புதன், 16 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 233

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினேழாவது அத்தியாயம்

(காளியன் கருடனிடத்தில் பயந்ததற்குக் காரணமும், கருடனுக்குச் ஸௌபரி சாபமும், ஸ்ரீக்ருஷ்ணன் கோபாலர்களைக் காட்டுத் தீயினின்று பாதுகாத்தலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- காளியன், நாகங்களுக்கெல்லாம் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ரமணக த்வீபத்தை ஏன் துறந்து வந்தான்? அவனொருவன் மாத்ரம் கருடன் விஷயத்தில் என்ன அபராதம் செய்தான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நீண்ட புஜதண்டங்களையுடைய மஹானுபாவனே! முன்னொரு காலத்தில், ஸமஸ்த ஜனங்களும், ஸர்ப்பங்கள் தங்களைக் கடிக்காதிருக்க வேண்டுமென்று மாஸந்தோறும் பக்ஷ்யங்களால் (உணவுப் பொருட்களால்) அவற்றிற்கு மரத்தடியில் பலி கொடுப்பதும், அந்த ஸர்ப்பங்களெல்லாம், பர்வகாலத்தில் (அமாவாசை, பெளர்ணமி) ஜனங்கள் தங்களுக்குக் கொடுக்கிற பலியில் தங்கள் பாகத்தைத் தங்கள் ரக்ஷணத்திற்காக, மஹானுபாவனாகிய கருடனுக்குக் கொடுத்துக் கொண்டு வருவதும் வழக்கம். இவ்வாறு ஸமஸ்தமான நாகங்களும் கருடனுக்குப் பலி கொடுத்துக் கொண்டிருக்கையில், கத்ருவின் பிள்ளையாகிய இந்தக் காளியன், விஷவீர்யங்களால் மதித்து (கர்வம் அடைந்து), அந்தக் கருடனைப் பொருள் செய்யாமல், அவனுக்குக் கொடுக்க வேண்டிய பலியைத் தானே புசித்துக் கொண்டு வந்தான். 

மன்னவனே! பகவானுக்கு அன்பனும், மஹானுபாவனுமாகிய கருடன், காளியன் செய்கிற அக்கார்யத்தைக் கேள்விப்பட்டு, அவனைக் கொல்ல விரும்பி, மஹாவேகத்துடன் ஸமுத்ரத்திற்கு வந்தான். விஷத்தையே ஆயுதமாகவுடைய அந்தக் காளியன், தன்னைக் குறித்து வருகின்ற கருடனை விரைவுடன் எதிர்த்து, பலவாகிய தன் பணங்களை உயரத் தூக்கிக் கொண்டு, பயங்கரமான நாக்குகளும், உக்ரமாயிருக்கின்ற கண்களும், விஷப்பற்களாகிற ஆயுதங்களுமுடையவனாக அக்கருடனைப் பற்களால் கடித்தான். மதுஸூதனன் உட்காரும் ஆஸனமும், கொடிய பராக்ரமம், பயங்கரமான வேகம் இவைகளுடையவனுமாகிய கருடன், பெரிய கோபாவேசத்துடன் கத்ருவின் புதல்வனாகிய அந்தக் காளியனைப் பிடித்து இப்படியும் அப்படியும் உதறி, பொன்னிறமுடைய இட இறகினால் அடித்தான். அவ்வாறு கருத்மானுடைய (கருடனுடைய) இறகினால் அடிக்கப்பட்ட காளியன் மிகவும் தழதழத்து, அந்தக் கருடனுக்குக் கிட்ட முடியாததும், மிகவும் ஆழமாகையால் பிறர்க்கு அணுக முடியாததுமாகிய, இந்த யமுனையில் பரவேசித்தான். 

ஒருகால், கருடன் பசித்து ஸௌபரி மஹர்ஷி வேண்டாமென்று தடுத்துக் கொண்டிருப்பினும் அதைக் கேளாமல், இம்மடுவில் தனக்கு இஷ்டமான பக்ஷ்யமாகிய (உணவாகிய) ஒரு பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு போனான். தலைமையுள்ள மீனைக் கருடன் கொண்டு போகையில், மீன்களெல்லாம் மிகவும் வருந்துவதைக் கண்டு ஸௌபரி மஹர்ஷி, மன இரக்கத்தினால், அங்குள்ள மத்ஸ்யாதி (மீன் முதலிய) ஜல ஜந்துக்களுக்கு, கருடனிடத்தினின்று பயமில்லாமையாகிற க்ஷேமத்தைச் செய்ய முயன்று, “கருடன் இம்மடுவில் இழிந்து மத்ஸ்யங்களைப் (மீன்களை) உண்பானாயின், உடனே அவன் ப்ராணன்களை (உயிரை) இழப்பான். இது நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்” என்று மொழிந்தார்.

சாப ரூபமான அந்த ஸௌபரியின் வார்த்தை காளியனுக்கு மாத்ரம் தெரியுமேயன்றி, மற்ற ஒரு ஸர்ப்பத்திற்கும் தெரியாது. ஆகையால், கருடனிடத்தினின்றும் பயந்து, காளியன், இம்மடுவில் நெடுங்காலமாய் வஸித்துக் கொண்டிருந்தான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணனால் துரத்தப் பட்டான். ஸ்ரீக்ருஷ்ணன், திவ்யமான பூமாலைகளும், சந்தனம், குங்குமம் முதலிய திவ்யமான பூச்சுக்களும், திவ்யமான ஆடைகளும் அணிந்து, விலையுயர்ந்த ரத்ன ஸமூஹங்களால் உடம்பெல்லாம்  நிரம்பி, ஸ்வர்ணத்தினால் நன்கு அலங்கரித்துக் கொண்டு, மடுவினின்று கரையேறி வரக் கண்டு, ப்ராணன்கள் (உயிர்) திரும்பி வரப்பெற்ற இந்த்ரியங்கள் போல் இடையர்களெல்லாரும் எழுந்து, பிறகு சரீரமெல்லாம் ஸந்தோஷம் நிரம்பப் பெற்று, ப்ரேமத்துடன் அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அணைத்துக் கொண்டார்கள். 

கெளரவனே! யசோதை, ரோஹிணி முதலிய கோபிகைகளும், நந்தன் முதலிய கோபாலர்களும், ஸ்ரீக்ருஷ்ணனைக் கிட்டி, கை கால் அசைதல் முதலிய சேஷ்டைகள் (செயல்கள்) உண்டாகப் பெற்று மனோரதமும் கைகூடப் பெற்றார்கள். பலராமனும், ஸ்ரீக்ருஷ்ணனை ஆலிங்கனம் செய்து, இவனுடைய ப்ரபாவம் அறிந்தவனாகையால், வெறுமனே சிரித்தான். பிறகு அவன், அந்த ஸ்ரீக்ருஷ்ணனை மடியில் ஏற்றிக் கொண்டு, ப்ரீதியினால் அடிக்கடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

முன்பு உலர்ந்திருந்த வ்ருக்ஷங்களும் (மரங்களும்), பசுக்களும், எருதுகளும், கன்றுகளும், மிகுந்த ஸந்தோஷம் அடைந்தன. மேன்மையுடைய அந்தணர்கள், தத்தம் பார்யைகளுடன் நந்தனிடம் வந்து,  “காளியனால் பிடியுண்ட உன் புதல்வன் தெய்வாதீனமாய் விடுபட்டான். இது பெரிய ஆனந்தம்” என்று மொழிந்தார்கள். 

முதலே நஷ்டமானானென்று நிச்சயிக்கும்படியான பெரிய ஆபத்தை அடைந்த புதல்வன் மீண்டு வரப் பெற்ற மஹாபாக்யவதியும், நன் மனமுடையவளுமாகிய யசோதை, பிள்ளையை வாரியெடுத்தணைத்து, மடியில் ஏற்றிக் கொண்டு, ஆனந்த நீர்த்துளிகளைப் பலவாகப் பெருக்கினாள். (பிறகு, அவ்விடத்திலேயே ஸூர்யன் அஸ்தமிக்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் பலராமனோடும், கோபாலர்களோடும், தாய், தந்தைகளோடும் அவ்விடத்திலேயே வஸித்திருந்தான்.) 

ராஜ ச்ரேஷ்டனே! இடையர்கள் பசுக்களுடன், பசி, தாஹத்தாலும், ச்ரமத்தினாலும் வருந்தி, அன்றிரவு முழுவதும் அந்த யமுனைக் கரையிலேயே வசித்திருந்தார்கள். அப்பொழுது, அந்த ராத்ரியில்,  எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கையில், காட்டில் மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உறைவதனால் உண்டான காட்டுத்தீ, இடையர்களும், பசுக்களும் இறங்கியிருந்த இடம் முழுவதும் சுற்றிச் சூழ்ந்து, கொளுத்தத் தொடங்கிற்று. பிறகு, அக்னியினால் கொளுத்தப்பட்ட இடையர்கள், பரபரப்புடன் எழுந்து, மாயையினால் மானிட உருவம் பூண்ட ஸர்வேச்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைச் சரணம் அடைந்தார்கள். 

“ஓ க்ருஷ்ண! க்ருஷ்ண! மிகுந்த மதியுடையவனே! மஹாபாக்யசாலீ! அளவற்ற பராக்ரமமுடைய பலராமனே! உங்களையே ரக்ஷகர்களாகவுடைய எங்களை இதோ காட்டுத்தீ விழுங்குகின்றது. உன்னுடையவர்களும், உன் நண்பர்களுமாகிய எங்களைக் கடக்கமுடியாத காலாக்னி போன்ற இந்தக் காட்டுத்தீயினின்று பாதுகாப்பாயாக. ப்ரபூ! எவ்விதத்திலும் பயத்திற்கிடமில்லாத உன் பாதங்களைத் துறக்க நாங்கள் வல்லரல்லோம். (நாங்கள் மரணத்தினின்று பயப்படவில்லை. உன் பாதங்களைப் பிரிந்திருப்பதற்கே பயப்படுகின்றோம்.) என்று இவ்வாறு முறையிட்டார்கள். ஜகதீச்வரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன் பக்தர்களான இடையர்களின் மனவருத்தத்தைக் கண்டு, அளவற்ற சக்திகளுடையவனாகையால், தீவ்ரமான அந்தக் காட்டுத் தீயை அப்படியே பானம் செய்தான் (பருகினான்). 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக