புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
இந்தப் பதிகம், உணராதவர்களை உணர்ந்தவர்கள், காரணங்களும் நியாயங்களும் சொல்லித் துயில் எழுப்புவதாகும். முன்னரே சொன்ன வண்ணம், உள்ளர்த்தமாகப் பார்க்கையிலே, உடையவரை (ஆண்டாளுக்குப் பிறகு பிறந்தவர் ஆயினும்), ஞான த்ருஷ்டியாலே அடையாளம் கண்டு கொண்டு, தன்னுடைய தமயனராகப் பாவித்தாள், கோதைப் பிராட்டி.
நம் போல அறியாத மானிடரை சம்சார பந்தங்கள் என்னும் மயக்கத்திலும் இக சுகங்கள் என்னும் உறக்கத்திலும் இருந்து எம்பெருமானார் பலவும் சொல்லி விழிப்புப் பெற வைப்பதாக உத்தேச்யம்.
பாவை நோன்பிருக்கும் சிறுமிகளின் கூட்டம் பெறுத்துக்கொண்டே போகிறது. இளங்காலையில், நோன்பிருக்க வேண்டி கண்ணனோடு நீராடும் சுக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, உறக்கம் விழித்த பெண்கள், உறங்கிக்கொண்டு இருப்பவர்களைத் தம் கோஷ்டியில் சேர அழைக்கிறார்கள். பரமபதத்துக்கு அகப்பட 'அடியார் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ', என்னும் வகையில் நோன்பின் சுகானுபவம் பெற புதியவள் ஒருவளை தட்டி எழுப்புவதாகப் பொருள்.
'புள்ளும் சிலம்பின காண்' - தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டவள் கேட்கிறாள், எழுப்பியவளை, 'பொழுது விடிந்தது என்கிறாயே! விடிந்ததற்கு அடையாளம் என்ன?'. முன்னவள் சொல்கிறாள்.
இருள் விலக ஆரம்பிக்க, 'பல் வகை பறவைகள் தத்தம் கூட்டிலிருந்து வெளி வந்து கத்திக் கொண்டே இறை/இரை தேடப் போவதை பார்க்க வில்லையோ'. கருங் குருவிகளும், குயில்களும் கூட உஷத் காலம் என்னும் ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கண்ணனை ஸ்பர்சிக்கும் போதில் இன்னும் நீ உறங்குகிறாயே என்ற குறிப்பு.
'பக்ஷிணோ பிப்ரயரசந்தே' - பக்ஷிகள் உணர்த்தியும் உங்களூரில் பொழுது விடியவில்லையோ என்று குறிப்பு.
'புள்ளரையன் கோயிலில், வெள்ளை மணிச் சங்கின் பேரரரவம்' - புள் - அரையன் - பக்ஷி ராஜன், மற்றும் கருடனுக்குத் தலைவனான கண்ணன். இது ஓர் அற்புதமான பக்ஷி. அழகு, வலிமை, வேகம் எல்லாம் அமையப்பெற்ற புள்ளினம். ஒரு சமயம் பக்ஷி ராஜனை 'தேசியப் பறவையாய்' கொண்டதினாலே தானோ அமெரிக்க பூமி வல்லரசானதோ என்று அடியேன் திகைப்பதுண்டு.
இங்கும் அங்கும் சீதையைத் தேடிப் பித்தன் போல் செடி கொடி எல்லாவற்றுடன் பேசி 'சீதையைக் கண்டீர்களா' என்று அரற்றிய இராமனுக்கு, சீதையை இராவணன் கடத்திக் கொண்டு போன செய்தியைச் சொல்லி, ஓரளளவு நிலை கொள்ளச் செய்தவன், பெரிய திருவடியானவன், கருத்மான் என்ற கருடாழ்வார்.
தொன்று தொட்டே சங்கிடுதல் மணி அறிவிப்புக்குச் சாதனமாய்த் திகழ்ந்துள்ளது. வெண்மை நிறத்தோடே விளிக்கும்/ பெரும் சப்தத்தோடு ஒலிக்கும் சங்கு. விடிய ஆரம்பித்ததை வெண்மை நிறம் எடுத்துக் காட்டும். இருட்டில்லை என்றால் தானே நிறம் தெரிய முடியும்.
'கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்' - சர்வோத்தமமான கைங்கர்யம் புரிய கையைக் காட்டி விளிக்குமாப்போலே.
'கேட்டிலையோ' - கேட்பதே பாக்கியம், அதை நீ பெற வில்லையோ. நாம் உன்னைக் காண ஆசைப்பட்ட வண்ணம், உனக்குப் பாதியாவது எங்கள் மேல் ஆசையில்லையோ.
'பிள்ளாய் எழுந்திராய்' - இவ்வளவு சொல்லியும் விழிப்பு வராதவளை,
'பேய் முலை நஞ்சுண்டு' - பூதனை என்ற அரக்கி, தாய் உருவம் தாங்கி, திருமுலைப்பால் என்னும் விஷத்தை ஊட்டிக் கண்ணனைக் கொல்ல எத்தனித்த போது, கண்ணனின் திருவாய்ப் பட்டதால், அவளுடைய தீமை அடங்கப் பெருபவளாய் வதைக்கப் பெற்று முக்தி அடைகிறாள். கொல்ல வந்த அரக்கிக்கே தாய்மை பூரிக்கச் செய்து முக்தி கொடுத்தவனை, ஆச்ரயிப்பவர்களுக்கு எத்தனை அருள் தருவான் என்பது சங்கேதம்.
'கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி' - சகடாசுரன், என்னும் கம்சனால் ஏவப்பட்ட அரக்கன், மிகுந்த வேகத்தோடு கண்ணனைத் தாக்க வந்தபோது, ஒரே முறை அவனை உதைத்துப், பொடி பொடியாக்கியவன்.
பூதனை தாயாகி பாலூட்டி அழிக்க வந்ததால் அவளை வதம் செய்வதில், நிதானமாக, அவளிடம், ஸ்தன பானம் பருகி கொஞ்சம் கொஞ்சமாக வதம் செய்தான். ஆனால் வேகமாக தாக்க வந்த சகடாசுரனை, ஒரே நொடியில் உதைத்தே பொடியாக்கினான். அதே வண்ணமே, மெதுவாக நம்பிக்கை வளர்த்துத் தொழுபவர்க்கு, சிறிது சிறிதாகவும், முழுதாய்ச் சரணம் அடைந்தவர்க்கு உடனேயும் அருள வல்லவன்.
'வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை' - வெள்ளமெனப் பரந்துக் கிடக்கும் க்ஷீராப்தி சாகரத்தில் (பாற் கடலில்), பைந்நாகப் பாயில், தூக்கத்தில் அமர்ந்த, உலகத்தின் மூலாதாரத்தை (வித்தினை, பீஜத்தினை).
வெள்ளம் - கருணை அருளிக்கும் வகையிலே குளிர்ந்த,
அரவு - நீரின் குளுமை உறுத்தாதிருக்கும் நாகப் படுக்கை,
துயில் - ஜகத் ரக்ஷண சிந்தை, 'பனிக் கடலில் பள்ளிக் கோளைப் பழக விட்டோடி எந்தன் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பி'.
அமர்ந்த - கிடத்தல் அல்லாது அமர்ந்த நிலையில், பிராட்டியின் திருமுலை சேர்ந்து நெருக்கி இருந்தும் உணராத தன்மை, தன்னை ஆஸ்ரயிர்ப்பவர்களின் தேவைகளால் ஏற்பட்ட சிந்தனை வயத்தால்,
வித்தினை - அடுத்த அவதார உத்தேசத்தோடே, அதற்கான நாற்றங்காலாய் இருந்த மாலன்.
'உள்ளத்தே கொண்டு' - திரு அனந்தாழ்வான், எம்பெருமான், ஆய்ச்சி மார்கள் சமேதர்களாய், மனத்திலே கொண்டு,
'முனிவர்களும் யோகிகளும்' - உடல் மனோ விருத்திக்காக யோகம் செய்யும் யோகிகளும், மனன சீலர்களான (குண நிஷ்டர்களான) முனிவர்களும்.
கிருஷ்ணன் கோகுலத்திலே புகுந்தது முதல் முனிவர்களும் யோகிகளும் கோகுலத்துக்குள் புகுந்து, மாட்டுக் கொட்டில்களில் கூடப் படுத்துக் கிடப்பார்களாம்.
'மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்' - மலையின் முகட்டிலே நின்றிருந்தும் ப்ரஹ்லாதனை வீழாமல் காத்தவனான சர்வேஸ்வரனை எண்ணத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள் மெதுவாய், வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு நோய் வாராமல் எழுந்திருக்கும் வண்ணம், தங்கள் மனத்துள் கிருஷ்ணன் என்ற பாலகனைச் சுமந்த பொறுப்போடு மெதுவாக எழுந்து, ஹரி ...ஹரி… என்று ஒருவரில் ஆரம்பித்து இருவர் சேர்ந்து எல்லோரும் இணைந்து ஒரே ப்ரவாஹமாய் ஒலிக்க, கிருஷ்ண விரஹத்தினால் பிளவு பட்ட மனத்தத்துக்கு, ஒரு நீர்ப் பாய்ச்சியது போல் பதமாகி, மறுநீர்ப் பாய்ச்சி குளிர்ந்து போல உணர்ந்தோம். நீயும் அவ்விதத்தில் மகிழ்வாய் என்று ஒருத்தி விளங்குகிறாள்.