ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருப்பாவை - 5 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஐந்தாம் நாள்.

கோதை, நேற்று இரவு முழுவதும் நல்ல மழையாம். நாம் இந்த பாவை நோன்பு ஆரம்பிக்கும் முன் அவ்வாறு பெய்ததில்லையாம் பெரியோர்கள் சொல்லுகிறார்கள். நீ பாடியவாறு ஆழிமழைக்கு  அண்ணா, கண்ணா மகிழ்ந்து விட்டார் போலிருக்கிறது. இருந்தாலும் ஒரு சந்தேகம். நாம் நோற்கும் இந்த பாவை நோன்பின் பலன் நமக்கே கிடைத்திடுமா. நாம் முன்னால் செய்த பாவங்கள் கழியுமா? 


என்ன கேள்வி கேட்டு விட்டாய், நேற்று இரவு மழை பெய்தது என்றாயே நம் நோன்பின் பலன்கள் அவ்வாறு. இன்னும் உனக்கு சந்தேகம் ஏன்? நம் கண்ணன் மாயவன் இருக்க கவலை எதற்கு. நாம் இன்று ஐந்தாம் நாள் வந்துள்ளோம். அதைப் பார்ப்போமே!


‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ 


கோதை, நம் மன்னவன் கண்ணனுக்கு நாள்தோறும் புதிது புதிதாக பெயர்களைச் சூட்டிக் கொண்டேச் செல்கிறாயே இன்று மாயன் என்று ஆரம்பித்துள்ளாய். 


ஆம் சகி, அவன் எண்ணற்ற பேருடையான், பீஷ்மர் அவன் மேல் ஆயிரம் நாமங்களை சஹஸ்ர நாமம் என்று அம்புப்படுக்கையில் கிடக்கும்போது தருமருக்குப் பாடியுள்ளார். புருஷசூக்தத்தில் தெரிவித்துள்ளாற் போன்று அவன் ஆயிரமாயிரம் நாமங்களை உடையவன். நம்மால் அந்தளவுக்கு முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்போம்.

ஆம் கோதை, நீ சொல்வது சரிதான் அனைத்திலும் அவன் நிறைந்திருக்கும் பொழுது அவனை எப்படி அழைத்தாலும் தகும். பாட்டின் ஆரம்பத்திலேயே ‘மாயன்’ என்று விளித்துள்ளாயே….


ஆம் சகி, அவன் மாயன் தான். அதிலும் ‘மாமாயன்’. பூட்டிய சிறைக்குள் இருந்த மதுரையை ஆண்ட வசுதேவர் தேவகிக்கு மகனாக பிறந்து மாயங்கள் செய்து….. 


கோதே, நம் பாண்டிய நாடான மதுரையா,


இல்லை சகி இது வடமதுரை. க்ருதயுகத்தில் ராமரின் சகோதரர் சத்ருக்னனால் உருவாக்கப் பட்ட நகரம். நம் கண்ணன் பிறந்தவுடன் இது முக்தித் தரும் நகரேழில் ஒன்றாக மாறியது. சரி நாம் பாட்டுக்குச் செல்வோம்.


‘தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை’ - இன்னொரு பெயர் வருகிறதல்லவா. 


ஆம் கோதே நீ நாமங்களை சூட்டிக் கொண்டேயிரு நன்றாய்த்தான் உள்ளது. 


நம் மாயன் கண்ணன் தாமோதரன், ஆயர் குலத்தினில் தோன்றி அதற்கு பெருமை சேர்த்து, பெற்ற வயிறு குளிரச் செய்தான். இது மட்டுமா செய்தான் அவன் செய்த லீலைகளை சொல்லி மாளாது. அப்பேற்ப்பட்ட அந்த மாயனை, யமுனைத் துறைவனை, நாம் தூய்மையாய் வந்து, தூய்மையான மலர்த்தூவி, அவனை நம் வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தோமாயின் நாம் செய்த அத்தனை பாவங்களும் தீயிற் போட்ட சருகு போல தூசாகும். வாருங்கள் நாம் அவனைத் தொழுவோம்.


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசுஆகும் செப்பேலோர் எம்பாவாய்


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக