ஞாயிறு, 22 டிசம்பர், 2019

உயர் பாவை - 7 - சதாரா மாலதி

புள்ளரையன் கோயில்

சர்ச்சைக்குரிய உருவ வழிபாட்டை நியாயப் படுத்தும் இந்து மதம் பரம்பொருளின் ஐந்தாவது நிலையாக 'அர்ச்சை' யை வைத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாமரனுக்காகவே இது தேவைப்பட்டது. 'கலியுகத்தில் 'அர்ச்சை' வெகுவாக என் நிலையாக இருக்கும். பக்தன் எனக்கு எந்த வடிவத்தைக் கற்பிக்கிறானோ அந்த வடிவில், எந்த குணங்களைக் கற்பிக்கிறானோ அந்த குணங்களோடு பரமபதம், பாற்கடல், அவதாரம், அந்தர்யாமி என்ற நிலைகளில் எனக்குள்ள சக்திகளுக்கு எள்ளளவும் குறையாத வீர்யத்தோடும் கருணையோடும் பக்தர்களுக்கு நான் அருள் பாலிப்பேன்' என்ற சங்கல்பத்தை பகவான் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

ஜீவன் பரமனுக்கு பிரேமையைச் செய்ய உகந்த இடமும் அர்ச்சை தான். எல்லா வலிமையும் இருந்து வைத்தும் பலவீனனைப் போல வாய் திறக்காமல் ஜனங்கள் இடும் ஆசனம் மலர் அலங்காரம் நைவேத்யம் போன்றவற்றை அங்கீகரித்து மிக மகிழ்ச்சியுடன் தன்னை அநாதரிக்கிறவர்களையும் ஆதரிக்கிறான் பகவான். கடவல்லி உபநிஷத்தில் மந்த்ர ரத்னமான த்வயத்தின் இரண்டு வாக்கியங்களோடு மூன்றாவது வாக்கியம் செருகப்பட்டு வைக்கப் பட்டிருக்கிறதாம்.


அதில் ‘ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் பிரபத்யே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவ விசிஷ்யதே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ’ என்று சொல்லப் பட்டிருக்கிறதாம்.

பிராட்டியுடன் கூடிய பகவானைச் சரணம் பற்றுகிறேன்.

அர்ச்சையில் தான் பகவான் பூரணமாக எழுந்தருளியிருக்கிறான் பகவான் பிராட்டி சேர்த்தியில் எல்லா அடிமையும் கிடைக்கப் பெறுவேனாக வேண்டும். இது பொருள்.

மந்த்ரத்தின் இரண்டு வரிகளுக்கு இடையில் பூர்ணஸ்ய வரியைச் சேர்த்திருப்பது கோவிலின் விசேஷத்தை முன்னிறுத்த என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கல்வடிவமானாலும் பார்க்கிற கண்ணில் அன்பிருந்தால் தெய்வம் தட்டுப் படுகிறது.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ 
பிள்ளாய் எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு 
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் 
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கோகுலத்தில் பறவைகளின் தலைவனான கருடனின் திருமாலுக்கு ஒரு கோவில் இருந்திருக்கிறது. அதை 'புள்ளரசன் கோயில்' என்று குறிப்பிட்டிருக்கிறாள் ஆண்டாள். இப்படி அர்ச்சாஸ்தலங்கள் எல்லாக் காலத்திலும் இருந்ததற்கான சாட்சியம் இருக்கிறது. இராமன் சீதையுடன் சென்று வணங்கி வந்த கோவிலைப் பற்றி 'ஸஹபத்ந்யா விசாலாட்ச்யா நாராயண முபாகமத்' என்று குறிப்பு இருக்கிறது. பூர்வாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படி ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம் ஆகிய கோவில்கள் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வருவதில் கோகுலத்தில் கோவில் இருக்கத் தடையில்லை.

ஆறாவது முதல் பதினைந்து வரையிலான எழுப்பு கீதங்கள் ஜீவனுக்கு விழிப்புணர்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளன. ஜீவனின் பத்து வெவ்வேறு நிலைகளாக மேலேறும் ஏணிப் படிகளாகக் கூடச் சொல்லமுடியும். பத்து ஆழ்வார்களை, பத்து ஆச்சார்யர்களை, பஞ்ச லட்சக்குடிப்பிறந்த கோபிகளை கர்மேந்த்ரியமும் ஞானேந்த்ரியமுமான பத்து புலன்களை எழுப்புவதாக ஐதீகம். 

பொதுவாக எழுப்புகிறவர்கள் பெரியவர்களாகவும் படுத்துத் தூங்குபவர்கள் சாமான்யர்களாகவும் தோன்றும். ஆனால் அது அப்படியில்லை. எழுப்புகிறவர்கள் சாமான்யர்கள். தூங்குகிறவர்கள் மிகப் பெரியவர்கள், திருப்பாவையில்.

எழுப்புகிறவர்களும் தூங்குகிறவர்களும் பகவத் பிரேமையில் ஒரே தன்மையராக இருந்தும் சிலருக்கு நிம்மதியாகத் தூங்கமுடிகிறது. சிலருக்குப் படுக்கை தரிக்கவில்லை.

தனியாக பகவானிடம் போக பயம் .'ஆழியான்' என்ற ஆழமோழையில் தன்னிச்சையாக முறையின்றி இறங்கிவிட்டால் என்னாகுமோ என்ற பயத்தில் 'வேதம் வல்லாரைக் கொண்டு விண்ணோர்பிரான் பாதம் பணிந்து' என்று சொல்லியிருக்கிறபடி தங்களை அணைத்துச் செல்லவல்ல பெரியவர்களை எழுப்பிக் கொண்டு போகிறாள் ஆண்டாள். 

முதன்முதலாக பகவத் விஷயத்தில் புதியவளை, இளைய பிராயத்தாளை 'பிள்ளாய் எழுந்திராய்' என்று எழுப்பிச்செல்வதாக இருக்கிறது பாசுரம் .'பொழுது விடிந்தாலல்லவோ எழுந்திருப்பார்கள்? இன்னும் விடியவில்லையே!' என்றாள் உள்ளிருப்பவள்.

'எழுந்த வந்த நாங்கள் விடியாமலா வந்திருக்கிறோம்?' என்று கோபப்பட்டார்கள் காத்திருப்பவர்கள். அதற்கவள் 'தூங்கினால் அல்லவா விழிக்க? கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்துஞ்சுதலே என்றபடி நீங்கள் உறங்கினதே கிடையாதே! வேறு அடையாளம் சொல்லுங்கள் பொழுது விடிந்ததற்கு' என்றாள். 

[கிஷோர் குமார் பாடிய 'தேரே ஹி ஸப்னோமே ஸோயா சவேரே தேரே க்ஹயாலோமெ ஜாகா' என்ற வரி ஞாபகம் வரும் ஸாவன் பிஜ்லி சந்தன் பானி ஜைஸா அப்னா ப்யார் என்ற பாடல்]

புள்ளும் சிலம்பின காண் என்று முதல் அடையாளம் சொன்னார்கள். பறவைகள் மார்கழி நோன்பு செய்யவென்று அடித்துப் புரண்டு எழுந்திருக்கவில்லை. எப்போதும் போல பொழுது விடிந்துவிட்டதால் எழுந்தன. என்றார்கள். 'நீங்கள் தரிக்க மாட்டாமல் அலைவது போலத் தானே உங்கள் ஊர்ப் பறவையுமிருக்கும்? 'ஊரும் நாடும் தன்னைப் போல அவனுடைய பேரும் தாரும் பிதற்ற' என்றாற்போல நீங்கள் உங்கள் பறவைகளை உங்களைப் போலவே ஆக்கியிருப்பீர்கள்' என்றாள் பதிலுக்கு.

'சரி, பறவைகளை நாங்களே எழுப்பிக் கூட்டிவந்தோம். ஆயர்பாடி நாராயணன் கோவில் நிர்வாகி ஆள்காரன் எல்லாரையும் நாங்களே கூப்பிட்டு வெள்ளைச் சங்கைக் கையில் கொடுத்து ஊதச் சொன்னோம் என்று சொல்வாய் போலிருக்கிறதே! விடியற்காலை ஆராதனைக்காக பக்தர்களை அழைக்கும் 'விளிசங்கு' பெரிய சப்தமாகக் கிளம்பியதே! அது கூடவா காதில் விழவில்லை?' என்றார்கள்.

'சங்கென்னவோ ஊதியது. அது கோயில் சங்கில்லை. விளிசங்குமில்லை, அது ஜாமத்துக்கு ஜாமம் ஊதும் சாதா சங்கு' என்று வாதம் செய்தாள் உள்ளே இருப்பவள். 

'உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான், அறிந்தவளாயிருந்தால் பகவத் பக்தியை விடவும் பாகவத பக்தி தான் பெரிது என்று தெரிந்து நாங்கள் கூப்பிட வேண்டாமல் நீயே எங்களைத் தேடி வந்திருப்பாயே! பிள்ளாய்!' என்றார்கள். 

'போகட்டும், நான் பிள்ளையாகவே இருந்து போகிறேன். வந்த சேதியைச் சொல்லுங்கள்.' என்றாள்.

கம்சன் ஏவிய பூதனை என்னும் ராட்சசி அழகான பெண்ணூருவத்தில் ஆய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் கிடந்த குழந்தைக் கண்ணனை மடியில் வைத்துக் கொண்டு நஞ்சு தீற்றிய முலைப்பாலைத் தந்தாள். அரக்கி தனக்காகவே பிரயாசைப் பட்டுக் கொடுத்த விஷத்தை கண்ணன் ரசித்துக் குடித்து பாலோடு பூதனை உயிரையும் உறிஞ்சி அவளைக்கொன்றான். 

அப்புறம் நந்தகோபர் அரண்மனையில் ஒரு வண்டியின் கீழ்நிழலில் தொட்டிலில் குழந்தைக் கண்ணனைக் கிடத்தி குளிக்கப்போனாள் யசோதை. அந்த வண்டிச் சக்கரத்தில் கம்சனால் அனுப்பப் பட்ட அசுரன் ஆவேசித்துக் கண்ணனைக் கொல்லவிருந்தான். பெற்ற தாய் கூட அருகிலில்லாத நேரத்தில் தனக்கு வந்த ஆபத்தை அறிந்து கண்ணன் பாலுக்கு அழுத பாவனையில் தன் சிறிய பாதங்களைத் தூக்கி சக்கரத்தை உதைக்க அச்சகடம் திருப்பப் பட்டுக் கீழே விழுந்து அசுரனும் அதனோடே அழிந்தான்.

இந்த இரு சம்பவங்களையும் சொன்னார்கள் வந்தவர்கள், கண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்துகளைச் சொன்னால் மனமதிர்ந்து படுத்திருப்பவள் தூக்கம் கலையாதா என்று. அவளோ கண்ணன் காப்பாரில்லாமலும் தன்னைத்தான் காத்துக் கொண்டதை நினைத்து நிம்மதியுடன் திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்தாள். அப்பாடா! அவன் பாதம் நமக்குத்தான் ஆதரவென்றிருந்தோம் அவனுக்கும் அதுவே ஆதரவு போலிருக்கிறதே சகடாசுரன் விஷயத்தில் என்று ஒரு பெருமூச்சு வேறு விட்டுக் கொண்டாள். காத்திருப்பவர்கள் பார்த்தார்கள். அபாயங்களைச் சொல்லிப் பிரயோசனமில்லை. 

அபாயங்களில்லாத பாற்கடலில் பரிவுடைய ஆதிசேஷப் படுக்கையில் சாய்ந்து அறிதுயில் செய்யும் பரம்பொருள் பற்றிச் சொன்னார்கள். விவசாயிகள் விதையை நீரில் தானே சேர்ப்பார்கள்? அப்படியே அகில உலகுக்கும் அடிவித்தான தன்னையும் நீரிலே சேர்த்தான். அத்தகையவனை எப்போதும் நெஞ்சில் சுமந்திருக்கிற தியானிகளும் யோகிகளும் அவன் உள்ளே தளும்பாதபடி மெள்ள எழுந்து 'ஹரிர் ஹரிஹி ஹரிர்ஹரிஹி' என்று ஏழேழு தரம் உரக்கச்சொல்லிப் பின் தம் தம் அலுவல்களைத் தொடங்கிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

'பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாய மணாள நம்பி' என்றபடி நீரும் உறுத்துமென்று மென்மையான குளிர்ந்த பாம்புப் படுக்கையில் இருப்பவன் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்து தவம் செய்யும் தியான சீலருக்கும் அங்குமிங்கும் அலைந்து கைங்கரியம் செய்யும் கர்மயோகிகளுக்கும் மனக் கடலில் வாய்த்தவன் அல்லவா? மனன சீலர்கள் முனிவர்கள் என்றால் கைங்கர்ய பரர்களை யோகிகளாகக் கொள்ளத் தடையில்லையே! இருவகையினரும் ஹரிநாமம் சொல்லி எழுந்தாயிற்று. இப்போது நாங்கள் எழுப்பி நீங்கள் எழுந்து வருவது தான் மிச்சம் என்றார்கள்.

'பறவை எழுந்தது: கோயில் சங்கு ஊதியது: எந்த சத்தமும் கேட்காமல் தூங்கும் அறியாப் பெண்ணே! நாம் தேடிப் போகிற வாசுதேவ கிருஷ்ணன் சிறுவயதில் பெரும் சாகசங்களைச் செய்தவன். அவனே அந்த பாற்கடலில் பள்ளிகொண்ட பரம்பொருள். அதை உள்ளபடி உணர்ந்து கோகுலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியாக எழுந்து ஹரிநாமத்தை உச்சரித்தபடி தங்கள் அன்றாட அலுவல்களைத்தொடங்கிவிட்டனர். அந்த ஹரிநாம சப்தம் உள்ளத்தை நனைத்துக் குளிர்விக்கிறது.

நாம் கிருஷ்ணாம்ருத நீராட்டத்தின் முதல் படியைத் தாண்டுவோம்' என்பது பாசுரம்.

முதல் பாசுரம் பொய்கையாழ்வாரைக் குறிப்பது எப்படியெனில் அவர் பாஞ்சசன்னியம் என்ற சங்கின் அம்சமாகப் பிறந்தவர் என்பதிலும் அவர் பிரயோகிக்கும் சில பதங்களை ஆண்டாள் இங்கு பூட்டுக்குச் சாவி போல வைத்திருப்பதிலும் என்பார்கள்.

'அஸ்மத் குருப்யோ நம:' என்று முதல் குருவைக் கூப்பிட்டுக் கொண்டதாகவும் பெரியவர்கள் கூற்று. 

ஆறாவது திருப்பாவை முடிந்தது.

நன்றி - திண்ணை டிசம்பர் 2004

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக