7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கல கலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
ஆறாம் பாடலில் ஒரு தோழி புதியவளை திருக்கூட்டத்திலே சேர அன்போடு அழைக்கிறாள். ஏழாம் பாடலில் ஒருவள் ஏற்கனவே கோஷ்டியில் இருந்து விட்டு, இடையில் விலகிய இன்னொருத்தியை, சற்றே கடுமையுடன் பேசித், திரும்பவும் திருக்கூட்டத்தில் சேர்ந்திட அழைக்கிறாள்.
இயற்கையாக ஏற்படாத பக்தி ஈடுபாடு, மற்றவரைத் திருப்தி செய்வதற்காக மட்டுமே, கட்டாயத்தின் பேரில் ஏற்பட்டால், விரைவினில் மக்கிப் போகும்.
ஆட்கொண்ட வில்லி ஜீயர், அழகிய மணவாளனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் பாகவதர். அன்னார் திருக்கோவிலிலிருந்து கைங்கர்யம் முடித்து திரும்பிடும் நேரம், நஞ்சீயர் தெண்டனிட்டு முன்னவரைச் சேவிக்க, வில்லி ஜீயர் சொன்னாராம். 'பகவத் விஷயத்தில் நமக்கு ருசி மெய்யாகப் பிறந்ததில்லை காணும்'.
திகைத்துப் போன நஞ்சீயர், 'உம்மைப்போல ஆச்சார்யவான்களுண்டோ! இவ்வண்ணம் அருளிச் செய்வானேன்', என்று உரைக்கவும், வில்லி ஜீயர் சொன்னாராம் 'எம்பெருமான் மேலே பக்திக்கு எந்த குறைவுமில்லை! தினம் அவன் திருவிக்ரஹ கைங்கர்யத்தில் ஈடு படுகையில் அடியேனுக்கு பரம சுகம் உண்டு. ஆனாலும் பாகவதர்களைக் கண்டால் உகப்பும், புல்லரிப்பும் இயற்கையாக உண்டாவதில்லை காணும்' என்றாராம். (பூர்வீக வியாக்கியான நடையிலிருந்து எளிமைப் படுத்தி எழுதப் பட்டிருக்கிறது).
இன்னொரு பக்தரைப் பார்க்கும் போதே நம் உள்ளத்தில், பக்தி பிரவாகம் தலை தூக்க வேண்டும். திருவரங்கத்து அமுதனார், ராமானுஜ நூற்றந்தாதியை அருளிய மஹான். மற்றும் நம்மாழ்வாரை மட்டுமே ஆஸ்ரயித்து பாசுரங்கள் செய்திருந்தாலும், ஆழ்வார் அந்தஸ்து பெற்றவர் மதுர கவியார். இவர்கள் தங்கள் ஆச்சார்யனின் சொரூபத்திலேயே மாலனை பூரணமாகக் கண்டவர்கள்.
இங்கே கோஷ்டியிலிருந்து இடையில் விலகியவளை, திரும்பவும் ஈடுபடுத்தி, மற்றவர்களோடு பக்திப் பரவசத்தில் முழுதுமாய் கலந்திட வைக்க, இன்னொருத்தி பிரயாசைப் படுகிறாள்.
'கீசு கீசென்று ஆனைச்சாத்தன் கலந்து எங்கும்' - சக்ர வாகம், அல்லது 'வலியன்' என்பவை ஒன்றோடு ஓன்று மிகையாக காதல் வயப்பட்ட பறவைகள்.
'நிஸ்வனம் சக்ர வாகானாம் நிசம்ய' என்னும் வகையில் இந்த விசேஷ பக்ஷிகளின் காதல் பேச்சைக் கேட்டாலே ஒருவரோடருவர் கலக்க வேண்டும் என்ற எண்ணம் காதலர்களுக்கு ஏற்படுமாம்.
எழுப்பிடும் தோழி 'இந்த பட்சிகளின் பேச்சைக் கேட்டாலேயே, காதல் கண்ணனின் பக்கத்திலே உடனே போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லையோ உனக்கு' என்று வினவுகிறாள். இந்த இரண்டு பெண்களிடம் நடந்த வாக்குவாதம் மிகவும் ரசமானது"
உறங்கும் பெண்: (உ.பெ) : இரண்டு ஆனைச்சாத்தன் பேசிக் கொண்டிருப்பதே 'எங்கும்' விடியலுக்கு நிரூபணமோ?. அப்படியே அவைகள் கலந்து பேசிக் கொண்டிருந்தாலும், நீங்கள் தான் அவைகளுடைய பேச்சினைக் கேட்டீர்களே. அதனை அப்படியே சொல்லுங்களேன்.
எழுப்பிடும் பெண்: (எ.பெ) நாங்கள் சொல்வதை விட நீயே அப்பறவைகளின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்னும் பரவசமடைந்திருக்கலாம்.
உ.பெ- உன் பேச்சு வேடிக்கையாய் இருக்கிறது. இரவெல்லாம் உறங்கிப்போய் விடிந்த பிறகா பறவைகள் பேசிக் கலக்கும்?
எ.பெ - விடிந்த பின் பேசிக் கலப்பது, தனித் தனியாய் பிரிந்து, பகல் முழுவதும் வெவ்வேறு திசையில் பறப்பதால், தற்காலிக பிரிவு ஏற்படுவதை எண்ணி. பறவைகள், விடிந்த உடன் கலந்து பேசுவதை நீ அறிந்திடாயோ, மதி கெட்ட பேய்ப்பெண்ணே?
உ.பெ - விடியும் முன்னரே விடிந்ததாகப் பேசும் நீ தான் மதி கேடி - பேய்ப்பெண். விடிந்ததற்கு வேறு எதுவும் அடையாளம் உண்டோ சொல்.
இரவெல்லாம் இன்பத்தோடு கலந்து, விடிந்த பிறகு மரத் தோணியில் ஏறி, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் துணைவன் திரும்பி வரும் வரையில், உயிரைக் கையில் சுமக்கும் துணைவி, அவனை வழியனுப்பும் இளங்காலை நேரத்தில் கலந்து பேசுவது உனக்குத் தெரியாதோ?
'பேய்ப்பெண்ணே' - எ .பெ. கிருஷ்ணனுடைய சுக சம்பந்தம் தெரிந்தும் உறங்கிக் கிடக்கும் நீ ஒரு மதிகெட்டவள் - பேய்ப்பெண்,
'காசும் பிறப்பும் கலகலக்கக் கை பேர்த்து' - அச்சு அச்சாக காசு போல் அடித்துக் கோர்த்த 'காசு மாலையும்', முளை விதை போன்ற முத்துக்கள் கோர்வையான முளைத் தாலியும், தயிர் கடையும் போதில் ஒன்றோடு ஓன்று ,மோதிக் கலகலப்பு ஒலி எழுப்ப, பால், தயிர், வெண்ணை வணிகம் செய்யும் ஆய்ச்சியர்களின் பேச்சின் ஒலியும் அவை கூட கலகலப்பு ஒலி செய்ய.
'அரவு ஊருசலாய் மலை தேய்க்கும் ஒலி', என்று மலைகளை மத்தாக்கி, வாசுகிப் பாம்பினைக் கயிறாக்கிக், கடையும் போது மலையின் உரசல்களினால், மலை பெயர்ந்து ஏற்படும் பேரொலி போல், கெட்டித் தயிரை பேர்த்து எடுப்பதினால் ஏற்பட்ட பேரொலி.
மேற்கண்ட வரிகள் ஆய்ச்சி மார்களின் செல்வ நிலையையும், பால், தயிரின் கெட்டித் தன்மையையும் குறிக்கிறது. கண்ணன் பற்றிய பக்தி எண்ணம் மனத்தில் பரவியும், 'தயிரை மோராக்க ஓட்டேன்' என்ற எண்ணத்தாலும், கடைந்திருக்கும் ஆய்ச்சியர் கைகளில் சோர்வு கொடுத்தது.
திருமந்திரமும், த்வய மந்திரமும் ஒன்றாகி த்வனிக்க, புருஷார்த்த ஞானம் தலையெடுத்தது, என்பது இந்த பதங்களின் உள்ளர்த்தம்.
'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' - தயிர் கடைந்திடும் செயலால் தலை முடிக்கட்டு அவிழ்ந்து நறும் மணம் வீசியது. கண்ணனின் அன்பினால், எண்ணத்தால் தலை முடிக் கற்றை மணக்க ஆரம்பித்ததாய்க் கொள்ளலாம்.
ஆய்ச்சியர்கள் - சிறுமியர்கள் மற்றும் இடைப்பட்ட வயதினர் கண்ணனை எண்ணி செய்யும் நோன்பினுக்காக 'மலரிட்டு நாம் முடியோம்' என்று உறுதி எடுத்த பின்னரும், அவர்கள் நறுங்குழலில் நறுமணம் வருவது கோபாலனின் மாயம் தானே.
'மத்தினால் ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ' - மத்து, கெட்டித் தயிரோடு போராடி அதைப் பேர்த்து, அதனால் உண்டான பேரரவம் கூட உனக்குக் கேட்கவில்லையோ. பொழுது விடிந்ததற்கு இந்த நிரூபணணமும் போறாதோ? என்று உறங்கியவளை நோக்கிக் கேட்கிறாள்.
கெட்டியான தயிர் போன்ற நம் பிடிவாதக் குணங்கள், பக்தி என்னும் மத்தினால் கடைந்திட, ஆணவம் மோராய் (நீர்த்துப் போய்), வெண்ணையைத் (ஞானத்தை) தனியாய்ப் பிரிந்து நிற்கும் என்று குறிப்பு.
‘உத்காய தீநாம் அரவிந்த லோசனாம் வ்ராஜாங்க நானம் திவம் அஸ்ப்ருதஸ் த்வனி, தத் நச்சனிர் மந்தந சப்த மிஸ்ரிதோ நிரஸ்ய தேயோநதிசாம மங்களம்’ - கண்ணனுடைய தாமரைக் கண்ணழகால் தோற்றுப்போய் பாடுபவர்கள் த்வனியும், தயிர் கடையும் ஒலியும், ஆபரணங்கள் எழுப்பக் கூடிய ஓசைகளும் ஒன்றாய்க் கலந்து, கீழிலிருந்து மேல் கிளம்பி, பல லோகங்களைச் சென்று கிட்டுவதான ஒலிக்கு மங்கலமாகட்டும். (உன் செவியை அடைய வில்லையோ என்பது குறிப்பு).
நோன்பிருந்த சிறுமி ஒருத்தி, கண்ணனால் வயப்பட்டதால், சொக்கிப்போய் செயலிழந்து நின்றாள். அவளைத் திருத்திட, அவளுடைய தாயார், பாலையும், தயிரையும், நெய்யையும் கொடுத்து, விற்று விட்டு வா என்றனுப்பினாளாம். விற்கப்போன இடங்களிலும் நோன்பையும், கிருஷ்ணனையுமே நினைத்துக் கொண்டு, 'கிருஷ்ணனைக் கொள்ளுங்கள், கோவிந்தனைக் கொள்ளுங்கள், ஸ்ரீ ய:ப் பதியைக் கொள்ளுங்கள்' என்றே அரற்றிக் கொண்டு திரிந்தாளாம்.
'நாயகப் பெண் பிள்ளாய்' - செல்வங்களுடய பெண்ணே என்றும், எங்கள் தலைவியே என்றும் உறங்கிக் கிடந்தவளைப், பதிலேதும் சொல்லாதவளை, பெருமை படுத்தி பேசினாலாவது, உறக்கம் கழிந்து வருவாளோ என்ற ஆதூரத்தோடு சொல்லுகிறாள்.
'நாராயணன், மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ' - நாராயணன் (ஆதி மூலம் ), மூர்த்தி (அவனுடைய பராக்கிரமங்களாலே ஆன ஸ்வரூபம்), கேசவனை (நம் கண்ணெதிரேயே நின்று, நம் விரோதிகளை சம்ஸ்கரிப்பவன்), பற்றி நாம் பாடிய போதும், அதுவே தாலாட்டாக மாறிட நீ கேட்டுக்கொண்டே படுத்திருப்பாயோ. எப்படி இருந்தாலுமே கேசவன் தான் காப்பாற்றப் போகிறானே என்ற எண்ணத்தினால் இன்னும் உறங்கிடுவாயோ?
'பர்த்தாராம் பரிஷஷ்வஜே' - என்று இராமனுடைய பெயரை கேட்ட மாத்திரத்திலேயே, அவனை அணைத்த ஜனகவல்லிப் பிராட்டியார் போலே, கண்ணனின் பெயர்களைக் கூறினால் உடனடியாக தூக்கம் கலைந்து அவனை அணைக்கப் புறப்படுவாளோ, என்பதால் சொல்லப்பட்டது.
'தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்' - பேச்சில் இனிமையும், மிகுந்த தேஜஸ்ஸும், உன்னுடைய காணுகைக்காகவும் நீயே வந்து கதவைத் திறப்பதன் மூலம் தூக்கம் களைந்திடுவாய் பெண்ணே. என்பதாம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.