ஶ்ரீமத் பாகவதம் - 232

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினாறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் காளியனை நிக்ரஹஞ் செய்தலும் (தண்டித்தலும்), அவன் பத்னிகள் வந்து ஸ்தோத்ரம் செய்து வேண்டுகையில், அவனை அனுக்ரஹித்து விடுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், யமுனா ஜலம் காளியனென்னும் க்ருஷ்ண ஸர்ப்பத்தினால் தூஷிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதைச் சுத்தப்படுத்த, அந்த ஸர்ப்பத்தை அதினின்று துரத்தினான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மிகவும் அழகாகிய யமுனையின் நடுஜலத்திற்குள் ஸ்ரீக்ருஷ்ணன் ஸர்ப்பத்தை எவ்வாறு நிக்ரஹித்தான் (தண்டித்தான்)? அந்த ஸர்ப்பம் பல யுகங்களாக அந்த யமுனையில் வஸித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. பிறகு, அந்த ஸர்ப்பம் எப்படி ஆயிற்றோ, அதையும் எனக்குச் சொல்லுவீராக. ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! அளவற்ற மஹிமையுடையவனும், ஸ்வதந்த்ரனுமாகிய, பகவான் லீலைக்காக ஸ்ரீக்ருஷ்ணனென்னும் கோபாலனாக அவதரித்து செய்த, கம்பீரமான சரித்ரமாகிற அம்ருதத்தை அனுபவிக்கப் பெற்றவன் எவன் தான் போதுமென்று திருப்தி அடைவான்? எவனும் த்ருப்தி அடையமாட்டான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யமுனையில் காளியனுடைய மடு (நீர்நிலை) ஒன்றுண்டு. அது, அந்த ஸர்ப்ப ராஜனுடைய விஷ அக்னியினால் கொதிக்கப் பெற்றிருந்தது. அந்த மடுவுக்கு நேரில் ஆகாயத்தில் பறக்கும் பறவைகளும் கூட, அந்த விஷக் காற்று பட்ட மாத்ரத்தினால், ப்ராணன்களை (உயிரை) இழந்து விழுவது வழக்கம். அந்த மடுவின் கரையிலுள்ள மரம் முதலிய அசையாத ஜீவன்களும், மிருகம் முதலிய அசையும் தன்மையுள்ள ஜீவன்களும், ஜலத் திவலைகளை ஏந்திக் கொண்டு வருகிற மடுக்காற்றினால் தீண்டப்பெற்று, மாண்டு போகின்றன. காளிய மடுவின் ப்ரபாவம் அப்படிப்பட்டது. 

துஷ்டர்களை அடக்குவதற்காகவே அவதரித்திருக்கிற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், காளிய மடு (நீர்நிலை) காற்று பட்ட மாத்ரத்தில் நுழைந்து, நிறைந்து, வேலை செய்வதான கொடு வேகமுள்ள விஷ வீர்யம் அமைந்திருப்பதையும், அதன் ஸம்பந்தத்தினால் யமுனா நதி முழுவதும் பானம் செய்ய உபயோகப்படாமல் கெட்டிருப்பதையும் கண்டு, அங்கு கிளைகளுடன் உயர்ந்து வளர்ந்திருக்கிற ஒரு கதம்ப வ்ருக்ஷத்தின் (மரத்தின்) மேல் ஏறி, அரை நாண் மாலையை அழுந்தக் கட்டிக்கொண்டு, உள்ளங்கையினால் புஜத்தைத் தட்டி, மிகவும் உயர்ந்திருக்கின்ற அந்தக் கதம்ப வ்ருக்ஷத்தினின்று (மரத்திலிருந்து) காளிய மடுவின் விஷ ஜலத்தில் குதித்தான். 

அந்தக் காளிய ஸர்ப்பத்தின் மடு, புருஷ ச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் வேகமாகக் கிளம்பிப் பாய்ந்ததனால், கலக்கமுற்ற ஸர்ப்பங்களின் விஷங்களால் வளர்ந்த ஜல ப்ரவாஹமுடையதாகி, விஷ வேகத்தினால் கொதிக்கின்ற பயங்கரமான அலைகள் கிளம்பப் பெற்று, நாற்புறத்திலும் நூறு வில் அளவு தூரம் ஏறிப் பாய்ந்தது. ஆனால், அளவற்ற பலமுடைய அந்த மஹானுபாவனுக்கு, அது எவ்வளவு? பிறகு மத்த கஜத்தின் (மதம் பிடித்த யானையின்) பராக்ரமம் போன்ற பராக்ரமமுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், புஜ தண்டங்களால் (கைகளால்) ஜலத்தை அடித்து, விளையாடிக் கொண்டிருக்கையில், ஜலத்தின் கோஷத்தைக் கேட்டு, காளியனென்னும் ஸர்ப்பராஜன், தன்னுடைய வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) மடுவை (நீர்நிலையை) அவமதிக்கக் கண்டு, அதைப் பொறுக்க முடியாமல், தன் ஸைன்யங்களோடு மேல் கிளம்பி வந்தான். 

ஸர்ப்பராஜனான அந்தக் காளியன், பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிகவும் அழகியனும், ஸுகுமாரனும், நீலமேகம் போல் நிர்மலனும், மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவால் திகழ்கின்றவனும், பீதாம்பரம் உடுத்தியவனும், புன்னகையினால் அழகான முகமுடையவனும், தாமரை மலரின் உள்ளிதழ் போன்ற பாதங்களுடையவனும், நிர்பயமாய் (பயமின்றி) விளையாடிக் கொண்டிருப்பவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, மர்ம ஸ்தானங்களில் (உயிர் நிலைகளில்) கடித்துத் தன் உடலினால் சுற்றிக் கொண்டான். அவ்வாறு அவன் காளிய நாகத்தின் உடலால் சுற்றப்பட்டு, சேஷ்டை (செயல்கள்) கண்ணுக்குத் தெரியாதிருப்பதைக் கண்டு, அவனுடைய அன்பு நண்பர்களான கோபர்கள், பயத்தினால் வருந்தி, சரீரம், நண்பர், பணம், பெண்டிர், ஸுகம், இவையெல்லாவற்றையும் அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அர்ப்பணம் செய்திருப்பவர்களாகையால், துக்கம், சோகம், பயம் இவைகளால் மதி மயங்கி விழுந்தார்கள். 

பசுக்களும், எருதுகளும், கன்றுகளும் மிகவும் வருந்திக் கதறிக்கொண்டு, அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலேயே கண்களை நிறுத்தி, அழுபவை போன்று நின்றிருந்தன. அப்பொழுது கோகுலத்தில் ஆகாயம், பூமி, சரீரம் ஆகிய மூன்று இடங்களிலும் பயம் ஸமீபித்திருப்பதை அறிவிப்பவைகளும், மிக்க பயங்கரங்களுமாகிய மிகக்கொடிய மூன்று வகை உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாயின. 

நந்தன் முதலிய கோபாலர்கள், அந்த உத்பாதங்களைக் (தீய அறிகுறிகளைக்) கண்டு பயந்து, ஸ்ரீக்ருஷ்ணன் பலராமனை விட்டுத் தனியே பசு மேய்க்கப் போயிருக்கிறானென்பதையும் அறிந்து, அவனுடைய மஹிமையை அறியாதவர்களாகையால், அந்த அபசகுனங்களால் (கெட்ட அறிகுறிகளால்) அவன் மரணம் அடைந்தானென்று நினைத்து, அவனிடத்திலேயே ப்ராணன்களை (உயிர்களை) உடையவர்களாகையாலும், அவனிடத்திலேயே மனமுடையவர்களாகையாலும், சோகம், பயம் இவை தலையெடுத்து வருந்தி, பசுக்கள் கன்றுகளிடத்தில் போல மிகுந்த வாத்ஸல்யமுடையவர்களாகி, சிறுவர், கிழவர், பெண்டிர் முதற்கொண்டு எல்லோரும், மன வருத்தத்தினால் முகம் வாடி, ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன் கோகுலத்தினின்று புறப்பட்டார்கள். 

மது குலத்திற்கு அலங்காரனும், மஹானுபாவனுமாகிய பலராமன், தம்பியாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ரபாவத்தை (பெருமையை) அறிந்தவனாகையால், அவர்கள் அவ்வாறு பயந்து புறப்படுவதைக் கண்டு சிரித்து, ஒன்றும் பேசாதிருந்தான். தங்கள் அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைத் தேடிக்கொண்டு போகிற அந்த நந்தாதி கோபாலர்கள், பகவானுடைய பாதங்களுக்கு அஸாதாரண சிஹ்னங்களான (அடையாளங்களான) த்வஜம், வஜ்ரம் முதலிய ரேகைகள் அமைந்திருக்கிற அடி வைப்புக்களால் அறிவிக்கப்பட்ட வழியைக் கண்டு பிடித்துக் கொண்டு, யமுனைக் கரைக்குச் சென்றார்கள். 

அவர்கள், பசுக்கள் போன வழியில் மற்ற இடைப் பிள்ளைகளுடைய அடிவைப்புக்களின் இடை மிடையில் தாமரை, யவம், மாவெட்டி, வஜ்ரம், த்வஜம் முதலிய ரேகைகளோடு கூடின ஜகந்நாதனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடி வைப்புக்களைக் கண்டு கொண்டே விரைவுடன் சென்றார்கள். அந்த நந்தாதிகள் அவ்விடம் சென்று, அங்குக் காளிய மடுவின் நடு ஜலத்தில் ஸ்ரீக்ருஷ்ணன் ஸர்ப்பத்தின் உடலினால் சுற்றப்பட்டுச் சேஷ்டை (செயல்) அற்றிருப்பதையும், மடுவின் கரையில் இடையர்கள் மூர்ச்சித்திருப்பதையும், நாற்புறத்திலும் பசுக்கள் மதிமயங்கிக் கதறிக் கொண்டிருப்பதையும் கண்டு வருந்தி, மிகவும் மோஹித்தார்கள். 

கோபிகைகள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸ்னேஹம் நிறைந்த புன்னகை கடைக் கண்ணோக்கங்கள், இனிய உரைகள் ஆகிய இவற்றையெல்லாம் நினைத்து, மிகவும் அன்பிற்கிடமான அவன் ஸர்ப்பத்தினால் பிடியுண்டிருக்கக் கண்டு, மிகவும் வருந்தி, தங்கள் அன்பனைப் பிரிந்தமையால் மூன்று லோகங்களும் சூன்யமாயிருக்கக் கண்டார்கள். அவர்கள், தன் குழந்தையான க்ருஷ்ணனைப் பற்றி மிகவும் வருந்தி, மடுவில் விழ முயல்கின்ற யசோதையைப் பிடித்துத் தடுத்து, அவளோடொத்த மன வருத்தமுடையவர்களாகையால், கண்ணீர் தாரை தாரையாகப் பெருகப்பெற்று, கோகுலத்திற்கெல்லாம் அன்பனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பூதனா ஸம்ஹாராதி வ்ருத்தாந்தங்களைச் சொல்லிக்கொண்டு, செத்தாற் போல நின்றிருந்தார்கள். 

க்ருஷ்ணனிடத்திலேயே ப்ராணன்களையுடைய நந்தாதிகள், அந்த மடுவில் ப்ரவேசிக்க முயன்றிருப்பதைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய ப்ரபாவத்தை அறிந்தவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய பலராமன், அவர்களை வேண்டாமென்று தடுத்தான். பெண்களும், அறியாத சிறுவர்களும் முதற்கொண்டு, கோகுலம் முழுவதும் இவ்வாறு தனக்காக மிகவும் துக்கித்திருப்பதைக் கண்டு, மனுஷ்யர்களின் பதவியை அனுஸரித்திருக்கின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஒரு முஹூர்த்த காலம் இருந்து, அப்பால் அந்த ஸர்ப்பத்தை உதறி, அதன் கட்டினின்று வெளிப்பட்டு வந்தான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணர் தன் சரீரத்தைப் பெருக்கச் செய்ய, காளியன் அதைச் சுற்றிக் கொண்டிருக்கிற தன் சரீரம் வருந்தி, அவ்வாறே அதைச் சுற்றி கொண்டிருக்க முடியாமல் அவனை விட்டு, கோபமுற்று, படங்களை (பணங்களை) உயரத் தூக்கி மூச்செறிந்து, மூக்கு ரந்தங்களில் (த்வாரங்களில்) விஷம் நிரம்பப் பெற்று, ஜ்வலித்துக் கொண்டு, அசையாதிருக்கிற கண்களுடன், வாயில் தீப்பிழம்பைக் கக்கிக் கொண்டு, அந்த பரமபுருஷனை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். 

ஸ்ரீக்ருஷ்ணனும், இரண்டு நுனிகளையுடைய நாக்கினால் இரண்டு கடைவாய்களையும் அடிக்கடி நக்கிக் கொண்டிருப்பவனும், மிகவும் பயங்கரமான விஷாக்னியால் நிறைந்த கண்களுடையவனுமாகிய அந்தக் காளியனை, கருடன் போல நாற்புறத்திலும் விளையாடிக் கொண்டே சுற்றிச் சுற்றி வந்தான். அந்தக் காளியனும், அவனைக் கடிப்பதற்கு ஸமயம் பார்த்துக்கொண்டே அவனோடு கூடச் சுற்றிச் சுற்றி வந்தான். ஸமஸ்த கலைகளுக்கும் ஆதி குருவாகிய அந்த ஆதி புருஷன், இவ்வாறே சுற்றுவதிலேயே வீர்யமெல்லாம் ஒடுங்கப் பெற்றுத் தோள்களைத் தூக்கிக் கொண்டிருக்கிற அந்த ஸர்ப்ப ராஜனுடைய அகன்றவைகளான சிரங்களின் (தலைகளின்) மேல் ஏறி, அச்சிரங்களிலுள்ள (தலைகளில் உள்ள) ரத்ன ஸமூஹங்களின் ஒளிகள் பட்டு, மிகவும் சிவந்த பாதார விந்தங்களுடையவனாகி, நர்த்தனம் செய்தான் (ஆடினான்). அவ்வாறே ஸ்ரீக்ருஷ்ணன், காளியன் உச்சியில் நர்த்தனஞ் செய்ய (ஆட) முயன்றிருப்பதைக் கண்டு, அவனுடைய பக்தர்களான கந்தர்வர்களும், ஸித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும், தேவதைகளும், அவரவர்களுடைய மடந்தையர்களும், ப்ரீதியினால் அந்தப் பகவானைப் பணிவதற்கு, ம்ருதங்கம், பணவம், ஆனகம் முதலிய அழகு மிகுந்த பற்பல வாத்ய கோஷங்களோடும், சிறந்த பாட்டுக்களோடும், பூ மழை பொழிந்து, காணிக்கைகளோடும் ஸ்தோத்ரங்களோடும் விரைந்து வந்தார்கள். 

நூறு தலைகளுடையவனும், ஆயுளும், பலமும் க்ஷீணிக்கப் பெற்றுச் சுழன்று கொண்டிருப்பவனுமாகிய அந்தக் காளியனுடைய தலைகளில் எந்தெந்தத் தலை வணங்காமல் உயரத் தூக்கிக் கொண்டிருந்ததோ, அதையெல்லாம் துஷ்டர்களை (கொடியவர்களை) அடக்கும் தன்மையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், பாதங்களால் மிதித்துத் தேய்த்தான். அப்பொழுது, அந்தக் காளிய நாகன் வாய்களினின்றும், மூக்குகளினின்றும் உஷ்ணமான ரத்தத்தை அதிகமாகக் கக்கிக் கொண்டே, மிகவும் மூர்ச்சை அடைந்தான். (சிறிது நினைவு வந்ததும்) மீளவும் அவன் கோபாவேசமுற்றுக் கண்களால் விஷத்தைக் கக்குவதும், பெரு மூச்செறிவதுமாகி, தலைகளை உயரத் தூக்குகையில், கந்தர்வாதிகளால் புஷ்பங்களை இறைத்துப் பூஜிக்கப் பட்ட ஸ்ரீக்ருஷ்ணன், அந்தந்த தலைகளின் மீது ஏறி, நர்த்தனம் செய்து, அவற்றைக் குனியச் செய்து அடக்கி, அவனைத் தண்டித்தான். அந்த ஸமயத்தில், அவன் சேஷாஸனத்தில் வீற்றிருக்கின்ற பரமபுருஷன் போலப் புலப்பட்டான். 

மன்னவனே! அந்தப் பகவானுடைய தாண்டவத்தினால் பீடிக்கப்பட்ட பணங்களின் (படங்களின்) ஸமூஹமுடையவனும், சரீரமெல்லாம் முறிந்து வருந்துகின்றவனுமாகிய அக்காளியன், முகங்களால் ரத்தத்தைக் கக்கிகொண்டே, அப்பொழுது அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த பூதங்களுக்கும் நியாமகனும் (நியமிப்ப்பவனும்), புராண புருஷனுமாகிய ஸ்ரீமந்நாராயணனாக நினைத்து, அவனையே மனத்தினால் சரணம் அடைந்தான். 

உலகங்களெல்லாம் வயிற்றில் அடங்கப் பெற்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பெரும் பாரத்தினால் பீடிக்கப்பட்டு, குதிகாலடிகளால் நாற்புறத்திலும் முறிக்கப்பட்டவைகளுமான குடைகள் போன்ற பணங்களையுடைய அந்தக் காளியன் வருந்துவதைக் கண்டு, அவனுடைய பத்னிகள் துக்கித்து, ஆடை, ஆபரணம், தலைமயிர்ச்சொருக்கு முதலியவை அவிழ்ந்து அலையப்பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனிடம் ஓடிவந்தார்கள். அவர்கள் மிகவும் பயந்த மனமுடையவர்களாகி, குழந்தைகளை முன்னிட்டுக்கொண்டு, பூமியில் சரீரங்களைத் (உடல்களை) தண்டம் போல சாய்த்து, ஸமஸ்த பூதங்களுக்கும் ரக்ஷகனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனை நமஸ்கரித்தார்கள். பிறகு, பதிவ்ரதைகளான அந்த நாகபத்னிகள், பர்த்தாவின் அபராதத்தைப் பொறுப்பிக்க விரும்பி அஞ்சலி செய்து, சரணங் கொடுப்பவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனையே உபாயமாக நிச்சயித்தார்கள்.

நாகபத்னிகள் சொல்லுகிறார்கள்:- அபராதம் செய்த இந்நாகராஜனை நீ தண்டித்தது யுக்தமே (ஸரியே). துஷ்டர்களைத் (கொடியவர்களைத்) தண்டிக்கும் பொருட்டல்லவோ உன்னுடைய அவதாரம்?  எதிரிகளிடமும், தம் பிள்ளைகளிடத்திலும் ஸமநோக்கு உள்ள நீ, துஷ்டர்களைத் தண்டனை செய்யினும், உடனே அந்தத் தண்டனைக்கு ஹிதரூபமான பலனையே அறிவிக்கின்றாய். நீ சத்ருக்கள் (எதிரிகள்) என்றும், மித்ரர்கள் (நண்பர்கள்) என்றும் பேதம் பாராமல், அபராதம் செய்தவர்கள் எல்லோரையும் தண்டிக்கின்றாய். ஆகையால், நீ எல்லோரையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையனே. தந்தை பிள்ளையின் ஹிதத்திற்காக அவனைச் சிக்ஷிப்பது (தண்டிதுத் திருத்துவது) போல, நீ எல்லோர்க்கும் ஹிதத்தையே விரும்பித் தண்டனை செய்கின்றாய். அது அஹிதம் போல (நல்லது அன்று என்று) தோன்றினும், உண்மையில் ஹிதமாகவேயிருக்கும். ஆகையால், நீ செய்த தண்டனை, எங்கள் விஷயத்தில் அனுக்ரஹமே. நீ துஷ்டர்களைத் தண்டிப்பது அவர்களின் பாபத்தைப் போக்குவதற்காகவே. இந்த ஜீவனுக்கு எந்தப் பாபத்தினால் ஸர்ப்பஜன்மம் நேர்ந்ததோ, அந்தப் பாபம் இப்பொழுது உன்னுடைய தண்டனையால் தீர்ந்தது. ஆகையால் உன் கோபம், அனுக்ரஹமேயென்று தெரிகின்றது. 

எங்கள் பர்த்தாவாகிய (கணவனாகிய) இவன், பூர்வ ஜன்மத்தில் அஹங்காரமின்றிப் பெரியோர்களைப் பூஜித்து, என்ன தவம் செய்தானோ? அல்லது ஸமஸ்த பூதங்களிடத்திலும் மன இரக்கமுற்று ஏதேனுமொரு தர்மத்தையாவது அனுஷ்டித்திருக்க வேண்டும். ஏனென்றால், போக மோக்ஷங்களைக் கொடுத்து எல்லோரையும் உஜ்ஜீவிக்கச் செய்கிற (நல்வழிப்படுத்துகிற) நீ, இவன் விஷயத்தில் ஸந்தோஷம் அடைகின்றாயல்லவா? இல்லையாயின், இவனுடைய பாபங்களெல்லாம் தீரும்படி தண்டனையென்னும் வ்யாஜத்தினால் (சாக்கினால்), நீ இவனை அனுக்ரஹித்தமை எவ்வாறு சேரும்? ஆகையால் இவன் ஜன்மாந்தரத்தில் (முன் பிறவியில்) தவம் முதலிய நற்செயல் ஏதேனும் செய்திருக்க வேண்டுமென்று ஊஹிக்கிறோம். (நீ தண்டிப்பதற்கு முன்பு, மிகவும் கொடிய ஸர்ப்ப ஜன்மம் பெற்ற இவன், நீ ஸந்தோஷம் அடையுமாறு என்ன தவம் செய்தான்? அல்லது என்ன தர்மம் செய்தான்? ஒன்றும் செய்யவில்லை.) 

தேவனே! இந்தக் காளியனுக்கு உன் பாததூளி படும்படியான யோக்யதை உண்டானது எந்தப் புண்யத்தின் ப்ரபாவமோ? எங்களுக்குத் தெரியவில்லை. இவன் இந்த ஸர்ப்ப ஜாதியில், அப்படிப்பட்ட புண்யம் செய்தான் என்பதற்கு இடமே இல்லை. ப்ரஹ்மாதி தேவதைகளால் விரும்பப்பட்ட பாத தூளியுடைய மடந்தையர் மணியான ஸ்ரீமஹாலக்ஷ்மியும், வேறு விருப்பங்களையெல்லாம் துறந்து, இந்திரியங்களை அடக்குகையாகிற வ்ரதத்தையுடையவளாகி, உன்பாத தூளியை விரும்பி, வெகு காலம் தவம் செய்தாளல்லவா? அப்படிப்பட்ட உன் பாத தூளி இவனுக்கு நேர்ந்தமையால், இவன் பூர்வ ஜன்மத்தில் ஏதேனும் ஒரு புண்ய கர்மம் செய்திருக்கவேண்டுமென்று தோற்றுகிறது. உன் பாத தூளியைப் பெற்ற பெரியோர்கள், ஸ்வர்க்க லோக போகங்கள், பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கை, ப்ரஹ்மாவின் ஐச்வர்யம், அதலம் முதலிய கீழ் உலகங்களுக்கு ப்ரபுவாயிருக்கை, அணிமாதி யோக ஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் – அவையாவன:- 

1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3. லகிமா - லேசாகச் செய்தல் 

4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7. ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)

கைவல்யம் (கேவல ஆத்ம அனுபவம்) ஆகிய இவற்றில் எதையும் விரும்பமாட்டார்கள். 

நாதனே! இந்த நாகராஜன், தமோ குணம் நிறைந்த ஸர்ப்ப ஜன்மம் பெற்றுக் கோபத்திற்கிடமாயிருப்பினும், பிறர்க்கு அரிதான உன் பாத தூளி தன் மேல் படப் பெற்றான். பிறர்க்குக் கிடைக்க அரிதான உன்னுடைய ஸாக்ஷாத்காரமும் (நேராகப் பார்த்தல்) இவனுக்குக் கிடைத்தது. இந்த ஸம்ஸாரமாகிற சக்ரத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவனுக்கு, உன்னுடைய ஸாக்ஷாத்காரம் (நேராகப் பார்த்தல்) திடீரென்று உண்டாகும். வாத்ஸல்ய (பரிவு, அன்பு) நிதியாகிய நீ, யாத்ருச்சிகம் (தற்செயலாக ஏற்பட்ட்டது) முதலிய ஸுக்ருத (நற்செயல்) விசேஷங்களாகிற வ்யாஜ (சாக்கு) மாத்ரத்தைக் கொண்டு, ஜீவாத்மாக்களை அனுக்ரஹிக்கின்றாய். இல்லையாயின், தோஷமில்லாதவன் ஒருவனும் அகப்படானாகையால், உன் க்ருபைக்கு இடமே கிடைக்காது போகும். 

ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), மஹாபுருஷனும், மஹானுபாவனும், ஸமஸ்த பூதங்களிலும் அந்தர்யாமியாய் அமைந்திருப்பவனும், ஸமஸ்த பூதங்களுக்கும் ஆதாரமாயிருப்பவனும், ஆதிகாரணனும் ஸர்வஸ்மாத்பரனும் (எல்லவற்றையும் விட உயர்ந்தவனும்), பரமாத்மாவுமாகிய உனக்கு நமஸ்காரம், ப்ராணிகளுடைய அனிஷ்டங்களைப் (துன்பகளைப்) போக்குவதற்கு உரிய அறிவும், அவர்களுடைய இஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்குரிய அறிவும், ஆகிய ஜ்ஞான விஜ்ஞானங்களுக்கு நிதி போன்றிருப்பவனும், ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவற்றவனாகையால் பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனும், சேராதவற்றைச் சேர்க்குந் திறமை முதலிய சக்திகள் அளவற்றிருப்பவனும், ஹேய (கெட்ட) குணங்களற்றவனும், சேதனா சேதனங்களின் விகாரங்கள் (மாற்றங்கள்) தீண்டப் பெறாதவனும், சேதனா சேதனங்களின் மூலமாய் விகாரங்களுக்கு (மாற்றங்களுக்கு) இடமாயிருப்பவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். 

கால ஸ்வரூபனும், காலத்திற்கு அந்தராத்மாவாயிருப்பவனும், நிமிஷம் (மணித்துளி) முதல் ஸம்வத்ஸரம் (ஆண்டு) வரையிலுள்ள கால அவயவங்களுக்கு (காலத்தின் பகுதிகளுக்கு) ஸாக்ஷியாயிருப்பவனும், ப்ரபஞ்ச ஸ்வரூபனும் (உலக வடிவானவனும் – தானே உலகமாக ஆனவனும் (மண் குடத்திற்கு மண் போல உபாதன காரணனும்), ப்ரபஞ்சத்தைப் படைக்கும் நிமித்த காரணனும் (மண் குடத்திற்குக் குயவன் போல), ப்ரபஞ்சத்தைப் படைப்பதற்கு வேண்டிய உபகரணம், அதிகரணம் முதலிய ஸஹகாரி (கருவிகள் – குயவன் உபயோகிக்கும் சக்ரம், தடி போன்றவை) காரணங்களும் தானேயாயிருப்பவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள், சப்தம் முதலிய அவற்றின் மாத்ரைகள், இந்த்ரியங்கள், ப்ராணன்கள், மனம், புத்தி, வாஸனை இவையெல்லாம் தானாயிருப்பவனும், இவற்றிற்கு அந்தராத்மாவாயிருப்பவனும், ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களால் விளையும் தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அபிமானத்தினால் ஜீவாத்மாக்களுக்கு இயற்கையில் ஏற்பட்டிருப்பதான தன் அனுபவத்தை மறைக்கின்றவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். 

தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் (வரையறைகள்) அற்றவனும், விகாரங்களின்றி (மாறுபாடுகள் இன்றி) என்றும் ஒருவாறாயிருப்பவனும், ஸர்வஜ்ஞனும் (அனைத்தையும் அறிபவனும்), அணு ஸ்வரூபர்களான ஜீவாத்மாக்களிடத்தில் உட்புகுந்து நியமிக்கும்படி அவர்களைக் காட்டிலும் ஸுக்ஷ்மமாய் (கண்ணுக்குப் புலப்படாமல் நுட்பமாய்) இருப்பவனும், வேதங்களுக்கு இணங்காதபடி பலவாறு பிதற்றுகிற மூடர்களுக்கு அவர்களின் வாதங்களுக்குத் தகுந்தபடி தோற்றுகின்றவனும், சப்தங்களால் அறிவிக்கப்படும் பொருள்கள், பொருள்களை அறிவிக்கும் சப்தங்கள் ஆகிய இவற்றின் சக்திகளுக்கு நிர்வாஹகனுமாகிய (நியமிப்பவனுமகிய) உனக்கு நமஸ்காரம். 

தன் ஸ்வரூப, ஸ்வபாவாதிகளை (குணங்களை) அறிவதற்குச் சாஸ்த்ரத்தையே காரணமாகவுடையவனும், அந்தச் சாஸ்த்ரத்தைத் தானே வெளியிடுகின்றமையால் அதற்குக் காரணனும், அந்தச் சாஸ்த்ரத்தை வெளியிடுவதற்குரிய அறிவுடையவனும் ப்ரவ்ருத்தி கர்மம் (உலகியல் வாழ்வை வளர்க்கும் செயல்கள்), நிவ்ருத்தி கர்மம் (உலகியல் வாழ்வை விலக்கும் செயல்கள்) என்கிற இரு வகைக் கர்மங்களுக்கும் நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), உபநிஷத்துக்களின் அறிவை விளைக்கின்றவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். 

ஸ்ரீக்ருஷ்ணனென்னும் பெயர் பூண்டு, வஸுதேவனுக்குப் பிள்ளையாய் அவதரித்தவனும், ராமனென்னும் பெயர் பூண்டு தசரதனுக்குப் பிள்ளையாய் அவதரித்தவனும், ப்ரத்யும்ன, அநிருத்தாதி வ்யூஹ அவதாரங்கள் செய்தவனும், தன் பக்தர்களைப் பாதுகாப்பவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். பக்தர்களின் ஜ்ஞானத்தை விளங்கச் செய்பவனும், ஸத்வாதி குணமயமான தன் மாயையால் தன்னிடத்தில் பக்தியில்லாத ஆத்மாக்களின் ஜ்ஞானத்தை மறைப்பவனும், குண பரிணாம ரூபமான மனத்தின் வ்ருத்தியாகிய உபாஸனாதி (த்யான) ஜ்ஞானத்தினால் அறியத் தகுந்தவனும், ஸமஸ்த ஜீவாத்மாக்களுடைய அந்தக் கரண (மனதின்) வ்ருத்திகளை (எண்ணங்களை) எல்லாம் ஒரே தடவையில் ஸாக்ஷாத்கரிப்பவனும் (நேராக அறிபவனும்), தனக்கு அஸாதாரணமாயிருப்பதும், அளவற்றதும், ஸ்வபாவ ஸித்தமும் (இயற்கையாகவே உள்ளதும்), என்றும் குறுகாததுமான ஜ்ஞானமுடையவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். 

ஹ்ருஷீகேசனே! அவ்யக்தமான (கண்களுக்குப் புலப்படாத) விளையாடல்களுடையவனும், ஸமஸ்தமான தேவாதி (தேவர், மனிதர் முதலிய) பதார்த்தங்கள், அவற்றின் புத்தி (அறிவு) வ்ருத்திகள் (செயல்கள்) ஆகிய இவற்றின் ஸித்திக்குக் காரணமாயிருப்பவனும், ஸம்ஸார தாபங்களால் வருந்துகின்ற ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கும் பொருட்டு, யாத்ருச்சிகாதி (தற்செயலாக நிகழ்ந்த, நமக்கே அறியாமல் நிகழ்ந்த) ஸுக்ருதங்களில் (நற்செயல்கள்) ஏதேனுமொன்றில் சிறிதாயினும் கிடைக்குமோவென்று சிந்தித்துக்கொண்டிருப்பவனும், ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு வரையிலுள்ள ஜகத்தையெல்லாம் த்ருணமாக (புல் என) நினைத்து, பேசாமல் உதாஸீனமாய் (பொருட்படுத்தாது, ஒதுங்கி) இருப்பவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். 

பக்த மோக்ஷங்களை உபயோகப்படுத்தும் இடம் அறிந்தவனும் (ஆச்ரிதர்களைப் {அடியவர்களை} பந்தத்தினின்று விடுவிப்பவனும், அல்லாதவர்களுக்கு ஸம்ஸார பந்தத்தை மேன்மேலும் விளைத்துக் கொண்டிருப்பவனும்) புருஷார்த்தங்களை எல்லாம் கொடுக்கும் ப்ரபுவும், ஸமஸ்த சப்தங்களுக்கும் பொருளாயிருப்பவனும், எல்லாப்பொருள்களிலும் விலக்ஷணனாய் (வேறானவனாய்) இருப்பவனும், எல்லாப் பொருள்களின் ஸத்தாதிகளுக்குக் (இருப்பு, நீடிப்பு, அழிவு இவற்றிற்குக்) காரணனும், எல்லாப் பொருள்களின் ஸத்தாதிகளையும் (இருப்பு, நீடிப்பு, அழிவு இவற்றை) ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய (நேரில் அறிபவனுமாகிய), உனக்கு நமஸ்காரம். 

நீ அனாதியான காலமென்னும் சக்தியுடன் கூடி, ஸங்கல்பம் தவிர மற்ற வ்யாபாரங்களெவையுமின்றி, ரஜஸ், ஸத்வம், தமஸ் என்னும் குணங்களால் இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழிவு) நடத்திக்கொண்டு, ரஜோ குணம், தமோ குணம் ஆகிய இக்குணங்களை ஸ்வபாவமாகவுடைய ஜீவாத்மாக்களை அனுக்ரஹம் அமைந்த கண்ணோக்கத்தினால் அறிவுடையவர்களாகச் செய்து கொண்டு, தடைபடாத விளையாடல்களை உடையவனாகி, ஸங்கல்பங்களை நடத்துகின்றாய். நீ ப்ரளய தசையில் (ஊழிக் காலத்தில்), ஜகத்தாக விரியவேண்டுமென்று ஸங்கல்பித்துக்கொண்டு, ஸங்கல்பத்தை ஒழிய வேறொரு வ்யாபாரமுமின்றிக் கர்ம வாஸனைகளாகிற (முன் செய்த வினைகளின் ஆழ்ந்த மனப்பதிவுகளாகிற) ஸ்வபாவங்களோடு கூடி, ஜ்ஞான ஸங்கோசத்தை (அறிவு குறைவு) அடைந்து, அஸத்ப்ராயர்களாய் (மூடர்களாய்) இருக்கிற ஜீவாத்மாக்களுக்கு, கரண (இந்த்ரியங்கள்) களேபராதிகளைக் (சரீரம்) கொடுத்து ஜ்ஞான விகாஸத்தையும் (அறிவு மலர்ச்சியையும்) விளைத்து, கரையேற்ற விரும்பி, தடைபடாத விளையாடல்களுடையவனாகி, இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழிவு) நடத்துகின்றாய். ஸத்வ குணம் தலையெடுத்துச் சாந்தமாயிருக்கும் ப்ரஜைகளும், ரஜோ குணம் தலையெடுத்து அசாந்தமான ப்ரஜைகளும், தமோகுணம் தலையெடுத்து மூடங்களான ப்ரஜைகளும், உனக்குச் சரீரங்களே. ஆகையால், எல்லா ப்ரஜைகளும் உனக்கு அனுக்ரஹிக்கத் தகுந்தவைகளே. ஆயினும், ஜகத்தின் ஸ்திதியை நடத்த முயன்று, ஸத்துக்களின் (சான்றோர்களின்) தர்மங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அவதரித்திருக்கின்ற உனக்கு, ஸத்வ குணம் தலையெடுத்து சாந்தமாயிருக்கும் உன் சரீரங்களான ப்ரஜைகளே, ரக்ஷிப்பதற்கு இஷ்டங்களாயிருக்குமல்லவா? 

இவன் (காளியன்) இதுவரையில் தாமஸனாய் இருந்தானாயினும், இப்பொழுது உன்னால் தண்டிக்கப்பட்டு, தமோ குணம் நீங்கி, உபசாந்தனாய் (அமைதி அடைந்தவனாய்) இருக்கிறானாகையால், பாதுகாக்கத் தகுந்தவனே. ப்ரபுவாயிருப்பான், தன் ப்ரஜைகள் செய்த அபராதத்தை ஒருகால் பொறுப்பது யுக்தமேயல்லவா? மற்றும் அறியாமையால் நேர்ந்த அபராதத்தை அவச்யம் பொறுக்க வேண்டும். 

ராக (விருப்பு) த்வேஷாதிகள் (வெறுப்பு) தீண்டப்பெறாமல் சாந்தமான மனமுடையவனே! இவன் மூடன்; ஆதலால், உன்னை அறிந்தவனல்லன். இவனுடைய அபராதத்தை நீ பொறுப்பது யுக்தமே (ஸரியே). ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! இந்த நாகராஜன் உன்னால் தண்டிக்கப்பட்டு ப்ராணன்களை இழக்கும்படியான தசையை அடைந்திருக்கிறான். ஆகையால், இவனை அனுக்ரஹிப்பாயாக. ஸாதுக்களால் தயை செய்யத் தகுந்த மடந்தையர்களாகிய எங்களுக்கு, பதியாகிற ப்ராணனைக் கொடுப்பாயாக. உன் ப்ருத்யர்களாகிய (அடியவர்களாகிய) நாங்கள், உன் கட்டளைப்படி நடக்க ஸித்தமாயிருக்கின்றோம். நாங்கள் எதை அனுஷ்டிக்க வேண்டுமோ, எதை ச்ரத்தையுடன் செய்தால் இந்தக் காளியன் இப்பொழுது சேர்த்திருக்கின்ற மரண பயத்தினின்று விடுபடுவானோ, அப்படிப்பட்ட கார்யத்தை எங்களுக்கு நியமிப்பாயாக.

ஶ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு நாக பத்னிகளால் துதித்து வேண்டப்பெற்று, காலடிகளால் தலைகள் முறிந்து மூர்ச்சித்திருக்கின்ற, காளியனை விட்டான். பிறகு, காளியன் மெல்ல மெல்ல இந்த்ரியங்களும், ப்ராணன்களும், தன்னிலைமையில் திரும்பி வரப்பெற்று, பெரிய ஆயாஸத்துடன் (களைப்புடன்) மூச்சு விட்டுக் கொண்டு, தைன்யத்துடன் (மனம் நொந்து) கைகளைக் குவித்து, ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து மொழிந்தான்.

காளியன் சொல்லுகிறான்:- நாங்கள் பிறந்தது முதலாகத் துஷ்டர்களாய் (கொடியவர்களாய்) இருப்பவர்கள்; தாமஸர்கள்; தீர்க்கமான கோபமுடையவர்கள். நாதனே! ப்ராணிகளுக்கு இயற்கையில் ஏற்பட்ட குணம், துஷ்ட பிசாசம் (கொடிய பேய்) போன்றது. ஆகையால், அதை அவர்களால் துறக்க முடியாது. ஜகத்காரணனே! ஸ்வபாவம், பலம், முயற்சியின் திறமை, உத்பத்தி க்ஷேத்ரம் (பிறந்த இடம்), காரணம், வாஸனை, உருவ நிலை ஆகிய இவை பற்பலவாறாயிருக்கப் பெற்றதும், குணங்களால் பலவாறு படைக்கப்படுவதுமாகிய இந்த திர்யக்குக்களின் (விலங்குகளின்) தொகுதி உன்னால் படைக்கப்பட்டது. 

பகவானே, அதிலும் ஸர்ப்பங்கள் ஜன்மம் அதோடு கூடவே பெருங்கோபமுடையவை. அத்தகைய ஸர்ப்ப ஜாதியில் பிறந்தவர்களும், உன் மாயையினால் மதி மயங்கப்பெற்றவர்களுமாகிய நாங்கள், உன்னுடைய அனுக்ரஹம் இல்லாது போமாயின், வருந்தியும் துறக்க முடியாததாகிய – அந்த உன் மாயையின் கார்யமான கோபத்தை, எவ்வாறு துறப்போம்? அத்தகையதான உன் மாயையை நாங்கள் கடப்பதற்கு நீயே காரணன். நீ எல்லாம் அறிந்தவன்; நிக்ரஹ (தண்டனை), அனுக்ரஹங்களைச் (ஆசி, அன்புடன் கூடிய ஆதரவு) செய்வதற்குரிய அறிவுடையவன்; ஜகத்திற்கெல்லாம் நியாமகன் (நியமிப்பவன்). ஆகையால், நீ எங்களுக்கு அநுக்ரஹத்தையாவது (ஆசி, அன்புடன் கூடிய ஆதரவு), நிக்ரஹத்தையாவது (தண்டனை) எதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கின்றாயோ, அதைச் செய்வாயாக. அதை அறிவதற்கும், இவ்வாறு செய்யென்று நியமிப்பதற்கும், நாங்கள் வல்லரல்லோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- துஷ்டர்களை அடக்குவதும், சிஷ்டர்களை பாதுகாப்பதுமாகிய இக்கார்யங்களை நிறைவேற்றும் பொருட்டு, தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவம் கொண்டிருக்கிற அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு மொழிந்த காளியனுடைய வார்த்தையைக் கேட்டு மொழிந்தான். 

பகவான் சொல்லுகிறான்:- ஓ, நாக ராஜனே! நீ இனி இம்மடுவில் இருக்கலாகாது. நீ, உன் பந்துக்களோடு சீக்ரத்தில் ஸமுத்ரம் போய்ச் சேருவாயாக. இந்த யமுனா நதியை, பசுக்களும், மனுஷ்யர்களும், அனுபவிக்குமாக. உனக்கு நான் தண்டனை செய்த இந்த வ்ருத்தாந்தத்தை, எவன் இரண்டு ஸந்த்யா காலங்களிலும் நினைத்துக் கீர்த்தனம் செய்கிறானோ, அவன் உங்களிடத்தினின்று (ஸர்ப்பங்களிடத்தினின்று) பயத்தை அடையமாட்டான். எவன், நான் விளையாடும் இடமாகிய இம்மடுவில் ஸ்னானம் செய்து, இந்த ஜலத்தில் தேவ, ரிஷி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கிறானோ; மற்றும், உபவாஸமிருந்து என்னை நினைவுடன் ஆராதிக்கிறானோ, அவன் ஸமஸ்த பாபங்களினின்றும் விடுபடுவான். நீ எவனிடத்தினின்றும் பயந்து, ரமணகமென்னும் த்வீபத்தைத் துறந்து இம்மடுவுக்கு வந்தனையோ, அக்கருடன் என் பாதங்களால் அடையாளம் செய்யப்பெற்ற உன்னை இனிப் பக்ஷிக்க (சாப்ப்பிட) மாட்டான். ஆகையால், நீ பயமின்றி ஸமுத்ரம் போவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இவ்வாறு பகவானால் சொல்லப்பட்ட நாகராஜன், அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பூஜித்தான். அவனுடைய பத்தினிகளும், ஆதரவுடன் பூஜித்தார்கள். அந்தக் காளியன், விலையுயர்ந்த திவ்யமான ஆடைகளாலும், திவ்யமான பூமாலைகளாலும், திவ்ய ரத்னங்களாலும், திவ்யமான ஆபரணங்களாலும், திவ்யமான சந்தனம், குங்குமம் முதலிய பூச்சுக்களாலும், பெரிய நெய்தல் மாலையாலும், ஜகத் ரக்ஷகனாகிய அந்த கருடத்வஜனை, ஆராதித்து, ப்ரதிக்ஷணம் செய்து, நமஸ்கரித்து, அவனால் அனுமதி  கொடுக்கப் பெற்று, பத்னிகளோடும், நண்பர்களோடும், பிள்ளைகளோடும், ஸமுத்ரத்திலுள்ள ரமணகமென்னும் த்வீபத்திற்குச் சென்றான். க்ரீடைக்காக மானிட உருவங்கொண்ட ஸ்ரீக்ருஷ்ண ரூபியான அந்தப் பகவானுடைய அனுக்ரஹத்தினால், அப்பொழுதே அந்த யமுனா நதி அம்ருதம் போன்ற ஜலமுடையதாயிற்று. 

(3வது அத்யாயத்தில் யமுனை நதியில் ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடி நதியில் பட்டது. ஆனால் காளியன் ஏமாற்றமடைந்தான். {அவனுடைய தாபத்தைப் போக்குவதற்காக 16வது அத்யாயத்தில் காளியனுடைய தலைமேல் ஏறி தனது நர்த்தனத்தை கிருஷ்ணர் நடத்தினார். பகவானது திருவடி பட்டதனால் காளியனும் நற்கதி அடைந்தான்.}

காளிங்கன் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை. பிருந்தாவனத்தில் இருந்த பொய்கையில் வாழ ஆரம்பித்தான். அவன் விடும் மூச்சுக் காற்றாலும், கக்கும் விஷத்தாலும் மாசடைந்தது பொய்கை. அதனால், ‘காளிங்கன் பொய்கை’ என அதை அழைத்து, அதன் அருகில் செல்லாமல் ஒதுங்கி இருந்தனர் மக்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கனை மறக்கவில்லை. ஒருநாள் கோபாலர்களுடன் மாடு மேய்க்கச் சென்ற அவர், யார் தடுத்தும் கேளாமல் அந்தப் பொய்கையில் குதித்தார். காளிங்கன் தன் படத்தைத் தூக்கி, கிருஷ்ணனை தாங்கிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணன் அதன்மீது நர்த்தனம் செய்தார். காளிங்கன் சாபம் நீங்கியது.

‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு! ஆனால், இறைவன் மனித வடிவில் அவதாரம் செய்யும்போது, அவர் பாதங்களே பிரதானம். ராமாவதாரத்தில் கங்கைக்கரை வேடன் குஹன் ராமனின் திருவடிகளுக்குப் பூஜை செய்கின்றான். தனக்குத் தன் தாய் கைகேயி வாங்கித் தந்த நாட்டை வேண்டாமெனக் கூறி ராமன் திருவடிகளின் அம்சமான அவனது பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான் பரதன்.

அதுபோல, கிருஷ்ணாவதாரத்திலும், கிருஷ்ணனின் பாதங்களின் பெருமை பல இடங்களில் புகழப்படுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாகப் போட்டு, கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்து வருகிறது. இதுவும் பகவானின் பாத மகிமையைப் போற்றுவதற்காக அமைந்த ஒரு வழிபாட்டு முறைதான்.

இப்படி, இறைவன் திருவடியின் மகிமை எத்தனையோ புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், திருவள்ளுவப் பெருமானின் கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள ஆழமான கருத்தை வேறெங்கும் காணமுடியாது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

‘பற்றை - அதாவது, ஆசாபாசங்களை உதறுவதற்கு, பற்றேதும் இல்லாத பரம்பொருளான இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தப் பிடியை விட்டுவிடாதீர்கள்’ என்பது இதன் பொருள்.

நாமெல்லாம் துன்பம் வரும்போது இறைவனை வேண்டுவது வழக்கம். அந்தத் துன்பம் நீங்கிய பின், அதனை மறந்து விடுவதும் இயல்பு. இந்த முறையை மாற்றி, எப்போதும் இறைவனின் திருவடியையே பற்றி நம்பிக்கையோடு வாழுங்கள் என்பதே வள்ளுவர் காட்டும் வழி.)

காளிய நர்த்தனம்

காளிய நாகம் என்பது நமது மனத்தைக் குறிக்கிறது. ஏனெனில் பாம்பு போல் நெளிந்து வளைந்து அலைபாய்ந்து கொண்டே இருக்கும் இயல்பு நம் மனத்துக்கு உண்டு. நாம் எவ்வளவு முயன்றாலும் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மேலும், காளியன் விஷத்தைக் கக்கி யமுனை நதியை அசுத்தமாக்கியது போல், மனமானது தீய எண்ணங்களைக் கக்கிப் பிறரையும் அசுத்தமாக்கி விடும். இந்த மனத்தை வசப்படுத்த என்ன வழி? கண்ணனை நாம் நம் மனத்தில் கொண்டு வந்து நிறுத்தினோமாகில், காளியன் தலையில் கால் வைத்து நாட்டியமாடி அதை எப்படி அடக்கினானோ, அதே போல் நம் மனமாகிய காளியனையும் அவனே அடக்கி அதை வசப்படுத்தி விடுவான்.

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை