'பேய்ப் பெண்ணே' என்று தொடங்கி பேயாழ்வாரை முன்னிலைப் படுத்துகிற அதி அற்புதமான பாசுரம் இது. இப்படியும் அப்படியும் வார்த்தைகளைப் போட்டால் இருந்தபடியே எளிதாகப் பொருள் கூறிவிடும்.
பேய்ப் பெண்ணே! நாயகப் பெண்பிள்ளாய்! தேசம் உடையாய்! எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து கீசுகீசென்று பேசின பேச்சரவம் கேட்டிலையோ! வாசம் நறுகுழல் ஆய்ச்சியர், காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து மத்தினால் ஓசைப்படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ! திற!
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கல கலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு!
மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத் பராயண:! என்று கிருஷ்ணன் கீதையில் சொல்கிறான்.
'என்னிடம் உன் மனதை வை. என்னை பஜனம் செய். என்னிடம் பக்தியைச்செய். என்னையே கதியாகப் பற்று. இப்படிச்செய்வாயானால் நீ என்னையே அடைவாய்' என்று பொருள். அதையே ஆண்டாள் கீழ்ப் பாட்டில் 'தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க' என்றாள்.
அந்த வகையில் படிப்பு அறிவுக்காக, தொழில் தொண்டுக்காக, ஜீவனம் பகவத் நெருக்கத்துக்காக என்று வாழ்ந்தவர்கள் முகத்தில் ஒரு புகர் இருக்கும். புகர் என்றால் ஒரு தனி வெளிச்சம். அதைத் தேஜஸ் என்று சொல்வார்கள். அதையே தேசம் உடையாய் என்று படுத்திருக்கும் பெண்ணுக்குக் கற்பித்து ஆண்டாள் விளிக்கிறாள்.
படிப்பு வேலைக்காக, வேலை பணத்துக்காக, வாழ்க்கை புலனின்பத்துக்காக என்று வாழ்பவர்களுக்கு பகவான் நம் எஜமானன் நாம் அவனுக்கு அடிமை என்கிற தாஸ்ய ஞானம் வராது: அந்த விசேஷத்தால் ஏற்படுகிற அடக்கமும் நிம்மதியும் முகத்துக்கு ஊட்டுகிற தனி ஒளியையும் பெற முடியாது.
சீதாபிராட்டியின் தரிசனத்துக்கு முன் தன்னை 'தூதோஹம்' என்று சொல்லிக்கொண்டு போன அனுமான் அன்னையைச் சந்தித்தபின் 'தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய' - நான் ராமதாசன்' என்று சொல்லிக்கொண்டு வந்தான் [சிலபேரின் மனைவிமாரைப் பார்த்தால் தான் அவர்களின் நிஜ அந்தஸ்து தெரியவரும்] அப்படி தாஸ்ய ஞானம் என்பது எல்லாருக்கும் பரமபதத்தில் மட்டுமே வந்து வாய்க்குமாம். பூவுலகிலேயே வாய்த்தவர்கள் மிகச்சிலர். அவர்களுள் பீஷ்மர், அனுமான் கோபிகைகள் ஆகியோர் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட ஒரு கோபியை, இரண்டாவது ஆச்சாரிய இடத்தைப் பிடித்தவளை 'அஸ்மத் பரம குருப்யோ நம:' என்கிறது போல 'நாயகப் பெண்பிள்ளாய்' என்ற சொல்லையும் போட்டுக் கூப்பிடுகிறாள் ஆண்டாள்.
பொழுது விடிந்தது என்றார்கள். என்ன அடையாளம்? என்று கேட்டாள் உள்ளிருப்பவள்.
பாரத்வாஜபட்சி எனப்படுகிற வலியன் குருவி செம்போத்து என்றும் இலக்கியங்களில் வழங்கப்படும். அந்த ஆனைச்சாத்தான் கீசு கீசு என்கிறது. க் ஏஷு? என்று ஆண்பறவை கேட்கிறது. யார் அவன் ஈசன் [என்பான்?] பெண் பறவை பதில் சொல்கிறது கிம் ஏஷு அவன் தான் ஈசன் [சந்தேகமென்ன] கீசு கீசு என்று சம்பாஷித்தன ஆனைச்சாத்தான் எங்கும்.
[சதாராவில் அக்கூ பறவை வைஜயந்தி வைஜயந்தி என்று அழுந்தச் சொல்லும் இனிமையான சத்தம் கேட்கிறபோது கீசுகீசு ஞாபகம் வரும்]
பொழுது விடிந்தால் தானே பறவை சத்தம் போடும்?
அது ஏதோ ஒரு பறவையாயிருக்கும் அர்த்த ராத்திரியிலே எழுந்திருந்திருக்கும் ம்ஹூம் அப்படியில்லை அது நிறைய ஆனச்சாத்தான் எல்லா ஆனைச்சாத்தானும் கலந்து பேசுகிறதாக்கும் ஆமாம், விடிய விடிய பேசி முடிக்காததை ஆனைச்சாத்தன் விடிஞ்சதும் பேசிட்டு உட்கார்ந்திருக்குமாக்கும் இது அர்த்த ராத்திரி தான்.
இல்லைம்மா, ஆணும் பெண்ணுமாக ஆனைச் சாத்தான் பறவைகள் சம்பாஷிக்கின்றன. கப்பலில் பயணம் போகிறவர்கள் கரை சேரும் வரை வேண்டிய உணவையும் நீரையும் தம்முடன் எடுத்துப் போவதைப் போல இரை தேடப் போகும் ஆண்பறவைகள் தங்கள் பேடுகளிடம் தாம் இல்லாதிருக்கப்போகும் பகல் நேரம் முழுக்க என்னேன்ன பாதுகாப்பில் இருக்கவேண்டும் என்பதற்கான யோசனைகளை உரத்து செய்து கொண்டிருக்கின்றன. பொழுது நன்கு விடிந்து விட்டது.
மாளிகையில் துதிபாடகர்கள் குரல் கேட்டு எழுந்திருக்காமல் இப்படி பறவைப் பேச்சைக் கேட்டு எழுந்திருக்க வேண்டி வந்ததே என்று வெறுத்துப் படுத்தாள் உள்ளிருக்கும் பெண். அர்த்த ராத்திரியில் பேய் மாதிரி வந்து எழுப்புவதைப் பார் என்று முணூமுணுத்தாள். பகவத் விஷயத்தில் புதியவள் அல்ல எனினும் புதுமை பாவித்துக் கிடக்கும் நீ தான் பேய் என்பது போல 'பொழுது விடிந்தது தெரியாமல் தூங்கும் நீ பேய்ப் பெண்' என்றார்கள். பொழுது விடிஞ்சுதா? மணி என்ன என்று இன்னும் அவள் கேட்க ஆய்ப்பாடியில் ஆய்ச்சிகள் எல்லாரும் எழுந்து தயிர்கடைய ஆரம்பித்ததை அடுத்த அடையாளமாகச் சொன்னார்கள்.
கோகுலத்தில் தயிர் கடைவது இருபத்து நாலு மணி நேரமும் நடக்கும் விஷயம். அதைப் போய் பொழுது விடிந்த அடையாளமாகச் சொல்வதா? என்றாள் உள்ளிருப்பவள்.
வெளியே இருப்பவர்கள் விளக்கினார்கள். இது எப்போதும் தயிர் கடையும் ஒலியில்லை. காலை நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப் பட்ட ஒலி. எப்படியெனில் தயிர் கடைந்து கடைந்து தீராமல் தயிர் கடைதலைப் பல நேரத்தில் குழந்தைகளிடமோ வயோதிகரிடமோ வேலைக் காரர்களிடமோ ஒப்படைத்து விடுவர் இல்லக் கிழத்தியர். பிறகு இறுதியில் தயிர்ப் பானை மத்து எல்லாம் சுடுநீர் வார்த்துக் கழுவி ஓரமாக காற்றுப்பட வைப்பார்கள். காலையில் காய்ந்த கலங்களையும் மத்தையும் எடுத்துக் கொண்டு இல்லத்தரசி தான் உட்காருவாள். தொழில் அவர்களுக்கு தயிர் பால் விற்பது என்பதால் விடியற்காலை ஆரம்பிப்பாள். அப்படி ஆய்ச்சியே கடையும் தயிர்ச் சத்தம் இது. எப்படி அறிவோம் என்றால் பார், அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என காசும் முளையுமாய் நிறைய மங்கலப் பொருட்களைத் தாலியோடு அணிந்திருக்கும் ஆய்ச்சிகள் அசைந்து அசைந்து கையை எடுத்து வாங்கி தயிரைக் கடைகிறபோது பொன் தாலிகள் குலுங்கி சப்தம் வருகிறதே கேட்கவில்லையா? [காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து]
இல்லத்தரசிகள் தண்ணீர் நிரம்புவதை நகர வாழ்க்கையில் தூக்கக் கலக்கத்தோடு துல்லியமாக அடையாளம் காண்பது எல்லாருக்கும் தெரியும் எப்போது டிரம்மில் நீர் விழ ஆரம்பிக்கிறது எப்போது முக்கால் ஆயிற்று எப்போது டியூப் பொத்தென விழப்போகிறது என்று அறிந்து வைத்திருப்பார்கள் படுத்தவாறே.
அப்படி இந்தப் பெண்கள் துல்லியமாக விடியற்காலை நிசப்தத்தில் ஒலிகளை அடையாளம் காண்கிறார்கள். ஒலி மட்டுமில்லை. வாசனை கூட தெரிகிறது இவர்களுக்கு. வாச நறுங்குழல் ஆய்ச்சியர் பூ முடித்த கூந்தல் அவிழ்ந்துவிழ அதைக் கட்டிப் போட ஒரு நொடி விரயம் ஆயிற்று. இதோ இப்போது மீண்டும் கடைகிறார்கள். முதலில் பானையை வைத்து மத்தை உள்ளே விட்டவர்கள் கண்ணனைப் பாடிக்கொண்டே தயிர் விட மறந்து விட்டார்கள். மத்து போய் பானைச் சுவற்றில் மோதி டங் டங் என்கிறது. இப்போது தயிரை ஊற்றிவிட்டார்கள்.
களக் களக் என்கிறது தயிர்ச்சத்தம்.
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ ஓசைப்படுத்தியது மத்து. தவறுணர்ந்து சரி செய்தபின் வந்தது தயிர்ச்சத்தம். இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறோம். நம்ப மாட்டாயா? நீயெல்லாம் ஒரு தலைவி. அந்தச் செருக்கு தான் எதுவும் உள்ளே போக மாட்டேன் என்கிறது. நாயகப் பெண்பிள்ளாய்! என்றார்கள்.
கோகுலத்தில் பெண்கள் கிருஷ்ணனின் அன்புக்கும் அழகுக்கும் பரவசப்பட்டு எப்போதும் கிருஷ்ணன் நினைவாகவே இருந்தார்கள். அவன் கண் முன்னால் நின்றாலும் அவனே மனதில். அவன் அருகில் இல்லாதபோதும் அவனே மனதில். கிருஷ்ணனின் நாமத்தைப் பாடிக்கொண்டே காலம் கழித்தார்கள். ஒரு கோபிகை முரன் என்ற அசுரனை வென்ற கிருஷ்ணனின் கீர்த்தியைக் கேட்டதிலிருந்து பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்து விட்டாள். அவளை இயல்புக்குக் கொண்டுவர வென்று அவள் வீட்டுக் காரர்கள் அவள் கையில் தயிர் பாலைக் கொடுத்துக் கடைத்தெருவில் விற்று வரச் சொன்னார்கள். அப்போது அவள் சந்தையில் நின்று 'பானையில் கோவிந்தன் இருக்கு கோபாலன் இருக்கு கோவிந்தன் வாங்கலையோ தாமோதரன் வாங்கலையோ' என்று கூவினாள். அப்படி ஆய்ப் பாடி முழுதும் கிருஷ்ண நாமம் இறைந்து கிடந்தது. அதனால் வாச நறுங்குழல் ஆய்ச்சிகள் பாடிக் கொண்டே தயிர் கடையவும் அவர்கள் ஆபரணச்சத்தம் கடையப் படும் தயிரின் சத்தம் பாட்டை மீறி ஒலிக்கவும் தடையில்லையே!
[ஆதாரம்:
விக்ரேதுகாமாகில கோபகன்யா
முராரி பாதார்ச்சித சித்த வ்ருத்தி
தத்யாதிகம் மோஹ வசாதவோசத்
கோவிந்த தாமோதர மாதவேதி
கோவிந்த தாமோதர மாதவேதி
கோவிந்த தாமோதர மாதவேதி]
நாயகப்பெண்பிள்ளாய் என்றதும் உள்ளிருப்பவளுக்குச் சுருக்கென்றது. வெளியில் இருப்பவர்கள் விடவில்லை.
நாராயணாவதாரமாக சுருண்ட முடியுடன் நமக்காகவே வந்திருக்கும் கண்ணனைப் பாடினோம் கேட்டுக் கொண்டே படுத்திருக்கலாமா என்று ஒரு அர்த்தம். கேசியை வதம் செய்த கண்ணன் நாராயணாவதாரம். ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் அரக்கர்களை ஒண்டியாக அடித்துப் போட்ட இராமனை சீதை யுத்தம் முடிந்ததும் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். ஜனகன் வில் முறிவு என்ற நிபந்தனையை வைத்து இந்தப் புருஷன் அதை நிறைவேற்றியும் விட நான் கடமைக்கு மாலை போட்டேன். இன்று எனக்காக தனி ஆளாக வெற்றிபெற்றவனை இவன் அல்லவோ ஆண்பிள்ளை என்று நானாகப் போய் வலிய அணைத்துக் கொண்டேன். என்னையே அவனுக்கு மாலையாக்கினேன் என்றாள். அப்படி கேசியைக் கொன்ற கேசவனின் வரலாறு கேட்டு ஓடி வந்து எங்களையாவது அணைக்க வேண்டாமோ நீ? என்பது இன்னொரு அர்த்தம்.
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசம் உடையாய் திற.
மரியாதைக் குரியவர்களை சரியானபடி விமரிசனமும் பண்ணி கொஞ்சம் புகழ்ச்சியும் வைத்து communication skills உபயோகப் படுத்தும் ஆண்டாள் இன்னொரு முறை தன் திறமையை ஊர்ஜிதம் செய்கிறாள். கணவன் மனைவியிடம் பேசாமலிருக்கும் நாட்களில் குழந்தையைச் சாக்கிட்டு பேச்சுக்கு இழுப்பது போல நாயகப் பெண்பிள்ளாய் என்று அழைத்து உள்ளிருப்பவளின் நிஷ்டூரத்தைச் சம்பாதித்த பெண்கள் கேசவன் வரலாறு கேட்டு அதில் பரவசமாகி தலைவி ஓடி வர வேண்டுமென்று அதை ஆரம்பித்தார்கள் என்கிறார்கள் பூர்வாசிரியர்கள். கேசி என்கிற அசுரன் குதிரையின் உருவத்தோடு ஆயர்பாடியெங்கும் கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணன் மேல் பாய அவன் தன் கையை நீட்டி குதிரையின் வாயில்கொடுத்துத் தாக்கி அதன் பற்களை உதிர்த்து உதடைப் பிளந்து அதனுடலை இரு பிளவாகும்படி வகிர்ந்தான் என்பது புராணம் [பிஸ்தா தான்]
இரண்டாவது படியைத் தாண்டிற்று உயிர்.
நன்றி - திண்ணை டிசம்பர் 2004