ஏழாவது ஸ்கந்தம் – முதலாவது அத்தியாயம்
(பரீக்ஷித்து வினவுதலும், ஸ்ரீசுகர் ஸமாதானம் சொல்லி யுதிஷ்டிர நாரதர்களுடைய ஸம்வாதத்தைக் (உரையாடலைக்) கூறுதலும்)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மரிஷி! பகவான் ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாதவன்; எல்லோரிடத்திலும் ஸமனாயிருப்பவன். அவனுக்கு த்வேஷியாவது (எதிரியாவது), ப்ரியனாவது எவனும் கிடையாது. ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அவன் நண்பன். அந்தராத்மாவாகையால், அவன் அனைவர்க்கும் ப்ரீதிக்கிடமானவன். இத்தகைய பகவான், ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய ப்ரக்ருதி குணங்களால் வைஷம்யமுடைய (ஸமநிலையில்லாத) அற்பன் (மிகத்தாழ்ந்தவன்) போல், இந்திரனுடைய ப்ரயோஜனத்திற்காகத் தைத்யர்களை (திதியின் பிள்ளைகளை) ஏன் கொன்றான்? ஸாக்ஷாத் பரமபுருஷார்த்த ஸ்வரூபனான இந்தப் பகவானுக்கு இந்திரன் முதலிய தேவக்கூட்டங்களால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கின்றது? அவனுக்கு அஸுரர்களிடத்தினின்று பயம் உண்டாவதற்கும் இடமில்லை. அவர்களிடத்தில் த்வேஷத்திற்கும் (பகைமைக்கும்) ப்ரஸக்தி (வாய்ப்பு) இல்லை. ஸத்வாதி குணங்களும், அவற்றின் மூலமாய் விளையும் ராக (விருப்பு), த்வேஷாதிகளும் (வெறுப்பு முதலியவைகளும்) அவனுக்கு இல்லையல்லவா? மிகுந்த மதியுடைய (புத்தியுடைய) மஹானுபாவரே! ஸ்ரீமந்நாராயணனுடைய குணங்களைப் பற்றி எனக்குப் பெரிய ஸம்சயம் (ஸந்தேஹம்) உண்டாயிருக்கின்றது. அதைத் தேவரீர் போக்கியருள வேண்டும்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! ஸ்ரீஹரியின் சரித்ரத்தைப் பற்றி நீ நன்றாக வினவினாய். அது பாகவதர்களின் மஹிமை உள்ளடங்கப்பெற்றது. அந்தப் பாகவத மஹிமை, பகவானிடத்தில் பக்தியை வளர்க்கும். ஆகையால், உன் கேள்விக்கு நான் ஸந்தோஷம் அடைந்தேன். நாரதர் முதலிய ரிஷிகள் மிகவும் பரிசுத்தமான அந்தப் பகவானுடைய சரித்ரத்தைப் பாடுகிறார்கள். நான் வ்யாஸ முனிவருக்கு நமஸ்காரம் செய்து, பகவானுடைய குணங்களில் உனக்கு உண்டான ஸம்சயத்தைப் (ஸந்தேஹத்தைப்) போக்கும் பொருட்டு, அந்தப் பகவானுடைய கதையைச் சொல்லுகிறேன்:
பகவான் ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய கெட்ட குணங்கள் எவையும் தீண்டப் பெறாதவன்; சாஸ்த்ரம் தவிர மற்ற ப்ரமாணங்களுக்கு விஷயமாகாதவன்; கர்மத்தினால் விளையும் பிறவி முதலியவை அற்றவன்; ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); சேதன (ஜீவாத்மாக்கள்), அசேதன (ஜடமான பொருள்கள்) ரூபமான இருவகை ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணமானவன் (வேறானவன்). ஆயினும், தனது அம்சமாகிய ப்ருக்ருதியில் ஆவேசித்து, ப்ரபஞ்சமாய் விரிந்து, பாத்ய (பாதிப்பை அடையும் வஸ்து), பாதக (பாதிப்பை உண்டாக்கும் வஸ்து) வர்க்கங்களெல்லாம் தானேயாயிருக்கிறான். பாதிக்கும் தன்மை, பாதிக்கப்படுந்தன்மை இரண்டும் சரீர பூதமான தேவ, மனுஷ்யாதிகளைச் சேர்ந்தவைகளேயன்றி ஈச்வரனைச் சேர்ந்தவைகளன்று. ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் ப்ரக்ருதியின் குணங்களேயன்றிப் பரமாத்மாவின் குணங்களன்று. அக்குணங்கள், ஒருவனுக்கு ஒரே ஸமயத்தில் தலையெடுக்கவும் மாட்டாது. ஒரே ஸமயத்தில் அடங்கவும் மாட்டாது. ஒரு ஸமயத்தில், ஒருவனுக்கு ஒரு குணமே தலையெடுத்திருக்கும். அப்பொழுது, மற்ற இரண்டு குணங்களும் தலை சாய்ந்திருக்கும். அதற்குக் காரணம் அவரவர்களுடைய கர்ம பரிபாகமேயொழிய (வினைப்பயனேயன்றி) வேறில்லை. தேவர்களும், ரிஷிகளும் பெரும்பாலும் புண்யகர்மமே செய்பவர்களாகையால் அவர்களுக்குப் பெரும்பாலும் ஸத்வகுணமே தலையெடுத்திருக்கும். அஸுரர்கள் பாபமே செய்பவர்களாகையால் அவர்களுக்கு ரஜோகுணம் தலையெடுத்திருக்கும். யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் மிகவும் பாபிஷ்டர்களாகையால் அவர்களுக்குத் தமோகுணம் தலையெடுத்திருக்கும். தேவாதிகளுக்கு ஸத்வகுணம் தலையெடுத்திருக்கும் பொழுதும், அஸுரர்களுக்கு ரஜோ குணம் தலையெடுத்திருக்கும்பொழுதும், யக்ஷ, ராக்ஷஸர்களுக்குத் தமோகுணம் தலையெடுத்திருக்கும் பொழுதும் அவர்களிடத்தில் ஈச்வரன் நுழைந்து அந்தந்த குணங்களுக்குரிய கார்யங்களைச் செய்விக்கிறான். ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்ற தேவர்களை அனுக்ரஹித்து, அவர்களுக்கு ஜயத்தை (வெற்றியை) விளைவிக்கிறான். ரஜஸ், தமஸ்ஸுக்கள் தலையெடுத்த அஸுரர்கள் யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் இவர்களுக்கு அபஜயத்தைக் (தோல்வியைக்) கொடுக்கிறான். ஸர்வர்க்கும் அந்தராத்மாவாகிய ஸர்வேச்வரன், ஒருவனுக்கு ஜயத்தையேயாவது (வெற்றியையாவது), அபஜயத்தையேயாவது (தோல்வியையாவது) கொடுக்கிறதில்லை. அவரவர்கள் செய்த கர்மங்கள் பரிபாக தசையை (பலன் கொடுக்கும் நிலையை) அடையும் பொழுது, அவரவர்கள் கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸத்வாதி குணங்கள் தலையெடுக்கின்றன. ஸத்வாதி குணங்களின் தோற்றமும் அவற்றின் மறைவும் கர்மாதீனமாகையால், அவற்றை அனுஸரித்து, ஜய (வெற்றி), அபஜயங்களைக் (தோல்விகளைக்) கொடுக்கிற ஈச்வரனுக்குப் பக்ஷபாதாதிகள் (ஓரவஞ்சனை) கிடையாது. தேவாதிகளுக்குப் பெரும்பாலும் ஸத்வ குணமே தலையெடுத்திருக்குமாகையால், அவர்களுக்குப் பெரும்பாலும் ஜயமே (வெற்றியே) உண்டாகின்றது. ஒருகால் அபஜயமும் (தோல்வியும்) உண்டாகலாம். பாபிகளான அஸுராதிகளுக்கு பெரும்பாலும் ரஜஸ், தமோ குணங்களே தலையெடுத்திருக்குமாகையால், அபஜயமே (தோல்வியே) உண்டாகின்றது. ஒருகால் ஜயமும் (வெற்றியும்) உண்டாகும். காஷ்டம் (மரத்துண்டு) முதலியவற்றில் அக்னி முதலிய வஸ்துக்கள் போல் ஈச்வரன், தேவாதி பூதங்களில் புகுந்திருப்பினும் அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாமல் விளக்கமுற்றிருப்பான். காஷ்டாதிகளைக் (மரத்துண்டு முதலியவற்றைக்) காட்டிலும் அக்னி முதலியவை வேறுபட்டுத் தோற்றாதது போல், ஈச்வரன் தேவாதி பூதங்களில் உட்புகுந்திருப்பினும், ப்ரக்ருதி (அசேதனம், ஜடப்பொருட்கள்), புருஷ (ஜீவாத்மாக்கள்), ஈச்வரன் (ப்ரக்ருதி, புருஷன் இரண்டையும் நியமிக்கும் பரமாத்மா) இவர்களின் உண்மையை அறியாதவர்களுக்கு அவற்றைக் காட்டிலும் வேறாகத் தோற்றமாட்டான். ப்ரக்ருதி (அசேதனம், ஜடப்பொருட்கள்), புருஷ (ஜீவாத்மாக்கள்), ஈச்வரன் (ப்ரக்ருதி, புருஷன் இரண்டையும் நியமிக்கும் பரமாத்மா) ஆகிய இம்மூன்று தத்வங்களின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் பல ஜன்மங்களில் விவேகத்துடன் பக்தியோகத்தை அப்யஸித்து (பயிற்சி செய்து), ஆத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவைக் கடைசியில் ஸாக்ஷாத்கரிப்பார்கள் (காண்பார்கள்). இந்தப் பரமபுருஷன், தன் ஸங்கல்பத்தினால் ஜீவாத்மாக்களுக்குத் தேவ மனுஷ்யாதி சரீரங்களைப் படைக்க விரும்பி, ரஜோகுணத்தையும், அவற்றைக் காக்க விரும்பி ஸத்வகுணத்தையும், ஸம்ஹரிக்க விரும்பித் தமோகுணத்தையும் தூண்டுகிறான்.
ஓ மன்னவனே! பரமாத்மாவான ஸர்வேச்வரன், தனக்குச் சரீரமான காலத்தை நிமிஷம் முதலிய பல கூறுகளாகப் பிரித்து ப்ரக்ருதி, புருஷர்களைக் கொண்டு சேதனா சேதன ரூபமான ப்ரபஞ்சத்தையெல்லாம் படைக்கிறான். ஆகையால், ஜீவாத்மாக்களின் கர்ம பரிபாகத்திற்குரிய (கர்ம வினை பலன் கொடுக்கும்) காலத்தைத் தூண்டுகிறவனும் அந்த ஸர்வேச்வரனே. ராஜனே! ஆகையால், ஸத்வாதி குணங்களைத் தூண்டுகிறவனும், காலத்தைச் சரீரமாகவுடையவனுமான ஸர்வேச்வரன், ஸத்வகுணம் தலையெடுத்த தேவஸைன்யத்தில் ஆவேசித்து, வலிவைக் கொடுத்து, அதற்கே ஜயம் (வெற்றி) கொடுக்கிறான். அந்த தேவதைகளுக்கு சத்ருக்களும் ரஜஸ், தமோகுணங்கள் தலையெடுத்தவர்களுமான அஸுராதிகளை அழிக்கிறான். தேவதைகள் ஸத்வகுணம் தலையெடுத்தவர்களாகையால், அவனுக்கு ப்ரியமாயிருப்பார்கள். அவரவர் கர்மங்களுக்குரியபடி பலன்களை விளைத்து, ஜய (வெற்றி), அபஜயங்களை (தோல்விகளை) விளைவிக்கிறானாகையால், அது அவனுக்குக் கீர்த்தியை (புகழை) விளைக்கின்றதேயன்றி அபகீர்த்தியை (பழியை) விளைக்கிறதில்லை.
ராஜஸூய யாகத்தில், யுதிஷ்டிரன் இதே விஷயத்தைப் பற்றி நாரதரைக் குறித்து மிக்க ஆவலுடன் வினவ, அந்தத் தேவரிஷி அவருக்கு இவ்விஷயத்தில் புண்யமான ஒரு இதிஹாஸத்தை மொழிந்தார். ராஜஸூய மஹாயாகத்தை யுதிஷ்டிரன் அநுஷ்டிக்கும் பொழுது, சிசுபாலன் ஸ்ரீக்ருஷ்ண பகவானிடத்தில் ஸாயுஜ்யம் அடைந்த (சேர்ந்த) மஹத்தான அற்புதத்தைக் கண்டு வியப்புற்று, முனிவர்கள் அனைவரும் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கையில், அங்கு உட்கார்ந்திருக்கின்ற நாரத மஹர்ஷியைக் குறித்து யுதிஷ்டிரன் இவ்வாறு வினவினான்.
யுதிஷ்டிரன் கேட்கிறார்:- “இது மிகவும் ஆச்சர்யமாயிருக்கிறது. வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமல், பகவானிடத்தில் பக்தி செய்கிற பெரியோர்களுக்கும் இது கிடைப்பதரிது. ஸ்ரீக்ருஷ்ணன், வேதாந்தங்களால் ஓதப்படும் பரதத்வம். அவன், இந்த ப்ரபஞ்சத்தில் எங்கும் நிறைந்தவன். இந்த ப்ரபஞ்சமெல்லாம் அவனிடத்தில் நிலை நின்றிருக்கிறது. ஆயினும், அவன் அதன் தோஷங்கள் தன்மேல் தீண்டப்பெறாமல், பரிசுத்தனாகவே விளங்கும் தன்மையன். ஆனது பற்றியே அவன் வாஸுதேவனென்று புகழப்படுகிறான். அத்தகைய பகவானைப் பற்பல முனிவர்களும் பெறமுடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்களே; அப்படியிருக்க, த்வேஷியான (பகவானை வெறுத்த) சிசுபாலன் அவனைப் பெற்றானே. இஃதென்ன ஆச்சர்யம்? நாரதமுனிவரே! நாங்கள் எல்லாரும் இதை அறிய விரும்புகிறோம்.
ப்ருதுவின் தந்தையான வேனன், பகவானைப் பழித்த மாத்ரத்தைக் கொண்டு, அந்தணர்களால் நரகத்தில் தள்ளுண்டான். இந்தச் சிசுபாலனோவென்றால், மழலைச்சொற்களுக்கிடமான பால்யம் (குழந்தைப் பருவம்) முதல் இதுவரையில் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் கோபமுடையவன். இவன் மிகவும் பாபிஷ்டன். தந்தவக்த்ரனும் இவனோடொத்த துர்ப்புத்தி (கெட்ட புத்தி) கொள்பவன். இந்தச் சிசுபால, தந்தவக்த்தரர்கள் பரப்ரஹ்மமும் நிர்விகாரனுமான ஸ்ரீக்ருஷ்ணனை ஓயாமல் வைதுகொண்டே (திட்டிக்கொண்டே) இருப்பினும், இவர்கள் நாக்கில் வெண் குஷ்டமும் (உடல் வெள்ளை நிறமாக மாறும் ஒரு நோய்) உண்டாகவில்லை நரகத்தையும் அடையவில்லை. ஸமஸ்தலோகங்களும் பார்த்துக்கொண்டிருக்கையில், நிரூபித்தறிய முடியாத பரஞ்சோதியான பகவானுடைய ஸாயுஜ்யத்தை (சேர்த்தியை) இவர்கள் அநாயாஸமாகவே அடைந்து விட்டார்கள். இது எப்படி? விளக்கின் ஒளி காற்றினால் அலைவது போல், என் புத்தி இவ்விஷயத்தில் ப்ரமிக்கின்றது. மஹானுபாவரே! இது மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. ஆகையால் இதன் காரணத்தை எனக்குச் சொல்வீராக” என்றான்.
இவ்வாறு யுதிஷ்டிரன் வினவினதைக் கேட்ட நாரதமுனிவர் ஸந்தோஷம் அடைந்து ஸபையிலுள்ளவர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கையில் அவனுடைய கேள்வியின் பரிஹாரம் (பதில்) உள்ளடங்கப்பெற்ற கதையை மொழிந்தார்.
நாரதர் சொல்லுகிறார்:- யுதிஷ்டிர மன்னவனே! நிந்தை (பழி), ஸ்தோத்ரம் (துதி, புகழ்ச்சி), ஸத்காரம் (மரியாதை, வெகுமானம்), திரஸ்காரம் (அவமதிப்பு) இவற்றிற்கு தேஹம் (சரிரம், உடல்) விஷயமென்று நினைப்பது, தேஹம், ஆத்மா இவைகளின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறியாமையாகிற அவிவேகத்தினால் (பகுத்து அறிதல் இல்லாமையால்) ஏற்பட்டதேயன்றி உண்மையில் தேஹம் அவற்றிற்கு விஷயமன்று. கட்டைக்குச் சந்தனம் பூசி அலங்கரிக்கை முதலிய ஸத்காரம் (மரியாதை, வெகுமானம்) செய்தால், அதற்கு அவற்றை நினைக்கும் தன்மை இல்லையென்பதில் விவாதமில்லையல்லவா? மன்னவனே! இந்த ஸம்ஸாரத்திலுள்ள தேவ மனுஷ்யாதி ப்ராணிகள் தேஹத்தை நானென்றும், அதைத் தொடர்ந்தவைகளை என்னுடையதென்றும், அபிமானித்து (நினைத்து), பிறர் அடிக்கினும் நிந்திக்கினும், “நான் அடியுண்டேன்; நான் நிந்திக்கப்பட்டேன்” என்று ப்ரமித்து, அடித்தவர்களையும், நிந்தித்தவர்களையும் ஹிம்ஸிக்கிறார்கள். தேஹாத்மாபிமான (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கமாகிற) ரூபமான அஜ்ஞானத்தினால் (அறியாமையால்) “நான் அடியுண்டேன்; நான் நிந்திக்கப்பட்டேன்” என்று நினைக்கிறார்கள். அந்தத் தேஹம் வதிக்கப்படும் (கொல்லப்படும்) பொழுது, அந்த அஜ்ஞானத்தினாலேயே “நான் வதிக்கப்பட்டேன்” என்று நினைக்கிறார்கள். வதம் (கொலை) முதலியவையெல்லாம் தேஹத்தைச் சேர்ந்தவைகளேயன்றி ஆத்மாவைச் சேர்ந்தவைகளல்ல. ஆகையால், ஸம்ஸாரிகள் நினைக்கிற நிந்தை (பழி), ஸ்தோத்ரம் (துதி, புகழ்ச்சி) முதலியவை அனைத்தும் தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தால்) ஏற்பட்டவைகளே. ஈச்வரனுக்கு இவையெல்லாம் கிடையாது. அவனுக்கு அந்த அஜ்ஞானமும் கிடையாது. அவனுக்கு ஜகத்தெல்லாம் சரீரமே. ஆயினும், அதில் அவனுக்கு ஆத்மாபிமானம் (தான் என்கிற எண்ணம்) கிடையாது. அவன் தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாத பரிசுத்தன். அவனுக்கு “நான் அடியுண்டேன்; நிந்திக்கப்பட்டேன்” என்கிற அபிமானமே கிடையாது. ஆதலால், அவன் ஹிம்ஸிக்கிறானென்று எந்தக் காரணத்தைக் கொண்டு கற்பிக்கமுடியும்?
அவன், தன்னை நிந்தித்த சிசுபாலாதிகளைத் தண்டித்தானாயினும், அது அவர்களுடைய ஹிதத்திற்காகவேயன்றி (நன்மைக்காகவே அன்றி), தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தால்) அன்று. ஹீனமான (மட்டமான) அசுர ஜன்மத்தைப் போக்கி, பரம புருஷார்த்த ரூபமான தன்னை அடையும்படி செய்தானென்பது நமக்குத் தெரிந்த விஷயமேயல்லவா? ஆகையால், அவன் ஸம்ஸாரிகளைப்போல் ஸ்துதி (புகழ்ச்சி), நிந்தாதிகளை (பழிகளை) அபிமானிக்கிறவனல்லன் (தனது என்று நினைப்பவன் அல்லன்). ஆனது பற்றியே சிசுபாலனுக்கு மோக்ஷங்கொடுத்தமை பொருந்துகின்றது. “ஆனால், பகவானை நிந்திக்கை (பழித்தல்) தோஷமாகாது. துதிக்கையும் குணமாகாது. மற்றும், வேனனுக்கும் சிசுபாலனுக்கும் பேதமென்ன (வேறுபாடு)? சிசுபாலனுக்கு மோக்ஷம் உண்டானாற்போல், வேனனுக்கும் மோக்ஷம் உண்டாக வேண்டுமல்லவா?” என்றால் சொல்லுகிறேன் கேள்.
பகவான் ஸம்ஸாரிகளைப்போல் நிந்தாதிகளை (புகழ்ச்சி, பழிகளை) அபிமானிக்கமாட்டானாகையால், இடைவிடாத த்வேஷத்தினாலாவது (பகையினலாவது), பக்தியினாலாவது, பயத்தினாலாவது, ஸ்நேஹத்தினாலாவது (நட்பினாலாவது), காமத்தினாலாவது பகவானிடத்தில் அவனைக் காட்டிலும் வேறொரு வஸ்துவும் தோற்றாதபடி மனத்தை நிலை நிறுத்தவேண்டும். ஸம்ஸாரியான ஜீவன், பகவானிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) சீக்ரத்தில் எப்பொழுதும் அவனையே சிந்தித்துக் கொண்டிருக்கும் தன்மையைப் பெறுவது போல், பக்தி யோகாதிகளாலும் அத்தன்மையைப் பெறமாட்டானென்பது என்னுடைய நிச்சயம். புழு, குளவியால் சுவற்றில் தன் பாழியில் அடைப்புண்டு அதனிடத்தில் கோபத்தினாலும், பயத்தினாலும் அதையே நினைத்துக் கொண்டிருந்து, அதன் ஸ்வரூபத்தைப் பெறுகின்றது. அவ்வாறே, தன் ஸங்கல்பத்தினால் மனுஷ்யனாக அவதரித்த ஸாக்ஷாதீச்வரனான ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் த்வேஷங்கொண்டு (பகைமை கொண்டு), அவனையே எப்பொழுதும் த்யானித்துக் கொண்டிருப்பவர்கள், பாபங்களெல்லாம் தொலையப் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனையே அடைவார்கள். பக்தியினால் பகவானிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி, அவனுடைய கதியைப் பெறுவது போல, காமம் (ஆசை), த்வேஷம் (பகைமை), பயம் இவைகளாலும் பலர் அவனிடத்தில் மனத்தை நிறுத்தி, அவனுடைய கதியைப் பெற்றார்கள். பகவானை அடைவதற்கு, ப்ரீதியுடன் மாறாமல் அவனையே நினைக்கையாகிற பக்திதான் காரணம். ஆயினும், பகவானிடத்தில் த்வேஷம், பயம், காமம் இவை தலையெடுத்து அவனை இடைவிடாமல் நினைக்கப்பெற்று, அந்நினைவின் மிகுதியால், அதற்குக் காரணமான த்வேஷாதிகளையும் மறக்கின்றார்கள். அந்நினைவு, மஹா ஆனந்த ஸ்வரூபனான பரமபுருஷனைப் பற்றினதாகையால், பக்தியைப்போல் அதுவும் அவனை அடைவதற்குக் காரணமாகின்றது. வேனாதிகள் (வேனன் போன்றவர்கள்) பகவானைப் பழித்தார்களேயன்றி, த்வேஷத்தின் மிகுதியால், அவனையொழிய மற்றொன்றையும் அறியாமல் அவனையே நினைக்குந் தன்மையைப் பெறவில்லை. ஆகையால், அவர்களுக்கு நரகமேயன்றி மோக்ஷம் உண்டாகவில்லை. ஆகையால், நிந்தை (பழி) தோஷமாகாதென்றும், ஸ்துதி குணமாகாதென்றும் நினைக்கலாகாது. பாவனையின் மிகுதியால், தாம் செய்யும் நிந்தாதிகளை மறக்கிறவர்களுக்கே அவை தோஷமாகமாட்டாவன்றி, மற்றவர்களுக்கு அவை தோஷமாகும். இடைப்பெண்கள் பகவானிடத்தில் காமத்தினாலும், கம்ஸன் பயத்தினாலும், சிசுபாலன் முதலிய ராஜாக்கள் த்வேஷத்தினாலும், அவனுடைய கதியைப் பெற்றார்கள். வ்ருஷ்ணிகளும், நீங்களும் தேஹ ஸம்பந்தத்தைப் பற்றின ஸ்நேஹத்தினால் (நட்பினால்), அவனுடைய கதியைப் பெற்றீர்கள். நாங்கள் பக்தியினால் அவனுடைய கதியைப் பெற்றோம். வேனன், காமுகர், த்வேஷிகள், பயந்தவர், ஸ்நேஹிதர் (நண்பர்), பக்தர் என்கிற கீழே சொன்ன ஐந்து வகைப்பட்டவர்களில் ஒருவகையிலும் சேர்ந்தவனல்லன். வேனன், பரம புருஷனைப் பழித்தானாயினும், சிசுபாலனைப்போல் த்வேஷம் செய்யவில்லை. ஆகையால், அவன் நிந்தித்ததைப்பற்றி நரகத்தையே அடைந்தான். மற்றொன்றும் தோன்றாதபடி நிலைநின்ற பாவனையை விளைவிக்கவல்ல த்வேஷாதிகளே (பகைமை முதலியவைகளே) மோக்ஷத்தைக் கொடுக்குமன்றி மற்ற த்வேஷாதிகள் நரகத்தையே விளைவிக்கும். ஆகையால், கீழ்ச்சொன்ன ஐந்து உபாயங்களில் ஏதேனும் ஒன்றால் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் மனத்தை நிறுத்த வேண்டும்.
பாண்டுவின் புதல்வனே! யுதிஷ்ட்ரா! உங்கள் சிறிய தாயின் பிள்ளையாகிய சிசுபாலனும், தந்தவக்த்ரனுமாகிய இவ்விருவரும் முன்பு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் த்வார பாலகர்களாயிருந்தவர்கள். ப்ராஹ்மண சாபத்தினால், தங்கள் ஸ்தானத்தினின்றும் நழுவினார்கள். முன்பு பகவானுக்கு மிகவும் அனுகூலர்களாயிருந்தமையாலும், இப்பொழுது ஏற்பட்ட த்வேஷத்தின் மிகுதியாலும், பகவானையே இடைவிடாமல் நினைக்கையாகிற பாவனா அதிசயத்தைப் பெற்று, அதனால் மோக்ஷத்தை அடைந்தார்கள்.
யுதிஷ்ட்ரன் சொல்லுகிறான்:- சாபம் எப்படிப்பட்டது? விஷ்ணுவின் பக்தர்களான அவர்களை அவமதித்து, சாபங்கொடுத்தவர் யார்? பகவானிடத்தில் மாறாத பக்தியுடைய மஹான்களுக்கு ஜன்மம் உண்டாயிற்றென்பது நம்பக் கூடாதது. கர்மத்தினால் விளையக்கூடிய ப்ராக்ருதமான தேஹம், இந்த்ரியம், ப்ராணன் இவை அற்றவர்களும், வைகுண்டவாஸிகளுமான நித்ய ஸித்தர்களுக்கு, ப்ராக்ருதமான தேஹ ஸம்பந்தமும் அதைத் தொடாந்து வரக்கூடிய ராக (விருப்பு), த்வேஷாதி (வெறுப்பு முதலிய) மயக்கங்களும் எவ்வாறு சேருமென்று எனக்குப் பெரிய ஸந்தேஹம் உண்டாகின்றது. இதை விவரித்துச் சொல்வீர்களாக!
நாரதர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மாவின் புதல்வர்களான, ஸனந்தனாதிகள் (சனந்தர், சனாதனர், சனத்குமார், சனகர்) ஆகிய நால்வரும் மூன்று லோகங்களிலும் ஸஞ்சரித்துக் கொண்டு, ஒருகால் தெய்வாதீனமாய் விஷ்ணுலோகம் சென்றார்கள். அவர்கள், ஐந்தாறு வயதுள்ள சிறுவர்கள் போன்றிருப்பார்கள். ருத்ரன் முதலியவர்களுக்கும் முன்னே பிறந்தவர்கள். தேஹத்தில் ஆடையின்றித் திகம்பரர்களாயிருப்பவர்கள். விஷ்ணுவின் த்வாரபாலகர்கள், அவர்கள் வருவதைக் கண்டு குழந்தைகளென்று நினைத்துத் தடுத்தார்கள். அவர்கள் கோபித்து, த்வார பாலர்களை நோக்கி “ரஜஸ், தமோ குணங்கள் தீண்டப் பெறாத ஸ்ரீவிஷ்ணுவின் பாதமூலத்தில் நீங்கள் வாஸம் செய்யத் தகுந்தவரல்ல. மூர்க்கர்களே! ஆகையால், நீங்கள் சீக்கிரத்தில் பாபிஷ்டமான அஸுர ஜன்மத்தைப் பெறுவீர்களாக” என்று சபித்தார்கள். இவ்வாறு சபிக்கப்பட்ட அந்த த்வாரபாலகர்கள், தங்கள் ஸ்தானத்தினின்றும் நழுவுவதைக்கண்டு, மன இரக்கமுடைய அந்த ஸனந்தனாதிகள் “நீங்கள் மூன்று ஜன்மங்களில் சாபம் தீரப்பெற்று மீளவும் இவ்வுலகத்தைப் பெறுவீர்களாக” என்று மொழிந்தார்கள்.
அவ்வாறு அந்தணர்களால் சபிக்கப்பெற்ற விஷ்ணுவின் த்வார பாலகர்களே, பின்பு திதியின் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அவர்களில் முதல்வன் ஹிரண்யகசிபு. அவன் தம்பி ஹிரண்யாக்ஷன். அவ்விருவரும் தைத்ய, தானவர்களால் துதிக்கப் பெற்றிருந்தார்கள். அவர்களில் முதல்வனாகிய ஹிரண்யகசிபு ந்ருஸிம்ஹாவதாரம் செய்தபகவானால் வதிக்கப்பட்டான் (கொல்லப்பட்டான்). ஹிரண்யாக்ஷன் மஹாஜலத்தில் முழுகின பூமியை எடுக்கும் பொருட்டு வராஹ உருவங்கொண்ட பகவானால் வதிக்கப்பட்டான் (கொல்லப்பட்டான்). ஹிரண்யகசிபு பகவானுக்கு மிகவும் ப்ரியனான ப்ரஹ்லாதன் என்னும் தன் புதல்வனை வதிக்கும் (கொல்லும்) பொருட்டு, அவனைப் பலவாறு ஹிம்ஸித்தான். அந்த ப்ரஹ்லாதன், பகவானுடைய தேஜஸ்ஸினால் பாதுகாக்கப்பட்டிருந்தான். அவன் பசி, தாஹம் முதலிய விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப் பெறாதவன்; ஸுகம், துக்கம் முதலியவற்றையெல்லாம் ஸமமாகப் பார்க்கும் தன்மையுடையவன். அவன், ஸகலமானவர்களுக்கும் அந்தராத்மாவான பரமாத்மாவாகவே தன்னைப் பாவித்துக்கொண்டிருந்தான். ஆகையால், ஹிரண்யகசிபு அவனை எவ்வகை உபாயங்களாலும் வதிக்க (கொல்ல) முடியாதிருந்தான். அந்த ஹிரண்யாக்ஷ, ஹிரண்யகசிபுக்கள் தான், இரண்டாவது ஜன்மத்தில் விச்ரவஸுக்குக் கேகஸியினிடத்தில், ராவண, கும்பகர்ணர்களாகப் பிறந்தார்கள். அவர்களிருவரும் உலகங்களையெல்லாம் பீடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஜன்மத்திலும், பகவான் ஸ்ரீராமனாக அவதரித்து, சாபம் நீங்கும் பொருட்டு, அவர்களை வதித்தான் (கொன்றான்). அந்த ராமாவதாரத்தின் மஹிமைகளையெல்லாம் நீ மார்க்கண்டேயரிடத்தில் கேட்கப்போகின்றாய். ஆகையால், நான் அதை இப்பொழுது விவரிக்க வேண்டிய அவச்யமில்லை. அந்த ராவண, கும்பகர்ணர்கள், இப்பொழுது மூன்றாம் ஜன்மத்தில், உன் தாய்க்கு உடன் பிறந்தவளிடத்தில், சிசுபால, தந்தவக்த்ரர்களென்கிற இரண்டு க்ஷத்ரியர்களாகப் பிறந்தார்கள். அவர்கள் இப்பொழுது சாபத்தினின்றும் விடுபட்டு ஸ்ரீக்ருஷ்ணனுடைய சக்ரத்தினால் பாபங்கள் யாவும் தொலையப்பெற்றார்கள். அவர்கள் ஓயாத வைரத்தினால் (பகைமையினால்) பகவானை இடைவிடாமல் த்யானித்துக் கொண்டிருந்தார்கள். அந்த த்யானத்தின் மஹிமையினால், அவர்கள் பகவானுடைய ஸாரூப்யத்தை (பகவானைப் போன்ற உருவத்தை) அடைந்து, த்வாரபாலகர்களாகி, முன்போலவே ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பார்ச்வத்தைச் (அருகில்) சேர்ந்தார்கள்.
யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- மிகவும் ப்ரீதி செய்யத்தகுந்த புதல்வனும், நற்குணங்கள் அமைந்த மஹானுபாவனுமான, ப்ரஹ்லாதனிடத்தில் ஹிரண்யகசிபுவுக்கு ஏன் த்வேஷம் உண்டாயிற்று? ப்ரஹலாதனுக்குத் தன்னைப் பரமாத்மாவாகவே பாவிக்கும்படியான நிலைமை எப்படி உண்டாயிற்று. இதை எனக்கு விவரித்துச் சொல்வீராக!
முதல் அத்தியாயம் முற்றிற்று