வெள்ளி, 20 டிசம்பர், 2019

உயர் பாவை - 6 - சதாரா மாலதி

நல்லது தீயது என்பதே அவனவன் மனப் பக்குவத்துக்கேற்றபடி மாறும். எல்லாருக்கும் மிக விரும்பத்தக்கது ஒரு யோக்கியனுக்கு அறவே பிடிக்காமல் போகலாம். எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் ஒரு விஷயம் ஒரு நல்லவனை நாடி வந்து நன்மையே பயக்கலாம்.

முற்றும் துறந்து முழுப் பக்குவமடைந்த ஒருவனுக்கு நல்லதும் கெட்டதும் சமம்.

இரண்டாலும் துன்பம் தான் என்று அனுபவரீதியாக உணர்ந்திருப்பான் அவன்.

இதை விளக்க தேசிகன் வழி அன்பர்கள் ஒரு நல்ல கதை சொல்வார்கள். [வடகலை மரபு]

ஒரு மனிதனுக்கு அன்று பிறந்தநாள். கோவிலுக்குப் போக வேண்டுமென்று தீர்மானிக்கிறான். அவன் நிறைய புண்ணியம் [நல்வினை] பண்ணினவன். மிக நல்ல நிலையில் இருப்பவன் நம் கதாநாயகன். அன்று மிகப் பெரிய பேரங்களும் வியாபாரங்களும் கைகூடுகின்றன அவனுக்கு. இரவு கோயில் கடை சாத்தும் வரை அவனால் அவன் பணியை விட்டு வர முடியவில்லை. வெளிநாட்டு ஒப்பந்தங்களும் உள்நாட்டு அரசியல் பத்திரிகைத் தொடர்புகளும் அவனை நெருக்கி அவன் மனைவி வீட்டில் காத்திருக்க அவன் வெகுவாக ஆசைப்பட்ட தொழுகையை அவனால் செய்ய முடியாமல் போகிறது.

அப்படியே இன்னொரு மனிதன். இவனுக்கும் பிறந்த நாள். இவனும் கோயிலுக்குப் போக விரும்பினவன். இவனும் கோயிலுக்குப் போக முடியவில்லை. இவனைத் தடுத்தது ஆரவார வியாபாரமோ அட்டகாச தொடர்பினமோ அல்ல. ஏனெனில் இவன் தீவினை செய்தவன், இவனைத் தடுத்தது இவன் தரித்திரம். இவனை அலுவலகம் குறைந்த ஊதியத்தில் அவன் பலத்துக்கு அப்பால்பட்ட வேலைகளை அதிகப்படி நேரமிருந்து உழைக்கும்படி கட்டளையிட்டது. விட்டுப் போக முடியாதபடி அச்சுறுத்தியது.

மேற்படி கதையில் கோயில் ஒரு குறியீடு. மனிதன் விரும்பிய ஏதோ ஒன்று. லட்சியத்தை அடைய முடியாதபடி பாபம் தடையாயிருந்தால் என்ன? புண்ணியம் தடையாயிருந்தால் என்ன?

தடை தடை தானே?

ஆண்டாள் 5வது பாட்டில் கதையைப் பொருத்துவது எப்படி என்று பின்னால் பார்க்கலாம்.

இறையின் ஐந்து நிலைகளில் ஐந்தாவது நிலையாகிய கோயில் வாழ் உருவகம் [அர்ச்சை] இந்தப் பாட்டில் வரவேண்டும். அந்த வடிவம் அடுத்து பத்து பாட்டுகளில் சொல்லப் படப் போகிற 'உயிர்' பொருளோடு நன்கு ஒட்ட வேண்டும். Cut and Paste நன்கு வேலை செய்ய பாட்டின் இறுதி வரியில் வைக்கலாமா என்று பார்த்தாள் ஆண்டாள். Fevicol அழுந்தப் பற்றிக் கொள்ள ஆறாம் அடி முதல் வரியைத் தேர்ந்தெடுத்தாள். ஏனெனில் இறையையும் உயிரையும் இணைக்கிற ஒரே நிறுவனம் வழிபாட்டு ஸ்தலம் தானே! அதனால் தான் எல்லா முற்றுகைகளிலும் வழிபாட்டு ஸ்தலங்கள் எதிரிகளால் அழிக்கப் பட்டிருக்கின்றன. சுவடுகள் மறைக்கப் பட்டிருக்கிறன. நம்பிக்கைகள் பொய்த்தால் மானுடத்தின் வலு குறையும் என்பது பல நாளைய தந்திரம் தான்.

அத்தோடு ஆண்டாளின் தோழிகளுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்துவிட்டது. மழைக்கென்று நோற்பதாகப் பிரகடனம் செய்ததும் மழைத் தேவன் ஓடிவந்து கையோலை வாங்கிப் போன பின்பும் தீராத ஒரு கூர்மையான சந்தேகம். கேட்டார்கள்.

'இப்போ எங்கே போகிறோம்?

'கண்ணனை அடையப் போகிறோம்'

'அது என்ன அவ்வளவு சுலபமா?'

'பார்க்கலாமே!'

'ஆசையிருந்தா போதும், எதையும் அடையலாம். நம் மேலே ஆசை வெச்சு அவனே எல்லாம் பார்த்துப்பான், நமக்கு சும்மா ஒரு நல்ல நோன்புக்கான பாசாங்கு கூடப் போதும். எல்லாம் சரி. ஆனா ஒரு முக்கியமான விஷயமிருக்கே, நம்ம பூர்வாகம் உத்திராகம் என்கிற பாவ மூட்டை, அதை என்ன செய்யலாம்?'

சந்தேகம் நியாயமானது.

நம்முடைய பாபங்கள் நம்மைக் கிருஷ்ணானுபவத்துக்கு விட்டு விடுமா என்ன? துரத்தித் துரத்தி வந்து நம்மையும் பெருமாளையும் பிரித்துவிடாதா?

நாம் கிருஷ்ணனைச் சேரவென்று நோன்பு பிடித்தோம். அது வெற்றிகரமாக முடியும் என்று என்ன உத்தரவாதம்? மிகப் பெரிய தர்மிஷ்டனும் சக்கரவர்த்தியுமான தசரதன், மிகப் பெரிய
இருடியான வசிஷ்டர் நிச்சயிக்க, மிக நல்ல மனிதர்கள் கொண்ட அயோத்தி வாழ்த்த, கோடித்த பட்டாபிஷேகமே நின்று போனது. இத்தனைக்கும் முடிசூட இருந்தவன் பரம்பொருள். ஆண்டாள் சொன்னாள். தப்பு. 

இராமன் தன் பட்டாபிஷேகத்தை நிறுத்திக்கொண்டது சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் பட்டாபிஷேகம் நடத்தவென்று.அவன் ஒருத்தன் ராஜாவானால் மீதியெல்லாம் என்னாவது? ராமாவதாரத்தில் தன் முடிவிழாவை ஒத்திவைத்து பிறருக்கு முடியணிவித்தான். கிருஷ்ணாவதாரத்தில் தான் சபதம் மீறி அன்பர் சபதத்தை நிறைவேற்றினான். அர்ச்சுனன் அபிமன்யூவின் மரணத்தின் மீது ஆங்காரத்துடன் சபதமிட்டபடி சூர்ய அஸ்தமனத்துக்கு முன் ஜெயத்ரத வதம் முடிக்க ஏதுவாக 'ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்ற தன் சபதத்தை மீறி சக்கரத்தால் சூரியனை மறைத்து சூது செய்து கெட்ட பேர் வாங்கவில்லையா? அவனுக்குத் தன் காரியம் உத்தேசம் இல்லை. தன் அன்பர் காரியமும் அவரின் சங்கல்பமும் தான் முக்கியம். நாம் சங்கல்பித்துக் கொண்டாகிவிட்டது.

பயப்படாமல் வாருங்கள் மேற்கொண்டு ஆவதைப் பார்ப்போம். என்றாள். அதற்குப் பின் தான் இந்தப் பாப புண்ணிய விவகாரம் வந்தது.

திருப்பாவை வரிகளில்லாத சம்பாஷணைகளை எப்படி யூகிக்கிறீர்கள் என்று கேட்கலாம். 

திருப்பாவைச்செறிவைத் தொடர்ந்து வரும்போது பாவை சொல்பவரின் குரலில் ஏற்ற இறக்கமும் மொழியில் பளீர் வார்த்தைகளும் வந்துவிழும் நேர்த்தியும் இடைப்பட்ட சம்பாஷணைகளைக் கிரகிக்க வைக்கின்றன. தொலைபேசியில் பேசுபவரின் அருகே நிற்பவர் இவ்விடத்தைய பேச்சிலிருந்து அடுத்துமுனை கேள்வியை யூகிக்க முடிவதைப் போலத்தான்.

இருந்தாற்போலிருந்து 'போயபிழையும் புகுதருவான் நின்றனவும்' என்ற பிரச்னையை ஆண்டாள் முன் வைப்பானேன்?

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை 
தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை 
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது 
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து 
போய பிழையும் புகு தருவான் நின்றனவாம் 
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

மாயனை....

ஆச்சரியமான செயல்களை அநாயாசமாகச் செய்யக்கூடியவன். 'எத்திறம்! எத்திறம்!' என்று மலைக்க வைக்கும் அளவில் மாயன் என்ற பேரை வாங்குவதற்காகவே கிருஷ்ணாவதாரம் எடுத்தவன். தன்னைப் படு கீழே தாழ்த்திக் கொண்டு 'இந்தா, எடுத்துக் கொள், என் அழகை, என் குணத்தை, என் சாகஸத்தை, என்கீதையை, என் பணிவை, என் மானுடப் பிரேமையை' என்று அத்தனை மேன்மைகளையும் பரிமாறிவிட்ட நேர்த்தியான கிருஷ்ணாவதாரச் சிறப்பைச் சொல்ல வார்த்தைகளில்லை. மனித மட்டத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு அதற்குள் குறும்பும் தர்மஒழுக்கும் கொண்ட தெய்வீக மாயை விளையாட்டை நடத்திக் காட்டி மாயனானான் அவன். எனவே மாயனைச் செப்பு.

மன்னு வடமதுரை மைந்தனை....

நிலை பெற்ற பகவத் சம்பந்தம் பெற்ற ஊர் மதுராபுரி என்னும் வட மதுரை. முன்பு வாமனன் தவம் பண்ணின இடமும், பின் சத்துருக்கினன் படைவீடு அமைத்த இடமும் அதுவே. ஏதாவது அவதாரம் என்றால் அது மதுரையில் தான் என்று பகவான் தீர்மானித்துவிட்ட மாதிரி அவதாரத் தொடர்ச்சி நிலைபெற்ற ஊர் மதுரை. அந்த மதுரைக்கு மைந்தனாய்ப் பிறந்தான் கண்ணன். 'தந்தை காலிற் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்தவெந்தை' என்றபடி மிடுக்கோடு தாய் தந்தையர் விலங்கு தெறித்துவிழப் பிறந்த பையன் அவன். எனவே வடமதுரை மைந்தனைச்செப்பு.

தூய பெருநீர் யமுனைத் துறைவனை....

அதென்ன தூய்மை? நிரந்தரமாகக் கிருமிநாசினி ஏதாவது போட்டு வைத்திருந்தார்களா? எதைக் கலந்தாலும் ஒன்றும் ஆகாதாமா யமுனை? ஏதாவது தொழிற்சாலைக் கழிவைவிட்டால் கூட குடிதண்ணிர் ஆகக் கூடியதாமா யமுனைநீர்?

பரமபதத்தில் வ்ரஜை போல கிருஷ்ணாவதாரத்துக்கு யமுனா வாய்த்தாள். சீதாபிராட்டி இராவணன் தன்னைத் தூக்கிக்கொண்டு போன போது கோதாவரியிடம் கூப்பிட்டுக் கதறினாள். இராவண பயத்தால் கோதாவரி சும்மாயிருந்துவிட்டாள். யமுனையோ கம்சன் மாளிகையின் கொல்லைப் புறமாக ஓடிக் கொண்டும் கூட துளியும் பயமின்றி குழந்தை கிருஷ்ணன் மதுரையிலிருந்து கோகுலத்துக்கு வரும்போது முழங்காலளவு வற்றிக் கொடுத்தாள். தெய்வ காரியத்துக்கு உதவினாள். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களும் அக்கிரமத்திற்கு பயப்படாதவர்களும் தூயவர்கள். கிருஷ்ணனும் கோபிகைகளும் மாறி மாறிக் கொப்பளித்து யமுனை இன்னும் தூயதாயிற்று. முத்து படும்துறை மணி படும் துறை என்றெல்லாம் சொல்வோமே, நதிவேக வண்டல் மண்ணில் வந்து ஒதுக்கும் செல்வமாக, அப்படி யமுனைத் துறை 'பெண்கள் படுந்துறை' யாயிற்று. அங்கு கண்ணனும் ஒதுங்கி யமுனைத்துறைவன் என்ற பேர் பெற்றான். ஜமுனாதீரமும் ஷியாமனும் பிரிக்க முடியாதவர்களாயினர். தூயபெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு.

தாமோதரன்....

பகலில் விளக்கு பார்க்காகாது என்று அந்தகாரத்தில் விளக்குப் போட்டாற்போல ஆயர்குலத்தில் வந்து விளக்கானான். ['ஆயர்குலத்தினில் தோன்றும் அணி விளக்கை' என்ற வரியில் தோன்றும் என்ற சொல்லில் இருக்கும் கால மயக்கத்தைப்பாருங்கள். தோன்றிய என்றில்லாமல் தோன்றும் என்றிருப்பது. நான் முன்பே சொன்னபடி நிறைய Tense தவறுகளை வேண்டுமென்றே செய்திருப்பாள் ஆண்டாள்] இவனைப் பெற்ற தாய்க்கு என்ன புண்ணியம் செய்த வயிறோ என்று அனைவரும் வியந்து போகும்படி தாயை வெளிச்சம் செய்தான் தாமோதரன். பெற்ற தாய் என்றால் தேவகியா என்று குழம்பி விடாதபடிக்கு கட்டுப்பட்டுக் கயிற்றடையாளத்தை வயிற்றில் பெற்று அதைப் பெருமையாகப் பேரிலும் வடுவாக்கிக் கொண்ட வரலாற்றை 'தாமோதரன்' என்ற ஒரே வார்த்தையில் 
சொல்கிறாள் ஆண்டாள். உலகத்தையெல்லாம் காக்கவும், போரவும் நியமிக்கவும் [Protect, Maintain and Control] காரணனான ஒரு பரம்பொருளைத் தான் காக்கவும் போரவும் நியமிக்கவும் அதிகாரம் பெற்றாள் அந்த யசோதை. அவளிடம் கொட்டாங்கச்சித் தயிருக்கு குரங்காட்டம் ஆடினான் கண்ணன். அவள் கைக் கயிற்றுக்குக் கட்டுண்டு அதன் வடுவை வயிற்றில் சுமந்து [தாமம் - கயிறு, உதரம் - வயிறு] பெருமையோடு எல்லாருக்கும் காட்டிக் கொண்டான்.

['பணைகளிலே தாவினவாறே உடை நழுவ தழும்பைக்கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள். அத்தழும்பு தோன்றாமைக்கிறே நம்பெருமாள் கணையம் மேல்சாத்து சாத்துகிறது' என்றார் ஜீயர் - ஆறாயிரப்படி]

அவனுக்குக் கட்டுப் பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள அவன் அன்பர்கள் திருவிலச்சினை அணிகிறார்கள். நமக்குக் கட்டுப் பட்டவன் என்று காண்பிக்க அவன் வயிற்றுக் கயிற்றடையாளத்தையும் அதை ஒட்டின பேரையும் சுமந்து திரிகிறான். எனவே தாமோதரனைச்செப்பு.

இப்படி மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, யமுனைத்துறைவனை, தாமோதரனைச் செப்பி, தூய சரணாகதியோடு, முக்கரணங்களாலும் வழிபட்டு பிரேம பக்தி செய்தோமானால் நம் பூர்வாகங்களும் உத்தராகங்களும் தீயினிற் பட்ட பஞ்சு போல ஒன்றுமில்லாமல் போகும். இது சத்தியம். என்றாள் ஆண்டாள்.

'தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க' என்பது சுலபமானதல்ல. நாம் தூய்மை நம் பூ தூய்மை. எப்படி isi முத்திரை குத்திக் கொள்வது? புறத்தூய்மையல்ல. போர்க்களத்தில் துவண்டு புத்தி கேட்ட அர்ச்சுனனும் தீட்டோடு வஸ்திரம் பெற்ற திரெளபதியும் புறத்தூய்மை பற்றிக் கவலைகொள்ளவில்லை. நம் தூய்மை சரணாகதியில் இருக்கிறது. நாம் கொண்டு வரும் பூவின் தூய்மை பிரயோசனம் எதிர்பார்க்காத தன்னலமின்மையில் இருக்கிறது. வாய் பாட மனசு ஸ்மரிக்க கை பூப் போட.. முக்கரணம் திசை மாறாமல் பிரேமையில் முழுக வேண்டும்.

கருமமடிப் பிறப்பு இறப்பை விதித்த சாஸ்திரங்கள் இப்படி ஒரு விதியை எங்கும் சொல்லவில்லையே! கிருஷ்ண பக்தி எப்படி கருமவினையைத்தொலைக்கும்? ஆண்டாள் சொன்னால் சொன்னது தான். அறிஞர்களெல்லாம் முடிவாகச் சொல்லிவிட்டார்கள் .'தகிப்பது நெருப்பின் குணம். அணைப்பது நீரின் இயல்பு. பாபம் தகிக்க தகிக்க பகவத் கடாட்சம் அணைத்தபடியிருக்கும். ஒன்று இறுதியில் ஜெயித்து தானே ஆக வேண்டும்? இறுதியில் தூசாவது பாபவினையாயிருக்கும்.'

இப்போது இன்னொரு பெரிய கேள்வி. போய பிழையும் புகு தருவான் நின்றனவும் என்பதற்கு Specific Meaning என்ன? போயபிழை என்ற வார்த்தை தெளிவாயிருக்கிறது. குழப்பமேயில்லை. அது - பூர்வாகம் அதாவது பிராரப்த கருமா என்ற பெயரில் பல ஜன்மங்களாகத்தொடரும் பாவமூட்டை அல்லது பகவானைச் சரணடையும் முன் நாம் அறியாமல் செய்தபிழை என்று பொருள்படுகிறது. இப்போது புகுதருவான் நின்றன என்றால் என்ன? சரணாகதி ஆனபின்னும் பழக்கதோஷத்தால் செய்துகொண்டே யிருப்பவையா? பாவமன்னிப்பு கேட்டுக் கேட்டு மீண்டும் மீண்டும் பாவம் செய்வதா?
புரியவில்லையே! உத்தராகம் எனப்படும் இந்தப் பிறப்பின் அல்ப சொல்ப மூட்டையா புகுதருவான் நின்றன?

எதுவுமில்லை. போயபிழை என்று சொன்னோமே அது மட்டும் தான் பாபம். தெரியாமல் செய்தவை. சரணாகதியானபின் பாவம் செய்யமுடியவே முடியாது அப்புறம் புகு தருவான் நின்றன யாவை? உங்களை சொர்க்கம் சேர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு கோதாவில் இறங்கி உங்களைப் பாடாய்ப் படுத்தப்போகும் புண்ணியபலன். நல்வினைப் பயன். கட்டுரை ஆரம்பத்தில் இருக்கும் கதையைப் பாருங்கள். அதில் புண்ணியவானான ஒருவன் பிறந்தநாளன்று கோயிலுக்குப் போக முடியாமல் தடுத்தது அவனுடைய புண்ணியம். கண்ணன் பேரைச் செப்பி அவனை ஆத்ம சுத்தியோடு வழிபட்டால் பாப புண்ய பலன்களை மீறி அவனே வசமாவாவான். இது தான் ஆண்டாள் கருத்து.
உன்னதமான ஐந்தாவது திருப்பாவை முடிந்தது.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை டிசம்பர் 2004

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக