மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகு தருவான் நின்றனவாம்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
இந்தப் பதிகத்தின் நோக்கம், நோன்பிருக்கும் ஒரு ஆயர் சிறுமிக்கு சிறு குழப்பம் வந்ததாம் . 'நாம் இப்படியே கனக்கப் பாரித்து கொண்டு இழியா நின்றோம். நமக்குத்தான் இது தகை கட்டுகைக்கு விஸ்வாச மென்' - இதன் பொருள் 'நாம் இப்படியே கடுமையாய், நோன்பிருந்து கொண்டிருக்கிறோம். நாம் விரும்பும் பயன்கள் நிறைவேறிடும் என்பதற்கு என்ன நிச்சயம்'.
சற்றே விவேகமான இன்னொருத்தி 'நாம் தொடர்ந்து செய்யும் நோன்பினால் எந்த இழிவும் ஏற்படாது. நம் நோன்பினை இடையில் நிறுத்தினோம் என்னில், நோன்பினை போகித்துக் கொண்டிருக்கும் நம் ப்ரியமான சர்வேஸ்வரனுக்குச் சிந்தை குழம்பிடாதோ. பலன் கிடைக்குமா இல்லையா என்ற குழப்பத்தினை ஒதுக்கித் தொடர்ந்து நோன்பிருப்போம்' என்று தெளிவிக்கிறாள்.
நோன்பின் பலன் பற்றி ஐயம் கொண்டவளுக்கு, முன் பிறவிகளிலும், இப்பிறவியிலும் தொடர்ந்து செய்யும் பிழைகளும் அதனால் உண்டான பழிகளும், நம் நோன்பினை தோற்கடித்திடாதோ என்பதாம்.
வியாக்கியானம் சொல்கிறது. போரினைத் தொடர்ந்து செய்தல் தேவை தானோ என்று குழம்பிய அருச்சுணனுக்கு, அருள் செய்து கண்ணன் எப்படி வெற்றி தருவித்தானோ, ராமனுடைய ப்ரஹ்மாண்டமாய் ஏற்பாடான முடி சூடலுக்குத், தடை/விக்னம் வந்த போதிலும், சுக்ரீவனுக்கும் விபீஷணாழ்வானுக்கும் முடி சூட்டல் செய்வித்தவனைப் போலே, பரமார்த்தியான எம்பெருமான், நாம் மனமுருகி வேண்டி நிற்க, நம்முடைய சங்கல்பங்களையும், இடையில் எத்தனைத் தடை வந்தாலும், அவற்றை எல்லாம் தூசி போலச் செய்து, நடத்திக் காட்டுவான் என்பதாம்.
'மாயனை' - கிருஷ்ணன் குழந்தையாய் தோன்றிய போதில் நான்கு கரத்தினனாய், சங்கு சக்கரங்களைத் தாங்கிக் கொண்டு பிறந்தானாம். சர்வேஸ்வரனே தனக்கு மகனாகப் பிறந்திருக்கின்றான் என்றறிந்த வசுதேவர், கம்ஸன் மேல் கொண்ட பயத்தினால் வேண்டிட, அவைகளை மறைத்து, சராசரிக் குழந்தை போலக் காட்சி கொடுத்தானாம்.
சர்வேஸ்வரன், சாதாரண இடைச் சிறுவனாய்த் தோன்றி, கோபியரையும் பசுக்களையும் தன்னை அணைக்கச் செய்வித்தவனாய் 'சதா பஸ்யந்தி' என்னும் வகையில், தன்னுடைய பராக்கிரமங்களை அடக்கிக் கொண்டு, யசோதை தாம்புக் கயிற்றினால் கட்டியதற்காக, வெகுளிச் சிறுவனாய் விம்மி அழுததனால், மாயவன் என விளிக்கப் பெறுகிறான்.
'மன்னு வட மதுரை' - சிறப்பான வட மதுரை - தேவ சம்பந்தம் கொண்ட அற்புத ஸ்தலம். சித்தாஸ்ரமமாய் வாமனன் நெடு நாள் தவமிருந்த, சத்ருக்னன், தனக்குப் படை வீடாக அமைத்து அரசாண்ட, தேவ சம்பந்தம் தொடர்ந்து கொண்டிருக்கிற நகரம்.
சதைக ரூபனாய் (ஏக ரூபனாய்) வாமனனும், ப்ரவாஹ ரூபனாய் (எல்லொருடனும் சஹஜமாகப் பழகிய) கிருஷ்ணனும் ஆண்ட புண்ய க்ஷேத்ரம்.
'மதுரா நாம கரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதோ ஜகந்நாதாஸ் விஷ்ணு ஸநாதந:' - மதுரை என்ற பெயரைச் சொன்னாலே, புண்யங்கள் கூடிடும், பாபங்கள் விலகும், சுபம் நடைபெறும், ஜகன்னாதனான விஷ்ணு ஏற்படுத்திய சனாதன தர்மங்கள் தழைத்தோங்கும் அற்புத தேசம்.
'மைந்தனை' - மிடுக்கனை, பிள்ளையை, இளமை மிக்க யுவனை, ராஜனை என்ற நான்கு வகை குறிப்புக்கள்.
மிடுக்கனை - 'தந்தை காலில் பெருவிலங்கு தாள விழ நள்ளிரவில் வந்த வெந்தை' - சிறையில் இருந்த வசு தேவரின் காலில் கம்சன் பிணைத்திருந்த விலங்கினைக் கீழே விழச் செய்த, நள்ளிரவில் வந்த எந்தை.
அருளிச் செயலின் அற்புதம், தந்தை மகனுக்குத் தேவையானதைச் செய்தது போக, மகன் தந்தையின் கால் விலங்கினை அகற்றியதால் எந்தை என்றழைக்கப் பெறுகிறான்.
வட மதுரை தந்த மகன் (பிள்ளையை), மதுரையை ஆண்ட அரசனை (ராஜனை) என்றும் குறிப்புண்டு.
'தூய பெருநீர் யமுனை' - கண்ணனை பிறப்பு முதல் ஸ்பர்சித்ததால் தூய்மையான மகாநதி. பரம பதத்தின் 'விராஜ' நதியைப் போன்ற வடமதுரையை - கோகுலத்தை இணைத்த மா நதி.
"யமுனா அஞ்சரதி கம்பீராம் நானா வர்த்தா சக்க்ஷா குலாம் வசு தேவோ வஹன்
கிருஷ்ணம் ஜானுமாத்ரோத கோயயௌ". - சீதா பிராட்டி சரணம் புகவும் இராவணனுக்கு பயந்த கோதாவரியைப் போல அல்லாமல், வசுதேவரின் மடியில் தவழும் கண்ணன், கோகுலம் நோக்கித் தப்பித்துச் செல்லும் வகையில், கம்சன் மாளிகை நிழலின் கீழே இருந்தும், எளிதாய் கடக்கும் வண்ணம், முழங்கால் அளவுக்கு வற்றிப்போன புனித நதி. கிருஷ்ண கோபாஸ்திரீகள் நீராடி, விளையாடி வாய்க் கொப்பளித்து இன்னும் புனிதமாய் மாறியதாம்.
'ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை' - பரம பதத்தை விடவும் கோகுலத்தில் நற் குணங்கள் அதிக அளவில் ப்ரகாசித்ததாம். கிழக்குத் திசைக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தம், கிருஷ்ணனுக்கும் தேவகிக்கும் உள்ளது என்ற குறிப்பு. இருட்டில் பிரகாசிக்கும் விளக்கைப் போன்றே நலிந்தோர்களிடையே தோன்றி ஒளிரும் கண்ணன். ஆயர் குலத்துக்கே ஒளி காட்டும் வள்ளல் ஆயர் குலத்தினில் 'தோன்றும்' என்பது வினைத்தொகை. இறந்த, நிகழ், எதிர் காலங்களில் தொடர்ந்து நிகழும் செயல் வினைத்தொகை ஆகும். எல்லாக் காலங்களிலும் ஆயர் குலத்திலே தோன்றுவதையே விரும்பிடும் கண்ணன் என்ற பொருள்.
'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை' - யசோதை தாம்புக் கயிற்றால் கட்டித் தழும்பான வயிற்றை உலகமெல்லாம் 'மணி வயிறு வாய்த்தனையோ', 'என்ன தவம் செய்தனை யசோதா', என்ற வகையில், புகழச் செய்தவன்.
தாவி விளையாடிய கண்ணனின் வயிற்றுத் தழும்பைப் பார்த்து ஆய்ச்சியர்கள் சிரித்தார்களாம். அதனால் தான் கண்ணனின் திரு விக்ரஹ அலங்காரத்திலே, அவன் வயிற்றுக்கும் வஸ்திரமும், கந்தமும் சாற்றப் படுகிறது.
'தூயோமாய் வந்து நாம்' - இருக்கும் வண்ணத்தில் அப்படியே வந்து நோன்பில் பங்கு கொள்வதினாலேயே உடலுக்கும் மனத்துக்கும் தூய்மை ஏற்படுகிறது. ப்ரபத்திக்கு ஸ்நானம் முதலியன அவசியம் இல்லை. வள்ளுவன் சொல்லுவான், 'புறத்தூய்மை நீரால் அமையும், அகத் தூய்மை வாய்மையால் காணப்படும்'. வாய்மை அல்லது உண்மை என்பது, மனத்தில் கள்ளம் கலவாது இருத்தல்.
வெகுளியான ஆய்ச்சிச் சிறுமிகள் தலையைக் கழுவி, உடலைக் கழுவ மறந்து, உடலைக் கழுவி தலையை கழுவ மறந்தாலும், கண்ணனோடு பர்யந்த சம்பந்தத்தால் தூயவர் ஆயினார்.
'தூமலர் தூவித் ' - கண்ணனுக்கென்று சாற்றப்படும் எல்லா மலருமே தூய்மானவை தாம். யோக்யமென்றும் அயோக்கியமென்றும் பாராமல் கண்ணுக்குத் தேற்றின மலரென்றுமாம் - 'யதா ததா வாபி', என்னும் சித்தாந்தப் படி.
'தொழுது' - இரு கைக் கூப்பி, தத்தம் பெற்றோர்கள், கண்ணனை அடைவதை தவறென்று எண்ணாத வகையில் தொழுது. கை கூப்பித் தொழுதல் எவருக்குமே இயன்ற வழிபாட்டு முறை.
'வாயினால் பாடி' - வாய் பெற்ற பலனையே அடைந்தோம், என்னும் வகையில் அவன் திரு நாமம் பாடி. திரு நாமம் பாடிட அறிவின் / மனதின் துணைக்குப் பெரிதும் தேவையில்லை.
'மனத்தினால் சிந்தித்து' - அவனுடைய திவ்ய சொரூபத்தையும், பராக்கிரமங்களையும் எண்ணத்தால் கொண்டு மகிழ்ந்து,
'போய பிழையும் புகு தருவா நின்றனவும்' - ஞானம் பிறப்பதற்கு முன் பூர்வத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளும், பகவானுடன் மனத்தால் ஏற்பட்ட சம்பந்தத்திற்குப் பின்னரும், பழக்க தோஷத்தால் நித வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற பிழைகளும்.,
'தீயினில் தூசாகும்' - பாலும் கற்கண்டும் கலந்துப் பருகினால் பித்தம் மறைவதை போலே, நாம் செய்த பாவங்களும், பிழைகளும், பகவதானுபவம் ஏற்பட்ட பின்னர், மீதமே இல்லாமல் முழுதும் எரிந்து போகும்.