வெள்ளி, 27 டிசம்பர், 2019

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 13 - கண்ணன் ரங்காச்சாரி

11

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் 
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே 
புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் 
சுற்றத்துத் தோழி மாரெல்லாரும் வந்து நின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச் 
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

11 ம் பாட்டாலே, எல்லாருக்கும் பிரியமானவளான ஒருத்தியை, அவளுடைய குலத்தினால் (பொற்கொடி) அழகினால் (புன மயில்), குணங்களால் (செல்வப் பெண்டாட்டி) , கண்ணனோடும் நெருங்கியவள் என்பதனால் துயில் எழுப்புகிறார்கள். அவள் சொல்வாளாம், கண்ணனைப் பெற்றிட நான் ஏன் நோன்பிருக்க வேண்டும். என்னை அடைந்திட அவன் தான் நோன்பிருக்க வேண்டும் என்ற பொய்யான இறுமாப்புடன் பேசுவாளாம்.

இந்தப் பாடலின் உட்கரு. கிருஷ்ணனுக்கு மிகவும் நெருக்கமானவள், தன்னுடைய பக்தியை தனக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறாள், எல்லோருக்கும் பகிராமல். ஆனால், கறவைக் கணங்கள் தம் கன்றுகளுக்குச் சிறிதளவே பாலினைத் தேக்கிக் கொண்டு, மற்றவர்களுக்குத் பெரிதளவில் தானம் செய்யும் கைங்கர்யத்தில் ஈடு பட்டிருக்கின்றன.


'கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து' - திருமாலின் திவ்ய அனுகிரஹத்தால், வயதான பின்பும் இளைஞாராய் உள்ளவர்களைப் போன்று, பரம பதத்திலுள்ளவர்களுக்கு வயதே ஆகாத தோற்றம் இருக்குமாப்போலே,

கண்ணனுடைய திருக்கர ஸ்பரிசத்தால், கன்றுகளாய்த் தோற்றம் அளித்தாலும், பால் கறக்கும், எண்ணிக்கைக்கு கட்டுப்படாத ஆவினங்கள், கண்ணனோடு நாள் முழுவதும் கூட இருந்து, அவனை நிழல் போலத் தொடர்ந்த இஷ்டமானவைகளாகப் பேசப்படுகின்றன.

எப்படி உலகத்தினுடைய, அனைத்து நியமங்களும் பரம்பொருள் ஒன்றாலே நிர்ணையிக்கப் பெறுகிறதோ, அது போல, பசுக்களிலிருந்து, மடி கடுக்காதபடி பால் கறப்பதும் ஆயர் குலத்தினருடையவர்க்கு மட்டுமே உள்ள கை வண்ணமாம்.

'செற்றார் திறலழியச்' - தங்களிடம் போரிட வருபவர்களின் திறத்தை அழிந்திடச் செய்யும்.

போரில் ஒரு முக்கியத் தத்துவம். நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு திறமையினால் தான், எதிரி நம்மிடத்தில் போர் புரிய வருகிறான். அந்தத் திறமையை விரைவில் அறிந்து கொண்டு அதை அழித்து விட்டாலே எதிரி அழிந்து விடுவான். கோபர்கள் தாமே சென்று போரிட மாட்டார்கள். தாமே போரிட வந்தவர்களை வென்றிடாமல் விடவும் மாட்டார்கள்.

கிருஷ்ணனுடைய மஹாநுபாவத்தை அறியாதவர்கள் சத்ருக்கள். அதுவன்றி, பாகவதர்களை எதிர்ப்பவர்களும் கிருஷ்ணனுக்கு எதிரிகள் தாம்.

'சென்று செருச் செய்யும்' - எதிரியின் பலம் எங்கிருந்தாலும், எப்போது அவர் நம்மை வந்து தாக்குவார்களோ என்றுக் காத்திராமல் தானே அந்த இடத்தைத் தேடிச் சென்று அவரை அழித்து,

'குற்றமொன்றில்லாத கோவலர்' - மிகவும் சாந்தமான, மென்மையான, தீய குணங்கள் அற்ற யாதவ குலத்தினர். கிருஷ்ணனுடைய சம்பந்தப் பட்ட எல்லாமே, உயர்ந்ததெனக் கொள்ளுபவர்கள்.

'தம் பொற்கொடியே' - கொடியினுடைய அழகும், செல்வத்தின் பளபளப்பும் நிரம்பியவள். 'ஜனகானாம் குலே கீர்த்தி மாஹரிஷ்யேதிமே சுதா' - ஊருக்கே செல்லப் பெண் பிள்ளை, எப்படி ஊருக்கே கண்ணன் செல்ல ஆண் பிள்ளையோ அதை போல.

'ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்' - இங்கும் அங்கும் அலைந்து கிடக்கும் ஆவியானதற்கு, கண்ணன் திருவடிகளன்றி பற்றும் கொம்பு வேறொன்றும் அறிந்திலேன். கண்ணனுடைய சம்பந்தத்தை மட்டுமே அடைவதற்காகக் காத்துக் கிடக்கும் கோதை பிராட்டியைப் போன்றவள்.

'புற்றரவு அல்குல்' - சர்ப்பங்களுக்கு எதிரிகள் இல்லாத வகையில், தங்கிக் கொள்ளத் தகுந்த, ஆழமான லக்ஷ்ணங்கள் கொண்ட பிறப்புறுப்பைக் கொண்டவள். தனக்குள் மட்டுமே ஆழமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் பக்தியைக் கொண்டவள் என்பதன் குறியீடு.

'புன மயிலே போதராய்' - தன்னுடைய இச்சைப்படி அங்குமிங்குமாய் தோட்டத்தினில் அலைந்து கிடக்கின்ற மயிலின் அழகிய சாயலைக் கொண்டவள். கண்ணன் மேல் அளவில்லாத காதல் மிகுந்திருந்தும், அவன் ஏன் தன்னை வந்து காதலிக்கக் கூடாது என்று தனது அழகின் மேல் இறுமாப்பு கொண்டவள்.

'சுற்றத்துத் தோழி மாரெல்லாம் வந்து நின் முற்றம் புகுந்து' - இவளுடைய சௌலப்யங்களால் (குண, அழகுக் காரணங்களால்), கண்ணனை அடைந்திடுவது எளிது என்றறிந்த, இவளின் தோழிமார்கள் உரிமையோடு இவள் உறங்கிக் கிடக்கும் முற்றத்திலும் பள்ளியறையுள்ளும் புகுந்து,
'முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்' என்று, கண்ணன் நினைத்தால், நம் அகங்களுக்குள்ளேயும், உள்ளத்துக்குள்ளேயும், நம்முடைய பிரத்யேக அந்தரங்க நினைவுகளைக் கூடக் கடந்து உள்ளே நுழைந்து விடுவான்.

'முகில் வண்ணன் பேர் பாட' - வெளித் தோற்றத்தில் மேகம் போன்ற நிறத்தினான் ஆயினும், மேகத்துக்குள் அடங்கிக் கிடக்கும் திங்கள், ஆதித்யர்களை போன்ற பரம தேஜஸ்ஸை உள்ளடக்கியவன்.

'சிற்றாதே பேசாதே' - முகில் வண்ணன் என்று பெயர் சொன்ன மாத்திரத்திலேயே, கண்ணனின் நினைவில் கிடந்து அங்க சேஷ்டைகளை எதுவும் செய்யாதே , பேசாதே, என்று பொய்யாய் அவளை ஏசுகிறார்கள், அவள் சேஷ்டைகளை பெரிதும் ரசித்திடும் தோழியர்கள்.

'செல்வப் பெண்டாட்டி நீ' - நீ கிருஷ்ணன் மிகவும் உகக்கும் அபூர்வமானவள். நீ எங்களைப் போன்ற பெண்களை ஆட்டிப் படைக்கும் ஐஸ்வர்ய தேவதை.

'எற்றுக்குரங்கும் பொருளேலோரெம்பாவாய்' - காரணம் எதுவுமே இல்லாமல் உறங்கிக் கிடக்கிறாயே ஏனோ சொல் பெண்ணே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக