புதன், 16 டிசம்பர், 2020

திருப்பாவை - 1 - கோமான் ஶ்ரீ பாலாஜி

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

மாசானாம் மார்க சீர்ஷ - மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையில் கண்ணன், ஏன் மார்கழிக்கு அவ்வளவு சிறப்பு என்று பார்ப்போமாயின் நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அப்படி தேவர்களின் கணக்குப்படி பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை என்பது மார்கழி மாதத்தில் வரும் அதனால் தான் அவ்வளவு சிறப்பு மார்கழிக்கு. அதிலும் மதி நிறைந்த நன்னாள் என்றால் கேட்கவும் வேண்டுமா. நம் கோதை நாச்சியாருக்கோ நோன்பு நோற்க வேண்டும் கண்ணனை அடைய வேண்டும் என்று மனதில் பட்டவுடன் ஶ்ரீவில்லிப்புத்தூர் கோகுலம் ஆனது. கோகுலத்திற்கே சென்றுவிட்டாள். தன் தோழிகள் அனைவரும் கோபியர் ஆனார்கள். அனைவரையும் அழைக்கிறாள் நீராடுவதற்கு. நீராடி நல்ல ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு வாருங்கள் அனைவரும் போவோம் என்கிறாள் வெளியே நாம் செல்வதென்றால் நல்ல ஆடை அணிகலன் அணிந்துதானே செல்வோம். அவளின் நினைப்பின்படி இது கோகுலம் - ஆயர்ப்பாடி அனைவரும் செல்வ வளம் நிறைந்தவர்கள் ஆகையால் செல்வச் சிறுமீர்காள். எங்கு போக வேண்டும் என்று உடன் தோழியர்கள் கேட்க, ஆண்டாளோ நந்தகோபன் - யசோதையின் மகனை கண்டு வருவோம் என்கிறாள். உடன் தோழியர் சும்மா இருப்பார்களா அவனை பார்ப்பதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று வினவ, நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறாள். முன்னர் தெரிவித்தப் படி பறை பறை என்று தான் பாடி கடைசியில் பறை என்பது என்ன என்று விவரிக்கிறாள் ஆண்டாள். அதிலும் நமக்கே என்பதை கவனிக்க வேண்டும்.  இங்கு நந்தகோபன் - யசோதை இளஞ்சிங்கம் என்று பாடிவிட்டு நாராயணனே என்று விளிக்கிறாளே, கண்ணன் என்று தானே சொல்லவேண்டும் என்று சந்தேகம் வரும். அதைப் பார்ப்போமே, நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒரு பாடலில்,

கண்ணன் கழலிணை, நண்ணும் மனமுடையீர்,

எண்ணும் திருநாமம், திண்ணம் நாரணமே.

கண்ணன் திருவடியினை அடையவேண்டும் என்று நினைப்பவர் எண்ணும் திருநாமம் நாராயணா என்று முன்னர் ஆழ்வார் தெரிவித்துள்ளதை ஆண்டாள் தன் பாடலில் வெளிப்படுத்துகிறாள். இப்படி நாம் செய்யத் தொடங்கிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் ஏன் அனைவரும் - பாரோர் புகழத் தொடங்கிவிடுவர். எப்படி நல்ல பிள்ளையாட்டம் நல்லா குளித்து ஆடை அணிந்து நாராயணா என்று சொல்கிறதே குழந்தை என்று பாராட்டுவர் உலகோர். ஆண்டாள் சிறுபெண் தானே அவளுக்கும் அனைவரும் பாராட்டவேண்டும் என்ற ஆசையிருக்காதா.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக