செவ்வாய், 15 டிசம்பர், 2020

பாரோர் பரமேற்றும் பாவை நோன்பு - கோமான் ஶ்ரீ பாலாஜி

மார்கழி மாதம் பிறந்தவுடன் நம் இல்லங்களில், எங்கும் ஆண்டாள் அருளிய திருப்பாவை ஒலிக்கின்றது. எல்லாவிடத்திலும் அதன் சத்ஸங்கங்கள் நடந்த வண்ணம் உள்ளது. முப்பதே முப்பது பாடல்கள் தான். நாளொன்றாய் முப்பது நாளைக்கு. எவ்வளவோ விளக்கங்கள், எத்தனையோ ஆச்சார்யர்களின் ஸ்வாபதேசம், சொல்மாலை, உயர்பாவை என்று விரிந்து கொண்டே செல்லும் அளவிற்கு அவ்வளவு அற்புத விஷயங்கள் நிறைந்தது இந்த திருப்பாவை. இப்பாடல்களை அருளிச் செய்த ஆண்டாள் நாச்சியாரோ ஏழு வயது சிறுமி தான். சின்னஞ்சிறு பெண் எப்படி இப்படி பாடியருளினாள். அவளை இவ்வாறு பாடியருளி நம்மை உய்விக்க செய்தது என்ன. ஏழு வயது சிறுமியான ஆண்டாளை,

‘அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்

தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்

பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்

வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து.’

என்று மணவாள மாமுனிகள் உரைப்பார். பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை இந்த ஆண்டாள். வளரும் பொழுதே பெரியாழ்வாரின் திருமொழிகளைக் கேட்டும், கண்ணனின் லீலைகளை கேட்டும் வளர்ந்து ஆழ்வாருடன் சேர்ந்து கண்ணன் மீது அபரிதமான ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ஞானத்தால் பகவத் விஷயங்கள் சர்வ வாதாரணமாய் ஒவ்வொரு பாட்டிலும். எப்படி இதெல்லாம் சாத்தியப்பட்டது. அவளை இயக்கிய உந்துசக்தி தான் என்ன.


‘பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு.’

என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் வேதம் அனைத்திற்கும் வித்தாகி எப்படியென்றால், பாதகங்கள் தீர்க்கும் பரமன் - நம்முடைய அனைத்து பாதகங்களையும் தீர்க்கும் பரமன்; பரமனடி காட்டும் வேதம் - அந்த பரமனை அடைந்திட காட்டும் வேதம், அப்படிப்பட்ட வேதம் அனைத்திற்கும் வித்து என்று பிரித்து பார்ப்போமாயின் அனைத்திற்குமே ஆணி வேர் இந்த திருப்பாவை தான் என்று பொருள்படும். இது எவ்வாறு சாத்தியமாகும்? வேதங்கள் அபௌருஷ்யம் - அதாவது யார் ஒருவராலும் இயற்றப்படவில்லை, வழி வழியாக பரம்பொருளை தொழுது ஓதப்பட்டவை என்றும்; இந்த யுகத்தில் அல்லது இந்த காலத்தில்தான் தோன்றியது என்றும் அறிய முடியா வண்ணம் உள்ளது. ஆனால் மேற்சொன்ன பாட்டின்படி வேதங்கள் அனைத்திற்கும் வித்தே இந்த திருப்பாவை தான் எனும்போது திருப்பாவை எந்தளவிற்கு உயர்வு என்பது புரியும்.

 ஸ்வாமி வேதாந்த தேசிகர் தன்னுடைய கோதாஸ்துதியில் 

‘ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்

கோதாமநந்ய: சரண: சரணம் ப்ரபத்யே’

என்று தொடங்கும் முதல் ஸ்லோகத்தில் திருப்பாவை அருளிய ஆண்டாள் தான் கருணை நிறைந்த பூமிபிராட்டி என்றும், கருணையே உருவான ஶ்ரீதேவியே இவள்தான் என்றும் பலவிடங்களிலும் விரிவாக அருளிச் செய்துள்ளார். பட்டர் அருளிச் செய்த தனியனில் 

நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்

பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ் ஸித்தம் அத்யா பயந்தீ

ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே

கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய :

ஸ்ருதி சதசிரஸ் ஸித்தம் - நூற்றுக்கணக்கான வேதங்களின் சிரஸ்ஸான உபநிஷத்களிலே கூறப்பட்டுள்ள பாரதந்தரத்தை - நாங்கள் உன்னை சார்ந்தேயிருக்கிறோம் என்பதை அறிவித்து, தன்னால் சூடிக் களைந்த பூமாலையாலே அவனை விலங்கிட்டு அனுபவித்த ஆண்டாளை வணங்குகிறேன் என்கிறார்.

 

ஸ்வாமி தேசிகன் பிரபந்த சாரத்தில் ‘நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்து’ என்று ஆறைந்தாக (6x5) அறிவித்தார். ஆறு ஐந்து ஐந்து பாசுரங்களாக கணக்கிட வேண்டும். இதில் முதல் ஐந்து பாடல்கள் தாங்கள் நோற்கவிருக்கும் நோன்பு பற்றிய விவரங்களையும், அடுத்த ஐந்து பாடல்களில் கண்ணனிடம் புதிதாக காதல் கொண்ட இளம்கன்னிகளை எழுப்புவதும், மூன்றாம் ஐந்து பாடல்களில் கண்ணனிடம் காதல் கொண்ட பெரும் கன்னிகளை அழைக்கச் செய்வதும், நான்காம் ஐந்தில் கண்ணன் திருமாளிகை வாயிற் காப்போன் மற்றும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பவதும், ஐந்தாம் ஐந்தில் கோகுலத்தில் அறிதுயில் கொள்ளும் கண்ணனை எழுப்பி தாங்கள் வந்த காரணத்தையும் தங்கள் கோரிக்கையைக் கேட்பதற்கேற்ற நிலையை அவனிடம் உருவாக்கிக் கொள்வதும், ஆறாம் ஐந்தில் தாங்கள் வந்ததே அவன் அருளை வேண்டித்தான் என்று அவனிடம் சரணடையும் நோக்காகக் கண்ணனிடம் தெரிவிப்பதுமாக என்று அழகாக விரித்துரைத்துள்ளார்.

 

சரி பாவை நோன்பு எதற்காக என்று கேள்வி எழலாம். கோதை தான் மட்டும் பேறு பெற்றால் போதாது; அதனை இந்த ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று இந்த வையத்திலிருப்போர் அனைவரையும் உய்வதற்கு வழி காண்பிக்கிறாள். இது பொது நலமே அன்றி சுயநலமன்று. சரி எதற்காக அவள் அந்த பாவை நோன்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அவள் தன் சிறுவயதில் கேட்ட தேவி காத்யாயனி பூண்ட நோன்பினை எண்ணினாள். ஏன் நாம் அதேபோன்று ஒரு நோன்பு நோற்கக்கூடாது என்று நினைத்தாள். உடன் திருவில்லிப்புத்தூர் கோகுலம் ஆனது தன் தோழிகள் கோபி கன்னிகையானார்கள், கண்ணனை எண்ணி அவன் அன்பினை வேண்டி நோன்பு நோற்கத் தொடங்கினாள். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் தன் தோழிகளுடன் பாடல்களை பாடிக் கொண்டு திருப்பாவையை அருளினாள்.

 

சரி பறை என ஏன் விளித்தாள் என்று பார்ப்போமாயின், நந்த கோகுலத்தில் கண்ணனை தேடி கண்டுபிடித்து அழிக்க கம்சன் விதவிதமான அசுரர்களை அனுப்பி வைத்தான். அப்படியிருக்க இந்த கன்னிகைகளோ கண்ணனிடம் நேராகச் சென்று உய்யும் வழி கொடு என்று கேட்டால், எங்கே அந்த கம்சன் கண்டுபிடித்துவிடுவானோ என்பதற்காக பூடகமாக பறை என்றே எல்லா பாடலிலும் தெரிவித்துள்ளாள். பெரியாழ்வாரின் திருமொழியிலும் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் என்று கூறி கம்சனின் அசுரர்களை தங்கள் கண்ணன் பிறந்தது ரோகிணியில் அல்ல என்று திசைமாற்றி விடுவதுபோல, இவர் இருப்பதோ கலியுகத்தில் கண்ணன் இருந்ததோ துவாபரயுகத்தில் அப்பா - மகள் இருவருக்கும் என்னவொரு பொருத்தம். விட்டுசித்தனின் மகள் தமிழ் மகளாயிற்றே. பண்டைய நாளில் முரசும், பறையும் தமிழரின் ஒலி அறிவிப்புகள். அதனையும் உள்வாங்கி பறையறைந்து கண்ணனை காண அந்த ஆறு முறைகளிலும் பறை ஒலிக்கிறாள். அதுமட்டுமல்ல, கடைசி இரண்டு பாடல்களில் கண்ணனிடம் ‘பறை பறை’ என்று நாங்கள் கூறுவது இதுதான் கோவிந்தா, ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றாமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ என்பாவாய்’ என்று பறையை சரணாகதி தத்துவத்தின் ஒரு குறியீடாக அவளே காண்பித்ததிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். பறையை வேறொரு அர்த்தமாக பகவத் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


இறைவனை எழுப்பி அவனிடம் சரண்புக முனைந்தவள், அரங்கனிடம் இணைந்தவளல்லவா நம் சூடிக் கொடுத்த சுடர்கொடி. அந்த பாவை நோற்ற நோன்பினால் உருவான திருப்பாவை நாலாயிரத்திலும் முதன்மை வாய்ப்பதும் இதனாலன்றோ.


இதற்கு மேலும் பல சிறப்புகள் கொண்ட திருப்பாவையை அதன் ஸ்வாபதேசம் (உள்ளர்த்தங்கள்) நம் ஆச்சார்யர்கள் எழுதி போந்ததின் மூலமாக அறிந்துக் கொண்டு நாரணனை அடையும் வழி நோக்கி பாவை நோன்பினை வரும் முப்பது நாட்களும் நாமும் போற்றிடுவோம்.

 

ஆண்டாள் திருவடிகளே சரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக