திங்கள், 23 டிசம்பர், 2019

திருப்பாவை ராமாயணம் - கிடாம்பி ரா.ராகவாச்சாரி

ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம் ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோகத்ருச்யாம் ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம் கோதா மநந்ய சரண: சரணம் ப்ரபத்யே 

கற்பார் இராம பிரானையல்லால் மற்றும் கற்பரோ 
புற்பா முதலாய் புல்லெறும்பாதி ஒன்றின்றியே 
நல்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், 
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.

ஸ்ரீ ஆண்டாள் என்கிற கோதை பாடியது திருப்பாவை. அவள் ஆழ்வாராக நல்ல திவ்விய பிரபந்தங்களாலான பாட்டுக்களை இனிமையாகப் பாடிக்கொடுத்தும், நாச்சியாராகப் பூமாலையை முதலில் தான் தரித்துக்கொண்டு பிறகு பரமனுக்குச் சமர்ப்பித்தும் சேதனர்களை உய்வித்தருளினாள். அதுபோல, “ஹிதாயாச் சரிதம் மஹத்” என்கிற சீதையின் மஹத்தான சரித்திரமாகிய ஸ்ரீ ராமாயணத்தை சேதனர்கள் உய்யும் வண்ணம் உலகினுக்குத் தந்தருளினவர் வால்மீகி பகவான். “வல்மீகத: ச்ரவணயோர் வஸுதாத் மனஸ்தே” என்கிற சுலோகத்தால் வால்மீகியின் பெருமையையும், கோதையின் பெருமையையும் ஸ்வாமி தேசிகன் தமது கோதா ஸ்துதியில் நன்கு புகழ்ந்திருக்கிறார்.

முக்கியமாக, கண்ணன் விஷயமாக கோதை தொல்பாவை என்கிற பழமையான நோன்பை நோற்றாள் எனினும், சக்கிரவர்த்தித் திருமகன் விஷயத்திலும் ஆழ்ந்து ரசபாவத்துடன் ஈடுபட்டிருக்கிறாள். அவ்வனுபவங்களை உட்பொருளுடன் சிறிது இங்கு அனுபவிப்போம். 

ஸ்ரீ ராமாயணம் எப்படி ஆத்யாத்மிகமான பொருளையும் கருத்தில் கொண்டுள்ளதோ, அது போலவே திருப்பாவை பாசுரங்களும் உட்பொருளுடன் விளங்குகின்றன என்பது பெரியோர் துணிபு.

10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் 
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார் 
நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால் 
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள் 
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் 
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான் தந்தானோ 
அற்ற அனந்தலுடையாய் அருங்கலமே 
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

(கருத்து) "கண்ணன் காதல்” என்னும் சுவர்க்கத்தில் இருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கிருஷ்ணானுபவத்துக்கு நோன்பை நோற்று சுகத்தை இடைவிடாமல் அனுபவிக்கிற ஸ்வாமி நீயானவனே! என்று எழுப்பியும் பேசாதே கிடக்க, வாசற் கதவைத் திறவாமற் போனாலும், ஒரு பேச்சாகிலும் பேசக்கூடாதோ? பரிமளம் வீசுகின்ற திருத்துழாய் மாலையினால் அலங்கிருதமான திருவபிஷேகத்தையடையவனும் எல்லோருக்கும் ரக்ஷகனாக நாராயணனும், நாம் மங்களா சாஸனம் பண்ணும்படி, கைங்கர்யத்தைக் கொடுக்கும் தார்மிகனுமான அவனாலே, முன்பு ராவணன் பிராட்டியைப் பிரித்த காலத்தில், மிருத்யுவின் வாயில் விழுந்த கும்பகர்ணனும் உனக்குத் தோற்றுப் போய் பேருறக்கத்தையும் தானே கொடுத்து விட்டுப் போனானோ? மிகுந்த சோம்பல் உடையவளே! ஹாரத்துக்கு நாயகக் கல்போலே எங்களுக்குச் சிரோபூஷணமாயிருப்பவளே! தடுமாறாமல் தெளிந்துவந்து கதவைத் திறக்கவேண்டும் என்கிறார்கள்.

ஸ்வாபதேசத்தில், மோட்சோபாய நிஷ்டரை எழுப்புகிறார்கள். கும்பகர்ணனைப்போல் தமோ குணமுடைய சிஷ்யன் ஒருவனையும். தங்களுடன் சேரும்படி சிரமப்பட்டு அழைக்கிறார்கள். ஸாத்விகனான அதிகாரிக்கு நித்ரையாவது, ஸ்வாநுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாதிருக்கையாகும்.

12. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி 
நினைத்து முலைவழியே நின்று பால்சோர 
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி சினத்தினால் 
தென்னிலங்கைக் கோமானைச்செற்ற 
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய், 
இனித்தா னெழுந்திராது ஈதென்ன பேருறக்கம் 
அனைத்தில்லத்தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்.

(கருத்து) கண்ணனைப் பிரியாமலிருக்கும் நற்செல்வனுடைய தங்கையை எழுப்புகிறார்கள். இளங்கன்றுகளையுடைய எருமைகள்பால் 'கறப்பாரில்லாமையால் முலை கடுத்து, கதறிக்கொண்டு, தங்கள் கன்றுகளிடம் இரக்கமுற்று அவற்றை நினைத்து, முலைகளின் வழியாகப் பால் இடைவிடாமல் பெருக, அதனாலே வீடுகளையெல்லாம் ஈரமாக்கிச் சேராகச் செய்யும் நல்ல ஸம்பத்துடையவனுடைய சகோதரியானவளே! எங்கள் தலையில் பனி விழுகையால் உன் வாசற்காலின் தண்டியத்தைப் பற்றிக்கொண்டு கிடக்கிறோம் என்று சொன்னவிடத்திலும் பேசாதே கிடக்க, "திருவடியை நலிந்தான்" என்கிற கோபத்தாலே, லங்கைக்கு அரசனான ராவணனை நிரசித்தவனாய் மனதுக்கினியனாயிருக்கும் சக்ரவர்த்தித் திருமகனைப் பாடச் செய்தும், நீ வாய் திறந்து பேசுகிறதில்லை; எங்கள் ஆற்றாமையை அறிவித்த பின்பும் எழுந்திருக்கிறதில்லை; இது என்ன பெருந் தூக்கம்; ஊரிலுள்ளோர் எல்லோரும் அறிந்தார்கள், எழுந்திராய் என்கிறார்கள்.

ஸ்வாப தேசத்திலே, பாகவத அபிமான நிஷ்டரை எழுப்புகிறார்கள். கண்ணுக்கினியனான கண்ணன், மனத்துக்கினியான் ராமனாகும். அவன் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான். தெற்கு தேசமான யமனுடைய உலகத்தைக் கையில் கொண்டு அரசாள்வது அகங்காரமாகும். அதுவே கோமான் எனப்படுகிறது. அதை அழித்த பரிசுத்தமான மனதிற்கு இனியனான சக்ரவர்த்தித் திருமகனைப் பாடவும் நீ வாய் திறந்தாற்போதும்.

13. புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் 
பிள்ளைகளெல்லோரும் பாவைக் களம்புக்கார் 
வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று 
புள்ளும் சிலும்பினகாண் போதரிக்கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே 
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளாய் 
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

(கருத்து) “நம் கண்ணழகை நோக்கிக் கண்ணன் தானே வருவான்” என்று படுத்திருப்பவளை எழுப்புகிறார்கள். பகாசுரனுடைய வாயைப் பிளந்தவனாய், சகலவிதமான பொல்லாங்கையும் செய்து திரிந்த ராவணனுடைய பத்துத் தலைகளையும் கிள்ளி எரிந்து போட்டவனான சக்ரவர்த்தித் திருமகனுடைய வீர சரித்திரத்தை எல்லாப் பெண்களும் தங்கள் ப்ரீதிக்குப் போக்கு வீடாகப் பாடிச்சென்று, கிருஷ்ணனும் தாங்களும் கூடுகைக்குக் குறித்த இடத்தில் புகுந்தார்கள் என்று சொல்ல, அவள் போகைக்குப் பொழுது விடிந்ததோ என்று வினவ, சுக்கிரன் உச்சிப்பட்டு பிருகஸ்பதியும் அஸ்தமித்தது; அன்றியும் பட்சிகளுங்கூட இரை தேடுவதற்காக கூவிச் செல்கின்றன. பூவையும் மானையுமொத்த கண்ணழகை உடையவளாய், மிருது ஸ்வபாவையான நீ, கிருஷ்ணனும் நாமும் சந்திக்கும் நல்ல நாளில், கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்துத் தனியே கிடக்கும் கஷ்டத்தைவிட்டு, எங்களோடு சேர்ந்து, வவ்வலிடும்படி அமிழ்ந்து ஸ்நானஞ் செய்யாமல், கிருஷ்ண ஸ்பர்சமுடையதொரு படுக்கையில் கண் வளருகிறாயோ? எழுந்திராய்! என்று எழுப்புகிறார்கள்.

ஸ்வாப தேசத்திலே, ஸ்வரூப ஞான முண்டாகில் அவன் தானே வருகிறான் என்று பிரிந்திருக்கும் ஒரு வித்யார்த்தியை எழுப்புகிறார்கள். “பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை” - பொல்லாத அப்ராப்த விஷயகதமான அகங்காரத்தை நிரசித்தவன். அதாவது, பதினோறு இந்திரியங்களை ஜெயித்தவன்" என்றபடி. "கீர்த்திமை பாடிப் போய்” - கல்யாண குணங்களை ப்ரீதியாகப் பாடிக்கொண்டு போய், ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான ஸங்கேத ஸ்தலத்தை ப்ரவேசிப்பார்கள்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்த நீ 
குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது 
இற்றைப்பறை கொள்வானன்று காண்கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு 
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம் 
மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். 

சதகமணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா ஸ்தன பர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து : | 
அளக விநிஹிதாபி ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா விலஸது ஹ்ருதிகோதா விஷ்ணு சித்தாந்மஜா ந : ||

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - ஶ்ரீரங்கநாத பாதுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக