கண்ணன் கதைகள் - 16 - திருப்பூர் கிருஷ்ணன்

கனிவாக உபசரிக்கணும்!

தர்மபுத்திரர் நிகழ்த்தும் ராஜசூய யாகத்தை ஒட்டி அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் மக்கள் ஜே ஜே எனக் குழுமினார்கள். அஸ்தினாபுரம் முழுதும் மக்கள் வெள்ளம். 

எல்லோரும் வந்த காரணம் யாகம் பல நாட்கள் நடக்கும், கட்டாயம் அன்னதானம் நிகழும், வயிறாரச் சாப்பிடலாம் என்பதே. தர்மபுத்திரர் உணவுச்சாலை அதிகாரிகளிடம் யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாது உணவளிக்க உத்தரவிட்டிருந்தார். 

பின்னர், தன் தம்பிகளை அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைக் கொடுத்தார். நகுல சகாதேவர்களுக்கு யாகம் காண வருபவர்களை வரவேற்கும் பொறுப்பு. அர்ஜுனனுக்கு யாகசாலையைப் பாதுகாக்கும் பணி. 

பீமன் "எனக்கென்ன வேலை?'' என்று கேட்டான். தர்மபுத்திரர், சற்று யோசித்துவிட்டு, "பீமா! நீ போஜனப்ரியன். உணவுச்சாலையில் ஏராளமானோர் உணவு உண்பார்கள். அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டுச் செல்ல வேண்டும். அரைகுறை வயிறோடு எழுந்து விடக்கூடாது. அவர்களை உபசரித்து சாப்பிட வைக்க வேண்டியது உன் பொறுப்பு. பசிக்கும் போதெல்லாம் நீயும் சாப்பிட்டுக் கொள்ளலாம். சரிதானா?'' என்றார். 

"அப்படியே ஆகட்டும்!'' என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு உணவுச்சாலை நோக்கி நகர்ந்தான் பீமன். 

ஒருசில தினங்கள் கழிந்தன. யாகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால், உணவுண்ண வருவோர் கூட்டம் பெரிதும் குறைந்துவிட்டது. ஏராளமான உணவை என்ன செய்வது என்று தெரியாமல் சமையல் கலைஞர்கள் திகைத்தார்கள். அவர்கள் தர்மபுத்திரரிடம் நிலைமையைத் தெரிவித்தார்கள். 

தர்மபுத்திரருக்கு ஆச்சரியம். "புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் அவர்கள். உணவு மிக ருசியாகத்தான் இருக்கும். ஆனால், உணவுண்ண வருவோர் எண்ணிக்கை ஏன் கிடுகிடுவென்று குறைகிறது?" பீமனை விசாரித்தார். 

பீமன், "அதுதான் எனக்கும் தெரியவில்லை!'' என்று அவரோடு சேர்ந்து திகைத்தான். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது கையில் புல்லாங்குழலைத் தட்டியவாறு உள்ளே நுழைந்தான் கண்ணன். தர்மபுத்திரர் கண்ணனை வணங்கி வரவேற்றார். பின் ஆதங்கத்தோடு சொன்னார்:

"கண்ணா! இதென்ன சிக்கல்? உணவு அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருக்கிறது. விதவிதமான பலகாரங்கள் உண்பவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால், உண்பதற்கு அதிகம் ஆட்கள் வருவதில்லை. ஏன் இப்படி?''

தர்மபுத்திரர் இப்படிக் கண்ணனிடம் பேசிக் கொண்டிருப்பதற்குள், "இதோ வருகிறேன்!'' என்று உணவுச் சாலைக்குப் போனான் பீமன். மூன்று பெரிய குவளைகளில் சுண்டக் காய்ச்சிய பசும்பாலைத் தட்டில் வைத்து எடுத்து வந்தான். "கண்ணா! இதை அருந்திவிட்டுப் பேசு!'' என்று அன்போடு கண்ணனிடம் பால் குவளையை நீட்டினான். 

"என்பால் உள்ள அன்பால் நீ தந்த பால். இதை அருந்தாவிட்டால் எப்படி?'' நகைத்த கண்ணன், பாலை ஆனந்தமாக அருந்தினான். குழந்தையாக இருந்தபோது கன்றுக் குட்டியோடு சேர்ந்து, பசுவின் மடியிலேயே பால் அருந்திய கோபாலன் அல்லவா? அவனது பால் வடியும் முக எழிலைப் பார்த்துப் பரவசப்பட்டது பீமனின் பக்தி மனம். 

இன்னொரு குவளை பாலையும் கண்ணனிடம் நீட்டி, "இதையும் அருந்து!'' என்று அன்போடு வற்புறுத்தினான் பீமன். 

ஈரேழு பதினான்கு உலகங்களையும் வயிற்றுக்குள் வைத்துக் காப்பாற்றும் பரம்பொருள். வெண்ணையுண்ட வாயால் மண்ணையுண்ட போது யசோதை அதட்ட, தன் பவழச் செவ்வாய் திறந்து வாய்க்குள் அத்தனை உலகங்களையும் அன்னைக்குக் காட்டிய தெய்வம். "எனக்குப் பசி அடங்கிவிட்டது. போதும்!'' என்றான். ஆனால் பீமன் விடவில்லை.

பீமனின் வற்புறுத்தலுக்கு இணங்கி இரண்டாம் குவளைப் பாலைக் கண்ணன் அருந்தியவுடன், "மூன்றாவது குவளைப் பாலையும் அருந்தினால் தான் ஆயிற்று!" என அன்போடு அடம்பிடித்தான் பீமன். சற்று நேரம் பீமனையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் சொல்லலானான்:

"பீமா! ஓர் அவசர வேலை. கண நேரமும் தாமதிக்காதே. உடனடியாகக் கந்தமாதன மலைக்குப் போ. அங்கே தங்க நிறத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருப்பார். அவரை நான் அனுப்பியதாகப் போய்ப் பார்த்துவா''.

"அதற்கென்ன? இதோ புறப்படுகிறேன்! அவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டான் பீமன். 

"ஒன்றும் சொல்ல வேண்டாம். அவரைப் பார்த்தால் போதும். மிக நெருக்கத்தில் அவரைப் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம்!''

பீமனுக்கு ஒன்றும் புரியவில்லை. தர்மபுத்திரருக்கும் எதுவும் விளங்கவில்லை. ஆனால், கண்ணன் ஏதேனும் சொன்னால் அதில் ஆயிரம் உள் அர்த்தங்கள் இருக்கும். உடனடியாக அவன் சொன்னபடிச் செய்வதுதான் நல்லது. 

"சரி. கண்ணா! இதோ புறப்பட்டு விட்டேன்!'' பீமன் புயல்போலப் பாய்ந்து, தன் தேரை எடுத்துக் கொண்டு, புரவிகளின் கடிவாளக் கயிற்றைச் சொடுக்கி தேரைக் கந்தமாதன மலைநோக்கிச் செலுத்தினான். தேர் புழுதியைப் பரப்பிக் கொண்டு பாய்ந்து சென்று பார்வையை விட்டு மறைந்தது. தர்மபுத்திரர் வியப்போடு கண்ணனைப் பார்த்தார். 

"தர்மபுத்திரா! உணவுச்சாலையில் அதிகம்பேர் உணவுண்ண வராமல் இருப்பதற்கும் பீமன் கந்தமாதன மலைக்குச் செல்வதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது!'' என்ற கண்ணன், ரகசியமாக அவர் காதில் சில செய்திகளைச் சொன்னான். 

அவற்றைக் கேட்டு தர்மபுத்திரரின் விழிகள் வியப்பில் விரிந்தன. 

பீமனால், கந்தமாதன மலையில் தங்க முனிவரைச் சந்தித்தான். அவரது உடல் பொன்னிறத்தில் பளபளத்தது. ஆனால், உதடுகள் மட்டும் கறுத்திருந்தன. அவனிடம், "நீ இங்கு தங்க வேண்டும் என்று வந்தாயா?" என்று கேட்டார் தங்க முனிவர். 

"அல்ல சுவாமி! கண்ணன் சொன்னபடி, உங்களை அருகில் நெருங்கி தரிசிக்கவே வந்தேன்!'' என்று விபரம் சொன்னான் பீமன். அதைக் கேட்டதும் அவரது விழிகள் மகிழ்ச்சியில் பளபளத்தன. 

"வா குழந்தாய்! என் அருகே நெருங்கி வந்து என்னைப் பார்''. அன்போடு அழைத்தார். 

ஆனால், அவரை நெருங்க முடிந்தால் தானே? அவர் வாயைத் திறந்ததும், வாயிலிருந்து கடும் துர்நாற்றம் புறப்பட்டு அந்தப் பிரதேசத்தையே கலக்கியது. நாசியை இழுத்து மூடிக்கொண்டு அவர் அருகே சென்று அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் பீமன். 

மறுகணம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அவர் வாயிலிருந்து வந்த துர்நாற்றம் முற்றிலுமாக மறைந்தது மட்டுமல்ல. கருமையாய்த் தென்பட்ட அவர் உதடுகள் திடீரெனப் பொன்னிறம் பெற்றன. 

"உங்கள் உதடுகள் பொன்னிறம் பெற்று விட்டனவே!'' பீமன் வியப்போடு கூவினான். 

"கிருஷ்ணா! என் தெய்வமே!'' என்று கைகூப்பித் தொழுதார் தங்க முனிவர். என் வாயிலிருந்து பிறக்கும் துர்நாற்றத்தை நானே தாங்க இயலாமல் தவித்து வந்தேன். அந்த துர்நாற்றமும் இப்போது நின்றுவிட்டது!'' என்று மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். பிறகு சொல்லலானார்:

"பீமா! நான் செய்த பாவத்தின் பலன் தான் என் உதடுகளின் கருமையும் என் வாயின் துர்நாற்றமும். கண்ணனிடம் எப்போது என் நிலைமை சரியாகும் என்று கேட்டேன். ஒருநாள் பீமன் வந்து உன்னை தரிசிப்பான். அப்போது உம் நிலை சரியாகும் என்று அருளினான் கண்ணன். இதோ நீ வந்து என்னை மாற்றிவிட்டாய்!''

பீமன் திகைப்போடு கேட்டான்:

"சுவாமி! அப்படி நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்?''

முனிவர் சொல்லலானார்:

"தானத்திலெல்லாம் சிறந்தது அன்னதானம். ஏராளமான பேருக்கு அன்னதானம் செய்தேன். அவர்களின் உடலைக் காப்பாற்ற நான் உணவளித்ததால், என் உடல் பொன்னிறம் பெற்றது. ஆனால், உணவுண்ண வருபவர்கள் போதும் என்று சொன்னால் விட்டுவிட வேண்டும். நான் ஆர்வக் கோளாறால், இன்னும் சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தி உணவளித்தேன். அவர்கள் சாப்பிட முடியாமல் திக்கித் திணறினார்கள். நியாயமாக உபசரித்து அன்னதானம் செய்வது மாபெரும் புண்ணியச் செயல்தான். ஆனால், வயிறு புடைக்க உண்டு விட்டவர்களை மீண்டும் பாயாசம் சாப்பிடு, வடை சாப்பிடு என்றெல்லாம் வற்புறுத்தித் திணற வைப்பது பெரும்பாவம். உணவு ஓர் அளவோடு நின்றால் ஆரோக்கியம். அளவுக்கு மீறினால் ஆரோக்கியக் கேடு. ஒருவருக்கு நாம் ஆரோக்கியக் கேடு உண்டு பண்ணினால் அது பாவம் தானே? மேலும் உண்ண முடியாத உணவை மீதம் வைத்துச் சென்றால், பரிமாறியவனுக்குப் பாவம் சேருமல்லவா? உணவில்லாமல் தவிப்பவர்கள் பலரிருக்க, உணவை வீண்செய்ய நாம் துணை போகலாமா? உணவை வீணாக்குவது வேளாண்மை செய்பவர்களின் உழைப்பை அவமதிப்பது ஆகாதா? இந்த வாய்தானே அதற்கெல்லாம் காரணமாயிற்று? எனவே என் உதடுகள் கறுத்தன. என் வாயிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. உன்னால்தான் இப்போது இந்தத் துன்பங்களிலிருந்து மீண்டேன்!''

தங்க முனிவரின் பொன்மொழிகள் பீமனைச் சிந்திக்க வைத்தன. "ஆகா! ராஜசூய யாக உணவுச் சாலையில் நாம் செய்த கடும் உபசாரத்தால் அல்லவோ மக்கள் உணவுண்ண வருவதையே குறைத்துக் கொண்டார்கள்!" தனது தவறைப் புரிந்துகொண்ட பீமன், முனிவரிடம் விடைபெற்று அஸ்தினாபுரம் திரும்பினான். 

"என் தவறைப் புரிந்துகொண்டேன்!'' என்று கண்ணனைப் பணிந்து நின்றான். 

"என்னால் இரண்டு குவளைப் பாலுக்குமேல் அருந்த இயலாது. இதோ நீ கொண்டுவந்த இந்த மூன்றாவது குவளைப் பாலை எடுத்துச் செல்!'' என்று கண்ணன் சொன்னதும் உடனே பீமன் பாலை எடுத்துச் சென்றதைக் கண்டு தர்மபுத்திரரின் மனம் மகிழ்ந்தது. 

நன்றி - தினமலர் ஆகஸ்டு 2012

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை