நியமத்தைக் கைவிடாத கோவலனின் அறச்சிறப்பு
[கோவலர் தம் பொற்கொடி]
ஊருக்கெல்லாம் கண்ணபிரான் ஒரு செல்லப் பிள்ளையானால் இப்போது கூப்பிடப்படுகிற பெண் ஊருக்கே ஒரு செல்லப் பெண் என்று கொண்டாடப் படுபவள்.
விவாதத்துக்கும் விவாகத்துக்கும் சாம்யம் முக்கியம். அப்பை சப்பையோடு விவாதித்து எந்தக் கருத்தையும் புரியவைக்கமுடியாது. சமமான திறமையுடன் உள்ளவன் வாதிடும்போது பேச்சாளனுடைய படிப்பும் கேள்வியும் பீறிக்கொண்டு வெளியில் விழும். அப்படியே புத்தியிலும் தோற்றத்திலும் குணத்திலும் சமமாக இருக்கக்கூடிய பெண்ணை அடைவது ஒரு ஆடவனுடைய கனவாக இருக்கும். அப்படி கண்ணனோடு எல்லாவகையிலும் சாம்யம் பெற்ற ஒரு பெண்ணை இந்தப் பாட்டில் எழுப்புகிறார்கள்.
கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து உன்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலொர் எம்பாவாய்.
கெளஸ்துபம் என்ற மணி அவதாரமெடுத்துப் பிறந்த குலசேகர ஆழ்வார் கீழ்ப் பாட்டில் அழைக்கப் பட்டது போல கருடபிரானின் அவதாரமான பெரியாழ்வார் இந்தப் பாட்டில் எழுப்பப் படுகிறார்.
எப்போதும் இமையாமல் பரமனைப் பார்த்தவாறே இருக்கிற தேவர்கள் எப்படி மூப்பு நரை திரையின்றி இளைஞர்களாகவே இருப்பார்களோ அப்படி எப்போதும் கண்ணனின் ஸ்பரிசம் பட்டு பசுக்கள் கன்றுகளாக இருக்க வைத்தே செழிப்பாய் வளர்ந்து கன்றுபோட்டு பால் கறக்க ஆரம்பித்துவிட்டன கோகுலத்தில். ஏற்கனவே கறவைகளாயிருந்தவை இளகிப் பதித்து முதுமை ஒட்டாமல் அப்படியே இருந்தன. ஆக கன்றுக்கறவைக் கணங்கள் பல இந்த வீட்டிலும் இருந்தன என்று ஒரு விளக்கம். நிறைய கன்றுகளையுடைய கறவைக் கூட்டங்கள் என்றும் 'கற்றுக் கறவைக் கணங்கள் பல' என்ற வார்த்தைக்கு சிலர் பொருள் சொல்கிறார்கள். ஆனால் முதல் விளக்கம் தான் சரியானது. ஏனெனில் கறவை என்பதிலேயே கன்றுடைமை தெரியவரும் இன்னமும் கன்றுடைய கறவை என்று சொல்வதில் அர்த்தமில்லை. கன்றாக இருந்தவாறே கறவையானது, முகத்தில் கன்று தன்மையும் உடலில் கறவைத் தன்மையும் உடையது என்பதிலேயே சிறப்பு அதிகரிக்கிறது. இளைஞனாக இருக்கும்போதே அமுத வாக்கு பொழிகின்ற உத்தம ஆசாரியர்களைப் போல.
இந்தப் பாசுரத்தில் ஆடாமல் அசங்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் தகப்பன் மிகச் சிறந்த உழைப்பாளி. அவன் ஒருவனே தன் வீட்டுக் 'கற்றுக்கறவைக் கணங்கள் பல'வற்றையும் கறந்துவிடுவான். அது ஒன்றே அவனுடைய தினசரித் தொழில். அத்தோடு நில்லாமல் அவன் பிரமாதமான சண்டைக்காரன். அவனுக்கு வந்த சண்டையை மட்டும் தான் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமில்லை. கோபால குலத்தவனுக்குப் போரிடுதல் முறையில்லை என்று அவனுக்குச் சும்மா இருந்துவிடமுடியாது. ஊருக்கோ கண்ணனுக்கோ ஒரு பிரச்னை என்று வந்தால் விவகாரம் கிட்டே வந்து அவன் வீட்டுக்குள் நுழையும் வரை அவன் காத்திருப்பதில்லை. தகராறு முளைத்தவுடன் பகைசெய்தவர்களின் கொழுப்பு அடிக்கிழங்கோடு தகர்ந்து தூக்கியெறியப் படும் விதத்தில் பகை முகாமுக்கே போய் சண்டையிட்டு வென்றுவரும் குணம் அவனுடையது. தம் காரியம் தாம் பார்க்கும் கோபாலருக்குப் பகை ஏது என்று கேட்டால் கண்ணனின் பகை கோபாலருக்கும் பகை என்று யூகிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான நேரடிக் காரணமில்லாமல் இராவணன், இராமப்ரேமையை முன்னிட்டு வானரர்களுக்குப் பகையானபடிக்கே கம்சன் கோபாலர்களின் பகையானான். அவன் இடையர்களுக்கு அரசியல் ரீதியாக தொந்தரவுகளைத் தர அவர்கள் அங்கங்கு மோதி விஷயங்களைத் தீர்க்கவேண்டியிருந்ததை ஆண்டாள் வரிகளில் புரிந்துகொள்ள முடிகிறது. வீட்டுக்காரனின் தன்மையில் குற்றமே கிடையாது என்பது ஆண்டாளின் 'கணிப்பு' இங்கு குற்றம் பற்றி என்ன பேச்சு என்று நினைக்கலாம். ஆண்டாள் குறிப்பிடுவது அவன் வேறு யோக ஞான, பக்தி அனுஷ்ட்டானங்களைச் செய்யாமல் இருப்பது பற்றி.
தன் வேலையைப் பார்க்கிறான். ஊர் defence க்குப் போகிறான். பின்னும் மூன்றாவதாக எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மயோகி போல தன் வேலையைத்தான் பார்க்கும் அவன் உயர்ந்தவன் அவனுடைய புதல்வி 'பொற்கொடி' என்று அழுத்தம் திருத்தமாக certificate வழங்குகிறாள் ஆண்டாள். கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே என்பது படுத்திருப்பவளுக்கு சிறப்பு விளியாயிற்று.
சென்று செருச் செய்வது சக்கரவர்த்தித் திருமகன் செய்தது போல பகைமுகாம் போய் இராவணனை ஜெயித்து வந்தது போல.
குற்றமில்லாமை என்பது கோவலர்களின் குலத்துக்கு எதுவெனில் பிரயோசனம் எதிர்நோக்காமல் கர்மானுஷ்டானம் செய்வது. அந்தக் கோவலர் குலத்தின் ஒற்றை வம்சக் கொடி அதிலும் பொன்னாலான கொடி உறங்குபவள். 'மெல்லிய இடையும் பாம்பின் படம் போன்ற பின்பக்கமும் கிருஷ்ணனைப் பிச்சேற்றவல்ல மயில் போன்ற அழகும் உடையவளே! நீ எழுந்து வரவேண்டும்' என்கிறபடி எளிமையான வர்ணனை. ஆழம் வைக்காமல் பேச ஆண்டாளுக்கு வராதே!
'புற்றரவல்குல் புனமயிலே போதராய்' என்கிற phrase இன்னும் கூர்மையானது. 'வெய்யிலிலடியுண்டு புழுதிபடைத்த அரவுபோலன்றிக்கே தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலேயிருக்கை' என்பது வியாக்கியானம். புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில். அவயவ சோபை அவளிடம் அதோடு முடியவில்லை. அவளுக்கு மயிலின் சாடை. எப்படிப்பட்ட மயில் என்றால் 'புலம் பெயர்ந்த மயில்' அல்ல. அது வாடிக்கிடக்கும். தன் புனத்தில் தன்னிச்சையாக இருக்கும் மயில். சுதந்திரமாக ஆடிப் பாடிக் களித்திருக்கும் மயில். இன்னொரு காட்டுக்குப் பிடித்துப் போகப் படாத தன் புன மயில் அவள். தன்னிலத்திலே நின்ற மயில்தோகை போல கூந்தலை உடையவளே எழுந்திரு என்றார்கள்.
ஸ்வாபதேசம் என்ற பெயரில் முழு தத்துவார்த்த விளக்கத்தைத் திருப்பாவைக்குப் பெரியவர்கள் செய்து வைத்தார்கள். வேதாந்தம் ஜனரஞ்சகத்தைக் குறைத்து என் புரிபாட்டைப் பாதிக்கும் என்று மட்டும் நான் அதைத் தவிர்க்கவில்லை. Down to the earth policy என்று சொல்லப்பட்ட லோகாயதப் புரிதலுக்காகவே அவதரித்த ஆண்டாளின் அடிநோக்கத்தைக் கெடுத்து விடுவோமோ என்ற பயமும் கூட. எந்தமின் மின்னணு சக்தியும் earthfactor இன்றி இயங்க முடியாது. ஆண்டாளே earth என்பது ஒரு அழகான irony. அவள் நிலம் தொடுகிற விஷயங்களிலேயே மனதைச் செலுத்தியிருக்கிறாள். லட்சியக் காற்றாடிகளை நாம் நிலத்தில் நின்றபடியே அலைக்கவிடுகிறோம். விடுபட்ட காற்றாடி அறும். மாட்டிக்கொள்ளும். காலைப் பதியவிடாமல் திட்டமிட்ட பறத்தலுக்குக் கூட உந்துசக்தி கிடைக்காது, அப்படி ஆண்டாள் மிகுந்த ஈடுபாட்டொடு தினசரி வாழ்வியல் கடப்பாடுகளைப் பின்பற்றும் அவசியங்களை எப்போதும் சொல்லியபடி இருக்கிறாள். 'கீசுகீசு' பாசுரத்தில் பெண்கள் வாழ்வியல் ஒழுங்கைச் சொன்னது போலவே இந்தப் பாசுரத்தில் ஆண்களின் வாழ்வியல் ஒழுங்கை அழுத்திப் பேசுகிறாள். கற்றுக்கறவைக்கூட்டங்களை உடையவன் எப்படி தற்காப்பு மேற்கொள்ள இடையில் time management செய்கிறான் என்பதையும் பெண்கள் தயிர்கடைதலூடே நாமசங்கிர்த்தனம் செய்வதைக் கோடியிட்டதைப் போலவே விவரிக்கிறாள். நேரமில்லை என்று சொல்லிக்கொண்டு நாம் அறம் சார்ந்த செயல்களையும் அறத்தார் சார்ந்த கடமைகளையும் தவிர்ப்பதை கேலி செய்கிறாள்.
அதனால் ஸ்வாபதேசத்தில் முக்கியமான சில அம்சங்களை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதால் ஓரிரு புள்ளிகளை நான் வைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். திருப்பாவையில் 'தாய்' 'யசோதை' என்று வருமிடங்கள் திருமந்திரம் என்றும் 'தந்தை' 'காவலன்' 'நந்தகோபன்' என்று வருமிடங்கள் ஆசார்யன் என்றும் 'கண்' 'கண்ணழகு' 'மை' என்று வருமிடங்கள் ஞானம் என்றும் 'இதழ்' 'மலர்' 'வாசம்' 'அல்குல்' 'இடை' என்ற இடங்கள் பக்தி என்றும் அறிக. இந்தப் பாசுரத்தில் இடையும் அல்குலும் ஏன் சொல்லப் பட்டன? அவற்றின் சோபிதம் கிருஷ்ணனுக்குப் பிரியமானவை என்ற உருவகம் தத்துவக் கோட்பாட்டில் எப்படிப் பொருந்துகின்றன?
உடலின் மேல்பாகத்தில் தலை முக்கியம். தலையின் உள்ளீடு intellect எனப்பட்ட ஞானம். கீழ்ப்பாகம் யோகத்தின் அங்கமான நடவடிக்கைகளின் காரணி. அதனால் கீழுக்கும் மேலுக்கும்நடுவில் இடை போல ஞானத்துக்கும் யோகத்துக்கும் நடுவில் பக்தி இருக்கிறது. ஞானம் பெறப்படுவது. யோகம் பெறப்படுவது. பக்தி பெறப்படுவதல்ல. உள்ளார்ந்தது. அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது.
மனைவி புத்திசாலியாயிருப்பதும் காரியங்களைச் செய்ய வல்லவளாயிருப்பதும் அவள் வளர்த்துக்கொண்ட திறமைகள். அன்பாக இருப்பது அவளுக்கே வாய்த்தது. புருஷனுக்கே உரியது. ஜீவ பரம சம்பந்தத்தை ஆண்பெண் உறவில் பார்க்கும்போது கிருஷ்ணனுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய இடையும் அல்குலும் குறிப்பிட்ட கோபிகைக்கு இருப்பதாகச் சொல்வது அந்த ஜீவாத்மாவின் 'பக்தி' பிரகாசித்தது என்பதை விளக்க. ஞான பக்தி யோக வரிசையில் இடைப்பட்டது பக்தியல்லவோ!
போகத்துக்கு இடையும் இடை சூழ்ந்த அழகும் முக்கியம் என்பதில் கிருஷ்ணாம்ருத நீராட்டமான கலவி அழகிய பூடகமாகிறது. இவ்வளவு போதும் இங்கு ஸ்வாபதேச விளக்கம்.
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் அவளுக்கு மிக நெருக்கம். எல்லாரும் வந்து அவள் முற்றத்தை நிறைத்தாயிற்று. அத்தோடு அவர்கள் மேகவண்ணனான கண்ணன் பெருமையை பாடுகிறார்கள். மேகம் கண்டால் மயில் ஆடுவது போல முகில் வண்ணன் பேர் கேட்ட மாத்திரத்தில் புனமயில் ஆட வேண்டாமா? ஓடி வரவேண்டாமா?
இன்னமும் சிற்றாது பேசாது கிடந்து நீ உறங்குவதற்கு என்ன பொருள்? நாம் எல்லாருமாய் உன் வீட்டு முற்றத்தில் சிற்றில் இழைத்து விளையாடினதும் 'முற்றம் புகுந்து முறுவல் செய்தீர்' என்றபடி பூட்டிய வீட்டின் உள்முற்றத்தில் கண்ணன் வந்து சிற்றில் சிதைத்து நம்மை அழ வைத்ததும் எல்லாமான ஞாபகங்களோடு தோழிகள் கூடிவிட்டார்கள். நீ உகக்கும் கண்ணன் திரு நாமங்களைச் சொல்கிறார்கள். நீ எங்களிடையே வந்து நின்று உன் அழகிய தோற்றத்தால் எங்களை மகிழ்வித்து எங்கள் கூட்டத்துக்கு இன்னும் சிறப்பைத் தரவேண்டும் என்றார்கள்.
'விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில் வண்ணனை' என்று பெரியாழ்வார் திருமொழி 5-4-11ல் வருவதை இரு வார்த்தைகளில் முத்திரையாக்கிப் பெரியாழ்வாரைக் குறிக்கிறாள் ஆண்டாள். ஸ்ரீமத் யாமுந முநயே நம: என்பதாக அடுத்தகுரு எழுப்பிக் கொள்ளப்பட்டார்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - திண்ணை டிசம்பர் 2004