ஶ்ரீமத் பாகவதம் - 234

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினெட்டாவது அத்தியாயம்

(க்ரீஷ்மருது (கோடைக்கால) வர்ணனமும், ஸ்ரீக்ருஷ்ண ராமர்கள் கோபாலர்களோடு விளையாடுவதும், ப்ரலம்பாஸுர வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு ஸ்ரீக்ருஷ்ணன், மனக்களிப்புற்ற பந்துக்களான இடையர்கள் சூழ்ந்து வரவும், பாடவும் பெற்று, பசு மந்தைகளால் அழகாயிருக்கின்ற கோகுலத்திற்குள் நுழைந்தான். ஸ்ரீராம  க்ருஷ்ணர்கள் இவ்வாறு மாயையினால் கோபாலர்கள் என்னும் கபட வேஷம் பூண்டு விளையாடிக் கொண்டிருக்கையில் ஒருகால், ப்ராணிகளுக்கு அவ்வளவு இஷ்டமல்லாத க்ரீஷ்ம ருது (கோடைக்காலம்) வந்தது. ஸாக்ஷாத் பகவானாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன்னுடைய அம்சமாகிய பலராமனோ வாஸம் செய்யப் பெற்றமையால், எல்லா ஸம்ருத்திகளும் அமைந்திருக்கிற ப்ருந்தாவனத்தின் குணங்களால், அந்த க்ரீஷ்ம ருதுவும்கூட (கோடைக்காலமும் கூட), வஸந்த ருது (வஸந்த காலம்) போலத் தோன்றிற்று. 

அங்குக் கர்ண கடோரமான (காதுக்குக் கொடிதான) சுவர்க்கோழிகளின் த்வனிகள் மலையருவிகளின் ஓசைகளால் மறைக்கப்பட்டிருந்தன. மற்றும், அங்கு வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அந்த அருவிகளின் திவலைகளால் (நீர்த்துளிகளால்) அடிக்கடி நனைந்து, செழிப்புற்று, நிரைநிரையாகி, மிகவும் அலங்காரமாயிருந்தன. நதிகள், தாமரையோடைகள், அருவிகள் ஆகிய இவற்றின் அலைகளில் பட்டு அவற்றின் திவலைகளையும் (நீர்த்துளிகளையும்) செங்கழுநீர், தாமரை, நெய்தல் முதலிய புஷ்பங்களில் பட்டு, அவற்றின் தூட்களையும் ஏற்றுக் கொண்டு, வருகிற மந்த மாருதத்தினால் (தென்றல் காற்றால்) வீசப் பெற்றிருப்பதும் மிகவும் பச்சென்றிருக்கிற புற்கள் நிறைந்திருப்பதுமாகிய அந்த ப்ருந்தாவனத்திலுள்ள ஜந்துக்களுக்கும் வ்ருக்ஷம், கொடி, செடி முதலியவற்றிற்கும், க்ரீஷ்ம ருதுவாலும் (கோடைக் காலத்தாலும்), அந்த ருதுவில் (காலத்தில்) உண்டான அக்னி, ஸூர்யன் இவற்றாலும் விளையக் கூடிய உபத்ரவம் (துன்பம்) சிறிதும் உண்டாகவில்லை. 

ஸூர்ய கிரணங்கள் விஷம் போல் கொடியவைகளாயினும், ஆழ்ந்த ஜலமுடைய பெரிய ஓடைகளின் கரைகளில் வீசுகின்ற அலைகளால் சேறோடிக் கிடக்கிற மணற் குன்றுகளோடு கூடின அந்த ப்ருந்தாவன பூமியின் ஈரத்தையும் பசும்புற்கள் முளைத்துச் செழிப்பாயிருக்கும் நிலைமையையும் அழிப்பதற்கு வல்லவையாக இல்லை. பூ, இலை, காய், பழம் முதலியவை ஸம்ருத்தமாய் (நிறைவுடன்) இருக்கவும், விசித்ரமான ம்ருகங்கள், பறவைகள் இவை சப்திக்கவும், மயில்கள், வண்டுகள் இவை பாடவும், குயில்கள், ஸாரஸங்கள் இவை கூவவும் பெற்று, அவ்வனம் நிரம்பவும் அழகாயிருந்தது. 

மஹானுபாவனாகிய (மிகவும் உயர்ந்தவனான) ஸ்ரீக்ருஷ்ணன், விளையாட விரும்பி பலராமனுடன் குழலை மிகவும்அழகாக ஊதிக் கொண்டு, இடையர்களாலும், பசு மந்தைகளாலும் சூழப்பட்டு, அந்த வனத்திற்குள் (காட்டிற்குள்) நுழைந்தான். ராமன், க்ருஷ்ணன் முதலிய இடையர்கள் அனைவரும் தளிர், மயிலிறகு, பூங்கொத்து, பூமாலை, சிவப்பு நிற தாதுக்கள் இவைகளை அணிந்து கூத்தாடுவதும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சண்டை செய்வதும், பாடுவதுமாகி விளையாடினார்கள். ஸ்ரீக்ருஷ்ணன் கூத்தாடுகையில், சிலர் அதற்குப் பொருந்துமாறு பாடினார்கள். சிலர் உள்ளங்கை, கொம்பு இவைகளால் வாத்யம் வாசித்தார்கள். சிலர் நல்லது நல்லதென்று புகழ்ந்தார்கள். நாட்யமாடுகிறவர்கள் நட்டுவனைத் துதிப்பது போல, இடைப்பிள்ளைகளின் வேஷம் பூண்டு மறைந்திருக்கின்ற ராம க்ருஷ்ணர்களை, அவ்வாறு இடையர்களாகப் பிறந்திருக்கின்ற தேவதைகள் துதித்தார்கள். கன்றுகுடுமி தரித்திருக்கிற அந்த ராமக்ருஷ்ணர்கள், ஒருகால் சுற்றுவதும் தாண்டுவதும், தள்ளுவதும், தோள்தட்டுவதும், ஒருவரையொருவர் பிடித்திழுப்பதும், கைச்சண்டை செய்வதுமாகி விளையாடினார்கள்.  

மஹாராஜனே! ஒருகால், மற்ற இடையர்களைக் கூத்தாடவிட்டு அந்த ராம க்ருஷ்ணர்கள், தாங்கள் பாடுவதும், வாத்யங்கள் வாசிப்பதுமாகி, நல்லது நல்லதென்று சொல்லி, அவர்களைப் புகழ்ந்தார்கள். ஒருகால், வில்வக் காய்களையும், ஒருகால் கும்பமரத்தின் காய்களையும், ஒருகால் முத்துக்களையும், ஒருகால் முத்துச் சிப்பிகளையும் கொண்டு விளையாடினார்கள். ஒருகால், “ஒருவனை ஒருவன் தொடலாகாது. தொட்டால், தொடப்பட்டவன் தோற்றவன். தொட்டவன் ஜயித்தவன்” என்பதாக ஏற்பாடு பண்ணிக் கொண்டு, ஒருவன் கையில் மற்றொருவன் அகப்படாமல் ஓடி மறைந்து விளையாடுவது, ஒருகால் ஒருவனைக் கண் கட்டி எதிரில் ஒருவனை நிறுத்தி, “இவன் பேர் என்ன” என்று கேட்க “உண்மையைச் சொன்னால் ஜயித்தவன்” என்று ஏற்பாடு பண்ணிக் கொண்டு, அவ்வாறு கண்கட்டிப் பெயர் கேட்டு விளையாடுவது இவை முதலிய பற்பல விளையாடல்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருகால், ம்ருகங்கள்போலும், ஒருகால் பக்ஷிகள் போலும், அவ்வவற்றின் சேஷ்டைகளை அபிநயித்தார்கள் (நடித்தார்கள்). ஒருகால், தவளைகள் போலக் கிளம்பிக் கிளம்பிக் குதித்து, விளையாடினார்கள். ஒருகால், ஒருவரையொருவர் பலவாறு பரிஹாஸம் (கேலி) செய்து கொண்டார்கள். ஒருகால், கொடிகளால் பல்லக்கு போல் ஊசல்களை ஏற்படுத்தி, அவற்றின் மேலேறி, விளையாடினார்கள். ஒருகால், ஒருவனை அரசனாகவும், சிலரை மந்த்ரிகளாகவும், மற்றும் சிலரை வேறு சில அதிகாரிகளாகவும், மற்றவர்களை ப்ரஜைகளாகவும் ஏற்படுத்திக் கொண்டு, ராஜ்ய தந்த்ரம் நடத்துவது போல அபிநயித்து (நடித்து) விளையாடினார்கள். இவ்வாறு உலகத்தில் வழங்கி வருகிற பற்பல விளையாடல்களால் அவர்கள் பொழுது போக்கிக் கொண்டு திரிந்தார்கள். 

அவ்வனத்தில், அந்த ராம க்ருஷ்ணர்கள், இடையர்களுடன் ஆற்றங்கரைச் செறிவுகளிலும், மலைச்சாரல்களிலும், புதர்களிலும், காடுகளிலும், ஆறுகளிலும், பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கையில், ப்ரலம்பனென்னும் அஸுரன், அவர்களை வதிக்க விரும்பி,  தானும் ஒரு இடையனைப் போல வேஷம் பூண்டு, அவ்விடம் வந்தான். ஸர்வஜ்ஞனும், (எல்லாம் அறிந்தவனும்) ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், அவன் அஸுரனென்பதையும், அவன் தன்னைக் கொல்ல வந்திருக்கிறானென்பதையும் அறிந்தவனாயினும், அவனை அப்பொழுதே வதிக்காமல், வேறு உபாயத்தினால் அவனை வதிக்க வேண்டுமென்று நினைத்து, அவனுடன் ஸ்னேஹத்தையே (நட்பையே) அபிநந்தித்தான் (விரும்பினான்). விளையாடல்களை அறிந்த ஸ்ரீக்ருஷ்ணன் இடையர்களை அழைத்து, “ஓ இடையர்களே! நாமெல்லோரும் உருவம், வயது, பலம் இவற்றிற்கு உரியபடி இரண்டு வகையாகப் பிரிந்து விளையாடுவோம்” என்றான். இவ்வாறு பகவான் சொல்லுகையில், இடையர்கள் ராம க்ருஷ்ணர்களிருவரையும் இரண்டு கூட்டங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணன் பக்கத்தில் சிலரும், ராமன் பக்கத்தில் சிலருமாகச் சேர்ந்து, இரண்டு கூட்டமாகப் பிரிந்தார்கள். 

அவர்கள், ஜயித்தவன், தோற்றவன் மேல் ஏற வேண்டுமென்றும், தோற்றவன் ஜயித்தவனை ஏற்றிக் கொண்டு போக வேண்டுமென்றும் ஏற்படுத்திக் கொண்டு, பல விளையாடல்களை நடத்தினார்கள். 

அந்த இடையர்கள், தோற்றவர்கள் ஜயித்தவர்களை ஏற்றிக் கொண்டு போவதும், ஜயித்தவர்கள் தோற்றவர் மேல் ஏறிக் கொண்டு போவதுமாகி, விளையாடிக் கொண்டே பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, க்ருஷ்ணனை முன்னிட்டுப் பாண்டீரம் என்னும் ஆல மரத்தினடியில் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு, பலராமன் பக்கத்தில் சேர்ந்த ஸ்ரீதாமாதிகள் விளையாட்டில் ஜயிக்கையில், அவர்களை ஸ்ரீக்ருஷ்ணனும் அவன் பக்கத்தில் சேர்ந்தவர்களும் தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்களில் தோல்வியடைந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஸ்ரீதாமனையும், பத்ரஸேனன் வ்ருஷபனையும், ப்ரலம்பாஸுரன் பலராமனையும்,  தூக்கிக் கொண்டு போனார்கள். 

ப்ரலம்பாஸுரன் ஸ்ரீக்ருஷ்ணனைத் தூக்க முடியாதென்று நினைத்து, ஸ்ரீக்ருஷ்ணன் பக்கத்தில் சேர்ந்து, ராமனால் தோல்வி அடைந்து, அவனையே எடுத்துக் கொண்டு போனான். அவ்வாறு பலராமனை ஏற்றிக் கொண்டு போகிற அஸுர ச்ரேஷ்டனாகிய அந்த ப்ரலம்பன், இறக்கவேண்டிய இடத்தையும் கடந்து, அப்புறம் வெகு வேகமாகச் சென்றான். பெரிய பர்வதம் (மலை) போல் பளுவாயிருக்கின்ற (கனமாய் இருக்கிற) பலராமனை எடுத்துக் கொண்டு போகிற அம்மஹாஸுரன், தன் வேகமெல்லாம் ஒடுங்கப் பெற்றுத் தனக்கு அஸாதாரணமான உருவத்தை அடைந்து, ஸ்வர்ண (தங்க) அலங்காரங்களால் விளக்கமுற்று, மின்னலும், சந்த்ரனும் அமைந்த மேகம் போல் ப்ரகாசித்தான். மிகவும் உயர்ந்து ஆகாயத்தை அளாவியிருப்பதும், ஜ்வலிக்கின்ற கண்களும், புருவ நெரிப்பில் படிந்த பயங்கரமான கோரைகளும் (பற்களும்), அக்னி போல் ஜ்வலிக்கின்ற கேசங்களும் (மயிர், முடி) அமைந்து, தோள் வளை, கிரீடம், குண்டலம் முதலிய ஆபரணங்களின் காந்தியால் அற்புதமாயிருப்பதுமாகிய அவ்வஸுரனுடைய உருவத்தைக் கண்டு பலராமன் சிறிது பயந்தாற் போலிருந்தான். 

பிறகு, அவன் அஸுரனென்பதையும் அறிந்து, தன் சக்தி முதலியவற்றையும் ஆராய்ந்து, பயமற்றிருக்கிற அந்தப் பலராமன், கோபாவேசமுற்று, தேவேந்திரன் வஜ்ரத்தினால் பர்வதத்தை (மலையை) விரைந்தடிப்பது போலத் தன் பக்கத்தில் சேர்ந்த இடையர் கூட்டத்தைக் கடந்து, வெகுதூரம் தூக்கிக் கொண்டு போகிற சத்ருவாகிய அவ்வஸுரனைத் தலையில் திடமான முட்டியால் அடித்தான். அவ்வஸுரன், பலராமனால் அடியுண்டு, உடனே தலை முறியப் பெற்று, முகத்தினின்று ரத்தத்தைக் கக்கிக் கொண்டு, நினைவு தப்பிப் பெருங்கோஷமிட்டு, ப்ராணன்களை (உயிரை) இழந்து, இந்த்ரனுடைய வஜ்ராயுதத்தினால் அடியுண்ட பர்வதம் (மலை) போல் விழுந்தான்.

இடையர்களெல்லாரும் மஹா பலசாலியான பலராமனால் அவ்வஸுரன் அடியுண்டு மாண்டதைக் கண்டு, நல்லது நல்லதென்று புகழ்ந்து, மிகவும் வியப்புற்றார்கள். ப்ரேமத்தினால் தழதழத்த மனமுடைய அவ்விடையர்கள், அஸுரன் கையில் அகப்பட்டுத் தப்பி மரணம் அடைந்தவன் திரும்பிப் பிழைத்து வந்தாற் போலிருக்கின்ற அந்தப் பலதேவனை அணைத்து, பலவாறு ஆசீர்வாதங்களைச் செய்து, புகழத் தகுந்த மஹிமையுடைய அம்மஹானுபாவனைப் புகழ்ந்தார்கள், பாபிஷ்டனாகிய ப்ரலம்பன் மாண்டு போகையில், தேவதைகள் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, பலராமன் மேல் பூமழை பொழிந்து, நல்லது நல்லதென்று அவனைப் புகழ்ந்தார்கள். 

பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை