ஶ்ரீமத் பாகவதம் - 156

ஏழாவது ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபு தவம் செய்து ப்ரஹ்மதேவனிடம் வரம் பெறுதல்)

நாரதர் சொல்லுகிறார்:- ஓ, யுதிஷ்டிர மன்னவனே! ஹிரண்யகசிபு தன்னைப் பிறரால் வெல்ல முடியாதவனாகவும், மூப்பு, மரணம் அற்றவனாகவும், சத்ருக்கள் எவருமின்றி ஒரே மன்னவனாகவும் செய்து கொள்ள விரும்பினான். அவன், மந்தர மலைச்செறிவில் கால்கட்டை விரலால் பூமியில் நின்று, கைகளை உயரத்தூக்கி, கண்களை ஆகாயத்தில் நிறுத்தி, மிகவும் கொடுமையான தவம் செய்தான். அவ்வஸுரன், ஜடைகளின் (சடை முடியின்) காந்தியால் கிரணங்களோடு கூடின ப்ரளய காலத்து ஸூர்யன்போல ப்ரகாசித்தான். இவ்வாறு அவன் தவம் செய்து கொண்டிருக்கையில், முன்பு ராக்ஷஸர்களால் உபத்ரவிக்கப்பட்டு (துன்புறுத்தப்பட்டு), மறைந்து திரிந்து கொண்டிருந்த தேவதைகள், தங்கள் தங்கள் ஸ்தானங்களை (இருப்பிடத்தினை) அடைந்தார்கள். அவ்வஸுரனுடைய சிரஸ்ஸினின்றும், தவப்பெருக்கினால் உண்டான புகையுடன் கூடின அக்னி, கீழும் மேலும் குறுக்குமாக நாற்புறங்களிலும் பரவி லோகங்களையெல்லாம் எரித்தது. நதிகளும், ஸமுத்ரங்களும் கலங்கின. த்வீபங்களோடும், பர்வதங்களோடும் கூடின பூமண்டலமெல்லாம் நடுங்கின. ஸூர்யாதி க்ரஹங்களும், மற்ற நக்ஷத்ரங்களும் விழுந்தன. திசைகளெல்லாம் எரிந்தன. தேவதைகள், அந்தத் தவநெருப்பினால், ஸ்வர்க்க லோகத்தை விட்டு ஸத்ய லோகம் போய்ச்சேர்ந்து, ப்ரஹ்மாவை நோக்கித்  “தேவதேவனே! ஜகத்திற்கெல்லாம் ப்ரபூ! நாங்கள் ஹிரண்யகசிபுவின் தவத்தினால் தஹிக்கப்பட்டு, ஸ்வர்க்கத்தில் வாஸம் செய்ய முடியாதிருக்கிறோம். உனக்குப் பூஜை செய்கின்ற உலகங்களெல்லாம், அவனுடைய தவத்தின் கொதிப்பினால் பாழாவதற்கு முன்னமே உனக்குத் தோற்றுமாயின், அவனுடைய தவ நெருப்பை அணைப்பாயாக. நீ எல்லோரையும் பரிபாலிக்க வல்லவனல்லவா? பிறரால் செய்யமுடியாத தவத்தைச் செய்கின்ற அவ்வஸுரனுடைய அபிப்ராயம் (எண்ணம்) இதுவல்லவா? ஆனால், உமக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. ஆயினும் சொல்லுகிறோம், கேட்பீராக.” 

“ப்ரஹ்மதேவன் இந்திராதிகளுக்கு மேலான ஸ்தானத்தில் இருக்கிறான்; தவத்தின் கரை கண்டவன். அவன், இந்த உலகங்களையெல்லாம் படைத்து, ஸத்ய லோகத்தில் தன் ஆஸனத்தில் வீற்றிருக்கிறான். காலமும் நித்யம். ஆத்மாவும் நித்யன். ஆகையால் நான் எத்தனை காலமாயினும் தவம் செய்து அத்தவமஹிமையால் அதே ஆஸனத்தைப் பெறவேண்டும். தவ மஹிமையால் இந்த ஜகத்தையெல்லாம் தலைகீழாகச் செய்து விடுகிறேன். இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற தேவாஸுராதி நிலைமைகளை எல்லாம் மாற்றி விடுகிறேன். காலத்தின் பிரிவான ப்ரளயங்கள் தோறும் நாசம் அடையும்படியான  வைகுண்டாதி லோகங்களைப் பெறுவதால் என்ன ப்ரயோஜனம்? என்பது அவன் எண்ணம். (வைகுண்ட லோகத்தை நிலையற்றதாகவும் ப்ரஹ்மலோகத்தை நிலைநின்றதாகவும் நினைக்கிற இவ்வஸுரனுடைய தாமஸபுத்தி இதனால் வெளியாகிறது. “ஸர்வார்த்தாந் விபரீதான்ஷ்ச புத்தி ஸா பார்த்த தாமஸீ” (ப.கீ. 18.32) -  “எல்லாவற்றையும் விபரீதமாக நினைக்கும் புத்தியே தாமஸபுத்தி” என்று கீதையில் கூறப்பட்டது). அவன் எவ்வகையிலாவது உமது ஸ்தானத்தைப் பெறவேண்டுமென்று நிர்ப்பந்தமான (உறுதியான) அபிப்ராயம் (எண்ணம்) கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டோம். அதற்காகவே அவன் தவம் புரிகிறான். 

மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவே! ஆகையால், இவ்விஷயத்தில் எது யுக்தமோ (ஸரியோ), அதைச் சீக்ரத்தில் செய்வீராக. ஜகத்பதீ! எல்லாவற்றிலும் மேற்பட்டதான இந்த உம்முடைய ஸ்தானம், ப்ராஹ்மணர்களுக்கும், பசுக்களுக்கும், யோகம், க்ஷேமம், தர்மாதி புருஷார்த்தம், ஐச்வர்யம், மேன்மை இவைகளை விளைக்கும் பொருட்டு ஏற்பட்டிருக்கின்றது. இது மாறினால், அவர்களுக்கு எவ்வகை நன்மையும் கிடைக்காது என்று முறையிட்டார்கள்”. 

மன்னவனே, இவ்வாறு தேவதைகளால் விண்ணப்பம் செய்யப்பெற்ற ப்ரஹ்மதேவனும், ப்ருகு, தக்ஷர் முதலிய முனிவர்களால் சூழப்பட்டு, ஹிரண்யகசிபுவின் ஆச்ரமத்திற்குச் சென்றான். அங்கு புற்றுக்களாலும், புற்களாலும், மூங்கில்களாலும் மறைக்கப்பட்டிருந்த்தால் அவ்வஸூரனைக் காண முடியவில்லை. பிறகு உற்றுப்பார்த்து எறும்புகளால், தோல், ரத்தம், மாம்ஸம் (சதை), மேதஸ்ஸூ (கொழுப்பு) இவையெல்லாம் பக்ஷிக்கப்பெற்றும், அதைப் பொருள் செய்யாமல், தவத்தினால் உலகங்களையெல்லாம் எரிக்கின்றவனும், மேகங்களால் மறைக்கப்பட்ட ஸூர்யன் போன்றவனுமாகிய, அவ்ஸுரனைக் கண்டு வியப்புற்று கூறலானார்.

பிரும்மதேவர் கூறுகிறார்:- “ஓ கச்யபர் புதல்வனே! எழுந்திரு! எழுந்திரு! உனக்கு க்ஷேமம் உண்டாகும். நீ தவத்தில் ஸித்தி பெற்றாய். நான், நீ விரும்பும் வரத்தைக் கொடுக்க வந்திருக்கிறேன்; ஆகையால், உனக்கிஷ்டமான வரத்தை விரும்புவாயாக. மிகவும் ஆச்சர்யமான தைர்யம் உன்னொருவனுக்கே கண்டேன். இப்படிப்பட்ட தைர்யம் மற்றெவர்க்கும் கிடையாது. கொசு, எறும்பு முதலியவை உன் தேஹத்தை பக்ஷித்துவிட்டன. உன் ப்ராணன்கள் (உயிர்) எலும்புகளில் இருக்கின்றன. முன்புள்ள ப்ருகு முதலிய மஹர்ஷிகளும் இப்படிப்பட்ட தவம் செய்யவில்லை. பின்புள்ளவர்கள், இப்படி தவம் செய்யப் போகிறதில்லையென்று சொல்லவேண்டுமா? எவன்தான் தேவமானத்தினால் (தேவர்களின் கால அளவால்) நூறாண்டுகள் வரையில் தண்ணீருமின்றி ப்ராணன்களைத் தரித்துக்கொண்டிருப்பான்? திதியின் புதல்வனே! யோகிகளுக்கும் நேர முடியாத உன் மன உறுதியாலே நான் வெல்லப்பட்டேன். உன் தவநிலைமையால் வெல்லப்பட்டேனென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. ஓ அஸுரச்ரேஷ்டனே! நான் நிரம்பவும் ஸந்தோஷம் அடைந்தேனாகையால், நீ விரும்புகிற வரங்களையெல்லாம் கொடுக்கிறேன். மரணம் அடையுந்தன்மையுள்ள உனக்கு, நேர்ந்த மரணம் அற்ற என் காட்சி வீணாகாது” என்று மொழிந்தார்.

நாரதர் கூறுகிறார்:- வீணாகாத மஹிமையுடைய தன் கமண்டலுவின் திவ்ய ஜலத்தை எறும்புகளால் பக்ஷிக்கப்பட்ட அவ்வஸுரனுடைய அங்கத்தில் ப்ரோக்ஷித்தான். பிறகு அவ்வஸுரன், கட்டையினின்று அக்னி கிளம்புவது போல, புற்றினின்று ப்ராணபலம், இந்த்ரியபலம், தேஹபலம் இவையெல்லாம் அமைந்து கை, கால் முதலிய அவயவங்களெல்லாம் நிறைந்து, வஜ்ரம் போல் உறுதியான அங்கங்களுடையவனாகி, உருக்கின ஸுவர்ணம்போல் ஜ்வலித்துக் கொண்டு, யௌவன (இளம் வாலிப) வயதுடன் கிளம்பி ஆகாயத்தில் ஹம்ஸவாஹனத்தின் மேலிருக்கின்ற ப்ரஹ்மதேவனைக் கண்டு, மஹாநந்தத்துடன் பூமியில் தலையைச் சாய்த்து, நமஸ்கரித்து எழுந்து, வணக்கத்துடன் கைகூப்பி, ப்ரபுவான ப்ரஹ்ம தேவனைப் பார்த்து, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெற்று, ஆனந்தநீர் பெருக்கி, தழதழத்த உரையுடன் ஸ்தோத்ரம் செய்தான்.

ஹிரண்ய கசிபு சொல்லுகிறான்:- கல்பத்தின் முடிவில், இந்த ஜகத்தெல்லாம் காலத்தினால் ஏற்பட்ட பெரிய அந்தகாரம் (இருட்டு) சூழப்பெற்றிருக்க, ஸ்வயம்ப்ரகாசனான நீ, உன் தேஜஸ்ஸினால் அதை விளங்கச் செய்தாய். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களென்கிற மூன்று சக்திகளையுடைய நீயே ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களைக் கொண்டு இந்த ஜகத்தைப் படைப்பதும், காப்பதும், அழிப்பதும் செய்கின்றாய். நீ எல்லாரிலும் மேற்பட்டவன். மஹா குணங்களுடையவன். உனக்கு நமஸ்காரம். நீ ஜகத்காரணபூதன். ஜ்ஞான விஜ்ஞான மூர்த்தி. ப்ராணன்கள், இந்திரியங்கள், மனம், புத்தி, பூமி முதலிய பஞ்ச பூதங்கள் இவற்றால் நீ இந்த ப்ரபஞ்ச ரூபமாய்ப் பிரிந்து விளங்குகின்றாய் . உனக்கு நமஸ்காரம். நீ ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான இந்த ப்ரஞ்சத்திற்குள் புகுந்து, முக்ய ப்ராணரூபியாய் (மூச்சுக்காற்றாய்) இதைத் தரிக்கின்றாய். நீயே இவ்வுலகத்திலுள்ள ப்ரஜைகளுக்கெல்லாம் (மக்களுக்கெல்லாம்) ப்ரபு. புத்தி, மனம், இந்திரியங்கள் இவற்றையெல்லாம் நீயே நிர்வஹிக்கின்றாய். நீ, பூமி முதலிய பஞ்ச பூதங்களுக்கும், சப்தாதி விஷயங்களை க்ரஹிக்கின்ற (அறிகின்ற) இந்த்ரியங்களுக்கும், மனத்திற்கும் உள்ளே புகுந்து அவற்றைத் தரிக்கின்றாய். சதுர்ஹோத்ரகம் (ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரஹ்மா என்கிற நான்கு ருத்விக்குக்களும் சேர்ந்து செய்யும் கர்ம) முதலிய மந்த்ர வித்யைகளோடு கூடின வேதங்களால் நீயே யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களை நடத்துகின்றாய். நீயே மன உறுதியுடைய யோகிகளுக்கு அந்தராத்மாவாயிருந்து யோகத்தை நடத்துகின்றாய். நீ, தேச, கால, வஸ்து பரிச்சேதமற்றவன்; எல்லாம் அறிந்தவன். நீயே எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கின்றாய். இமை கொட்டாமல் விழித்துக் கொண்டிருக்கின்ற காலமும் நீயே. நீயே, லவம் (கண் இமைக்கும் நேரத்தின் ஆறில் ஒரு பகுதி), க்ஷணம் ( ஒரு வினாடியின் 4/5 பகுதி) முதலிய கால அவயவங்களால் (காலத்தின் பிரிவுகளால்) ப்ராணிகளின் ஆயுளை க்ஷீணிக்கச் (குறைக்கச்) செய்கின்றாய். நீயே, நிர்விகாரனான (மாறுதல் ஏதும் அடையாத) பரமாத்மா. நீ, சிறந்த ஸ்தானத்தில் இருப்பவன். காமத்தினால் விளையும் பிறவி முதலிய விகாரங்களற்றவன். ஸமஸ்த ஜீவலோகத்தையும் பிழைப்பிக்கிற ஆத்மா நீயே. ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான இந்த ப்ரபஞ்சத்தில் உனக்கு மேற்பட்டதாவது நிகராவது எதுவுமே இல்லை. உனக்கு வேறுபட்டதும் இல்லை. வேதங்களும், உபவேதங்களும், மற்ற ஸமஸ்தமான சப்த ப்ரபஞ்சங்களும் உன் சரீரங்களே. நீ, ஸ்வர்ணம் போல் அழகிய நிறத்துடன் விளங்குகின்ற இந்த ப்ரஹ்மாண்டத்திற்குள் கர்ப்பம் போன்றிருக்கிறாய். நீ அளவிட முடியாத ஸ்வரூபமும் குணங்களுமுடையவன். நீ, மூன்று லோகங்களுக்கு வெளிப்பட்ட பரமபதத்தில் வஸிப்பவன். 

ஓ தேவனே! ஸ்தூல (பெயர், உருவத்துடன் கூடிய) சேதன அசேதன ரூபமான இந்த ஜகத்தெல்லாம் உன்னுடைய ஸ்தூலசரீரம். எந்தச் சரீரத்தினால் ஜீவாத்மாக்களுக்கு இந்த்ரியங்கள், ப்ராணன்கள் மனம் இவற்றைப் படைத்து, அவற்றிற்கு விஷயங்களான சப்தாதி குணங்களை லீலைக்காக அனுபவிக்கின்றாயோ, அதுவே உன்னுடைய ஸூஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத) சரீரம். நீ மேலான ஸ்தானத்தில் வஸிப்பவன்; ப்ராக்ருதமான இந்திரியங்களால் உன்னை அறிய முடியாது. நீ, அனைவர்க்கும் அந்தராத்மா, புராண புருஷன். தேச, கால, வஸ்து பரிச்சேதங்களற்றதும், இந்த்ரியங்களுக்கு விஷயமாகாததுமான, உன் ஸ்வரூபத்தினால் இந்த ப்ரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கின்றாய். சேதனா சேதனங்களெல்லாம் உன் சக்திகள் போல உன்னைவிட்டுப் பிரியாதவை. நீ, ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்). இத்தகைய உனக்கு நமஸ்காரம். 

ஓ, வரதராஜனே! எனக்கு இஷ்டமான வரங்களைக் கொடுப்பாயாயின், நீ படைத்த ஸமஸ்த பூதங்களிடத்தினின்றும் எனக்கு மரணம் உண்டாகாதிருக்கும்படி அனுக்ரஹம் செய்வாயாக. மற்றும், க்ருஹம் முதலியவற்றின் உள்ளேயாவது, வெளியிலாவது, பகலிலாவது, ராத்ரியிலாவது எனக்கு மரணம் நேராதிருக்க வேண்டும். நீ படைத்த வஸ்துக்களில் உட்படாத, உன்னிடத்தினின்றும், எனக்கு மரணம் கூடாது. பூமியிலாவது, ஆகாயத்திலாவது, எத்தகைய ஆயுதங்களாலும் எனக்கு மரணம் கூடாது. ம்ருகங்களாலாவது, மனுஷ்யர்களாலாவது, ப்ராணனில்லாத வஸ்துக்களாலாவது, ப்ராணனுள்ள பூதங்களாலாவது, தேவதைகளாலாவது, அஸுரர்களாலாவது, மஹா ஸர்ப்பங்களாலாவது எனக்கு மரணம் கூடாது. யுத்தங்களில், நான் இணையெதிரில்லாதிருக்க வேண்டும். ப்ரஜைகளுக்கெல்லாம் நானொருவனே ப்ரபுவாயிருக்கவேண்டும். இந்திரன் முதலிய ஸமஸ்த லோகபாலர்களுடைய மஹிமையையும், யோகிகளுக்குள்ள அழியாத அணிமாதி (அணிமா முதலிய எட்டு பலன்கள் – அவையாவன: 

1.அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2.மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3.லகிமா - லேசாகச் செய்தல் 

4.கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5.வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6.ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7.ப்ராப்தி - நிணைத்த பொருளைப் பெறுதல் 

8.ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை) ஐச்வர்யத்தையும் எனக்குக் கொடுப்பாயாக. 

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை