உயர் பாவை - 11 - சதாரா மாலதி

உயர் பாவை - 11 - சதாரா மாலதி

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாரயணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் 
தோற்றும் உனக்கே பெரும்துயில் தான் தந்தானோ 
ஆற்றவனந்தல் உடையாய் அருங்கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

ஏராளமான தவப் பயனால் இடையீடன்றி கண்ணனுடன் சுவர்க்கானுபவம் பெற்று வருகின்ற பெரீய்ய அம்மணி! என்று ஒரு அர்த்தம். [ஏதம்மா? இருப்பது ஏழாவது ஸ்வர்க்கமோ? என்கிறபடி]

நோன்பு நோற்று கிருஷ்ணானுபவம் பண்ணலாம் என்று நேற்றிரவு விடியவிடியப் பேசிவிட்டு படுக்கப் போனவங்களா அம்மா தாயே நீங்க? என்பது இன்னொரு அர்த்தம்.

எல்லாருமாகக் கூடி நோன்பு நோற்று கிருஷ்ணானுபவம் பெறலாம் என்று சொல்லி எங்களைக்கூப்பிட்டுத் தான் மட்டும் தனி நோன்பு செய்து சுவர்க்கம் போகப் புறப்பட்டாயா? என்று மூன்றாவது அர்த்தம்.


இதில் முதல் கருத்துக்கு அடிப்படை இந்தப் பெண்ணின் வீடு கண்ணன் வீட்டுக்கு அடுத்த வீடு. ஒரு வேலிப் படலையோ மதிலையோ தாண்டி குதித்தால் கண்ணன் இந்தப் பெண்ணின் படுக்கை அறைக்கு வந்துவிட முடியும். 

இந்தப் பெண்ணோ இவர்களெல்லாம் கண்ணனுக்காகப் படுகிற பாட்டை அவன் தனக்காகப் படுமாறு படுத்தி வைக்கக் கூடியவள். கூட்டத்திலேயே மிகவும் எடுப்பானவள்.

சுவர்க்கம் என்ற சொல் ஸ்வர்க்கம் என்ற வடமொழிச்சொல்லின் திரிபாக தமிழில் கையாளப்பட்டது. 'யஸ் த்வயா ஸஹஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா' என்றாள் சீதா இராமனிடம். நீ உடனிருந்தால் அது சுவர்க்கம் இல்லாவிடில் அதுவே நரகம் என்றபடி உள்ளே சுவர்க்கம் புகுந்தாயோ என்ற கேள்விக்குக் கண்ணன் அங்கே உண்டோ என்ற சந்தேகம் தொனியாயிற்று.

என்னைப் போய் சிநேகிதமில்லாமல் பிரித்துப் பேசுகிறார்களே, அம்மா தாயே என்கிறார்களே என்று வருத்தப் பட்டபடி உள்ளிருக்கும் பெண் வெளியே இருப்பவர்களின் இனிமையான குரல்களை ரசித்துக் கேட்டபடி படுத்திருந்தாள்.

'தோ பார்ரா, கதவைத் தான் திறக்கலை, வரேன் வந்திட்டிருக்கேன் அப்படியின்னு ஒரு பதில் கூடவா சொல்ல முடியலை?'

சொர்க்கத்திலெ இருந்தபடியே ஒரு பதிலைச் சொல்றது! அவ்வளவு பெற மாட்டோமா நாங்க?'
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் என்ற வரிகள் வெளியே காத்திருக்கும் கூட்டத்தை நோக்கி பேசப் பட்டவை.

'வீண்பழி சொல்லாதீர்கள். கிருஷ்ணன் இங்கில்லை' என்று உள்ளிருப்பவள் கூவிச் சொன்னாள். 'நீ சொன்னால் ஆயிற்றா? நீ மறைத்தாலும் துளசி வாசனை இங்கு கமழ்ந்து உண்மை தெரிந்து போய்விட்டதே!' என்று தாம் கண்டுபிடித்ததைக் காண்பிக்கும்படிக்கு 'நாற்றத்துழாய் முடி' என்ற வார்த்தையைப் போட்டார்கள். திருத்துழாய் வாசனையை மோப்பம் பிடித்து கண்டுபிடித்ததாகப் பேசுகிறீர்களா? விடிய விடியப் பேசிவிட்டு அந்தப் பக்கம் போனீர்கள். திரும்பிப் பார்த்ததும் விடிந்துவிட்டது என்று வந்து நின்று மதில் காவல் கிடக்கிறீர்கள். இதில் உங்களுக்குத் தெரியாமல் எந்தக் கண்ணன் உள்ளே வந்துவிட முடியும்? என்று கோபப் பட்டாள் உள்ளிருப்பவள். 

'அவனுக்கு என்ன ஒரு கதவு ஒரு மதில் ஒரு வேலி இதெல்லாம் கணக்கா? எங்களைப் போல வெளியே நின்று கதவு திறக்கப் படும் வரைகாத்திருக்க வேண்டுமா? அவன் நாராயணன் என்று உனக்குத் தான் தெரியாதா? எங்களுக்குத் தான் தெரியாதா? நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடியவன், மறையவும் கூடியவன்' என்கிறதாக நாற்றத்துழாய் முடி நாராயணன் என்றார்கள்.

உள்ளிருப்பவளுக்கு வெறுத்துவிட்டது. அசந்து தூங்குவதாக பாவனை செய்து குறட்டையும் விட்டாள்.

அதைக் கேட்டவர்கள் 'கும்பகர்ண'னும் தோற்று உன்னிடம் தன் உறக்கத்தைத் தந்து போனானோ' என்றார்கள்.

சுமாலியின் மகள் கேகஸியின் இரண்டாவது மகன் கும்பகர்ணன். இராவணனின் தம்பி. இவன் பெரிய வீரனும் புத்திசாலியும் நல்லவனும் ஆவான். மழையிலும் குளிரிலும் பஞ்சாக்கினியிலும் வீற்றிருந்து கடும் தவத்தைப் பண்ணி பெரிய தவப் பயனைச் சேர்த்து விட்டபின் அவன் புத்தி மாறியது. அபரிமிதமான தவச் செல்வம் பெற மீண்டும் தவத்துக்கு உட்கார்ந்தான். அப்போது தேவர்கள் பிரும்மாவிடம் 'இவன் இப்போது துஷ்டனாகி விட்டான். சாதுக்களை நலியும்படி கொடுமை செய்கிறான். நேற்று நந்தவனத்தில் ஏழு அப்ஸரஸ்களையும் தேவேந்திரன் பணியாளர்கள் பத்து பேரையும் பிடித்துத் தின்றான். அனேகம் முனிவர்களை மானுடர்களை அப்படியே தின்றிருக்கிறான். இவன் தவத்துக்கு வரம் கொடாமல் தப்பித்தால் உலகம் பிழைக்கும்' என்றார்கள். பிரம்மாவும் பெரிய வரம் ஏதும் இல்லாமலே இந்தத் துயரம்செய்யும் இவன் வரம் பெற்றபின் என்ன செய்வானோ என்ற பயத்தில் வாக்கு தேவதையான சரஸ்வதியை வேண்டி அவன் வரம் கேட்கும் சமயத்தில் நாக்கைத் திருப்பிப் போடுமாறு பணித்தார். அவளும் அப்படியே செய்ய 'நித்தியத்துவம்' கேட்க வந்த கும்பகர்ணனுக்கு வரம் கேட்கும் சமயம் நாக்கு குளறி 'நித்திரத்துவம்' என்று வார்த்தை வெளியே வந்தது. அப்படியே பன்னெடுங்காலம் ஒரே தன்மையனாய் உறங்கி வாழும்படி வரம் அளிக்கப் பட்டது அவனுக்கு.

கும்பகர்ணன் இந்தப் பெண்ணுக்குத் தோற்றது எப்படி?

சிற்பிகளோ ஒவியர்களோ போட்டி வைத்துக் கொண்டால் என்ன செய்வார்கள்? நாமிருவரும் ஒரே நாள் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் நம் கலையை ஆரம்பிப்போம். பிறகு தனித் தனியே கலையைப் பூர்த்தி செய்வோம் நடுவர்களை அழைத்து யார் கலைப் படைப்பு சிறந்ததென்று கேட்போம் யார் படைப்பு இகழப் படுகிறதோ குறையுள்ளதோ அவர் தோற்றபின் கலையை வெற்றிபெற்றவரிடம் விட்டுப் போய் விட வேண்டும் என்று நிபந்தனை போட்டுப் போட்டியை ஆரம்பித்துக் கொள்வார்களல்லவா? அப்படி இந்தப் பெண் கும்பகர்ணனிடம் சொன்னாள். உன்னைவிட நான் அதிக நேரம் தூங்குவேன் என்று. பார்க்கலாமா? என்று போட்டி வைத்துக் கொண்டார்கள். நடுவர்கள் நின்றார்கள். கும்பகர்ணன் எழுந்துவிட்டான். இந்த அம்மாள் அப்புறமும் எழுந்திருக்கவில்லை. நடுவர்கள் முடிவு செய்தார்கள் இவள் ஜெயித்ததாக. தோற்ற கும்பகர்ணன் தன் கலையை அதாவது தூக்கத்தை அவளிடம் ஏற்கனவே இருந்த தூக்கத்தோடு அதிகப் படியாக கொடுத்துச் சென்றான்.

'பரசுராமனை வென்று இராமன் அவன் கை வில்லை வாங்கினாற்போல நீ கும்பகர்ணனை வென்று அவன் நித்திரையைக் கை கொண்டாயோ?அவனது துயில். உன்னதோ பெருந்துயில். அவன் தூங்கி ஒரு சீதையைத் தான் இராமனிடமிருந்து பிரித்து வைத்தான். நீ தூங்கி ஒரு ஊர் முழுக்கவுமான பஞ்சலட்சப் பெண்களைக் கிருஷ்ணனிடமிருந்து பிரித்திருக்கிறாய், அவன் ஆறு மாதம் தூங்கி ஆறு மாதம் விழிப்பான். உனக்கு ஒரே தூக்கம் தான். காலம் காலமாகத் தூங்குவாய் போலிருக்கிறது' என்றார்கள்.

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணன் என்றார்கள். நாம் பாடிப் புகழ்ந்தால் அவனிடமிருந்து புருஷார்த்தம் பெறலாம். அவன் நாராயணன். அவனே கிருஷ்ணம் தர்மம் சநாதனம் என்று சொல்லப் பட்ட கிருஷ்ணன். அவனே ராமோ தர்மவான் விக்ர: என்று சொல்லப்பட்ட புண்ணியன். புண்ணியம் என்பதே அவன் தான். அவனுடைய அப்ரீதி பாபம். ப்ரீதி புண்ணியம். நம் பக்தியும் நற்கருமமும் நம்மைக் காப்பாற்றுவதில்லை. அவை நம் நாளைத் திருப்தியாகக் கழிக்க உதவுகின்றன. நம்மைக் காப்பது புண்ணியனான அவனுடைய முழுக் கருணைதான் என்ற கருத்து வெளிவருமாறு புண்ணியன் என்றார்கள். 

புண்ணியன் எங்காவது ஒருவனின் மரணத்துக்குக் காரணமாவானா? குடி நீருக்கென்று வெட்டிவைத்த ஒரு குளத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு தலைகீழாக விழுந்தாற் போல கும்பகர்ணன் சரணாகத வத்சலனிடம் கருணையை வாங்கிக் கொள்ளாமல் மரணத்தை வாங்கிக் கொண்டான். அதற்கு இராமன் என்ன செய்ய முடியும்? எனவே புண்ணீயனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணன் என்றார்கள்.

அவனிடமிருந்து துயிலை வாங்கிக் கொண்டாய் என்றவுடன் உள்ளிருப்பவள் ராட்சசனோடு அரை நிமிடம் அதிகம் தூங்கின என்னை ஒப்பிட்டார்களே என்று வெட்கி எழுந்தாள். தூக்கக் கலக்கத்திலும் அவள் அழகு ஜ்வலிக்க' ஆற்ற அனந்தலுடையாய் [அளவற்ற தூக்கம் உடையவளே!] அருங்கலமே! தேற்றமாய் வந்து திற! [கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே!] உடை முடி எல்லாம் சரியாக்கிக் கொண்டு வா. லட்சுமணன் முன் தாரை வந்து நின்றது போல அலையக் குலைய வந்து நிற்காதே பவ்யமாக பொதுச் சபையில் தோன்றுவதற்குரிய கண்ணியத் தோற்றத்தோடு வா என்றார்கள். லட்சுமணன் ராமகாரியத்தில் தாமதம் செய்த சுக்ரீவனின் அந்தப்புறக் கதவை அம்பால் துளைத்ததும் தாரை ஓடி வந்ததும் நினைவு கூறப் பட்டது.

அம்மனாய் என்று அழைக்கப் பட்டவர் குலசேகராழ்வார்.

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லாற் சரணில்லை 
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே 

என்று பாடியவர். ஸ்ரீபராங்குசதாசாயநம: என்று ஐந்தாவது குருவை அழைத்துக் கொண்டார்கள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை டிசம்பர் 2004
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை