உயர் பாவை - 10 - சதாரா மாலதி

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 

'Is it better for a woman to marry a man who loves her than a man she loves?' என்பது நிறைய யோசிக்க வைக்கிற கேள்வி. 

தூமணி மாடத்துப் பெண்ணுக்குக் காதலன் விரும்பி வருவது தான் பிடித்திருந்தது. இருவர் சம்பந்தப் பட்ட இந்த பந்த விவகாரத்தில் நான்கு விஷயங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய பெயரெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் ஏதோ சேஷத்வமாம், பாரதந்த்ரியமாம், போக்ருத்வமாம், போக்ருதையாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ரெண்டு விஷயம் பெண்ணிடம் ரெண்டு விஷயம் ஆணிடம். 

இந்துமதத்தில் இருப்பதைக் காட்டி இல்லாததைப் புரியவைப்பார்கள். கோடி சூர்யப் பிரகாசன் என்று தாம் அறிந்த நல்லவற்றின் மொத்த உருவை உன்னதங்களின் ஒற்றை வடிவை [personification of all good and noble things] சூரியனைக்காட்டி இவனைப் போல் கோடி மடங்கு பிரகாசமானவன் என்றார்கள். அப்படியே எல்லாருக்கும் தெரிந்த ஆண்பெண் உறவைக் காட்டி இது போலப் பேரின்பம் அது என்றார்கள். அதை விளக்க நாயகன் நாயகி பாவ தாபங்களைச் செய்வார்கள். அதையே உயிர்நாடியாகப் பிடித்துக் கொண்டு வைணவம் பிரேம தத்துவம் படைத்தது. பிரியவே இயலாத ஒற்றைத் தத்துவமாக ஜீவ பரம சம்பந்தம் இருப்பதை விளக்க விசிஷ்ட அத்வைதம் பிறந்தது.

இதில் நாயகன் நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் மிக ஆழமாக நேசிப்பவர்கள்.அவளுக்கு சந்தேகமே கிடையாது அவனுடைய காதலைப் பற்றி. அவள் வளைந்து கொடுப்பதையோ பணிந்து நடப்பதையோ எதிர்பார்க்காமல் எல்லையில்லாத அன்பைச் செய்து அவளை மேலும் மேலும் ஆச்சரிய சுகங்களில் மூழ்கவைப்பான் அவன். [கவனிக்க. வளைந்துகொடுப்பது போக்ருத்வம் பணிந்து நடப்பது சேஷத்வம்] அதற்காக அவள் அவனின் மேல்விழும் தாராளத்தையும் [பாரதந்த்ர்யம்] அனுபவ சுகத்தையும் [போக்ருதை] taken for granted ஆக எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருப்பதில்லை. 

இது உத்தம தம்பதிகளின் லட்சணம் தானே?

இந்த நிலையில் ஆண்டாளின் தூமணிமாடத்து cousin [மாமன் மகள்] எடுத்த முடிவு என்னவென்றால் தான் லயிக்கும் சேஷத்துவமும் போக்ருத்வமும் பிரயோசனமில்லை. அவன் வரிக்கப் போகும் பாரதந்த்ரியமும் போக்ருதையும் தான் உத்தமம் என்பது. அதாவது தான் காதலிப்பவனை விடத் தன்னைக் காதலிப்பவனே கடைசி வரை காப்பாற்றுவான் என்ற முடிவு. அப்பாடா! ஒரு வைஷ்ணவ தத்துவத்தை விளக்கி விட்டேன்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் 
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் 
மாமீ அவளை எழிப்பீரோ?. உன் மகள் தான் 
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ 
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ 
மாமாயன், மாதவன், வைகுந்தன் அவனென்று 
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

உடமைப் பொருளைக் காப்பாற்றுவது உடையவனுக்கே பாரம் என்றும் கிருஷ்ணன் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்போது கொள்ளட்டும் என்றும் நிம்மதியாக படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறார்கள் இந்தப் பாட்டில்.

சொந்த மாமன் மகளை உறவு முறையுடைய பெண்ணை அழைக்கவந்து 'மணிக்கதவம் தாள் திறவாய்' என்ற பின்னும் அவள் வாய் திறவாமல் படுத்திருப்பது எரிச்சலாகிறது வெளியே இருப்பவர்களுக்கு. பரிசுத்தமான மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாளிகையில் நாற்புறமும் அகில் முதலியவற்றின் வாசனைப் புகைகளின் மணம் கமழவும் விளக்குகள் எரியவும் மென்மையான படுக்கையில் நித்திரை செய்கின்ற மாமன் மகளைப் பார்த்தால் இருட்டில் வெளியே நிற்பவர்களுக்குப் பற்றிக் கொண்டு வராதா? [இவள் பரவாயில்லையே! எந்த தைரியத்தில் இவள் தான் பாட்டுக்குப் படுத்திருக்கிறாள்?]

'மாமீர், இவள் ஒருத்தியை அழைத்துச் செல்லவென்று நாங்கள் படும் பாட்டைப் பார்த்தீர்களா? [விட்டுப் போக முடியாமல் உறவுமுறை வேறு] நாங்கள் நெடும்போதாகக் கூவியும் இவள் மறுமாற்றம் செய்யாமலிருக்கிறாளே! உமது மகளை எழுப்பக்கூடாதா? அவள் என்ன வாய் பேசாதவளா? எங்கள் பேச்சைக் கேட்டு பதில் சொல்ல இயலாதபடிக்கு செவிடாகிவிட்டாளா? [தூக்கமருந்து உட்கொண்டதுபோல] பேருறக்கம் பிடித்தவளா? அல்லது இவளைப் படுக்கையோடு எழுந்திருக்கமுடியாதபடி காவலிட்டு விட்டார்களா? மந்த்ரவாதத்தினால் சர்ப்பத்தைக் கட்டுவது போல இவளுக்கு மந்திரம் போட்டு விட்டார்களா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே!' என்றார்கள்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை, கொஞ்சம் சோம்பல் அவ்வளவு தான், நீங்களெல்லாம் அவளுக்குப் பிடித்த மாதிரி கிருஷ்ண நாமங்களைச் சொன்னீர்களானால் தானாக எழுந்து வந்து விடுவாள்' என்றார் மாமி. 

திருவாய்மொழியில் நம்மாழ்வார் திருந்துலைவில்லிமங்கலத்தை வர்ணிக்கும்போது 'துவளில் மணிமாடமோங்கு திருவில்லி' என்று ஆரம்பிப்பார். அந்த மணிமாடத்தைச் செய்த போது நிறைய மாணிக்கங்களைக் குவித்துக்கொண்டு அவற்றில் துவள் எடுத்து எறிந்து எஞ்சியவற்றால் மாடம் செய்தார்கள். அது அவனுக்கு. இது தூமணிமாடம். துவள் எடுக்கவேண்டிய அவசியமேயின்றி highclass material வைத்துக் கட்டியது. இது இவளுக்கு. அது தான் அவள் நம்புகிற பாரதந்த்ர்யம். அவன் அதிகமாக இங்கு தானே இருக்கப் போகிறான்? 

மணிமாளிகையானதால் மணிக்கதவு தாளிடப் பட்டிருந்தும் சுவர்கள் கண்ணாடிபோல உள்ளும் புறமும் தெரியும்படி இருந்தது. அதன் வழியாகத்தான் அவர்கள் அவள் படுக்கையில் படுத்திருப்பதையும் அகிற்புகையையும் விளக்குகளையும் பார்த்தார்கள்.

மாமி சமாதானம் சொல்லவும், மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று என்றார்கள். நாமங்களின் இந்த வரிசையில் விசேஷம் இருக்கிறது. இந்த கிருஷ்ணன் அபலைப் பெண்களின் மனதைக் கவரவென்றே பல மாயங்களைச் செய்து கோகுலத்தில் வளருகிறவன் இங்கேயே கிடப்பவன் என்று நினைக்கவேண்டாம். இவன் மாதவனும் கூட, இடக்கை வலக்கை அறியாத இடைச்சிகளோடு மலர்மகளையும் மார்பிலே அழுத்திக் கொண்டவன். அவன் மாதவனானபின் நேரே பாற்கடல் போக வேண்டியிருக்கும் நாம். இப்படிப் பெண்களை மட்டும் ஜெயித்தவனல்லன் அவன். கண் மூடாமல் அவனைப் பார்த்தபடியே சேவகம் செய்யும் அமரர்களின் தேசம் ஒன்றிருக்கிறது. அவன் வைகுந்தனானபின் நாம் போக வேண்டியது மே...லே. மாமாயனான அவன் கண்ணனாக இருக்கிறானே என்று ஆறியிருக்கும்போது மேல் அடுத்த அடுத்த நிலைகளுக்குத் தாவி விடுவான். அதற்குள் பிடித்தாக வேண்டும். நாமம் சொல்லுங்கள் என்றார் மாமி. 

நாராயணனின் மேன்மை நாமமிரண்டும் நீர்மை நாமம் ஒன்றுமாக ஆயிரம்நாமத்துக்கீடான நாமங்களைச் சொல்லிவிட்டோம் [நாமம் பலவும் நவின்று என்று மூன்றே நாமம் சொன்னதைக் கவனிக்க.] அவன் வரட்டும் என்ற உன் சித்தாந்தத்தை உன் வரை வைத்துக் கொள். எங்களுக்காக நீ வா என்கிறபடி அழைத்துப் போகிறார்கள்.

நீ இல்லை என்றால் நாங்கள் எங்கே போவது? ஸ்ரீமதே ராமானுஜாய நம: என்று நான்காவது குருவை அழைத்துக் கொண்டாயிற்று. திருமழிசை ஆழ்வாரைப் பாசுரம் குறிக்கிறது. ப்ருகுவின் மகள்பார்க்கவி தான் மஹாலட்சுமி. அவளுடன் பிறந்தவர் பார்க்கவமுனிவர். பார்க்கவரின் மகன் தான் திருமழிசை ஆழ்வார். லோக மாதாவின் சகோதரர் லோகத்துக்கு மாமனானதும் அவர் மகன் உறவு முறையானதும் இப்படித்தான். மாமன் மகளே! என்று அழைக்கப் பட்ட பெண் எழுந்து வந்தாயிற்று.

நன்றி - திண்ணை டிசம்பர் 2004
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை