திங்கள், 13 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 15 - திருப்பூர் கிருஷ்ணன்

நல்லது செய்ய நாள் பார்க்காதே!

ஒரே கணத்தில் அஸ்தினாபுரத்தின் அந்த மாளிகை முழுவதும் பரபரப்பாகி விட்டது. இருக்காதா பின்னே! சிறிதுநேரத்தில் கிருஷ்ணர் வரப் போகிறாராமே! இப்போதுதான் துவாரகையிலிருந்து வந்த சேவகன் மூலம் செய்தி கிடைத்தது. 

தர்மபுத்திரர் அவசர அவசரமாக கண்ணனை எதிர்கொண்டு வரவேற்கும் உத்தேசத்தில் மாளிகையின் வாயிலுக்கு வந்தார். அர்ச்சுனன், பீமன், நகுல சகாதேவர்களோடு குந்திதேவியும், பாஞ்சாலியும் அவனை வரவேற்க வாயிலுக்கே வந்துவிட்டார்கள். 

வரப்போவது கடவுளல்லவா! வீடு தேடி வரும் கடவுளை வரவேற்க வாயில் வரை கூட வராவிட்டால் எப்படி!

ஆனால், கண்ணன் வருவதற்கு முன்பாக அரண்மனை வாயிலைத் தேடி வந்தான் இன்னொருவன். அவன் ஒரு யாசகன். ஏதேனும் பிச்சை பெறும் நோக்கில் தர்மபுத்திரரை நோக்கிக் கைநீட்டினான்.

தர்மபுத்திரர் எரிச்சலடைந்தார். 

யாரைப் பார்க்க வந்து நின்றிருக்கிறோம்? ஆனால், எதிரே யார் காட்சி தருவது? யாசகனை வரவேற்றுப் பொருள் வழங்கும் நேரமா இது? எங்கள் கண்ணக் கடவுள் அல்லவா வருகை தரப் போகிறான்? கடவுளுக்குப் பூஜை செய்யக் காத்திருக்கிறோம் நாங்கள். பூஜைவேளையில் யார் இந்த யாசகக் கரடி... 

"போய் நாளை வா. ஏதேனும் தருகிறேன். இன்று உன்னை உபசரிக்க இங்கு யாருக்கும் அவகாசமில்லை. நாங்கள் ஓர் அரிய விருந்தினருக்காகக் காத்திருக்கிறோம்.''

தர்மபுத்திரரின் வார்த்தைகளைக் கேட்டு பெருமூச்சோடு நகர்ந்தான் யாசகன். அவன் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் வெளிப்படையாகத் தெரிந்தது.

சற்று நேரத்தில் கையில் புல்லாங்குழலோடும், உதட்டில் புன்முறுவலோடும் கண்ணன் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் மகனைக் கண்ட தாயாய் குந்திதேவியின் முகமும், அண்ணனைக் கண்ட தங்கையாய் பாஞ்சாலியின் முகமும் தாமரை போல் பூரித்து மலர்ந்தன. பூரண கும்ப மரியாதை கொடுத்து கண்ணனை வரவேற்று மாளிகையின் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

கண்ணன் அவசரமாக பீமனை அழைத்தான். 

"பீமா! உடனே அரண்மனை முரசை எடுத்து வா. நான் சொல்லும் செய்தியை இங்கே முரசறைவாய். பின்னர் நாற்சந்தி கூடும் இடங்களில் நின்று முரசறைந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிக்க ஏற்பாடு செய்! மிக அவசரம். செய்தி தர்மபுத்திரரைப் பற்றியது!''

பீமன் ஒரே கணத்தில் அலங்கரித்த முரசை அநாயாசமாகத் தோளில் தூக்கிவந்து கண்ணன் முன் வைத்தான். தர்மபுத்திரர் வியப்படைந்தார். 

"என்னைப் பற்றி என்ன செய்தியை முரசறையச் சொல்கிறாய் கண்ணா?''

"இன்று காலத்தை வென்று விட்டாய் நீ. இன்னும் உன் வெற்றிச் செய்தி உன் காதுகளையே எட்டவில்லையா? நல்ல வேடிக்கை. வென்றவருக்கே தெரியாமல் ஒரு வெற்றியா? உன்னைப் பற்றிய அந்த வெற்றிச் செய்தியை எல்லா மக்களும் அறியவேண்டாமா? அதற்கு முன் நாமெல்லோரும் அந்தச் செய்தியைக் காது குளிரக் கேட்போம். பீமா! காலத்தை வென்று விட்டான் எங்கள் அண்ணன் என்று முரசறைந்து சொல்!''

பீமனுக்கு கண்ணன் என்ன திருவிளையாடலை நடத்தப் போகிறான் என்று தெரியவில்லை. ஆனால், அவன் சொன்னபடிக் கேட்டு விடுவதே புத்திசாலித்தனம். எப்படியும் கண்ணன் நினைத்தது தானே நடக்கும்!

பீமன், முரசை ஓங்கி அறைந்து, "இன்று காலத்தை வென்று விட்டார் எங்கள் அண்ணன்!'' என உரத்து முழங்கினான். அர்ச்சுன, நகுல, சகாதேவர்கள், குந்திதேவி, பாஞ்சாலியும் அந்த முழக்கத்தை வியப்போடு கேட்டார்கள். அவர்களுக்கும் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. தர்மபுத்திரர் பீமனைக் கையமர்த்தி நிறுத்தச் சொல்லிவிட்டு, கண்ணனிடம் கேட்டார்:

"காலத்தை வென்றுவிட்டேனா! நானா!''

"ஆம். சற்றுமுன் இங்கு வந்த யாசகனிடம் நீ சொன்ன வாக்கியத்தை நான் அறிந்தேன். அந்த வாக்கியத்தின் மூலம்தான் நீ காலத்தை வென்ற உண்மை எனக்குத் தெரிய வந்தது''.

"நான் அவனிடம் விசேஷமாக எதையும் சொல்லவில்லையே? போய் நாளை வா. யாசகம் தருகிறேன் என்றுதானே சொன்னேன்!''

கண்ணன் கலகலவென நகைத்தான். 

"ஆ... என்ன சூட்சுமமான பேச்சு! காலத்தை வென்றவன் தானே இப்படிப்பட்ட அற்புதமான வாக்கியத்தைக் கூற முடியும்?''

"இந்த வாக்கியத்திற்கும் காலத்தை வெல்வதற்கும் என்ன சம்பந்தம்?''

"நீ நாளை என்பதை ஜெயித்து விட்டாய் தர்மபுத்திரா! யோசித்துப்பார். அந்த யாசகன் நாளை வர வேண்டுமானால் முதலில் அவன் நாளை உயிரோடு இருக்க வேண்டும். நாளையும் உன்னிடம் யாசகம் பெறும் ஏழையாக அவன் இருப்பான் என்று சொல்வதற்கில்லை. கடவுள் அருளிருந்தால் நாளைக்குள் அவன் பெரும் செல்வந்தனாகி விடலாம். இன்று யாசிக்கலாம் என்று நினைத்த அவன் மனம் நாளையும் யாசிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? சரி. நாளை தருகிறேன் என்றாயே? அவ்விதம் தர, நீ நாளை இருப்பாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இன்று கொடுப்பதற்காக உன்னிடம் இருக்கும் செல்வம் நாளை வரை உன்னிடமே நிலைத்திருக்கும் எனவும் உறுதியாக நம்புகிறாயா? நிலையில்லாத இவ்வுலகில், நிலையில்லாத ஒரு மனிதன், நிலையில்லாத இன்னொரு மனிதனிடம் நாளை வா தருகிறேன் என்று சொன்னால் அவன் காலத்தை ஜெயித்து விட்டதாகத் தானே அர்த்தம்!''

தர்மபுத்திரரின் மனம் தான் பேசியது பற்றி வெட்கம் கொண்டது. 

"மன்னித்துவிடு கண்ணா! அவசரத்தில் சற்று நிதானம் தவறிப் பேசிவிட்டேன்!''

கண்ணன் குந்தியை உற்றுப் பார்த்தவாறே தர்மபுத்திரரிடம் சொன்னான்:

"ஆனால், எந்த அவசரத்திலும் கூடக் கர்ணன் யாசகம் கேட்டு வந்தவர்களை அலைக்கழிக்க மாட்டான். உடனே கையிலிருக்கும் எதையேனும் கொடுத்துத்தான் அனுப்புவான்! பிறருக்கு வாரிக் கொடுப்பதற்கென்றே பிறந்த வள்ளல் அவன்''.

தர்மபுத்திரர் பவ்வியமாய்ச் சொன்னார்:

"இனி கர்ணனின் கொடைக்குணத்தை நானும் பின்பற்ற முயல்வேன் கண்ணா! அத்தகைய நற்குணம் எனக்கும் வருமாறு நீதான் அருள வேண்டும்!''

"அண்ணனின் குணத்தைத் தம்பிகள் பின்பற்றுவது வழக்கம். உன் குணங்களை உன் நான்கு தம்பிகளும் பின்பற்றுகிறார்கள். ஆனால், கர்ணனின் குணத்தை நீ பின்பற்றுகிறேன் என்கிறாயே? அவன் என்ன உன் அண்ணனா.. அவன் குணத்தை நீ பின்பற்ற?''

இப்படிக் கேட்டுவிட்டுக் குந்தியையே பார்த்தான் கண்ணன். குந்தி ஏதொன்றும் பேசாமல் மவுனமாய்த் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீர்! கண்ணன் அவளைக் கண்களாலேயே அமைதிப்படுத்தி, பின்னர் தர்மபுத்திரரிடம் மெல்லச் சொன்னான்:

"போர் வரப் போகிறது தர்மபுத்திரா! போரில் உயிர் இழப்பு என்பது சர்வ சகஜம்! இரு தரப்பிலும் ஏராளமான உயிர்ப்பலி நிகழத்தான் செய்யும். போரின் இறுதியில் யார் இறந்து யார் பிழைப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆன்மா என்கிற வாளைத் தாங்கியுள்ள உறை தானே இந்த உடல் கூடு! இந்த உடலை நிலையானதென்று கருதியா அந்த யாசகனை நாளை வரச் சொன்னாய்! அனைத்து தர்மங்களையும் அறிந்த தர்மபுத்திரனே இப்படி நினைத்தால், சராசரி மானிடர்களைப் பற்றி என்ன சொல்ல? நேற்று உள்ளவர்கள் இன்றில்லை என்பதுதான் உலக நியதி. நல்லனவற்றைச் செய்ய நாள் பார்க்காதே. காலம் கடத்தாதே. உடனே செய்துவிடு.''

கண்ணனின் தேவாமிர்தம் போன்ற இந்த உபதேசத்தை தர்மபுத்திரர் மட்டுமல்ல, எல்லாரும் கைகூப்பி வணங்கிக் கேட்டுக் கொண்டார்கள். தர்மர் பணிவோடு கேட்டார்:

"தவறு செய்வது மனித இயல்பு தானே கண்ணா? நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். அதைத் திருத்திக் கொள்ள விரும்புகிறேன். சலிப்போடு திரும்பிச் சென்ற அந்த யாசகனை உன் அருளால் இப்போது நீ இங்கே வரச் செய்தால் என்னால் இயன்றதை யாசகனுக்கு அளித்து நிறைவடைவேன்!''

"அதற்கென்ன? அவனை வரச் சொன்னால் போயிற்று! அரண்மனை வாயிலுக்குச் சென்றால் அதே யாசகனைக் காணலாம்!" கண்ணன் பேச்சைக் கேட்டு எல்லாரும் அரண்மனை வாயிலுக்குச் சென்றார்கள். ஆனால் அவர்களுடன் கண்ணன் செல்லவில்லை. அவன் மாயமாய் மறைந்ததை யாரும் அறியவில்லை. 

கண்ணன் சொன்னபடி அரண்மனை வாயிலில் அந்த யாசகன் மறுபடி நின்று கொண்டிருந்தான். குந்திதேவி மட்டும் கூரிய கண்களோடு மறுபடி வந்த அந்த யாசகனை ஆராய்ந்தாள். 

"வாமனாவதாரத்திலிருந்தே உனக்கு இந்த வேலைதான். பிக்ஷை எடுப்பதை இன்னும் நீ விடவில்லையா? இப்போதெல்லாம் பிக்ஷை எடுத்துப் பெற்றது போதாதென்று, பால் வெண்ணெய் இவற்றை நீ திருடத் தொடங்கிவிட்டாய் என்றல்லவா கேள்விப்பட்டோம்?'' 

எல்லோரும் கலகலவென்று நகைத்தார்கள். யாசகனின் தலையில் ஒரு மயில் பீலியும் கையில் புல்லாங்குழலும் இருந்தன! 

"கண்ணா! வாழ்வின் நிலையாமைத் தத்துவத்தை எனக்கு உணர்த்த யாசக வடிவில் தோன்றிய என் தெய்வமே! உனக்கு அளிப்பதற்கு என்னிடம் என் உள்ளத்தை அன்றி வேறு என்ன இருக்கிறது!'' என்று தர்மபுத்திரர் சொன்னபோது பக்தியால் அவரது விழி தளும்பியது.

நன்றி - தினமலர் ஆகஸ்டு 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக