வெள்ளி, 18 டிசம்பர், 2020

திருப்பாவை - 4 - கோமான் ஶ்ரீ பாலாஜி

நான்காம் நாள்.

"கோதே, நீ பாட்டுக்கு இந்த பாவை நோன்பு நோற்றால் தீங்கின்றி மாதம் மும்மாரி பெய்யும் என்று சொல்லி விட்டாய், ஆனால் என்ன சின்னச் சின்னத் தூறலாத்தானே பெய்கின்றது. இப்படியிருக்க நீ என்னடான்னா நன்னா மழை பெய்யும், செல்வவளம் செழிக்கும் என்று சென்ற பாடலில் சொன்னாயே."


"இருடி, அதற்குள் என்ன அவசரம். இன்னிக்கு தானே நான்காம் நாள். நம்மோட இந்த நோன்புக்கு இடையூரா அடைமழை பெய்து நம் நேதன்பினை பாழாக்கப் போகுதேன்னு நினைச்சிட்டிருக்கேன் நீ வேற. "


‘ஆழிமழைக் கண்ணா’ என  ஆண்டாள் ஆரம்பித்ததும், ஒருத்தி மற்றொருத்தியிடம் "இவளுக்கு கண்ணன் மேல் இருந்த மோகத்தினால் பார்க்கும் அனைத்தும் கண்ணனாகவே தெரிவதைப் போல் பித்துப் பிடித்துவிட்டது. மழைக்கு அதிபதி வருணன் தானே அவனை அழைக்காமல் கண்ணனை அழைக்கிறாள். இதனால அவன் கோவிச்சுட்டு மழை பெய்து தள்ளிடப் போறான்."


பயத்தினாலும் நடுக்கத்தினாலும் தோழியின் குரல் சற்றே அதிகப்பட, இதை கேட்ட கோதை, "அடியே பயப்படாதே நான் பாடியதில் இரண்டு அர்த்தம் உள்ளது. நமக்கு சகலமும் கண்ணனன்றோ என்று ஒரு அர்த்தத்திலும் அதை பிரித்துப் பாடுவோமாயின் ‘ஆழி மழைக்கு அண்ணா’ என்று வருணனையும் தான் குறிப்பிடுகிறேன். அவனால் நமக்குக் காரியம் ஆக வேண்டுமே அதனால் தான் அவனை அண்ணா என்று கூப்பிடுகிறேன். மேலும் அவனுக்கு மழையை எப்படி பெய்விக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தான் நான் சொல்லப்போகிறேன்."


"ஓகோ கதை இப்படிப் போகுதோ உன்னை புரிஞ்சுக்கவே முடியலடி. நீ நிறைய விஷயம் தெரிந்தவளாயிருக்கே."

"ஆழிமழைக்கு அதிபதியான அண்ணா... நீ ஒன்றை மட்டும் செய்யேன்., நீ நேராக கடலுக்குச் சென்று அங்கிருந்து நீரை எவ்வளவு பிடிக்குமோ அதிகளவு மொண்டு வானத்துக்கு ஏற்றி வெள்ளை வெளேறென்று பஞ்சு போல் இருக்கும் மேகத்தை, நீருண்ட மேகமாய், என் கடல் வண்ணன், கருமேக சியாமளனைப் போன்று கறுத்து…"


"கொஞ்சம் பொறு ஆண்டாள், நீ வேகமாப் பாடிட்டுப் போறே எங்களால நிறைய விஷயம் புரிந்துக் கொள்ள முடியல மழை வருவதற்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம். அதுவும் நாம இருக்கிறதோ ஆயர்ப்பாடி இங்க கடலே இல்லையே."


"ஆகா நன்னா கேட்டப் போ. நம்மோட எல்லா நீர்நிலைகளிலிருந்து தண்ணீரையெல்லாம் உறிஞ்சி ஆவியாக்கி தன்னோட மேகத்துல சேர்த்து குளிர்ந்து வேறோர் இடத்துக்கு மழைத் தரார் நம் அண்ணா. அதுவும் எப்படி இருப்பார் தெரியுமா என்னுடைய நாதன் கண்ணன், ஊழி காலத்தே ஒரு ஆலிலைமேல் பாலகனாய் படுத்திருப்பானே அவனுடைய கருமை நிறத்தில். அதுவும் கையில் பளபளவென்று மின்னும் திகழ் சக்கரம் போன்று மின்னல் மயமாவும், மற்றோர் கையில் இருக்கும் பாஞ்ச சன்னியம் ஒலிப்பதைப் போன்று இடி முழக்கத்தோடே இருப்பார் மழைக்கு அதிபதி."


"அடேங்கப்பா அவ்வளவு கம்பீரமாவா…."


"ஆமாம், அதோட நம் கண்ணன், இராமவதாரம் எடுத்தப்போது கையில் வைத்திருந்த கோதண்ட வில்லிருந்து சரமாரியாக வரும் அம்புகளைப் போன்று நாம் வாழ இவ்வுலகினிற் மழை பெய்திடுவார் நம் அண்ணா. நான் சொல்றது புரியுதா அண்ணா. என் கண்ணா. நாங்கள் மார்கழி நீராடி மகிழ வேண்டும்."


ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து,

பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்,

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக