தகையனாயினும், தன்னுடைய புண்ய, பாப, ரூப கர்மத்தின்படி ஸத்வ, ரஜஸ், தமோகுணங்கள் பரிணமிக்கப்பெற்று, கர்மபலன்களை அனுபவிக்கும் பொருட்டு, ஸத்வாதி குணங்களின் பரிணாம ரூபமான சரீரத்தை ஏற்றுக்கொள்கின்றான். ஆகையால், ஆத்மாக்கள் ஒரு சரீரத்தில் சிலரோடு சேர்ந்து, அந்தச் சரீரம் அழிந்த பின்பு, வேறு சரீரம் பெற்று, வேறு சிலரோடு சேருகிறார்கள். ஜலம் அசையும் பொழுது, வ்ருக்ஷங்களும் அசைவது போல் தோற்றுகின்றன. கண் சுழலும் பொழுது பூமியும் சுழல்வது போல் தோற்றுகிறது.
மங்கள ஸ்வபாவமுடையவளே! அவ்வாறே, ஜீவன் அவயவங்களற்றவனாயினும் (உருப்புக்கள் அற்றவனாயினும்), ஸத்வாதி குணங்களின் பரிணாமமான தேஹ இந்த்ரியாதிகளுடன் மனம் கலக்கப்பெற்று, தன்னைத் தேஹமாகவே நினைத்துக் கொள்கிறான். தேஹமே ஆத்மாவாயிருப்பது உண்மையாயின், “என்னுடைய தேஹம்” என்று தன்னைக் காட்டிலும் தேஹத்தை வேறாக நினைப்பது ப்ராந்தியாக (பொய்யான எண்ணமாக) வேண்டும். அது ப்ராந்தியாக (பொய்யாக) மாட்டாது. சரீரம் தோற்றும் பொழுதும், அது தோற்றாத உறக்கம் முதலிய அவஸ்தைகளிலும், நானென்று ஆத்மா தனியே தோற்றுகிறானாகையால், சரீரத்தைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவனென்பது உண்மையே. ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட சரீரத்தை ஆத்மாவாக நினைப்பது ப்ரமம் (பொய்யான எண்ணம்). இதுவே கர்மத்தினால் விளையும் ஸம்ஸாரம். இஷ்டமான வஸ்துக்களோடும், அநிஷ்டமான (விருப்பமில்லாத, பிடிக்காத) வஸ்துக்களோடும் சேருகையும், பிரிகையுமாகிற, ஸுகதுக்கங்களும் இப்படியே கர்மத்தினால் விளையும் ஸம்ஸாரமாம். மற்றும் பிறவி, சாதல், பலவகையான சோகம், சேதன, அசேதன ஈச்வரர்களின் உண்மையை ஆராயாமை, சப்தாதி விஷயங்களை விரும்பிச் சிந்திக்கை, ஒருகால் ஆப்தர்களின் (நம் நலனை விரும்புபவர்களின்) உபதேசத்தினால் நேர்ந்த விவேகத்தை மேன்மேலும் தொடரும்படி அனுஸந்திக்காமை ஆகிய இவையெல்லாம் கர்மத்தினால் விளையும் ஸம்ஸாரமே. உண்மையை உணர்ந்த பெரியோர்கள் இவ்விஷயத்தில் யமனுக்கும், ப்ரேத பந்துக்களுக்கும் நேர்ந்த ஸம்வாத ரூபமான பழைய இதிஹாஸத்தைச் சொல்லுகிறார்கள்.
உசீனர தேசத்தில் ஸுயக்ஞனென்று ஒரு மன்னவன் இருந்தான். அவன், யுத்தத்தில் சத்ருக்களால் அடியுண்டு, மரணம் அடைந்தான் அப்பொழுது, அவன் ரத்னமயமான கவசம் முறிந்து, ஆபரணங்களும் பூமாலையும் நழுவி, பாணங்களால் ஹ்ருதயம் பிளவுண்டு, உடம்பெல்லாம் ரத்தம் பெருகி, நனைந்து விழுந்திருந்தான். மற்றும், அவன் தலைமயிர்கள் விரிந்து கண்கள் ஆணியிட்டுக் கோபத்தினால் உதட்டைக் கடித்துக்கொண்டு, தாமரைமலர் போன்ற முகமெல்லாம் துகள் (தூசி) படியப்பெற்று, ஆயுதமும், புஜமும் அறுப்புண்டு படுத்திருந்தான். அப்பொழுது, அவனுடைய பந்துக்கள் அவனைச் சுற்றிச் சூழ்ந்து வந்து உட்கார்ந்தார்கள். அந்த உசீனர தேசத்து அரசனது பட்டமஹிஷிகள், தங்கள் கணவன் தெய்வச் செயலால் அவ்வாறு அடியுண்டு விழுந்திருப்பதைக் கண்டு வருந்தி “ஓ நாதா! நாங்கள் பாழானோமே” என்று கைகளால் மார்பில் அடித்துக்கொண்டு, அடிக்கடி அவன் பாதங்களில் விழுந்து புரண்டார்கள். அழுகின்ற அம்மடந்தையர், மணிகளின் கொங்கைகளில் அணிந்த குங்குமக் குழம்பில் பட்டுச் சிவந்து வழிகின்ற கண்ணீரினால் தங்கள் கணவனது பாதாரவிந்தங்களை நனைத்து, தங்கள் கூக்குரல்களால் பிறர்க்கும் சோகத்தை விளைத்துக்கொண்டு, தலை மயிர்கள் விரிந்து ஆபரணங்கள் கலைந்து விழப்பெற்று, புலம்பினார்கள். “எங்கள் ப்ரபுவே! தேவன், மன இரக்கமின்றி உன்னை எங்கள் கண்ணுக்குப் புலப்படாதபடி கொண்டு போனான். அத்தேவன், முன்பு உசீனர தேசத்தில் உள்ளவர் அனைவர்க்கும் ஜீவனத்தைக் கொடுக்கும்படி உன்னைப் படைத்தான். அவனே இப்பொழுது அனைவர்க்கும் சோகத்தை வளர்க்கும்படி உன்னைக் கொண்டு போனான். மன்னவனே! நீ எங்களுக்கு நண்பனாயிருந்தாய். நீ பிறர் செய்த நன்றியை மறவாது உணரும் தன்மையுடையவன். அத்தகைய உன் ப்ரஜைகளாகிய நாங்கள், உன்னைவிட்டு எவ்வாறு ஜீவிப்போம்? ஓ வீரசிகாமணி! நீ எங்கு போகின்றனையோ, அவ்விடத்திலேயே உன் பாதங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிற எங்களையும் அழைத்துக் கொண்டு போகவேண்டும்” என்று அம்மன்னவன் பத்னிகள் மரணம் அடைந்த கணவனைச் சுற்றிச் சூழ்ந்து, அவனை எடுத்துக்கொண்டு போக வொட்டாமல் பிடித்துப் புலம்பிக் கொண்டிருக்கையில், ஸூர்யன் அஸ்தமிக்கலானான். அப்பொழுது யமன், மரணம் அடைந்த அம்மன்னவன் பந்துக்களின் அழுகுரலைக் கேட்டு, தானே ஒரு சிறுவனாகி, அவ்விடம் வந்து, அவர்களை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.
யமன் சொல்லுகிறான்:- ஆ! இதென்ன ஆச்சர்யம்? இவர்கள் என்னை விட வயதில் பெரியவர்கள், உலகில் ப்ராணிகள் பிறப்பதையும், சாவதையும் பலவாறு பார்த்திருப்பவர்கள். ஆயினும், இவர்கள் மதியின்றி (புத்தியின்றி) வருந்துகிறார்களே. எவ்விடத்தினின்று பிறந்தானோ, அதே இடத்தில் மறைகின்ற மனுஷ்யனைப் பற்றித் தாங்களும் அப்படியே ஜன்ம, மரணாதிகளை அனுபவிப்பவர்களாயினும் வீணாகச் சோகிக்கின்றார்கள். வயதில் சிறியவனாயினும், நானே பாக்யசாலி. நான், தாய், தந்தைகளால் துறக்கப்பெற்றும், அதைப் பற்றிச் சிந்திக்காமலேயிருக்கிறேன். நம்மைக் கர்ப்பத்தில் காத்தவன், இப்பொழுதும் காத்து வருகிறான். ஆகையால், நான் துர்ப்பலனாயினும் (பலம் அற்றவனாயினும்), அவனால் பாதுகாக்கப் பெற்று, செந்நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களால் புசிக்கப்படாதிருக்கிறேன். ஈச்வரன், தன் ஸங்கல்பத்தினால் தானே இந்த ஜகத்தைப் படைக்கின்றான். அவன் அழிவு முதலிய விகாரங்களற்றவன். அவனே, தான் படைத்த ஜகத்தைக் (உலகை) காக்கிறான். அவனே அதை அழிக்கிறான். ஓ, துர்ப்பலர்களே (பலம் அற்றவர்களே)! ஜகத்தைப் (உலகை) படை த்து அதற்கு அந்தராத்மாவாகி, நியமித்துக் கொண்டிருக்கிற அந்த ஸர்வேச்வரனுக்கு, இந்த ஜகத்தெல்லாம் விளையாட்டின் கருவி. அவன் ஜகத்தைப் (உலகை) படைப்பதும், காப்பதும், அழிப்பதும் விளையாட்டிற்காகவே. அவன் ஜகத்தை (உலகை) நிக்ரஹிக்கவும், அநுக்ரஹிக்கவும் வல்லவன். வழியில் கைசோர்ந்த (காணாமல் போன) வஸ்துவும், தெய்வத்தினால் காக்கப்பட்டு, மீளவும் நமக்குக் கிடைக்கின்றது. நாம், ஒரு வஸ்துவை வீட்டில் மிகவும் பத்ரமாய் வைத்துப் பாதுகாத்து வந்தாலும், அவன் அதை அழிக்கப் பார்ப்பானாயின், அது காணாமற்போய்விடும். இவ்வாறே, அரண்யத்தில் (காட்டில்) நாதனற்றிருப்பவனும் (காப்பாற்றுவார் இல்லாமல் இருப்பவனும்), அவனுடைய ஸங்கல்பத்திற்கு விஷயமாகி, ஸுகமாக ஜீவிப்பான். ஒருவன் வீட்டில் பத்ரமாய்ப் பாதுகாக்கப்பட்டிருப்பானாயினும், அவன் உபேக்ஷிப்பானாயின் (விட்டு விடுவானாயின்), ஜீவிக்கமாட்டான். ப்ராணிகள், தாம் செய்த புண்ய, பாப கர்மங்கள் பலன் அளிக்கும்படியான காலம் நேரப்பெற்று, அவற்றிற்குரியபடி பற்பல யோனிகளில் பிறக்கின்றன. அக்கர்மங்களின் முடிவில், அச்சரீரங்களைத் துறக்கின்றன. ஈச்வரன், ஜீவாத்மாக்களுடைய கர்மங்களுக்குத் தகுந்தபடி, ஜன்ம மரணங்களை விளைக்கின்றானாகையால், அவனுக்குப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) கிடையாது. அந்தர்யாமியாய் அமைந்திருப்பினும், தேஹாத்மப்ரமாதிகளாலும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணத்தாலும் – மனக்கலக்கத்தாலும்), சப்தாதி விஷய போகத்தினாலும், ஸம்ஸார பந்தத்தை அடைகிறதில்லை. ஒரே சரீரத்திலிருக்கிற இருவரில், ஒருவன் ஸம்ஸார பந்தத்தை அடைகிறான். ஒருவன் அடைகிறதில்லை. இதென்ன ஆச்சர்யம்?
இதோ புலப்படுகிற சரீரங்களெல்லாம், ஜீவாத்மாக்கள் அஜ்ஞானத்தினால் செய்கிற கர்மங்களால் ஏற்பட்டவை. க்ருஹத்தில் வஸிக்கும் புருஷனைக் காட்டிலும், க்ருஹம் வேறுபட்டிருப்பதுபோல, பஞ்சபூதங்களின் பரிணாம ரூபமான இச்சரீரமும், இதிலிருக்கிற ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டது. மண், கல், கட்டை முதலியவற்றால் கட்டப்பட்ட க்ருஹம், சிலகாலம் கழிந்த பின்பு, இடிந்து பாழாவதுபோல, ஜீவாத்மாவின் கர்ம பரிபாகத்தினால் (விளைவால்), பூமி, ஜலம், தேஜஸ்ஸு, காற்று, ஆகாயம் ஆகிய இவ்வைந்து பூதங்கள் ஒன்று சேர்ந்த ஸமுதாய ரூபமான தேஹம் உண்டாகி, பேதை, பாலகன் முதலிய அவஸ்தைகளால் (நிலைகளால்) பல விகாரங்களை (மாறுதல்களை) அடைந்து, தனக்குக் காரணமான கர்மத்தின் முடிவில் நசிக்கின்றது. கட்டைகளில் பற்றியெரிகிற அக்னி, அவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருப்பது போலவும், தேஹத்திலிருக்கிற வாயு அதைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது போலவும், ஆகாயம் எங்கும் நிறைந்திருப்பினும் அவ்வவற்றின் தர்மங்கள் தீண்டப்பெறாதிருப்பது போலவும், தேஹத்திலிருக்கும் ஜீவன், அதைக்காட்டிலும் வேறுபட்டு அதன் தர்மங்களான ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதிகள் தீண்டப்பெறாமல் விலக்ஷணனாயிருப்பான் (வேறானவனாயிருப்பான்).
ஓ மூடர்களே! உங்கள் அபிப்ராயத்தின்படி தேஹமே ஆத்மாவாயிருக்குமாயின், நீங்கள் எவனைப் பற்றிச் சோகிக்கின்றீர்களோ, அந்த ஸுயக்ஞன் (உசீனர தேசத்து அரசன், உங்கள் கணவன்) படுத்துக்கொண்டேயிருக்கிறான். உங்கள் புலம்பலை எவன் கேட்பானோ, எவன் உங்களுக்கு மறுமொழி கூறவல்லவனோ, அவன், இந்தத் தேஹத்தில் எவ்வளவு நேரம் ஸூக்ஷ்மமாக ஆராய்ந்து பார்த்தாலும் புலப்படமாட்டான். இத்தேஹத்திலுள்ள முக்ய ப்ராணவாயுவும், உங்கள் புலம்பலைக் கேட்கவாவது, மறுமொழி கூறவாவது வல்லதன்று. இனி தேஹத்திற்கு அச்சக்தி இல்லையென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?
எவன் காது, வாய் முதலிய இந்த்ரியங்களால் கேட்கை, மறுமொழி கூறுகை முதலியன செய்யவல்லவனோ, அத்தகைய ஆத்மா, இச்சரீரத்தில் சரீரம், ப்ராணன் இவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனாகவே இருந்தான். ஆத்மா ஜ்ஞானத்துடன் கூடி , பூமி ஜலம் முதலிய ஐந்து பூதங்கள், கர்மேந்திரிய, ஜ்ஞானேந்திரியங்கள் மனம் இவை அடங்கப் பெற்றவைகளும், மேன்மை தாழ்மைகளுக்கிடமுமாகிய பலவகைச் சரீரங்களைப் பெறுவதும் விடுவதுமாயிருப்பான். அத்தகையனான ஆத்மா படுத்திருக்கின்ற சரீரத்தைத் துறந்து போனானாகையால், அவனும் சோகிக்கத் தகுந்தவனல்லன்.
ஜீவனுக்கு, தேஹ ஸம்பந்தத்தை விளைக்கும்படியான கர்மம் எதுவரையில் இருக்கின்றதோ, அது வரையில், அவன் தேஹத்துடன் கூடியிருப்பான். அத்தேஹ ஸம்பந்தத்தினால், தேஹாத்மப்ரமமும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணமும் – மனக்கலக்கமும்) அதனால் வருத்தங்களுமாகிற ப்ரக்ருதி ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரமும் தொடர்ந்து வரும். இச்சரீரத்திலிருந்த ஆத்மா, இச்சரீர ஸம்பந்தத்திற்குக் காரணமான கர்மம் முடியப் பெற்று, இதைத் துறந்து போய்விட்டான். ஆகையால் அவனைப்பற்றிச் சோகிப்பது வீண்.
ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் பரிணாம ரூபமான தேஹாதிகளையும், சப்தாதி விஷயங்களையும், போக்யமென்று நினைப்பதும், வழங்குவதும் வீண் அபிநிவேசத்தினாலன்றி (அளவு கடந்த பற்றால், ஈடுபாட்டால் அன்றி), உண்மையை ஆராய்ந்தால், அவற்றில் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. ஸ்வப்னத்தில் காண்கிற ஆசைப்பட்ட வஸ்துக்களெல்லாம், எவ்வாறு நிலையற்றவைகளோ, அவ்வாறே விழித்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் அனுபவிப்பவைகளும், அனுபவிக்க விரும்புகிறவைகளுமான சப்தாதி விஷயங்களும், தேஹாதிகளும் நிலையற்றவைகளே. நித்யனான ஆத்மாவைப்பற்றியாவது அநித்யமான (நிலையற்ற) தேஹத்தைப் பற்றியாவது அவற்றின் உண்மையை உணர்ந்த பெரியோர்கள் சோகிக்க மாட்டார்கள். எவ்வளவு சோகித்தாலும் வஸ்துக்களின் இயற்கையை மாற்றமுடியாது. ஒரு வேடன் பக்ஷிகளுக்கு ம்ருத்யுவாக (யமனாக, மரணத்தைத் தருபவனாக) ஏற்படுத்தப்பட்டிருந்தான். அவன் அரண்யத்தில் (காட்டில்) வலையைப் பரப்பிப் பக்ஷிகளை வஞ்சித்தான். அவ்வரண்யத்தில் குலிங்கப் பறவைகள் (ஊர்க்குருவிகள்) இரண்டு ஆணும் பெண்ணுமாய் உலாவிக்கொண்டிருந்தன. அவற்றை அவ்வேடன் கண்டான். அவன் அப்பறவைகளில் பெண் பறவையை விரைவில் வஞ்சித்தான். அங்கனம் வஞ்சிக்கப்பட்ட அப்பெண்பறவை வலையில் அகப்பட்டுக்கொண்டது. அப்பொழுது ஆண் குலிங்கப்பறவை (ஊர்க்குருவி) தன்பார்யையான பெண் குலிங்கம் வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டு ஸ்நேஹத்தினால் மிகவும் வருந்தி அதை விடுவிக்க முடியாமல் மீளவும் மேன்மேலும் வருந்திப் புலம்பிற்று.
“ஆ! தேவனுக்கு மன இரக்கமில்லை. மன இரக்கத்திற்கிடமாகி மிகவும் மன இரக்கத்திற்கிடமான என்னைக் குறித்துச் சோகிக்கின்ற என் பார்யையான (மனைவியான) இப்பெண் குலிங்கப் பறவையால் அவனுக்கு என்ன ப்ரயோஜனம்? ஒரு ப்ரயோஜனமும் இல்லை. என்னிடத்தில் மன இரக்கமின்றி இப்பெண்ணை என்னைவிட்டுப் பிரித்துக்கொண்டு போனானன்றி வேறில்லை. அங்கனம் மன இரக்கமில்லாத தேவன் என்னையும் இஷ்டப்படி கொண்டு போவானாக. என்னுடைய பாதியாகிய என் பார்யையைக் (மனைவியைக்) கொண்டு போனான். மிகுந்த இப்பாதியால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? ப்ரயோஜனமற்ற வாழ்நாளுடன் நான் ப்ராணனைத் தரித்துக்கொண்டிருந்து என்ன செய்யவேண்டும்? இறகு முளைக்கப் பெறாதவைகளும் தாயற்றவைகளுமான இக்குட்டிகளை நான் எப்படி வளர்ப்பேன்? மற்றும், என் குட்டிகள் கூட்டிலிருந்து கொண்டு தமது தாயை எதிர்பார்க்கின்றனவே” என்று தன் அன்பிற்கிடமான பேடையைப் (பெண் பறவையைப்) பிரிந்து வருந்திக் கண்ணீர் நிறைந்த கண்டத்துடன் புலம்புகின்ற அந்த ஆண் குலிங்கப்பறவையையும் அவ்வேடனே காலத்தினால் தூண்டப்பட்டு அருகிலிருந்து கொண்டு மறைந்து பாணத்தினால் அடித்தான். இங்கனமே நீங்களும் உங்களுக்கு நேரப்போகிற மரணத்தை ஆலோசிக்காமல் விவேகமின்றிப் பல நூற்றாண்டுகள் சோகிக்கினும் உங்கள் கணவனான இவனைப் பெறமாட்டீர்கள்.
ஹிரண்யகசிபு சொல்லுகிறான்:- அச்சிறுவன் இங்கனம் சொல்லிக் கொண்டிருக்கையில், உசீநர தேசத்து அரசனான ஸுயக்ஞனுடைய பந்துக்கள் அனைவரும் வியப்புற்று, விபரீதமாய்த் தோற்றுகிற தேஹாதிகளையெல்லாம் அநித்யமென்றே நினைத்தார்கள். சிறுவனாய் வந்த யமன் இவ்வளவு மொழிந்து அவ்விடத்திலேயே மறைந்தான். பிறகு ஸுயக்ஞனுடைய பந்துக்கள் அவனுக்குச் செய்யவேண்டிய ப்ரேத கார்யங்களை நடத்தினார்கள். தேஹம் ஆத்மா இவைகளின் ஸ்வபாவம் இத்தகையதாகையால் நீங்கள் ஹிரண்யாக்ஷன் முதலிய வேறு ஆத்மாக்களைப் பற்றியாவது உங்களைப்பற்றியாவது சோகிக்க வேண்டியதில்லை. தானென்றும், பிறனென்றும் அபிமானத்தை விளைக்கிற அஜ்ஞானத்தையொழிய, ஜீவாத்மாக்களுக்குத் தாம் யார்? பிறர் யார்? தம்மைச் சேர்ந்தவர் யார்? பிறரைச் சேர்ந்தவர் யார்? இவையெல்லாம் அனாதியான அஜ்ஞானத்தினால் விளையும் புண்ய, பாப கர்மங்களின் பலனான தேஹஸம்பந்தத்தைப் பற்றி வருகிற தேஹாத்மாபிமானத்தின் (இவ் உடலையே ஆத்மா என்று நினைப்பதன்) கார்யங்களே. ஆத்மாக்களுக்கு ஒருவரைப் பற்றி ஒருவர் சோகிக்கும்படியான ஸம்பந்தம் எதுவுமே இல்லை. ஆகையால் நீங்கள் சோகிக்க வேண்டாம்.
நாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு தைத்யர்களுக்கு ப்ரபுவாகிய ஹிரண்யகசிபு மொழிந்த வார்த்தைகளைக் கேட்டு நாட்டுப் பெண்ணுடன் கூடின திதி க்ஷணத்திற்குள் புத்ரசோகத்தைத் துறந்து தேஹம் ஆத்மா இவைகளின் உண்மையான நிலைமையை ஆராய்ந்து அதில் மனத்தை நிலைநிறுத்தினாள்.
இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.