திருப்பாவை - 2 - கோமான் ஶ்ரீ பாலாஜி

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்

செய்யாதனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


முதல் பாடலில் தன் தோழிகள் அனைவரையும் எதற்காக? யாருக்காக? பாவை நோன்பு நோற்கலாம் வாருங்கள் என்று தோழியரை அழைத்த ஆண்டாள் இரண்டாம் பாடலில் அந்நோன்பு நோற்பதற்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளன என பட்டியலிடுகிறாள்.

 

முதல் பாடலில் ஆண்டாள் நோற்கவிருக்கும் நோன்பு பற்றி அனைவருக்கும் தெரிய ஆரம்பித்த உடன், சிறுபிள்ளைகள் ஏதோ நல்ல விஷயம் செய்கிறார்கள் என்று அவளோடு ஒன்று சேர்ந்து நோன்பு நோற்க பெரியோர்கள் எண்ணுகிறார்கள். அவள் நம்மை அழைக்கட்டும் பார்ப்போம் என்று எண்ணிய அவர்களை ஆண்டாள் ஏமாற்றவில்லை ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று இரண்டாம் பாட்டின் முதல் வார்த்தையிலேயே எல்லோரையும் அழைத்தாள். இந்த பூமியில் வாழ கொடுத்து வைத்துள்ளவர்களே என்று அழைத்தவுடன் அவர்கள் திரும்பிப் பார்க்க, ‘நாமும் நம் பாவை நோன்பிற்கே’ என்று தெரிவித்து, உங்களை அழைத்தது நம் பாவை நோன்பிற்காகத் தான் என்று அறுதியிட்டுக் கூறுகிறாள்.

 

‘அம்மா தாயே நீ நோன்பிற்கு அழைத்தாய் என்று வந்துவிட்டோம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், ஏது செய்யக்கூடாது என்று தெரியப்படுத்தேன் மேலும் இந்த நோன்பு யாருக்காக என்பதையும் சொல்ல வேண்டும் (சும்மா நோன்பு நோற்பதா ஏதாவது பலன் இருந்தாதானே) என்று வந்திருந்த பெரியோர்கள் எண்ண ஆரம்பித்ததும் அவளே அடுத்து தொடங்குகிறாள்.

 ‘செய்யும் கிரிசைகள் கேளீரோ’ - இந்நோன்பு நோற்பதற்கு நாம் செய்யவேண்டிய கிரிசைகள் - விதிமுறைகள் என்னவென்று தெரியப் படுத்துகிறேன் கேட்கிறீர்களா, சொல்கிறேன். யாருக்காக என்று கேட்பீர்கள் அல்லவா அதையும் சொல்கிறேன் கேளுங்கள், பாற்கடலுள் பையத் துயின்ற - திருப்பாற்கடலில் மிகவும் அமைதியாக எவ்வித சலனமுமின்றி சயனித்துக் கொண்டிருக்கின்ற க்ஷீராப்திநாதனை - பாற்கடல்வண்ணனை, அவன் திருவடிகளைப் போற்றி, அவன் திருநாமங்களை வாயினால் பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று சொன்னவுடன் கூட்டத்தினர்., அடடா மிகவும் கஷ்டமாயிற்றே நம்மிடம் நிரம்ப கொட்டியிருப்பதே பாலும் நெய்யும்தானே (இதுதான் கோகுலம் ஆயிற்றே) அதை சாப்பிடக் கூடாது என்று சொல்கிறாளே என்று சின்ன சலசலப்பு. ஆண்டாள் அறியாதவளா உடனே ‘நாட்காளே நீராடி’ - விடிகாலையிலேயே நீராடிவிட்டு ‘மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’ சலசலப்பு அதிகமானது ஏதடா இது விதிமுறைகள் மிக பலமாக இருக்கிறதே. இது பெண்களுக்கு மட்டும்தான் போலிருக்கிறது கண்ணுக்கு மையிடக் கூடாதாம் கூந்தலுக்கு மலர் சூடக்கூடாதாம் சரிதான் சிறுபிள்ளைகளுக்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் மேற்கொண்டு என்ன சொல்கிறாள் என்று பார்ப்போமே என நினைத்த அடுத்த நொடியே கோதை தொடர்கிறாள்.

 

செய்யாதன செய்யோம் - செய்யக் கூடாததை செய்ய மாட்டோம். உடன் கூட்டத்தினர் சரிதான் நாம் எண்ணியது போல் அவளும் அவளின் தோழிகளையும் தாங்கள் செய்யக் கூடாததை செய்ய மாட்டோம் என்று சொல்கிறாள். தீக்குறளைச் சென்றோதோம் - யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டோம், கோள் சொல்ல மாட்டோம், என்றதும் இது ஏதடா நமக்கு எந்த வம்பலப்பும் நமக்கு வராது போலிருக்கிறதே, நல்ல நோன்பாகத் தான் இருக்கிறது என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க அடுத்த நொடி ஆண்டாள் தொடர்கிறாள்,

 

ஐயமும் பிச்சையும் - ஐயம் என்றால் சிறியவர்கள் பெரியவர்களின், வறியவர்களின் நிலைப் பார்த்து அவர்கள் கேட்காதபோதே கொடுப்பது, பிச்சை என்றால் கேட்பவர்களுக்கு கொடுப்பது. கோதையின் தமிழ் எவ்வளவு வளமாக இருக்கிறது பாருங்கள். ஒரே வார்த்தை தான் எவ்வளவு ஆழமான அர்த்தம். ‘ஆந்தனையும் கைகாட்டி’ - நிதி கொடுப்பதோ உணவிடுவதோ எதுவாயினும் எவ்வளவு அதிகமாக கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுப்போம் அப்படி எங்களிடம் இல்லையென்றாலும் யாரிடம் இருக்கிறதோ அவர்களை கைகாட்டி விடுவோம். ஆகா அருமை இவளன்றோ பெண் நன்றாயிருக்கிறதே இந்த நோன்பு.

 

‘உய்யும் ஆறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்’ - உய்வதற்கு என்னென்ன வழிகள் உண்டோ என்று ஆராய்ந்து நன்கு சிந்தித்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்கிறாள். மகிழ்ச்சி ஏன், பகவானிடம் சரண் புகுவதைவிட வேறு என்ன நமக்கிருக்கிறது.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை