வெள்ளி, 20 டிசம்பர், 2019

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 6 - கண்ணன் ரங்காச்சாரி

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் 
ஆழியில் புக்கு, முகந்து, கொடு, ஆர்த்து ஏறி 
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து 
பாழி அம் தோளுடை பத்ம நாபன் கையில் 
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் 
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


மழையுடைய சிறப்பை, மாலனுடைய சிறப்பாய் விளக்கும் உன்னதப் பதிகம்.


'ஆழி மழைக் கண்ணா': மழைக்குக் கடல் (ஆழி) தான் தாய். கடலில்லையேல் மேகமோ, மழையோ இல்லை. நிலத்துக்கு ஆதாரமே கடல் தான். உலகம் முழுதுமே கடல் சூழ்ந்திருப்பது தான் பிரளயம். ஆதியும் அந்தமும் ஆனது பிரளயம்.


நிலம், கடலில் ஒரு சிறு திரட்டு தான். மழையில்லையேல் வளம் இல்லை. வளம் இல்லையேல் வாழ்வே இல்லை. 'ஆழி சூழ் உலகமெல்லாம் பாரதனே ஆள நீ போய்' என்று கைகேயி ராமனிடம் பேசிய வாசகமாய் கம்பன் சொல்லுவான்.




நோன்பிருக்கும் கோபியர் சிறுமிகள் வேண்டுவது 'பர்ஜன்யன்' என்னும் மழைத் தேவனைக் குறித்து. ஆனாலும் கண்ணன் என்ற பெயரை அல்லாது வேறு எந்த தேவதையையும் வரிக்கத் தெரியாததால், பர்ஜன்யனின் மழை கொடுக்கும் செயலைக் கூட கண்ணனின் பெயரோடு சேர்த்து விளிக்கிறார்கள்.
கண்ணனும் கடல் போன்று கருத்தவன். நம் எல்லோர் மேலும் கருணை மழை பெய்ய ஓங்கி உலகளந்த கார் மேகம் போன்றவன். க்ரியை என்பதை ப்ரம்மனிடமும், சம்ஹரிப்பதை ருத்ரனிடமும், பிரித்துக் கொடுத்து, பரப்ரஹ்மமான விஷ்ணு, ஜீவாத்மாக்கள் மற்றும் அசேதனங்களின் ரக்ஷணை என்னும் செயலை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு 'சமுத்திர இவ கம்பீர்யை' என்னும் வகையில் 'ஜகத்தை ஈரக்கையால் தடவி நோக்கவல்லானாக', கம்பீரனாய் இருக்கிறான்.


'ஓன்று நீ கைகரவேல்': நல்லவர் தீமைகள் எனப் பகுத்துப் பார்க்காமல் எல்லோருக்கும் தேவையான மழையைக் குறையாமல் பெய்திடுவாய். 'பாபா நாம்வா சுபாம் நாம்வா' என்று நல்ல குணவதிகளையோ, ராக்ஷசிகளையோ, வேறு படுத்தாமல், எங்கள் கோஷ்டியில் நாங்கள் இணைத்துக் கொல்வதைப்போல, எல்லோரையும் சமமாகப் பாவித்து மழை கொடுப்பாய் என்று வேண்டல்.

'கை' என்பது, தானம், கொடுப்பது என்பதற்குக் குறியீடாக சொல்லப் படுவது, எப்படி 'அவனுக்கு ரொம்ப பெரிய தாராளமான கை' என்று கொடை வள்ளல்களைச் சொல்லுமாப்போலே.


'ஆழியில் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி' - உபயோகங்கள் இல்லாத, பள்ளங்களிலோ, சாக்கடையிலோ ஒதுங்காமல், திரும்பத் திரும்ப சுழற்சிக்கு ஏதுவாக, பெய்யும் மழை நீர், நிலத்தினுள் உபயோகமான பின் கடலில் மட்டும் தான் புக வேணும். கடல் மணலில், நீர் கூடத் தெரியாத வண்ணம் எல்லா நீரையும் மேகமானது க்ரஹித்துக் கொண்டு, அடிமண் அடியோடே தட்டப் பருகி, ஆர்த்து - ஆரவார மின்னலும் முழங்கலுமான மழையோடு வர வேண்டும்.


'ஓம் மேகேஸ்வன க்ருஷ்ண:' - எப்படி கிருஷ்ணன் கர்ஜனையோடு சொன்ன போதனைகளை நாங்கள் கிரஹிக்கிறோமோ, அவ்வண்ணம் மறைந்து கொண்டே நம் கார்யங்களை நடத்தி அருளும் ஈஸ்வரனைப் போல அல்லாமல், சப்தத்தோடும் முழக்கத்தோடும் ஊரார் அறியும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்.


மழையால் ஏற்படும் உயரிய பலன்களையும் மீறி, மழைத் தூறல் ஆரம்பித்தவுடனேயே மனத்தில் மகிழ்ச்சி வருவதால், பெரும் சத்தத்தோடும் ஆரவாரத்தோடும் வந்து பெய்து எல்லோர் மனங்களையும் இன்பத்தால் நிரப்பிட, நோன்பிருக்கும் ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்.


'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து' - சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று நினைக்கையில் சர்வேஸ்வரனின் உடல் உருவம் கருத்திருக்கும். உன்னுடைய திருமேனியும் அப்படியே இருக்க வேணும் என்று நோன்பிருக்கும் சிறுமிகள் வரிக்கிறார்கள்.


குடும்பத்துக்காக இராப்பகல், வெய்யிலிலும் மழையிலும் அலைந்து உழைக்கும் குடும்பத் தலைவனின் மேனி கருத்திருக்கும். அடுப்படியில் பல சுவை உணவாக்கும் அன்னையின், பரிஸாராகரின் உடலும் கருத்துத் தானிருக்கும்.


'பாழி அம் தோள் உடைய' - அழகிய வலிமையான, (இடப் புறத்துத்) தோள்கள் கொண்ட,


'பற்பநாபன் கையில்' - பிள்ளைகளை தொட்டிலிலே வளர்த்திப், புற்பாயிட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு நோக்கியிருக்கும் தந்தையை / காவலர்களை போலே, சிருஷ்டிக்குக் காரணமான ப்ரஹ்மனை கமலத்திலே ஆசனம் கொடுத்து அமர்த்தி, கையால் தாங்கிக் கிடக்கும் பத்மநாபன். 'அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்' என்ற பெருமை மாலனுக்கு உண்டு.


'ஆழி போல் மின்னி' - ப்ரம்மன் பத்மநாபனின் திருமகன். திருவாழி ஆழ்வான் - பிரதம தளபதி. எந்தத் தந்தையும் (பத்மநாபன் போல) தன் பிள்ளைக்குச் செய்யும் கடமைகளை வெளியில் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை. திருவாழியாழ்வன், உண்மையான ஊழியனுக்கு ஒப்பானவன். எப்படி ஊழியன் தன் சேவைகளை வெளியில் பிரகடனப்படுத்தி மகிழ்வானோ, அவ்வண்ணம் ஜகத்தைக் காப்பதை மின்னி ஒளிர்ந்துத் தெரிவிக்கிறான்.


'வலம்புரி போல் நின்றதிர்ந்து' - மகா பாரதப் போரிலே எப்படி பாஞ்சஜன்ய த்வனி அதிர்ந்து ஒலித்ததோ அது போல பெரும் சத்தத்துடன் மழையின் சப்தம் ஒலிக்கட்டும்.


'சுடராழியும் பல்லாண்டு', 'அப்பாஞ்சஜன்யமும் பல்லாண்டு' என்னும் வகையில் இரண்டும் தொடர்ந்து தம் திருச் செயலாற்றுமாப் போல. சங்கின் ஒலியானது, பிரணவத்தின் அர்த்தத்தை இடை விடாமல் திருவாய் மொழி முகத்தாலே அருளிச் செய்வது என்ற ஈடும் உண்டு.


'தாழாதே சார்ங்கமுறைத்த சர மழைபோல்' - பிரணவ மந்திரத்தில், பரமாத்மா ஜீவாத்மாக்களின், பகவானின் அருளால் ஏற்பட்ட சம்பந்த்தததை லௌகீகர்களும் அறியும் வண்ணம் தொடர்ந்து உரைத்தலைக் குறிக்கும்.


'வாழ உலகினில் பெய்திடாய்' - உலகம் உய்த்திட பெய்வாய் மழையே 

'நாங்களும் மகிழ்ந்து நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்' ஆரோக்கியமாக நனைந்து,
நோன்பிற்காகக் குளித்து, பராமனோடு எங்கள் உறவினை பெருக்கிக் கொள்ள அருள்வாய் மழையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக