செவ்வாய், 24 டிசம்பர், 2019

உயர் பாவை - 9 - சதாரா மாலதி

கிழக்கு வெளுத்ததடி [கீழ் வானம் வெள்ளென்று]

ஆண்டாள் வெளிப்பாட்டில் என்னை மிகக் கவர்ந்தது அவளுடைய passion. த்வரை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள் வியாக்கியானக் காரர்கள். முடிவில்லாத ஒரு வேட்கையும் ஆவலும் முடிவைப் பற்றின ஒரு உறுதியும் அதை நோக்கின பயணத்தில் தனி ஆனந்தமும் சொட்டும் அவளுடைய வரிகளில்.

குறி பெருமாளாகத்தானிருக்க வேண்டுமென்றில்லை. எந்த லட்சியத்துக்கும் ஆண்டாள் காட்டுகிற வழிமுறைகள் பொருந்தும்.

பாவாய் என்றால் பரிபூரணமான பெண் என்று அர்த்தம். ஸ்த்ரீத்வ பூர்த்தி என்று அதைச் சொல்வார்கள். பதுமை போன்ற செதுக்கு கொண்ட உருவமுடையவள் என்று இன்னொரு பொருள். பாவாய் எழுந்திராய் என்று மிகச் சிறப்பித்து இந்தப் பெண்ணைக் கொண்டாடுகிறார்கள். அதுவும் கோதுகலமுடைய பாவாய் என்பது இன்னும் சிறப்பு. மிகவும் enthusiastic என்பதாகக் கொள்ளலாம். துடுக்குடையவள் என்றாலும் தப்பில்லை.

ஆனால் பூர்வாசிரியர்கள் ஆசையுடையவள் என்று பொருள் சொல்கிறார்கள். கணவனிடம் பித்தாக இருக்கிறாள் ஒரு பெண் என்றால் அவனும் அவளிடம் அப்படியே ஆசையாக இருந்திருக்கவேண்டும். கண்ணனும் இவளும் மிகவும் நெருங்கியவர்கள் என்று பெறப்படுகிறது.

இது பூதத்தாழ்வாரைக் குறிக்கிறது என்பதற்கு முத்திரை வைத்திருக்கிறாள் ஆண்டாள்.


எப்படி தியாகராஜர் கீர்த்தனைகள் 'தியாகராஜனுத' என்று முடியுமோ எப்படி புரந்தர தாசர் கிருதிகளில் 'புரந்தரவிட்டலன' என்று வருமோ அப்படி பூதத்தாழ்வார் எடுத்தாண்ட வார்த்தைகளைக் கையாண்டு அவரை அடையாளம் காட்டுகிறாள். 'தேவாதி தேவனெனப் பட்டவன் முன்னொருநாள் மாவாய்பிளந்த மகன்' என்றிருக்கிறார் 2ம் திருவந்தாதி 28ல் பூதத்தாழ்வார். 

வரிசையும் தப்பாமல் வருகிறது.முதலாழ்வாரில் மூன்றாமவர் பூதமல்லவா? திருமாலின் ஆயுதம் கெளமோதிகி என்ற 'கதை' யின் அம்சமாகப் பிறந்தவர். அப்படியே பொய்கை, பாஞ்சசன்னியம் என்றும் பேய், நந்தகம் என்கிற வாள் என்றும் அறிக. கீழ்ப்பாட்டில் கூப்பிடப்பட்ட பெண், கூட்டமெல்லாம் ஒரு ஹாரமென்றால் தான் அதன் பதக்கம் [நாயகக்கல்] போன்றவள்.

இந்தப் பாட்டில் கூப்பிடப் படுகிறவள் கூட்டமெல்லாம் ஒரு பாதி என்றால் தான் மறுபாதிக்குச் சமமானவள். அவளின்றி கூட்டம் நிறைவுறாது. அந்த அளவுக்கு கண்ண பிரானின் அந்தரங்க விருப்பத்துக்குரியவள் அவள்.

'பாவாய்! எழுந்திரடி, கிழக்கு வெளுத்தது' என்றார்கள்.

'அதற்குள் எப்படி விடியும்? திங்கள் திருமுகத்துச் சேயிழையரான நீங்கள் நெடும்போதாகக் கீழ்த்திசையையே நோக்கி நின்றமையாலே உங்கள் முகநிலா கீழ்த்திசையில் சென்று தட்டி உங்கள் முகப் பளபளப்பில் பிரதிபலித்துத் தோன்றுகையாலே கிழக்கு வெளுத்தது போல ஆகிவிட்டது.'

'நாங்கள் யாரும் சந்த்ர முகியுமில்லை. நாங்கள் ஒன்றும் கிழக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவுமில்லை' வெட்கமும் கோபமுமாக வந்தது வெளியில் நின்றவர்களுக்கு.

உள்ளிருந்து பேசினவள் மிகைப் படுத்திப் பேசவில்லை. கோபிகள் விடியலை எதிர்பார்த்து ஏதேதோ செய்தவர்கள் தான்.

அப்படித்தான் ஒரு கோபியிடம் தாயார் தெரிவித்தாள். 'காலை விடிந்தவுடன் திருவோண விரதம், கண்ணனைக் கூப்பிட்டிருக்கிறேன், வந்து விடுவான்.' என்றாள்.

கோபி, 'அம்மா,காலை எப்போ வரும்?' என்று கேட்டாள்.

'இரவு போய் வெளிச்சம் வரவேண்டும்' என்றாள் தாயார்.

'இரவிலேயே நிறைய விளக்கு போட்டுவிட்டால் போயிற்று. காலையாகிவிடுமே' என்றாள் கோபி.

'அப்படியெல்லாம் காலையாகிவிடாது. அததற்கு நேரம் வரவேண்டும். இப்ப இந்தப் பானையில் பாலை ஊற்றிப் புரை குற்றி வைத்தேனில்லையா? அது தயிராகும்போது காலையாகி விடும்' என்றாள் தாய்.

அவ்வளவு தான். பானைப் பாலையும் வைத்த கண் வாங்காமல் இரவு முழுவதும்
பார்த்துக் கொண்டிருந்தாள் கோபி.

அப்படிப் பட்ட கோபிகள் கிழக்குப் பக்கம் வெறித்துக் கொண்டு நிற்கமாட்டாதவர்களா என்ன? அது தான் சந்தேகம் உள்ளிருப்பவளுக்கு.

'நாங்கள் பொழுது விடிந்ததாகப் பொய் சொல்லவில்லை. எருமைகளை பனிப்புல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் பார்' என்றார்கள்

'அதெல்லாம் எருமையில்லை. உங்கள் முக வெளிச்சத்தில் பிளந்து திரண்டு விலகின இருள் திட்டுகள். எருமையுமில்லை சிறுவீடு பரந்து மேயவுமில்லை.' என்றாள் உள்ளிருப்பவள்.

சிறுவீடு [விடுதல்-வீடு] என்றால் குறுகியகால மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் ஒரு காலை நேர schedule. நாயை walk பண்ண அழைத்துச் செல்வது போல. பனிப்புல் மேய்ச்சல் கறவை எருமைகளுக்கு breakfast போல. இந்த எருமை பசுக்களின் பருத்திக் கொட்டை புண்ணாக்கு அடங்க breakfast, lunch, dinner சகல விவரமும் அட்டவணையும் இந்தப் பெண்களுக்கு அத்துப்படி. இளம் பெண்கள் திரை நடிகர்களுக்கு தொலை பேசி வீட்டில் இருப்பவர் யாரிடாவது 'ஹீரோ குளிக்கிறாரா? பல்லு தேய்க்கிறாரா?' என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதாவது புது விவரம் கிடைத்துவிட்டால் புளகாங்கிதம் அடைவார்கள். அதே கதை தான் இங்கு. மாதர் எருமைகளை follow பண்ணுவது கண்ணனுக்காக. கண்ணன் அதுகள் பின்னால் அல்லவா திரிவான்? எருமையும் கண்ணனும் வெளியே போனபின் யாரைத் தேடி நாம் போவதாம்?

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான்போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் 
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச்சென்று நாம் சேவித்தால் 
ஆவாவென்றாராய்ந்து அருளேலோரெம்பாவாய்.[திருப்-8]

எருமை விஷயம் உள்ளிருப்பவளையும் பாதித்துவிட்டது கொஞ்சம். 'சரி சரி, பஞ்சலட்சம் பெண்களில் ஆயிரம் பேர் தான் நிற்கிறீர்கள். மீதிப்பேர் வரும் மட்டும் கொஞ்சம் உறங்கலாமா நான்?' என்று கேட்டாள். கதறியே விட்டார்கள் பெண்கள். 'அவ்வளவு பேரும் வந்தாயிற்று. இங்கே நிற்கிறவர்கள் தவிர மீதிப் பேரெல்லாம் போய்க் கொண்டேயிருந்தார்கள். நாங்கள் தாம் அவர்களை அதிக தூரம் பொய் விடாதபடிக்கு ஓரிடத்தில் நிறுத்தி வந்திருக்கிறோம். கூட்டத்தில் நீ இல்லாததைப் பார்த்து உன்னை அழைத்துப் போகவென்று நிற்கிறோம். எழுந்து வா, உன் முழுமையான நிறை நம் கூட்டத்துக்குப் பெருமை சேர்க்கக் கூடியது.' என்றார்கள்.

நாம் போகப் போவது பெரிய இடம். அயர்வறு அமரர்களதிபதியின் இடம். 'ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்' என்றபடி. அடுத்தபடி யாராவது இருந்தால் நம் முயற்சி பலிக்காமல் போகுமானாலும் இரண்டாவது இடத்தை அடையலாம். ஆனால் அது சாத்தியப் படாத அளவில் அவன் ஒற்றை supreme. தேவாதி தேவன். 'யாங்கடவுளென்றிருக்கும் எவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ' என்றபடி. அவன் கேசியை வதம் செய்ததும் மல்லரை ஜெயித்ததும் சாகச வரலாறுகள். அவனைப் பாடிக் கொண்டு போனோமானால் நம்மை வழி கொண்டு முகமன் சொல்லி ஆகா ஆகா நான் வரும்முன் நீங்கள் வந்தீர்களே என்று குறைப் பட்டு நமக்கு வேண்டுவன செய்வான் என்றார்கள்.

[கிருஷ்ணனும் பலராமனும் கம்சன் சபை செல்லுமும் சாணூரன் முஷ்டிகன் என்ற மல்லரை
எதிர்த்துப் போரிட்டு ஜெயிக்க வேண்டி வந்தது. துரியோதனன் சபையில் பொய்யாசனம் போட்டு ஏமாற்றி பிலவறைக்குள் கண்ணனைச் செலுத்திய போதும் மல்லர்களிடம் மோத வேண்டிவந்தது. அவையே மல்லரை மாட்டிய வரலாறு. மாவாய் பிளந்தது - ஏற்கனவே சொல்லப் பட்ட கேசி வதம்]

குகன் பத்தடி நடந்து தன்னை நோக்கி வந்ததற்கு நொந்தவன் இராமன். அவனுக்கு 'எம்பி உன் தம்பி மங்கை கொழுந்தி' என்றும் 'நால்வரோடு ஐவரானோம்' என்றும் அன்பு செய்தவன் இராமன். 

ஒரு பொழுது பழக்கத்திலே 'தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ! ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ' என்று கதற விட்டவன் இராமன். அது போல நமக்கும் 'ஆவாவென்றாராய்ந்து அருள்' வான் என்றார்கள்.

'அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:' என்றபடி குரு பரம்பரையின் மூன்றாவது குருவைப்
பணிந்து உடன் அழைத்துக் கொண்டதாயிற்று.

நன்றி - திண்ணை டிசம்பர் 2004

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக