8
ஆவாவென்றாராந்து அருளேலோரெம்பாவாய்' - நம்முடைய மனக் கிடக்கைகளை கண்டிப்பாய் ஆராய்ந்து பார்த்து, நம்மிடத்தில் தானே வந்து அருள் செய்திடுவான், பெண்ணே.
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைக் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய், பாடிப் பறைகொண்டு
மாவாய்ப் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
அனைத்து நோன்பிருக்கும் சிறுமிகளும் ஒன்றாய்த் திரண்டு, கிருஷ்ணனுக்கு அதிக வேண்டற்பாடு உடைய ஒருத்தியை, துயில் எழுப்புகிறார்கள்.
சம்சாரிகளுக்கு, இரவில் தூங்கப் போகும் நேரத்தில், வெளி வஸ்துக்களால் வரக்கூடிய துன்பங்கள் பற்றிய எண்ணமும், பயமேற்படுத்தும் விஷயங்களைப் பற்றிய அனுபவங்களும், தமோ குணத்தால் ஏற்படக்கூடிய நித்திரையும் வருமென்பதால்,
கோபியர்கள், இரவில் முடிந்த வரை விழித்துக் கிடந்து, பொழுது விடிந்தால் தத்தம் கோபர்கள் விரோதிப்பார்கள், என்று அஞ்சி, பின்னிருட்டில் புறப்பட்டு, கண்ணனோடு சேர்ந்து நீராடி நோன்பிருக்கப் புறப்பட்டும், விடிந்த போதும் தூங்கிக் கொண்டிருப்பவளை, அவள் வீட்டவரும் அவளைப் போக விடாமல் தடுக்க வாய்ப்பிருந்தால், இன்னும் உறங்குகிறாயே என்று நினைவு கூறுகிறார்கள்.
'கீழ் வானம் வெள்ளென்று' - கீழ் வானம் வெளுத்து விட்டது என்று சொல்லி உறங்குபவளை எழுப்புகிறார்கள்.
'அம் சுடர வெய்யினோன் அணி நெடும் தேர் தோன்றாததால்' - அழகிய சுடரொளி பரப்பி வரும் வெய்யிலினை அணிந்து கொண்ட ஆதித்யனின் நீண்ட தேர் தோன்றாததனால்.
உறங்குபவள் சொல்கிறாள், 'விடிவதற்கு முன்னமே கீழைத் திக்கையே, நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், 'திங்கள் திருமுகத்துச் சேயிழையரான', உங்களில் ஒருத்தியின் அதீத முக வெளுப்பு, கிழக்குத் திசை நுனியைத் தட்டி, உங்கள் கண்களில், திரும்ப வந்து பிரதி பலிக்கையாலே, கிழக்குத் திசை வெளுத்தாகத் தோன்றுகிறது.
அது அல்லால், இன்னும் பொழுது விடியவில்லை. இது உங்கள் அஞ்ஞானம். வேறெதுவும் அடையாளம் இருந்தால் சொல்லுங்களேன்' .
'எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் ' - எருமை மாடுகள், பனிப்புல் மேய்வதற்காக வயலெல்லாம் பரந்து காணப்படுகின்றன. விடியலுக்கு இதுவும் ஒரு அடையாளம் அன்றோ?.
உறங்குபவள் மாலனுக்குப் பிரியமானவள். எழுப்புபவள் ஒருவருடைய தகப்பனார், 'மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்', என்று கிருஷ்ணனனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருக்கிறார். மகள் இங்கே இன்னொருத்திக்கு திருப்பள்ளியெழுவதற்கு கூறிக் கொண்டிருக்கிறாள். இவளும் ஆழ்வாருக்கு சமமானவளோ?.
ஆண்டாள் ஒவ்வொரு கோப ஸ்திரீயையுமே ஒரு பிராட்டியாராக வரித்தது இந்த வரிகளின் சிறப்பு.
எருமை, இரவினில், மற்றும் வெளியில் மேயச் செல்லாத போது அதனுடைய சொந்தக்காரரின் வீட்டுக் கொட்டிலில் வசிக்கும். இது ஓர் சிறு வீடு தான். மேயச் செல்லும் பரந்த வயல் வெளிகளை, எருமைகளின் பெருவீடாகக் கொள்ளலாம்.
ஆனால், இடது வலது கைகளுக்கு வேற்றுமை தெரியாத ஆய்ச்சி மார்கள், பரந்து கிடக்கும் மேய்ச்சல் வயல் வெளிகளை 'சிறு வீடு' என்று அழைக்கின்றனர். அக்கினி ஹோத்திரங்களுக்கு (ஹோமங்களில்), உள், வெளி என்று ஆராய மாட்டாது போலே, மேய்ப்பினங்களின், இட இருக்கையிலும் சிறு வீடு, பெரு வீடு பேதங்கள் இல்லாமல் இருக்குமோ?.
'மிக்குள்ள பிள்ளைகளும்' - உன்னைத் தவிர மற்ற பிள்ளைகள் கண்ணன் மேலுள்ள ஆற்றாமையாலே போனார்கள். நீ, நாங்கள் வந்து எழுப்பிட வேண்டிய நிலையில் உள்ளாய்.
'போவான் போகின்றாரை' - உறங்கியவள் கேட்கிறாள். எல்லோரும் என்னை விட்டு ஏன் போனார்கள்?. எழுப்பியவள் சொல்கிறாள். 'எப்படி திருவேங்கட யாத்திரையில் போவதே ஒருவருக்கு பரம பலனாய் ஆகிறதோ, அது போல, ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் கண்ணனைக் காண போய்க்கொண்டிருக்கிறார்கள். நீ இன்னும் விழிக்காதது அவர்களுக்கு தெரியாமல் கூட போயிருக்கலாம்.
'போகாமல் காத்து' ஆயினும், நாங்கள் உன்னை விட்டுச் சென்றிட விரும்பாதவர்களானதால், போகின்ற சிலரையும் கூட போக விடாமல் நிறுத்தி, உன்னை எழுப்ப வந்திருக்கிறோம்.
நீ போக வில்லை என்பது தெரிந்த உடனேயே 'திரு ஆணை நின் ஆணை' எனக் கொண்டு 'நீ போந்தில்லை' (போக வில்லை) எனது தெரிந்து கொண்டு திடுக்கிட்டவரைப் போல கால் நடை தொடராமல் நின்று விட்டார்கள்.
'கூவுவான் வந்து நின்றோம்' - ஒரு பறவை இன்னொரு பறவையை, இரையைப் பகிர்ந்து உண்ணக் கூவி அழைப்பதைப்போல, 'இறைவனைப் பகிர்ந்து கொள்ள' உன்னைக் கூவி அழைப்பதற்காக வந்துள்ளோம்.
பல பெண்களின் திரள் கிடக்க என் பக்கத்தில் நீங்கள் வந்து காத்துக் கிடப்பதன் காரணமென்ன, என்று உறங்கி விழித்தவள் கூறிட,
'கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்' - கோதுகலம் என்ற சொல் 'குதூகல்' (எல்லாம் அறிந்து கொள்ளும் ஆர்வம்) என்ற வடமொழிச் சொல்லின் வேரிலிருந்து புழங்கும் தமிழ்ச் சொல். நீ கிருஷ்ணனனுக்கு மிகவும் இஷ்டமான தேவதை ஒப்பவள். கிருஷ்ணனின் பக்கலிலே 'புருஷாகார பூதையாய்' (கிருஷ்ணனனுக்கு எங்களைப் பரிந்துரைப்பவள்) இருப்பவளன்றோ நீ.
அதனால் தான் உன்னைக் கூட்டிச் செல்ல காத்துக் கிடக்கிறோம். அவன் தான் எம் போல் பெண்களின் வருத்தம் அறியாதவன். எங்கள் ஆற்றாமையை நீயும் தான் அறியாதவளோ?.
பட்டர் அருளினார் 'முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாதிறே' (பெண்களின் ஏக்கம் அந்த இதழழகுக் கண்ணன் அறிவதில்லேயே).
நாங்கள் வந்து எழுப்பிட நீ எழுந்தாய் என்ற பெருமை கூட எங்களுக்குப் போதுமே.
'பாடிப் பறை கொண்டு' - முன்னர் ஊரார் விரோதம் செய்ததால், கண்ணனை மனத்துக்குள் மூடி மூடி விரும்பிக் கிடந்தோம், ஊராரே வேண்டிப் பணித்த, நோன்பு என்னும் காரணத்தால், வெளிப்படையாகவே கண்ணனைப் பாடிடும் பெரும் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம்.
ஊரார்களுக்காக நோன்பு, எங்களுக்கு கிருஷ்ண சுகானுபவம். 'கிருஷ்ண நாம புன புன:' என்று திரும்பத் திரும்ப கிருஷ்ணனின் நாமத்தை பாடிக் கிடக்கிறோம்.
'மாவாய் பிளந்தானை' - நாரதர் நாம் முடிந்து போய்விட்டோம் என்று கதறிக் காலில் விழுந்ததனால், கோகுலத்தில் தோன்றி, கேசி, பூதனை, சகடாசுரன், கம்சன் என்னும் அரக்கக் கூட்டங்களை வதைத்து அழித்தவன் நமக்கு அடைக்கலம் தராமல் இருப்பானோ?. ஆனால் அது பழைய கதை. இன்றோ,
'மதுராம் பிராப்ய கோவிந்த: கதம் கோகுல மேஷ்யதி நகர ஸ்த்ரீ கலாலப மதுஸ் ஸ்ரோத்ரேண பாஸ்யேதி' - பெரிய நகரினனாய், படை வீட்டிலே ஏறி, பெண்களோடு கலந்து போனவன், நாம் சொல்வதைக் காது கொடுத்து கேட்கவோ, பார்க்கவோ, போகிறானா' என்று ஒருத்திக்குத் தோன்றியதாம்.
'மல்லரை மாட்டிய' அரக்கர்களைக் கொன்று வட மதுரையின் பெண்களுக்கு நலம் அருளிச் செய்தவன் நம் போன்ற பெண்களுக்கும் தானே அருள் செய்வான்?
'தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்' - தேவர்களுக்கெல்லாம் தேவனாய், தேவாதி ராஜனை நாம் சென்று சேவித்தால், கண்டிப்பாய் அருள்வான். அப்படியும் அருளவில்லையெனில், பரதாழ்வானுக்கு ஏற்பட்ட அதே தசையை நாமும் பெறக் கடவோம். நம் மனத்திலே ஏற்பட்ட புண்ணைக் கண்டு அவன் மனத்திலும் புண் வரட்டும். அப்படியாவது நமக்கு நல்லருள் செய்யத் தானே போகிறான்.
தேவராஜனான, திருக்கச்சியானுக்கு ஆண்டாள் இப்பதிகத்தின் மாத்யமாக தெண்டனிட்டாள் என்பது அடியேன் உத்தேசம்.
ஆவாவென்றாராந்து அருளேலோரெம்பாவாய்' - நம்முடைய மனக் கிடக்கைகளை கண்டிப்பாய் ஆராய்ந்து பார்த்து, நம்மிடத்தில் தானே வந்து அருள் செய்திடுவான், பெண்ணே.