திருப்பாவை திவ்ய பிரவாகம் - 14 - கண்ணன் ரங்காச்சாரி

12


கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு, இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
நனைத்து இல்லம் சேறாக்கும், நற் செல்வன் தங்காய் 
பனித் தலை வீழ உன் வாசல் கடை பற்றிச் 
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடேலோர் எம்பாவாய் 
இனித் தான் எழுந்திராய், ஈதென்னப் பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


12 - ம் பாட்டில், இளையாழ்வானைப் போலவே, விடாது கண்ணனோடே இருக்கும் ஒருவனுடைய தங்கை, பெரிய பக்தி குறிக்கோள் இல்லாதவளை, தோழிமார்கள் துயில் எழுப்புவதாய் குறிப்பு. அண்ணன் எந்த ஒரு காரணத்தையோ, பலனுக்காகவும் பரமனைப் பற்றியவன் அல்லன்.


கண்ணனை அடையும் வழி முறைகள் 'உபாயங்கள்' எனப்படும். அவனுடைய திருவடி சரணம் அடைதல் 'உபேயம்' ஆகும். எந்த ஒரு உபாயத்தையும் கொள்ளாமல் அவனோடே மனத்தினால் கலந்திருப்பதே உபேயம்.


'கனைத்திளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி' - இளமையினால் மடிகளில் பால் கனத்து, கன்றுகளைப் பற்றிய எண்ணம் வந்தவுடனேயே, எருமை இனங்கள். எங்கே திரிந்து கிடக்கிறதோ, எப்போது அவை வந்து பால் குடித்திடுமோ என்ற ஏக்கத்தினால் கனைத்திருக்குமாம்.


'சொரணை இல்லையா! நீ என்ன எருமை மாடா' என்று பிறரை நாம் ஏசுகிறோம். எந்த ஜீவனிலுமே தாய்மைக்கு உள்ள அன்பிலும் கரிசனத்திலும் என்றும் பாகுபாடு கிடையாது.


துக்கம் தொண்டையை அடைக்கும் போது நம்மையும் அறியாமல் நமக்கும் கனைப்பு ஏற்படும். யாருமே வந்து கறக்காமல் போனாலும் கூட, கன்று குடிப்பதாக எண்ணிக் கொண்டு தனக்குத்தானே திருக் காம்புகளின் வழியாக பாலினை வெளியில் பெய்து கிடக்குமாம்.


'நனைத்தில்லம் சேறாக்கும்' - கறக்கும் கோபர்கள் வாராததனாலும், தானே வெளி வரும் பால், பாத்திரங்களில் பிடிக்கப் பெறாமையாலும், கொட்டில்களில், தரையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வீட்டிற்குள்ளும் புகுந்து, முழு வீட்டின் தரையையே, வெள்ளைச் சேறாக்கி விடுமாம்.


இந்த அமுத வரிகளின் உட்பொருள். கண்ணனை எண்ணி நமக்குள் பெருகிடும் பக்தி பிரவாகம், கண்ணனால் அறியப் பெறாமையால், பெருக்கெடுத்து ஓடி, நம் இல்லம் முழுவதுமே நனைத்துக் கிடக்குமாம்.


மேகங்கள் ஆழியுள் (கடலில்) புகுந்து நீரையெல்லாம் அருந்தி மேற்சென்று மழை கொடுக்குமாம். ஆனால் திருமலையில் பரவி கிடக்கும் நீரூற்றுக்களிலோ தானே ஊற்றெடுத்துப் பெருகி நிறைந்திருக்கும்.


நல்ல பக்தர்கள் மற்றும் ஞானிகள் தங்களுடைய ஆற்றாமையாலே, அவர்களே கேட்காமல் போனாலும் எல்லோருக்கும் ஞான உபதேசங்களை வழங்கிக் கிடப்பார்கள். அர்ஜுனன், வேண்டிக் கேட்காத போதிலும், போர்க்களத்தினில் 'பூய ஏவ மகா பாஹோச் ச்ருணுமே பரம் வச:', தானே வலிந்து, அவனுக்கு நற்போதனைகளை, கண்ணன் அருளியதைப் போலே,


'நற்செல்வன் தங்காய்' - இளையாழ்வான் போன்று கண்ணனை விடாதுத் தொடர்ந்து கிடக்கும் தமையனைக் கொண்டவளே!. எழுந்திராய் என்று எழுப்பப் படுகிறாள். அவன் உறவால் மட்டும் அல்லாது குணத்தாலும் அண்ணனானாவன் என்ற குறிப்பு.


'லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பன்ன' - லக்ஷ்மணனுடைய சுயப் பலனற்ற ராம கைங்கர்யம் தான் உயரிய செல்வம். அந்தச் செல்வத்தை அளவிலதாய், கிருஷ்ண கைங்கர்யத்தினால் நிரந்தரமாகக் கொண்டவன், உறங்கி இருப்பவளின் அண்ணன்.


தோழிகள் உறங்கியவளிடம் சொல்கிறார்கள். உன் அண்ணனை விடக் கூட, எம் போன்ற பக்தர்களிடம் இன்னும் கரிசனையோடு இருக்க வேண்டாமோ நீ. விபீஷண ஆழ்வானை விடவும், அவனுடைய தங்கை 'திரிஜடை' ஸீதா பிராட்டிக்கு நெருக்கமானவளாய் இருந்தது போலே.


'பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றி' - மேலிருந்து பனி மழை பொழிந்து கிடக்கிறது, காலடியில் பால் வெள்ளம் சேறாகிப் பெருகிக் கிடக்கிறது. இடைப்பட்ட தோழியர்கள் மனத்தில் பக்தி வெள்ளம் ப்ரவாஹித்து பரவி கிடக்கிறது.


வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் எப்படி ஒரு படகைப் பிடித்துக் கொண்டிருப்பார்களோ, அது போலே உறங்குபவளின் வீட்டின் புழக்கடை உத்திரத்தைப் பற்றிக் கொண்டு நின்றிடும் தோழிகளாம்.


'சினத்தினால்' - இரு சாராரின் சினத்தைக் குறிக்கும் சொல். முதலாவது, கிருஷ்ணனால் மனது பேதலிக்கப் பட்டு, அவன் சம்பந்தம் கிடைக்கப் பெறாமல் கோபம் கொண்ட கோபியர்கள், மற்றும், இராவணன், வருந்தித் திருந்திடுவான் என்று ராமபிரான் காத்திருந்தும் மாறிடாதவனை, வலியச் சென்று போர் ஆற்றிட வேண்டுமே, என்று எண்ணிய தயாளுவான ராமனின் 'சினம்'.


பெண்கள் மனத்தை அலைக்கழிப்பவனான கண்ணன் பற்றிப் பேசும் போது, பெண்களின் நலனையே பெரிதாய்க் கொண்ட ராமபிரானை பிரஸ்தாபிக்கிறார்கள்.


கூனியின் முதுகுக் கோணலைப் பந்தடித்துச் சரி செய்து, கைகேயியின் சொல்லுக்குப் பணிந்து, சபரிக்கு மோக்ஷம் கொடுத்து, அகலிகையின் சாபம் தீர்த்து, உள்ள நாள் முழுதும் சீதை ஒருவள் மட்டுமே மனைவியாக கொண்ட ஏக பத்தினி விரதனின் பெருமையைப் பேசுகிறார்கள் தோழிமார்கள்.


'தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடேலோர் எம்பாவாய்' - 
கண்ணனை நினைத்த மாத்திரத்திலே கோபியர்களுக்கு அளவற்ற அன்பினாலும், மனோ நெருக்கத்தாலும் கோபம் பொங்கிடும், தங்களை விரைவில் வந்தடைய வில்லையே என்பதால். 


'கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்' என்னும் வகையில் அவன் நாமத்தை யார் பாடக் கேட்டும் விரக வயப்பட்ட கோபியர்க்குக் கோபம் கொப்புளிக்குமாம்.


ராமனுடைய பராக்கிரமங்களால், எண்ணிய மாத்திரத்திலேயே யாருக்கும் மனதினில் தேன் ஊறி இனிமை கொடுக்கும்.


தண்ணீரைப் போன்று தயையும் கருணையும் நாலா பக்கத்திலும் பெருக்கிக் கிடப்பவன் ராமன்.


'ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருதவ் ரணம் த்ருஷ்ட்வா 
ப்லவஹ சார்த்தூலம் கோபாஸ்வ வசமே யிவான்' - ராவணனால் அம்புத் தைத்து ரணம் திருவடிகளில் பட்ட போதும், நீரின் மேல் கிளம்பிய நெருப்பினனாய் காட்சி தந்தார். தனக்கு ஏற்பட்ட வலி கூடச் சாதாரணமானவனுக்கு, எந்த ஒழுக்கமும் அற்ற அரக்கன் ராவணனின் அம்பு மழையை எதிர்கொள்ள வேண்டிக் கிடக்கிறதே என்ற காரணத்தினாலேயே சினம் கொண்டார்.


'பாடவும் நீ வாய் திறவாய் இனித்தாய் எழுந்திராய்' - எங்கள் மனோ வியாகூலங்களைக் கேட்ட பின்னும் உறங்குவாயோ. குறைந்தது எங்களோடு பேசவாவது செய்.


'ஈதென்ன பேருறக்கம்' - இது என்ன பெண்ணே, அவ்வளவு ஆழமானத் தூக்கம். சூரியச் சந்திரர்கள் மாற்றங்களை அறிந்தே சம்சாரிகள் தூக்கம் களைந்து விடுவார்கள். எம்பெருமான் பள்ளி எழுச்சிப் பாடிடவும் எழுந்திடுவான், இது என்ன முடிவில்லாத தூக்கம்.


'அனைத்தில்லத்தோரும் அறிந்தேலோரெம்பாவாய்' - நாங்கள் உன்னை உறக்கத்தில் இருந்து எழுப்புவதை ஊரார் எல்லோரும் அறிந்து கொண்டு விட்டார்கள். பகவத் விஷயங்கள் எவ்வளவு ரகசியமாகக் காப்பாற்றி வைத்தாலும், எப்படியோ எல்லாரும் அறிந்து கொள்வார்கள். நான்கு சுவர்களுக்குள் கற்றுக் கொடுக்கிற அஸ்திரப் பிரயோகங்களை, வெளியில் இருந்தே அறிந்து கொண்ட ஏகலைவனைப் போலே.


இந்தப் பாடலின் உட்பொருள், நாம் அழுத்தமான ஆணவத் திரையை மனத்துக்குள் கொண்டோமென்றால், ஆழ்ந்த தூக்கத்தினைபோலே, ஞான விழிப்பு ஏற்படவே செய்யாது.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை