வெள்ளி, 20 டிசம்பர், 2019

உயர் பாவை - 5 - சதாரா மாலதி

ஆழிமழைக்கண்ணா

'ஆழிமழைக்கண்ணா' பாசுரத்தில் படைப்பாளியின் அறியாப்பருவம் இயற்கையாக யதார்த்தமாக வெளிப்படும்.


சிறுமிகள் என்று தன்னையும் தன் தோழிகளையும் பல இடத்தில் அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்டாள் சிறுமியர் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தை இதில் செய்யக் காண்கிறோம்.


'ஓ! மழைக்காரா!' என்பது போல 'ஆழி மழைக்கு அண்ணா!' என்று மழை தரும் தேவனை அழைக்கிறாள். மாம்பழமோ கொய்யாப்பழமோ விற்பவனை 'மாம்பழம்' 'கொய்யா' என்று குழந்தைகள் அழைப்பது போல 'மழைக்காரா!' என்று அறியாமையும் மரியாதையுமாய் அழைக்கிறாள்.


மழை கொண்டு வருபவரின் பேர் அவளுக்குத் தெரியாது. மழைக்கு அதிபன் யமனோ வருணனோ அஷ்ட வசுவோ யார் கண்டது? இல்லாதவனைத் தேடி அழைப்பதற்கும் கண்முன் வந்து வணங்கி நிற்பவனை அவன் தொழிலையிட்டு மரியாதையுடன் அழைப்பதற்கும் எத்தனையோ வித்யாசமிருக்கிறது. மழை தேவன் இவர்கள் கண்முன் வந்துவிட்டான் என்று இவள் குரலின் தோரணையிலிருந்து தெரிய வருகிறது.


கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் பல திருப்பாவையில் சொல்லப்பட்டிருப்பினும் ஒரு இடத்திலாவது கிருஷ்ணன் என்றோ கண்ணன் என்றோ பெயரைக்குறிப்பிடவேயில்லை ஆண்டாள்.


பாமரர்கள் ஆழிமழைக்கண்ணா என்ற விளியில் கண்ணன் இருப்பதாக நினைக்கக் கூடும் ஆனால் ஆழிமழைக்கு அதிபதியை அப்படி அழைத்திருக்கிறாள் என்பது நுணுகிப் பார்த்தால் தான் தெரிய வரும்.


மாதவன், கேசவன், தாமோதரன், பத்மனாபன், நாராயணன், கோவிந்தன், நெடுமால், உம்பர்கோமான், என்று பல பேர்களைப் போடுவாள். பிரசித்தமான அவதாரப் பெயரான கண்ணன் கிடையாது. [நாச்சியார் திருமொழியில் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம்' என்று சொல்லியிருப்பதை நினைவு கூர்க] கோபர்களுக்குத் தங்கள் ரகசியத்தை மறைக்க அப்படிச் செய்திருக்கலாம். இருந்தும் தாங்க முடியாத உற்சாகத்தில் கண்ணன் என்ற பெயர் உச்சரிக்கப் படும்படி ஆழிமழைக்கு அதிபதியை ஆழிமழைக்கண்ணா என்று அழைத்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.


பர்ஜன்ய தேவதைக்கு எப்படி மழை கொண்டு வரவேண்டும் என்று சொல்லித்தர ஒரு கைக்குறிப்பு தயாராக இருக்கிறது ஆண்டாளிடம். அந்தக்குறிப்பை விரிவு படுத்தும் சாக்கிலேயே இறையின் அடுத்த நிலையான 'அந்தர்யாமி' தத்துவத்தைக் கோடிட்டுக்காட்டும் சாதுரியமும் இருக்கிறது. கவிதை இவளிடம் கை கட்டி நிற்கிறது. எப்படி வேண்டுமானாலும் வளைகிறது. கருத்தில் கருவழகில். அடுக்கு அடுக்காக வெவ்வேறான உருவகங்களைப் பொதித்துக் கொடுப்பதில்.


'பாரோர் புகழ' வும் 'திங்கள் மும்மாரி' பெய்யவும் வருணனின் ஒத்துழைப்பு தேவை. வைஷ்ணவ தர்மத்திலோ இன்னொரு தேவதையை நாடும் வழக்கம் கிடையாது. இந்தப் பெண்களோ 'ஸர்வ லாபாய கேஸவ: என்று இருப்பவர்கள்.


இன்னொரு பலனைத் தங்களுக்காக யாசிக்காதவர்கள். அது தெரிந்து தான் நாட்டாருக்காக மழை வேண்டி பாவை நோன்பு செய்யக் கிளம்பிய மாத்திரத்தில் ஆண்டாள் முன் வருணன் ஓடிவந்து 'நான் என் கை வேலையைத் தொடங்கலாமா? ஏதாவது உங்களுக்குக் குறிப்பாக வேண்டும் வேண்டாதது உண்டா? அம்மணி!' என்று கைகட்டி முன்னே நின்று உத்தரவுக்குக் காத்திருந்தான்.


ஆழி என்றால் சமுத்திரம். அதன் கம்பீரமும் நீள அகலமும் தொனிக்கும்படி அதை ஆழி என்பதுண்டு. கீழிருக்கும் சமுத்திரத்தை மேலே இழுத்துவந்துப் பொழிவிக்கும் மழைக்காரனை ஆழிமழைக்கண்ணா என்று தானே சொல்லவேண்டும்?


பின்னும் சுழித்து சுழித்துப் பெய்யும் சுழிமழையை, மண்டலவர்ஷத்தை, பருவமழையை ஆழி எனலாம்.

அதாவது அந்த அழைப்பில் அவனுடைய பிரும்மாண்டமும் மகத்துவமும் ஒருங்கே வரும்படி ஆழிமழைக்கண்ணா என்றாள்.


துப்பார்க்குத் துப்பாய துப்பாகித்துப்பார்க்கு 
துப்பாய தூஉம் மழை


என்றபடி அவனின்றி அமையாதல்லவா உலகு? மழைக்காரனின் செயல் எப்பேர்ப்பட்டது? வானத்துக்கும் பூமிக்குமாக நீர்க்கோடல்லவா போடுகிறான்? பிரம்மாண்டமல்லவா அவன் செயல்?


ஒன்று நீ கைகரவேல் - உன்னுடைய கொடையில் ஒரு சிறு பகுதியையும் நீ ஒளித்துக் கொள்ளாதே! உனக்கு விதிக்கப் பட்ட தொழில் அபூர்வமானது. படைத்தல் துடைத்தல் போன்ற தொந்தரவான மனசுக்கு இம்சை தருகிற வேலைகளை அரி அரனுக்குத் தள்ளிவிட்டுக் காக்கும் தொழிலைத்தான் தக்க வைத்துக் கொண்ட திருமாலைப் போல நீயும். பிடி, அடி என்று வேலை பார்க்கும் யமன் முதலிய தேவதைகளைப் போல் அல்லவே நீ! எல்லா ஜீவராசிகளையும் ஈரக்கையால்
தடவிக் கொடுக்கும் அற்புதமான தொழிலைப் பார்ப்பவன் நீ. உன் தொழிலில் உள்ள இயல்பான ஒளதார்யத்தை இரக்கத்தை கொடையை நீ குறைத்துக் கொள்ள வேண்டாம்.


'இராமடம் ஊட்டுவார் போல' பெரிய இரக்கம் உண்டே மழைக்கு என்று விளக்கம் சொன்னார்கள் பூர்வாசிரியர்கள். அதாவது வீட்டைவிட்டு ஓடிப்போன பிள்ளைகள் அந்தக் காலத்தில் ஊர்க்கோடியில் சத்திரத்தில் போய் படுத்துறங்குமாம். அது தெரிந்து பெற்றோர்கள் உணவை எடுத்துக் கொண்டு போய் முகத்தை மறைத்துக் கொண்டு முக்காடிட்டு குரலை மாற்றிக்கொண்டு கைவிளக்குடன் சத்திரத்து இருட்டில் நின்று கூவுவார்கள் 'யாரிங்கே பட்டினி? சோறு வேண்டுமா? சோறு?' என்று. பிள்ளைகள் யாரோ போடும் சோறு என்று சாப்பிட்டுக் கொள்ளுமாம். 


அப்படி முகம் தெரியாமல் வந்து ஊட்டுகிற வள்ளலே! ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல். உன் வள்ளண்மையைக் குறைத்துக் கொள்ளாதே! 


உனக்கு விதியெல்லாம் உண்டு என்கிறார்கள் 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்கிறார்கள். அதாவது பாப புண்ணியம் பார்த்து நீ பொழிவாய் என்கிறார்கள். அதெல்லாம் மனசில் வைக்காதே. [பாபிகள் என்று உலகத்தில் யாருமே கிடையாது என்று சொல்லி ராட்சசிகளுக்கு வக்காலத்து வாங்கிய சீதாப் பிராட்டியின் வழி இவர்களது போலும்].


ஆழியுள் புக்கு முகந்து கொடு - நீ நேராகப் போய் கண்ட கண்ட பள்ளத் திரவத்திலெல்லாம் நுழையாமல் [சகரகுமாரர்கள் சாகரம் என்ற பெயரில் ஒரு குழி தோண்டினார்கள் தங்கள் முன்னோரைக் கரையேற்ற. அதெல்லாம் கூட வேண்டாம்] கரை வாய் எதுவுமே தென்படாது மஹா சமுத்திரமிருக்கும், அதன் நடுவுக்குள் முங்கி அதைத் தரை தட்டும்படி உறுஞ்சி நீரை முகந்து வா.


ஆர்த்தேறி - மழைவருது மழைவருது என்று கனத்துச் சொல்லி வா 'கண்டேன் சீதையை' என்று ஆர்த்துக் கொண்டுவந்த அநுமான் போல 'வந்தேன் மழையுடன்' என்று குதித்துப் பாடிக் கொண்டே வா.


ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாளமின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே 
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
கேணி நீர்ப்படு செறித்தவளை கூப்பிடுகுதே


என்று மழை அடையாளங்களால் எல்லாரும் மகிழும்படி சத்தமிட்டுக் கொண்டு மேகமாக ஏறு.


ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து - நீர் கொண்டு தருபவன் நீ என்பதால் நீயே ஊழிமுதல்வன், காலத்தின் தலைவன், பகவான் போல எங்களுக்குக் காட்சி தரவேண்டும். உருவத்தில் நீ கண்ணனின் கருமையைக் கொண்டு மேகமாக ஏறி வரவேண்டும்.


கடலினுட் புகுந்து நீரை முற்றும் முகந்துகொண்டு பெருமுழக்கம் செய்து வானத்தின் மீதேறி எம்பெருமானது திருமேனி போலக் கருமை பூண்டு அவனது வலங்கை யாழிபோல மின்னி இடங்கைச்சங்கம்போல அதிர்ந்து ஸ்ரீசார்ங்கம் சரமழை பொழியுமாறு போல நாடெங்கும் நீரைச்சொரிந்து எமது மார்கழி நீராட்டத்தை நல்லபடி முடித்துத் தரவேண்டுமென்று வருணனுக்குக் கையோலை கொடுப்பது இந்த பாசுரம்.


விரிவான அழகான தோள் மீது சக்கரம் வைத்திருக்கிறான் எம்பெருமான், அல்ல அல்ல பத்மநாபன். சக்கரம் மின்னியது ஒரு சமயத்தில் தான் மிக அதீதமாக இருந்தது. Bossக்கு ஒரு சந்தோஷம் என்றால் சுற்று வட்டம் மிகவும் ஆரவாரிக்கும் அல்லவா? அதுவும் கூடவே இருக்கும் மெய்க்காப்பாளன் முதலாளிக்குப் பிள்ளை பிறந்தால் எப்படித் துள்ளுவான்? பெருமாள் உலகத்தைப் படைக்க ஏதுவாக நாபிக் கமலத்தில் பிரும்மாவைப் பெற்றான். அப்போது சக்கரத்தாழ்வான் பூரித்து மின்னினான். அந்த flash ஐ ஞாபகம் வைத்து 'பாழியந்தோளுடைப் பத்மநாபன்' கையில் ஆழி போல் மின்னி என்றாள் ஆண்டாள். 'பத்மனாபன்' என்ற பெயரைப் போட்டுச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டாள். 


ஆண்டாள் ஒரு பெயரைக் காரணமின்றி ஒரு இடத்தில் பிரயோகிக்கமாட்டாள். [அங்கங்கே தாமோதரன், மால், கோவிந்தன், கேசவன், மாதவன் என்று கூறும் இடங்களும் அப்படியே] 
வலம்புரி அதிர்ந்தாற்போல மங்களகரமான மழைச்சத்தமாக இடிமுழக்கம் வர வேண்டும். சார்ங்கம் என்கிற வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைப்போல சரம் சரமாக மழைப்பாலம் பூமியையும் வானத்தையும் இணைத்து எங்கும் நிறைந்த அந்தர்யாமியான கடவுளை நிறுவ வேண்டும் என்று பாசுரத்தை முடிக்கிறாள். பெய்யும் மழை உலகத்தை அழியவிடாத வகையில் பெய்தருள வேண்டும் என்பதைத் தெளிவாக்க 'வாழ உலகினில் பெய்திடாய்' என்று இன்னொரு முறை தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய வேண்டியதை ஞாபகப் படுத்துகிறாள். அப்படியே செய்வதாக வாக்களித்து மழைத்தேவன் அகல்கிறான்.


காரியங்கள் எல்லாம் பிரமாணமாக கண் முன் இருக்கும்போது காரணம் சூட்சுமமாக இருந்தே ஆக வேண்டும். Menu Driven Programme போல நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும்போது சூத்ரதாரியாக ஒருவனைக் கற்பித்துக் கொள்கிறோம். உயிர்ப்பு என்கிற பண்டத்துக்கு நெருக்கமான ஒன்றைக்கூட இது வரை விஞ்ஞானம் படைத்து விடாத காரணத்தால் மெய்ஞானம் இன்னமும் அந்தர்யாமியை நம்புகிறது. பீஜம் எப்படி செடியாகிறது கரு எப்படி உயிராகிறது என்பதில் அந்தர்யாமிக்குப் பங்கிருப்பதாக இந்து மதம் நம்புகிறது. இல்லாவிட்டால் கடும்கோடையில் பெரிய Watermelon சூழலுக்கு ஒவ்வாத வகையில் தனிக் குளிர்ச்சியுடன் இனிப்புடன் எப்படி முளைக்கும்? அதன் உள்புற இளஞ்சிவப்பு காப்பவனின் கருணையைத் தெரிவிக்கிறது அல்லவா? பூவில் சிரிப்பவனும் பழத்தில் இனிப்பவனும் அவனே அல்லவா? அந்தர்யாமி, அந்தர்யாமி. Hardware தெரிகிறது. Software இயக்குகிறது.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை டிசம்பர் 2004

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக