வியாழன், 17 டிசம்பர், 2020

திருப்பாவை - 3 - கோமான் ஶ்ரீ பாலாஜி

(இரண்டாம் பாசுரத்தில் ‘பாவை நோன்பு’ நோற்க வேண்டிய முறைகளை தெரிவித்த ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் வரப்போகும் பலன்களை தெரிவிக்கிறாள்.)


“அம்மா கோதே, நீ சொன்னா மாதிரி நாங்களும் உன்னுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்கிறோம். அதனால் எங்களுக்கு என்ன பயன், பகவத் சங்கல்பத்தைத் தவிர, அதை கொஞ்சம் சொல்லேன்”.


ஆண்டாள் சிறிதும் தயக்கமின்றி பாசுரத்தை ஆரம்பிக்கிறாள்.


‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’


கோதே ஒரு நிமிஷம், நீ ஏற்கனவே முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே’ என்றும் இரண்டாம் பாசுரத்தில் ‘பையத்துயின்ற பாற்கடல் வண்ணனையும்’ போற்றிப் பாடின இப்பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த’ன்னு ஆரம்பிக்கிறயே ஏதாவது விசேஷம் இருக்கா”. 


ஆண்டாள் முகத்தில் சின்ன புன்சிரிப்பு.


“விசேஷம் இல்லாமலயா, சின்ன வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து அசுர சக்ரவர்த்தி மாவலியிடம் மூவடி மண் கேட்டு, பெற்று, நெடிதுயர்ந்து ஈரடியால் இந்த உலகம் முழுதும் அளந்தானை போற்றிப் பாடாமல் வேறு யாரை பாடுவது”. 


உடன் வந்திருந்த தோழிகள், “ஏன் கோதா மற்ற அவதாரங்களை காட்டிலும் நீ வாமனனுக்கு சிறப்புத் தருகிறாய் ஏதாவது காரணம் இருக்கிறதா”.


“நிச்சயமாக, மற்ற அவதாரங்கள் அனைத்தும் பலவகையில் பகைவர்களை சித்ரவதை செய்து பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி எடுக்கப்பட்டவை, ஆனால் வாமன அவதாரம் உத்தமமானது. யாருக்கும் எந்த தீங்கும் நேராமல் சகல ஜீவராசிகளுக்கும் கேட்காமலே அவன் திருவடி சம்பந்தம் உண்டாக்கி அனைவரையும் உய்வித்தவன் அதனால் மட்டுமே அவன் உத்தமன். அப்பேற்ப்பட்ட ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடினால் நமக்கு நன்மைதானே”.


“ஆகா பிரமாதம், அருமை கோதே……”


“நீங்கள் பலன் கேட்டீர்களே கூறுகிறேன் கேளுங்கள். ‘தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி’ அதாவது மாதம் தவறாமல் மூன்று முறை மழை பெய்யும் அதுவும் யாருக்கும் தீங்கு தராமல் எல்லா நாடெங்கும். அவ்வாறு தீங்கின்றி மழைப் பெய்வதால் என்னவெல்லாம் நடக்கும் என்றும் கூறுகிறேன் கேளுங்கள்”.


‘ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப’ நம் உயரத்தைக் காட்டிலும் மிக உயரமாக உலகளந்தானை போன்று செந்நெல் விளையும், அவ்வயலில் மீன்கள் துள்ளி குதிக்கும். கரையோரங்களில் பூத்துக்குலுங்கும் குவளை மலர்களில் உள்ள தேனை அருந்தி வண்டுகள் மதி மயக்கத்துடன் ரீங்காரமிடும்”. 


உடன் கூட்டத்தார், “ஆகா அருமை என்ன வளம், இத்தனையும் அவன் அருளால் வருமென்றால் உடனே நோன்பு நோற்கலாமே”.


“பொறுங்கள் அதற்குள் அவசரமா இன்னும் நான் முடிக்கவேயில்லை. நாமிருப்பது ஆயர்ப்பாடியில் நமக்கு இங்கு செல்வமே நமது பசுக்கள் தான். அப்பசுக்கள் நம் ஆயர்ச் சிறுவர்களுக்கு கஷ்டமே கொடுக்காது. குடத்தை எடுத்துக் கொண்டு அப்பசுக்களின் மடியினருகே சென்றாலே தானாகவே மடி சுரக்கும், குடம் நிறையும் அவ்வளவு வள்ளல் பெரும் பசுக்கள்.  அவ்வாறு இருந்தால் நம் செல்வ வளம் பெருகுமல்லவா. அதனால் நாமும் சேர்ந்து பாடுவோம்.”


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக