திருமால் ஆசையோடு குடிகொண்ட இடம் திருப்பதி. அங்கிருக்கும் புஷ்கரிணியில் ஒரு சமயம் மகாவித்வான் ஒருவர் ஸ்நானம் செய்துகொண்டிருந்தார். அவர் மகா பண்டிதர். நிறையப் படித்தவர். வேதங்களையும், சாஸ்த்ரங்களையும் கரைத்துக் குடித்தவர். பகவானின் திருநாமங்களைச் சொல்லியவாறே திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார்.
அருகில் ஒரு பாகவதர். அதிகம் படித்திராதவர். வெகு தூரம் நடந்து, திருமலையப்பனை சேவிக்க வந்திருப்பவர் போல இருந்தது. அவரும் மகாவித்துவானைப் போல திருக்குளத்தில் அமிழ்ந்து நீராடிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை நீரில் அமிழ்ந்து எழும்போதும், ‘கோயிந்தா... கோயிந்தா’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். மகாவித்துவானுக்கோ, பாகவதர் சொல்லும் 'கோயிந்தா' என்ற சொல் பிடிக்கவில்லை. 'கோவிந்தன் என்பது எவ்வளவு அழகான பெயர்! அதைக்கூட சரியாக உச்சரிக்க வரவில்லை இவருக்கு! பெருமாளை சேவிக்க வந்து விட்டார்!' என்று மனதுக்குள் கோபம் கொண்டார். ஆனால், பெருமாளை சேவிக்க வந்த இடத்தில் எதற்கு வீண்வம்பு என்று நினைத்தார்.
நீராடி கரையேறினார் மகாவித்துவான். கரைக்கு வந்தும் பாகவதரின் 'கோயிந்தா' கேட்டுக்கொண்டே இருந்தது. மகாவித்துவான் உடை மாற்றிக் கொண்டு படியில் அமர்ந்தார். அவர் உள்ளத்தில், 'எப்படியாவது இவருக்கு 'கோவிந்தா' என்று சரியான உச்சரிப்பைச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்று தோன்றியது.
நீராடி முடித்த பாகவதர் கரையேறினார். வேறு உடை தரித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டார். ஒவ்வொரு வேலைக்கு இடையிலும் ‘கோயிந்தா... கோயிந்தா’ என்றார். மகாவித்துவானுக்குப் பொறுக்க முடியவில்லை . “இந்தாப்பா...!” என்று பாகவதரைக் கூப்பிட எத்தனித்தவர், அவர் ஏதோ பெருமாளுடன் பேசுவதைக் கண்டு நிறுத்தினார்.
பாகவதர் கோயிலின் கோபுரத்தைப் பார்த்து நின்று கொண்டு கைகூப்பியவாறே, "கோயிந்தா, ஒண்ணுமே இல்லாம இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக ஆக்கியது நீதான் கோயிந்தா! கையிலே ஒரு தம்படி இல்லாம வியாபாரம் ஆரம்பிச்ச என்னை இன்னிக்கு ஒரு லட்சாதிபதியா ஆக்கியிருக்கிறாய் கோயிந்தா. நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், செல்வம் என்று எனக்கு ஒரு குறையும் நீ வைக்கவில்லை கோயிந்தா!
இந்த கோயிந்தா என்கிற பெயரைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது கோயிந்தா! அழுகை வந்தாலும் கோயிந்தா, சந்தோஷம் வந்தாலும் கோயிந்தா! என்னைக்கு இருந்தாலும், நான் உன் பக்தனாகவே இருக்க வேண்டும் கோயிந்தா. எத்தனை ஜன்மம் எடுத்தாலும் உன்னை மறக்காத மனம் கொடு கோயிந்தா'' என்று மனமுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
பாகவதரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மகா வித்துவானை உலுக்கி விட்டன. 'குறை ஒன்றுமில்லாத கோவிந்தா! உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாமாட் செய்வோம்!' என்ற ஆண்டாளின் திருவாக்கை எத்தனை எளிமையாகச் சொல்லி விட்டார் இந்த பாகவதர்! நாம் தினம் தினம் சொல்லும் ஆயிரம் நாமாக்களை விட, இந்த ஒரு கோயிந்தா போதுமே! இதைக்கேட்டு பெருமாள் உள்ளம் குளிரவேதானே இவருக்கு இத்தனை கருணை செய்திருக்கிறார்! இது புரியாமல் அவரைத் திருத்த நினைத்தேனே! திருந்த வேண்டியது நானல்லவோ?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு "கோயிந்தா... கோயிந்தா!" என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
நன்றி - தீபம் ஆகஸ்ட் 2016
அருமை ஸ்வாமி
பதிலளிநீக்கு