திருப்பாவை திவ்ய பிரவாகம் - 11 - கண்ணன் ரங்காச்சாரி

9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் 
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் 
மாமீ அவளை எழிப்பீரோ?. உன் மகள் தான் 
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ 
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ 
மாமாயன், மாதவன், வைகுந்தன் அவனென்று 
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

9 ம் பாடலில், வரும்போது கிருஷ்ணன் வந்திடட்டும் என்ற செல்வ மிடுக்கோடு பேசிடும் ஓரு பெண்ணை துயில் எழுப்பிறார்கள். வெளியில் மிடுக்கோடு கிடந்தாலும் உள்ளுக்குள் கிருஷ்ணனை அனுபவித்துக் கிடப்பவள் அவள். வெளியில் நிற்பவர்கள் இளையாழ்வானான பரதனைப் போலவும், ஆச்சார்யாதிகளாகவும் காத்துக் கிடக்க, உள்ளே கிடப்பவள், சாக்ஷத் எம்பெருமான் போல நடந்து கொள்கிறாள்.

'தூமணி மாடத்து' - தூய்மையான மணிகளால் எழுப்பப்பட்ட மாடம் (மாளிகை). உள்ளே இருப்பவள் உயர்ந்ததான ஒரு மாளிகைக்குள் கிடக்கிறாள். வெளியில் இருந்து வந்தவர்கள், கிருஷ்ணனுடைய நினைவைக் கூட ஒரு நிமிடம் மறந்து, மாளிகையின் அழகிலே மெய்ம்மறந்து நிற்கிறார்கள்.

நம் மனம் தான் தூமணி மாடம். அதில் தெளிவும் நிறைவும் இருந்தால் சுற்றிலும் ஒளிர்ந்து கிடக்கும்.

'சுற்றும் விளக்கெரிய' மாளிகையைச் சுற்றிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கிருஷ்ணன் வந்தானானால், தன் கையைப் பிடித்துக் கொண்டு விளையாடும் வகையில் விளக்கும் படுக்கையும் தயாராயிருந்ததை மாளிகைக்கு, வெளியிருந்தவர்கள் காண்கிறார்கள்.

திருச்சித்திரக் கூடத்திலுள்ளே, பிராட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணன் உலவியது போலே, இங்கும் உள்ளே உள்ளவளின் கையைப் பிடித்துக் கொண்டு உலவும் வண்ணம், மாளிகையில், படுக்கையும் விளக்குமாய் இருக்கும் ஏற்பாட்டைக் காண்கிறார்கள்.

'தூபம் கமழ' மாளிகைக்கு உள்ளும் வெளியும் அகிற்புகை பரவிக் கிடந்தது. பரிமளம் என்ற உயர்ந்த வஸ்துக்களால் கிளம்பிய, நறுமணப் புகை, புகைவதே தெரியாமல் நறுமணம் மட்டும் தான் உணர பெறுகிறது நம்மைப் பொருத்த வரையில் பரிமளம் விசேஷமானது. ஆனால், கண்ணன் இருக்கும் இடத்தில் சகஜமான ஓன்று.

தூய்மையும் பக்தியும் நிறைந்து கிடக்கும் இதயத்தில் சுகந்தம் கமழ்ந்து கொண்டிருக்கும், என்பது உட்பொருள்.

'துயிலணை மேல் கண் வளரும்' வெளியில் நின்றவர்கள் நினைக்கிறார்கள். 'கிருஷ்ண விரஹத்தை ஆற்றக் கூடிய படுக்கையில், மெதுவாய் உறங்கிக் கிடக்கும் உள்ளிருப்பவள் தங்களுக்குப் படுக்கையே கிருஷ்ணன் மேலுள்ள மோகத்தால் வெம்மையாய் உள்ள போதில், உள்ளே உள்ளவளுக்கு மென் படுக்கையாய் உள்ளது, 'மென் மலர்ப்பள்ளி வெம்பள்ளி' எண்ணுமாய் போலே.

உறக்கத்தை 'கண் வளர்தல்' என்று உயர்ந்த சொற்களால் வரிக்கிறார்கள். பகவத் சம்பந்தமான விஷயங்களில், விசேஷ சொற்களால் குறிக்க வேண்டும்.

ஒரு சமயம், பராசர பட்டரிடம் சிலர் 'தொண்டனூர் நம்பி திருவடி சேர்ந்தார்' என்று ஒரு உயர்ந்த வைணவப் பெரியவரின் உடல் முக்தியுற்றதைத் தெரிவித்தார்கள். பட்டர் 'உயரிய வைஷ்ணவத் தொண்டு செய்தவரை, திரு நாட்டுக்கு நடந்தார், என்று சொல்ல வேண்டாவோ' என்று திருத்தினார்.

'மாமான் மகளே' - முதலில், தங்களைப் போலவே ஒரு பக்தையாகவும், பின்னர் தோழியாகவும் உள்ளே இருப்பவளை விளித்தவர்கள், அவளோடு மனதினால் நெருங்கிட உறவு முறை சொல்லி அழைக்கிறார்கள்.

'மணிக்கதவம் தாள் திறவாய்' - மாளிகை எது, கதவு எது என்று தெரியாத வகையில் எல்லா இடத்திலும் நவ மணிகள் ஒளிர்வதானால், கதவுக்கும், சுவற்றுக்கும் வேறு பாடு தெரியாத காரனத்தால் உள்ளே இருப்பவளையே வந்து, கதவின் தாளைத் திறக்க, வெளியில் இருந்தவர்கள் பணிக்கிறார்கள்.

துரியோதனனுக்கு, நீருக்கும் ஸ்படிகத்துக்கும் வேற்றுமை தெரியாமல் தவிக்கும் போது, திரௌபதி சிரித்தாளாம்.

'மாமீ அவளை எழுப்பீரோ' - உள் இருந்தவள் பதில் ஏதும் சொல்லாததால், அவளுடைய அன்னையை உறவு முறையிட்டு அழைக்கிறார்கள்.

'தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்' என்னும் வகையில் உள்ளிருந்தவளின் அன்னையை வரித்து அவள் பெண்ணை எழுப்பிட வேண்டுகிறார்கள்.

'உன் மகள் தான் ஊமையோ' - மாமீ என்ற உரிமையோடு அழைத்த காரணத்தினால், 'உன் மகள் ஊமையா?', என்று சற்றே உரிமையோடு கேட்கிறார்கள்.

'அன்றிச் செவிடோ' - ஊமையாய் இருந்தால், எங்கள் பேச்சிற்குப் பதில் சொல்ல முடியாமல் போனால் கூட, காதும் கேட்காதவளோ?

'அனந்தலோ' - கிருஷ்ணனனோடு ஆடி ஆடிக் களைத்து தான் போனாளோ?

'ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ' - யாரோ இவளை வேண்டுமென்றே தூக்கத்தில் ஆழ்த்தினார்களோ.

மாமாயன், மாதவன், வைகுந்தன் அவனென்று நாமம் பலவும் - உள்ளிருந்தவளின் அன்னை சொல்லுகிறாள். இப்படிக் காரணங்களை நீங்களே சொல்லி, அவளிடம் கேட்பதை விடவும், அந்தப் பரமனின் நாமங்களைச் சொன்னால் ஒரு சமயம் அவள் எழுந்திருக்கலாம் எனக் கூறிடுகிறாள்.

'மாமாயன்' - கோபியர்களை வசியம் செய்து அவர்களிடம் பவ்யமாக இருப்பவன். அவனுடைய கருணைக்கு உரித்தான நாமம்.

'மாதவன்' - அவனுடைய சௌலப்ய காரணங்களுக்கு முக்கியமான யோக நிஷ்டைகள் அனுசந்தித்தவன். மேன்மைக்கு உரித்தான நாமம்.

'வைகுந்தன்' - பெண்கள் ஆண்கள் பேதமில்லாமல் ஒரு நாட்டிலுள்ளவர் எல்லோருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். கருணைக்கும், மேன்மைக்கும் இடைப்பட்ட சரணாகதத்தை குறிக்கும் நாமம்.

'நவின்றேலோர் எம்பாவாய்' - அவனுடைய திரு நாமங்களை சொல்லி எழுப்புங்களேன் என்ற அன்வயமாகுமாம்.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை