வியாழன், 26 டிசம்பர், 2019

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 12 - கண்ணன் ரங்காச்சாரி

10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத் துழாய் முடி நாரயணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் 
தோற்றும் உனக்கே பெரும்துயில் தான் தந்தானோ 
ஆற்றவனந்தல் உடையாய் அருங்கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

பத்தாம் பாட்டில், கண்ணனுடைய திருமாளிகைக்கு, இடைச் சுவர் கூட இல்லாத பக்கத்துத் திருமாளிகையில் வசிக்கும், துடுக்கு மிகுந்த பெண்ணொருத்தியைத் தோழியர் துயில் எழுப்புவதாகக் குறிப்பு.

கண்ணனால் பாடாய்ப் படுத்தப் படும் பெண்கள் இடையில், கண்ணனைக் குறும்புகள் செய்து படுத்திடும் பெண் இவள். கண்ணனோடு திரு நீராடும் சமயத்தில், கண்ணனின் முகத்தில் சந்தனமும் வாசப் பொடிகளையும் பூசி, அவன் கண் மூடிக் கிடைக்கியிலே, 'தண்ணீர் தண்ணீர்' என்று அவனை புலம்பிடச் செய்யும் பெண்.

'நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்' வைகலுக்குப் பின்னாலும் எழுந்திராத இப்பெண், முதல் நாளில், அடுத்த நாள் மற்றவருடன் சேர்ந்து நன்றாக நோன்பிருந்து சுகம் பெற விரும்புவதாகக், கூறிக் கிடந்தாள். நோற்காமலேயே நோன்பின் பலனைப் பெற்றவள் இவள் என்ற குறிப்புண்டு.

மற்ற பெண்கள் அவளை, 'மனதாலேயே கிருஷ்ணனனோடு சேர்ந்து நோன்பு செய்வேன், சேர்ந்து குளித்திருப்பேன், சேர்ந்தே அனுபவித்திருப்பேன், என்று நோன்பிருந்து சுவர்க்கம் புரிந்த அம்மையே' என்று விளிக்கிறார்கள்.


கிருஷ்ணன் தான் ஸ்வர்க்கம். 'யஸ் த்வயா சஹசஸ் ஸ்வர்க்கோ நிரயோயஸ் த்வயா வினா' - கிருஷ்ணனின் ரூபமே ஆனந்தம், குணங்கள் ஆனந்தம், அவன் பற்றிய எண்ணங்களே ஆனந்தம். அதானால் தான், அவனே ஸ்வர்க்கம்.

'அம்மனாய்' என்பதன் இன்னொரு பொருள், தாய் எப்படித் தன் குழந்தைகளின் சுகானுபவங்ளையே தன் சுக அனுபவமாகக் கொள்ளுகிறாளோ, அது போலவே, மற்ற தோழிகளும் கண்ணனுடன் சேர்ந்து அனுபவிக்கும் சுகங்களைத் உனது அனுபவங்களாக்கிக் கொள்ளக் கடவாய், அதற்குப் பிரயத்தனங்கள் செய்வாய்' என்று உறங்கிக் கிடப்பவளிடம் கூறுவதாகப் பொருள்.

'மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்' - வாசல் கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பதில் கூடவா சொல்லுதல் கூடாது, என்பது வெளியில் நின்றவர்கள் கூற்று. உடம்பைக் கிருஷ்ணனுக்குக் கொடுத்திருந்த போதில், வார்த்தையாவது எங்களுக்குக் கிடையாதோ. கண்ணும் செவியும் சேர்ந்தே பட்டினி கிடக்க வேண்டுமா.

'உன் கண்ணனைத் தான் எங்களுக்குக் கொடுக்க மனமில்லை; உன்னையாவது எங்களுக்குக் கொடுக்கக் கூடாதோ?'

உள்ளிருந்தவள் சொல்கிறாள். கிருஷ்ணன் என் அகத்துக்குள்ளேயா இருக்கிறான்? என் மேல் ஏன் பழி போடுகிறீர்கள்?

'நாற்றத் துழாய் முடி' - உன்னுடைய தலை முடியில் துளசி வாசம் வீசுகிறது. நீயும் கள்ளி, உள்ளே கண்ணனை வைத்துக் கொண்டே, அவனும் உன் கள்ளத்துக்குத் துணை போகிறான். ஒப்பற்ற கோயிலின் உயரிய நறுமணச் சாந்தை(சந்தனத்தை) உன்னால் அழிக்கவோ, மறைக்கவோ தான் முடியுமா?

'நாராயணன்' - வேண்டாதவர்கள் நலத்தில் கூட அக்கறையும், வேண்டுபவர்களின் வத்சலனாவும் இருப்பவன்.

'நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்' - வெறுமையான கோபியர்களுக்குக் கூட சரிச் சமமாகவும் சாமான்யனாகவும் இருக்கும் தார்மீகன். 'கிருஷ்ண தர்மம் சனாதனம்' - அவனுடைய தர்மமே, எல்லோருக்கும் அணுகுதல் சாத்தியமானவனாய் இருப்பது.

'பண்டொருநாள்' முன்னொரு காலத்திலே எம்பெருமானுக்கு, உன்னைப் போலவே தொல்லைகள் செய்தவன் ஒருவனுண்டு.

'கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்' - தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியவன், நீரில் முக்கிச் சாவதைப் போலே, எம்பெருமானின் அகண்ட பிரதாபங்கள் அறியாமல், சண்டையிட்டு மடிந்த கும்பகர்ணன்.

எம்பெருமான் அவனைத் தோற்கடித்த கோபத்தில், எம்பெருமானின் பக்தர்களுக்கு அவனுடைய நிரம்பிய தமோ குணமான முடிவில்லா தூக்கத்தைக் கொடுத்து விட்டுப் போனது தான், உனக்குத் தொற்றிக் கொண்டதோ?

அவனாவது வருடத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விழித்துக் கொள்பவன். நீ நிரந்தரத் தூக்கத்தில் அமிழ்ந்தவளாக இருக்கிறாயே. அவனாவது ஒரு பெண்ணினுடைய பிரிகைக்குக் காரணமானவன். நீயோ ஒரு ஊரின் பெண்கள் எல்லோரின், கண்ணனிடமிருந்து பிரிகைக்குக் காரணமானவளாகி விட்டாயே.

'ஆற்ற அனந்தலுடையாய்' - மிகுந்த சோம்பலைக் கொண்டவளே. உன்னுடைய சோம்பல் முறிப்பு கூட அழகிய ஆபரணமாகத் திகழ்கிறது. கண்ணனுக்கு நெருக்கமானவளே. நாங்கள் சென்று கண்ணனைத் துயில் எழுப்ப வேண்டுமோ?. நீ ஆனந்தத்தோடு கண்ட வகையில் நாங்களும் கண்ணனோடு இன்பம் உய்க்க ஆகாதோ?

'அருங்கலமே' - நீ ஒரு தோணியாகி எங்களை கரையேற்றிடு. நீ ஒளி மிகுந்த ரத்தினம் போன்றவள் எங்கள் குழுவுக்கு.

எப்படி ஒரு சாதாரண மாலையில் ரத்தினத்தை அழுத்திப் பதித்தால், மாலையே ஒளிர்கிறதோ அது போல எங்கள் குழுவை சனாதனமாக்கிடு.

'தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்' - ஒரு ஊரே, நீ கண்ணனுக்கு அபிமானவள் என்பதால் உனக்குக் காத்துக் கிடக்கிறது. தூக்க வடிவினளாய் வாராமல் தெளிவோடும் அலங்கரித்துக் கொண்டும் வந்து கதவைத் திறந்திடு பெண்ணே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக