அநியமத்துக்கும் அதே பாராட்டு
கீழ்ப் பாசுரத்தில் நியமத்துடன் நடந்த கோபாலனை குற்றமொன்றில்லாத கோவலர் என்று கொண்டாடிய ஆண்டாளைப் பார்த்து ஆகா! அண்டாள் மெச்சிய மாதிரி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். கதையைக் கந்தலாக்கி விட்டாள் ஆண்டாள். இந்தப் பாசுரத்தில் தலைகீழ்ப் பாடம்.
எல்லாவற்றையும் விட்டவனை கடமை மறந்தவனை 'நற்செல்வன்' என்று விகுதி போட்டு அழைக்கிறாள். நீங்களே இந்தப் பாசுரத்துக்குள் வந்து பாருங்கள். இப்படியும் கட்சி மாற முடியுமா என்று பிரமிப்பீர்கள்.
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு, இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும், நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ உன் வாசல் கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடேலோர் எம்பாவாய்
இனித் தான் எழுந்திராய், ஈதென்னப் பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
இளங்கற்றெருமை - நாட்கள் அதிகம் ஆகாத பச்சிளம் கன்றுகளையுடைய எருமைகள், கனைத்து - [தம் கன்றுகளுக்கு ஊட்டிவிட்டுப் பின் வழக்கம் போல் பால் கறப்பரில்லாமையாலே மடிகனத்து காம்பு கடுத்து அந்த வலி தாங்காமல்] கதறிக்கொண்டு, கன்றுக்கிரங்கி - தன் பச்சிளம் கன்றுகள் என்ன செய்கிறதுகளோ என்று இரங்கி, நினைத்து முலைவழியே - கன்று வாய் வைத்ததாகவே நினைத்து அந்த பாவனை வசத்தில் மடிக்காம்பு வழியே, நின்று பால் சோர - இடைவெளியில்லாமல் பாலைத் தொடர்ந்து வழியவிட்டுப் பெருக்கி, இல்லம் நனைத்து - வீட்டை ஈரமாக்கி, சேறாக்கும் - அந்தப் பால் வெள்ளத்திலேயே மாறிமாறிக் காலால் துகைத்து உள் தூசும் வெளித்துகளும் பால்பட்டு சேற்றுகுழம்பாகும். நற்செல்வன் - அப்படி எருமைகளைக் கறக்காமல் விட்டுப் போன வீட்டுத் தலைவன், இளைஞன், கண்ணனிடம் தொண்டூழியம் புரிபவன் [லட்சுமணனைச் சொன்னது போல கைங்கர்யமான செல்வத்தைப் படைத்த பாக்கியசாலி] தங்காய் - [அவனுக்கு]தங்கையாகப் பிறந்தவளே!
இந்தப் பாட்டில் வரும் இளைஞன் வீட்டுக் கடமையை மறந்தவன். கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்தவனுக்கும் இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? எருமைகள் கதறுகின்றன. கன்றுகளைத் தனியாகக் கட்டிவைத்திருக்கிறார்கள் பாதுகாப்பான இடத்தில் காலை எழுந்து கன்றுக்கு ஊட்டிவிட்டு பால் கறந்திருக்கவேண்டும். காலையில் கண்ணனிடம் வேலையாகப் போன இளைஞன் வேலை பளுவினால் திரும்பவில்லை. அதற்குள் வீடு, எருமைகள் மடிவழியே முலைக்கடுப்பு தாங்காமல் வழியவிட்ட பாலால் சேறாகியிருக்கிறது. அதற்குள் இந்தப் பெண்களும் வந்துவிட்டார்கள் தங்கையை அழைத்துப் போக. எல்லாம் சரி. இந்த இளைஞன் எப்படி நற்செல்வன் என்ற அத்தாட்சிப் பத்திரம் வாங்கினான் ஆண்டாளிடமிருந்து?
அநுஷ்டானம் முக்கியம் என்று கீழ்ப்பாட்டில் ஆண்டாள் சொன்னாள். இப்பாட்டில் அநுஷ்டானம் அதாவது அநுஷ்டானமின்மையும் அவ்வளவே சிறப்பு வாய்ந்தது என்கிறாள். அது ஏனெனில் அநுஷ்டானத்தை விட்டு விட்டு மனிதன் என்ன செய்தான் என்பது முக்கியம்.
இராமாயணத்தில் இராமன் காட்டுக்குப்போக இளவல் லட்சுமணன் அவனுக்கு உதவியாகத் தொண்டூழியம் செய்யவென்று தாய் சுமித்திரை கட்டளையிட்டபடி பின் தொடர்ந்தான். கட்டின மனைவியை விட்டு வந்து தாம்பத்திய நீதிக்குக் குற்றவாளியானான். பின் சகோதரனையும் அவன் மனைவியையும் பெற்றோராகவே பாவித்து இரவு பகலாகக் காவலிருந்து தொண்டும் செய்தான். அந்தக் காலகட்டத்தில் அவன் தன் சொந்த தினசரி அனுஷ்டானமோ ஜபம் தவமோ எதுவுமே செய்யவில்லை. அறம் செய்யாததற்கான குற்றம் அவனுக்கு ஏற்பட்டதாக யாருமே சொல்லவில்லை.
நற்செயல் அதாவது தர்மம் என்பது இருவகைப்பட்டது. சாதாரண தர்மம் மற்றும் விசேஷ தர்மம். ஒருவன் எப்போதும் சாதாரண அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். விசேஷ தர்மம் வந்து குறுக்கிட்டால் தினப்படி அறத்தை நிறுத்திவிட்டு விசேஷ அறத்தை மேற்கொள்ள வேண்டும்.
தசரதன் சாதாரண தர்மமான சத்யத்தைக் கடைப்பிடிக்க விசேஷ தர்மமாக அவனுக்கு வாய்த்த இராமனையே காட்டுக்கு அனுப்பி புத்திர சோகத்தால் உயிரிழந்தான். ததிபாண்டியன் கண்ணனைக் கட்டி அடிக்க வந்த பெண்களிடம் அவனைக் காட்டிக்கொடுக்காமல் பொய்சொல்லி வாய்மையாகிற தர்மத்தைவிட்டு சித்த தர்மமான பகவானைப் பிடித்தான். வழக்கமாக கோயிலுக்குப் போகும் வேளையில் அக்கம்பக்கத்தில் உதவிக்கென்று மருத்துவமனை போக நேர்ந்தால் வருத்தப் படுவோமா? கிளைப் பாதை வரும்போது நாம் விசேஷ தர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
'கனைத்து' பாசுரத்து நற்செல்வன் எருமை கறக்கும் நேரத்தில் கண்ணனிடம் தொண்டு செய்து ஆண்டாள் நல்லெண்ணத்தைப் பெற்றான். விசேஷ அறமான ஐஸ்வர்யத்தைப் பெற்றான் அவன்.
ஆண்டாளுக்கு தூமணி மாடமும் பனித்தலை வீழும் இந்தக் குடிலும் ஒன்றே. உள்ளே இருப்பவர்கள் அல்லவா முக்கியம்?
பனித்தலைவீழ நின் வாசல் கடைபற்றி - மேலே பனிவெள்ளம் கீழே பால்வெள்ளம் எங்களிடையே மால்வெள்ளம், இந்த வெள்ளக் காட்டில் குளிரி நடுங்கிக்கொண்டு [கூரையடைப்போ பூசின தரையோ இல்லாத] உன் வீட்டின் வாசல்நிலையை பிடித்துக் கொண்டு தொங்கியபடி நிற்கிறோம். உங்கள் வாசலைக் கடக்க படகு வேண்டும்போல இருக்கிறது.
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய் - நீரிலே நெருப்பு பற்றிகொண்டாற்போல கோபமே வராத இராமனுக்குக் கோபமூட்டினான் இராவணன். அந்தத் தென்னிலங்கை அதிபதியைப் பகைத்து அழித்தான் இராமன். அதுவும் எப்படியெனில் படிப் படியாக. முதலில் சேனை, பின் மந்திரிகள் பின் தம்பிகள், பின் பிள்ளைகள் பின் அவகாசம் (இன்றுபோய் நாளை வா!) பின் வேறு வழியேயின்றி இராவண வதம் என்றபடி. அந்த இராமன் கண்ணன் போலப் பெண்களைப் பாடாய்ப் படுத்தும் போக்கிரியில்லை. பெண்களை மிகக் கண்ணியமாக நடத்தும் ஆடவன். சீதைக்காக கடலில் அணை கட்டி ஒரு போரையே செய்து முடித்தவன் பெண்கள் மனதில் இடம் பிடித்தவன் உத்தமமான அந்த இராமனே. எனவே மனத்துக்கினியானைப் பாடினோம். இன்னும் நீ பேசவில்லை.
பெண்களை நெஞ்சாரல் பண்ணுகிற கிருஷ்ணனை மறக்கமுடியாமல் விரக வேதனையை அனுபவித்து மனம் ஆறுவதற்காக ஏகபத்தினி விரதனான, மனைவிக்காக அழுகிற, தேடி அலைகிற, இராமனைப் பாட நீயும் வா.
இனித்தான் எழுந்திராய் - இனியாவது எழுந்திருக்கமாட்டாயா? இது என்ன இப்படித் தூங்குகிறாய்? வைதீகமுமில்லாத வெளகீகமுமில்லாத வரைமுறையற்ற தூக்கம்? என்று அதட்டினார்கள்.
அனைத்தில்லத்தாரும் அறிந்து - ஆய்ப்பாடியில் ஒருத்தி பாக்கியில்லாமல் எல்லாரும் எழுந்து உன்னைக் கூப்பிட வேண்டும் என்று நீ நினைத்திருந்தாயானால் அப்படியே அத்தனை இல்லப் பெண்களும் வந்தாயிற்று, என்பது ஒரு கருத்து. பாடியிலுள்ள பெண்களெல்லாம் திரண்டு இன்னார் வீட்டின் முன் நின்றார்கள் என்பதை அக்கம்பக்கமெல்லாம் அறிந்து உன் மதிப்பு வீதியில் உயர வேண்டுமென்று நினைத்திருந்தாயானால் அப்படியே ஆயிற்று. உன் பேர் மிகவும் பிரபலமாகிவிட்டது. இனியாவது எழுந்து வா என்று கூப்பிட்டார்கள்.
இந்தப் பாட்டில் தொண்டரடிப் பொடியாழ்வாரைக் கூப்பிட்டார்கள். வைஜயந்தி என்கிற வனமாலையின் அம்சம் இவர். ஸ்ரீராம மிஸ்ராய நம: என்று ஏழாவது குருவை அழைத்துக் கொண்டார்கள்.
நியம அனுஷ்டானமும் அனுஷ்டானமின்மையும் விஷயமேயில்லை சித்த தர்மமான பகவான் தான் முக்கியம் என்கிற கருத்து இந்தப் பாட்டில் சிந்தனையைத் தூண்டும். கீழ்வரும் கதை இதற்கு விளக்கமாகும். எட்டுபேர் சேர்ந்து ஒரு ஊருக்குப் போகிறார்கள். வழியில் ஒரு நதியைக் கடக்கவேண்டியிருக்கிறது. படகு அக்கரைக்குப் போயிருந்தது. அது திரும்பி வரும் வரையில் நால்வராகப் பிரிந்து இவர்கள் சூதுசதுரங்கம் ஆடினர். ஒரு குழு பணம் வைத்து ஆடினர். இரண்டாவது குழு பொழுதுபோக்காக ஆடினர். படகு இக்கரைக்கு வந்தது. பந்தயமின்றி ஆடின நால்வரும் தங்கள் ஆட்டத்தை விட்டுவிட்டுப் படகில் ஏறி அக்கரை சேர்ந்தனர். பணம் வைத்து ஆடினவர்கள் ஆட்டத்தைக் கலைக்கப் பிரியப்படாமல் படகை விட்டு ஆடிக்கொண்டே யிருந்தனர். படகு வந்தது போனது இவர்கள் மட்டும் அக்கரை சேரவேயில்லை.
எனவே படகில் கவனம் இருந்து அக்கரையில் கண் இருந்தால் போதும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - திண்ணை டிசம்பர் 2004