ஞாயிறு, 13 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 231

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினைந்தாவது அத்தியாயம்

(பலராமன் தேனுகாஸுரனை முறித்தலும், காலிய மடுவில் ஜலங்குடித்து மூர்ச்சித்த பசுக்களையும், இடையர்களையும் எழுப்புதலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு பௌகண்ட வயது (6 முதல் 16 வயது வரையான சிறுவர் வயது) வரப்பெற்ற அந்த ராமக்ருஷ்ணர்கள், பசுக்களை மேய்ப்பதற்கு உரியவர்களென்று ஸம்மதிக்கப்பட்டு, நண்பர்களுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டு, அடி வைப்புக்களால் ப்ருந்தாவனத்தை மிகவும் பரிசுத்தமாக்கினார்கள். தாமரைமலர், கலசம், த்வஜம், வஜ்ரம், குடை முதலிய ரேகைகள் அமைந்த அடிவைப்புக்களால் ப்ருந்தாவனத்தை மிகவும் அழகாயிருக்குமாறு அலங்கரித்தார்கள். அப்பொழுது ஸ்ரீக்ருஷ்ணன், தன் புகழைப் பாடுகிற இடையர்களால் சூழப்பட்டு, பலராமனோடு கூடி, குழலோசையுடன் பசுக்களை முன்னிட்டுக்கொண்டு விளையாட விரும்பி,  நிரம்பப் புஷ்பித்திருப்பதும், பசுக்களுக்கு ஹிதமுமாகிய ஒரு வனத்திற்குள் நுழைந்தான். அவ்வனத்தில், வண்டுகளும், மற்றும் பல பறவைகளும், மிருகங்களும் இனிதாகச் சப்தித்துக்கொண்டிருந்தன. பெரியோர்களின் மனம் போலத் தெளிந்த ஜலமுடைய தாமரைத் தடாகங்களில் படிந்து குளிர்ந்திருப்பதும், தாமரை மலர்களின் பரிமளத்தை ஏந்திக்கொண்டு வருவதுமாகிய காற்று, அவ்வனத்தில் ஸுகமாக வீசிக் கொண்டிருந்தது. ஸ்ரீக்ருஷ்ணன் அத்தகையதான அவ்வனத்தைக் கண்டு, விளையாட மனங்கொண்டான். சிவந்த பல்லவங்களின் (தளிர்களின்) சோபை அமைந்தவைகளும், பூ, காய், பழம் இவற்றின் பாரத்தினால் பாதங்களை ஸ்பர்சிக்கிற (தொடுகிற) நுனியுடையவைகளுமான வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) கண்டு, ஆதி புருஷனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஸந்தோஷத்தினால் புன்னகை செய்து கொண்டே, தமையனாகிய பலராமனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தேவ ச்ரேஷ்டனே! இந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்), புஷ்பம், பழம் முதலிய உபஹாரங்களை எடுத்துக்கொண்டு, தாங்கள் வ்ருக்ஷ (மர) ஜன்மம் பெற்றதற்குக் காரணமான தங்கள் பாபமெல்லாம் தீரும் பொருட்டு, தேவதைகளால் பூஜிக்கப்பட்ட உன் பாதார விந்தத்தைக் கிளைகளால் வணங்குகின்றன. ஓ, ஆதி புருஷனே! இந்த வண்டுகள், ஸமஸ்த  லோகங்களுக்கும் பாவனமான (புனிதமான), புகழைப் பாடிக்கொண்டு, உன்னைப் பின்னை தொடர்ந்து பணிகின்றன. இந்த  வண்டுகள் பெரும்பாலும் உன் பக்தர்களில் முக்யர்களான முனிக் கூட்டங்களே. ஆகையால் தான் கோப வேஷத்தினால் மறைந்திருப்பினும், பாபமற்ற தங்கள் தெய்வமாகிய உன்னை விடாமல் தொடர்கின்றன. துதிக்கத் தகுந்தவனே! இதோ மயில்கள் ஸந்தோஷத்துடன் நர்த்தனம் செய்கின்றன. அவ்வாறே, மான்கள் கோபிகளைப் போல் கண்ணோக்கத்தினால் உனக்குப் ப்ரியம் செய்கின்றன. குயில்கள் கூட்டம் கூட்டமாயிருந்து, தங்கள் க்ருஹமான வனத்திற்கு வந்திருக்கிற உனக்கு இனிய உரைகளால் ப்ரியம் செய்கின்றன. வனத்தில் வசிக்கின்ற இந்தக் குயில் முதலியவைகளும் கூட பாக்யமுடையவைகளே.  நல்லறிவுடைய பெரியோர்களின் இயற்கை இவ்வளவேயல்லவா? உன்னுடைய பாதார விந்தங்கள் படப்பெற்ற இப்பூமியும், இந்த பூமியிலுள்ள புல், செடி முதலியவைகளும் பாக்யமுடையவைகளே. உன் நகங்களால் தொடப்பட்ட மரங்களும், கொடிகளும், மன இரக்கதோடு கூடின உன் கண்ணோக்கங்களைப் பெற்ற இந்த நதிகளும், பர்வதங்களும் (மலைகளும்), பறவைகளும், ம்ருகங்களும் பாக்யமுடையவைகளே. உன் மார்பினால் அணைக்கப் பெற்ற கோபிகைகளும், பாக்யசாலினிகளே. ஸ்ரீமஹாலக்ஷ்மியும்கூட உன் மார்பினால் அணைப்பதை ஆசைப்படுகிறாளல்லவா?

(குறிப்பு: இந்த புகழுரைகள் உண்மையில் பகவான் ஸ்ரீக்ருஷ்ணருக்கேப் பொருந்தக்கூடியவை. இருப்பினும் தன் அண்ணனான பலராமன் மீது ஏறிட்டுச் சொல்கிறார்.) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தமையனைப் பார்த்து மொழிந்து, சோபையுடைய ப்ருந்தாவனத்தைப் பார்த்து மனக்களிப்புற்று, தாழ்வரைகளிலும், ஆற்றங்கரைகளிலும், பசுக்களை மேய்த்துக்கொண்டே விளையாடினான். தன்னைத் தொடர்ந்து வருகின்ற இடையர்களால் பாடப்பட்ட சரித்ரங்களையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தனக்கு மிகவும் அன்பனாகிய பலராமனுடன் கூடி, ஒரு கால் புஷ்பங்களில் தேன்களைப் பருகி மதித்த வண்டுகள் பாடக் கேட்டு, தானும் அவற்றைத் தொடர்ந்து பாடுவதும், ஒருகால் கலஹம்ஸங்களின் (அழகிய அன்னப் பறவைகளின்) சப்தத்தை அனுஸரித்துச் சப்திப்பதும், ஒரு கால் நண்பர்களைச் சிரிப்பித்துக் கொண்டு கூத்தாடுகின்ற மயிலை அனுஸரித்துக் கூத்தாடுவதும், ஒரு கால் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் மனத்திற்கினியதும், மேக கர்ஜனம் போல் கம்பீரமாயிருப்பதுமாகிய தன் குரலால், பசுக்களை ப்ரீதியுடன் பெயர்களைச் சொல்லி அழைப்பதும், ஒருகால் சகோரம், க்ரௌஞ்சம், சக்ரவாகம், பரத்வாஜம், மயில் முதலிய பறவைகளை அனுஸரித்துக் கூவுவதும், ஒரு கால் ஜந்துக்களுக்குள், புலி, ஸிம்ஹங்களைக் கண்டு பயந்தாற் போல் நடனம் செய்வதும், ஒரு கால் விளையாடி இளைப்புற்று இடையர்களின் மடியில் தலையை வைத்துப் படுத்திருக்கின்ற தமையனான பலராமனுக்குத் தானே கால் பிடிப்பது முதலிய உபசாரங்களால் இளைப்பார செய்வதுமாகி, விளையாடிக் கொண்டிருந்தான். 

அந்த ராம க்ருஷ்ணர்கள் இருவரும், ஒரு கால் ஆடுவது, பாடுவது, கிளம்பிப் பாய்வது, ஒருவரோடொருவர் சண்டையிடுவது முதலிய விளையாடல்களில் தேறின இடையர்களைக் கைகளில் பிடித்துச் சிரித்துக்கொண்டே, புகழ்வார்கள். அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஒருகால் பாஹு (தோளோடு தோளை இடித்து) யுத்தம் (சண்டை) செய்த ச்ரமத்தினால் (களைப்பால்) வருந்தி, மரத்தடியில் தளிர்களைப் படுக்கையாகப் பரப்பி, இடையர்களின் மடியைத் தலையணையாகக் கொண்டு, படுத்திருப்பான். அப்பொழுது, மஹானுபாவனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குச் சிலர் கால் பிடிப்பார்கள். பாபமற்றவர்களான வேறு சிலர், விசிறிகளால் வீசுவார்கள். 

மஹாராஜனே! வேறு சிலர், ப்ரீதியினால் மனம் உருகப்பெற்று, அவனுக்குத் தகுந்தவைகளுமான, பாடல்களை மெல்ல மெல்லப் பாடுவார்கள். தன்னைத் தானே அனுபவித்துக் களித்திருக்கையாகிற தன்னிலைமையை மறைத்துக்கொண்டு, தன் இடைப்பிள்ளைத்தனத்தை நடித்து அதற்குரிய செயல்களையும் செய்து, ஸ்ரீமஹாலக்ஷ்மியால் சீராட்டப்பட்ட தளிர்போன்ற பாதங்களுடையவனாயினும், ப்ராக்ருதர்களோடு கூடி, இடையிடையில் தான் ஸர்வேச்வரனென்பதை வெளியிடுகின்ற அமானுஷ (மனிதர்களுக்கு அப்பாற்பட்ட) சேஷ்டிதங்களையும் (செயல்களையும்) நடத்தி, அந்த ப்ராக்ருதர்களைப் போல் தானும் க்ரீடித்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது, ராம க்ருஷ்ணர்களுக்கு நண்பனாகிய ஸ்ரீதாமனென்னும் கோபாலனும், ஸுபலன், ஸ்தோக க்ருஷ்ணன் முதலிய மற்றவர்களும், ப்ரேமத்துடன் அவர்களை நோக்கி, இவ்வாறு மொழிந்தார்கள் “ராம! ராம! மஹாபலமுடையவனே! ஸ்ரீக்ருஷ்ண! துஷ்டர்களை அடக்கும் திறமையுடையவனே! இவ்விடத்திற்கு அருகாமையில் பனஞ்சாலைகள் நிறைந்த பெரிய ஒரு வனம் இருக்கின்றது. அங்கு மிகப் பெரிய பனம்பழங்கள், விழுவதுமாயிருக்கின்றன. ஆனால், அவை துர்ப்புத்தியுள்ள தேனுகாஸுரனால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. 

ஓ ராமா! ஓ க்ருஷ்ணா! அவ்வஸுரன் மஹா வீர்யமுடையவன்; கழுதையின் உருவம் தரித்திருக்கிறான்; தன்னோடொத்த பலமுடைய மற்றும் பல உறவினர்களால் சூழப்பட்டிருக்கிறான். அங்கு நுழைகின்ற மனுஷ்யர்களை எல்லாம் பிடித்து, பக்ஷித்து (உண்டு) விடுகின்றான். ஆகையால், மனுஷ்யர்கள் எவரும் அவ்வனத்தில் நுழைகிறதேயில்லை. 

சத்ருக்களை அழிப்பவனே! அங்கு இதுவரையில் ஒருவராலும் சாப்பிடப்படாதவைகளும், மிகுந்த மணமுடையவைகளுமாகிய, பனம்பழங்கள் அமிர்தமாயிருக்கின்றன. அந்தப் பழங்கள், இதோ இவ்விடத்திலும்கூட நாற்புறத்திலும் நிரம்பி நமக்குத் தெரிகின்றது. க்ருஷ்ணா! அந்தப் பழங்களின் வாஸனையால் அவற்றை சாப்பிடவேண்டுமென்று விருப்பங் கொண்ட மனமுடைய எங்களுக்கு அவற்றைக் கொண்டு வந்து கொடுப்பாயாக. ராமா! அந்தப் பழங்களை சாப்பிடவேண்டுமென்று எங்களுக்குப் பேராசையாயிருக்கின்றது; உனக்கு ருசிக்குமாயின், போவாயாக. நாங்கள் நியமிக்க வல்லரல்லோம்” என்றார்கள். 

ஸமர்த்தர்களாகிய அந்த ராம க்ருஷ்ணர்கள், இவ்வாறு மொழிகின்ற நண்பர்களின் வசனத்தைக் கேட்டு, அவர்களின் இஷ்டத்தை நிறைவேற்ற விரும்பிச் சிரித்து, அந்த இடையர்களால் சூழப்பட்டு, பனங்காட்டுக்குச் சென்றார்கள். அவர்களில் பலராமன், அந்தத் தால (பனைமர) வனத்தில் (காட்டில்) நுழைந்து, இரண்டு கைகளாலும் பனை மரங்களை நாற்புறத்திலும் பிடித்து, மத்த கஜம் (மதம் பிடித்த யானை) பலத்தினால் உலுக்கி பழங்களை உதிர்த்தான். அப்பொழுது உதிர்கின்ற பழங்களின் சப்தத்தைக் கேட்டு, கழுதையின் உருவந்தரித்த அஸுரன் வ்ருக்ஷங்களோடு (மரங்களோடு) கூட பூமியை நடுங்கச் செய்து கொண்டு, எதிர்த்தோடி வந்தான். பலிஷ்டனாகிய (பலம் பொருந்திய) அவ்வஸுரன், பலராமனைக் கிட்டிப் பின்கால்களால் பலமுள்ள அளவும் அவனை மார்பில் அடித்துக் காவென்று சப்தம் செய்து கொண்டு, அவனைச் சுற்றி வந்தான். 

மீளவும் அவன் விரைந்து வந்து, பெரும் கோபத்துடன் பின்னே திரும்பிய பின்கால்களைத் தூக்கி, ராமனை அடிக்கத் தொடங்கினான். அந்தப் பலராமன், அவ்வஸுரனைப் பின் கால்களில் பிடித்துக் கொண்டு, பின் கையினால் சுழற்றி அவ்வளவில் ப்ராணன்களை (உயிரை) இழந்த அவ்வஸுரனை பனை மரத்தின் நுனியில் வீசியெறிந்தான். மிகவும் உயர்ந்து அகன்ற நுனியுடைய அப்பனைமரம், அவ்வஸுரனால் அடிக்கப்பட்டு, பக்கத்திலுள்ள மற்றொரு பனைமரத்தை விழத்தள்ளி கொண்டே முறிந்து விழுந்தது. அந்தப் பக்கத்து மரமும், தன் பக்கத்திலுள்ள மற்றொரு மரத்தை விழத் தள்ளிக்கொண்டே, தானும் முறிந்து விழுந்தது. அதுவும் தன் பக்கத்திலுள்ள மற்றொரு மரத்தை விழத் தள்ளிக்கொண்டே முறிந்து விழுந்தது. பலராமன் விளயாட்டிற்காக வீசியெறிந்த ராஸபரூபியான (கழுதை உருக்கொண்ட) அஸுரனுடைய தேஹத்தினால் அடியுண்ட வ்ருக்ஷம் ஒன்றும், அதனால் அடியுண்டது, மற்றொன்றும் அதனால் அடியுண்டது மற்றொன்றுமாக அவ்வனத்திலுள்ள தால வ்ருக்ஷங்கள் (பனை மரங்கள்) எல்லாம் பெருங்காற்றினால் அசைக்கப்பட்டவை போல் நடுக்கமுற்றன. ஜகதீச்வரனும் அளவற்றவனுமாகிய அந்தப் பகவானிடத்தில் இது ஒரு ஆச்சர்யமன்று. நூல்களில் வஸ்த்ரம்போல் இந்த ஜகத்தெல்லாம், அவனிடத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் கோர்க்கப்பட்டிருக்கின்றதல்லவா? 

மன்னவனே! ஆகையால், அவன் பெருமைக்கு இது ஒரு புகழன்று. பிறகு, தேனுகாஸுரனுடைய ஜ்ஞாதிகளான (பங்காளிகளான) கழுதைகள் தங்கள் பந்துவாகிய தேனுகன் முடியப்பெற்று, எல்லாம் பரபரப்புற்றுக் கர்ண கடோரமாகச் (காதுக்குக் கொடிதான) சப்தம் செய்து கொண்டு, ராம க்ருஷ்ணர்களை எதிர்த்து வந்தன. 

மன்னவனே! ராம க்ருஷ்ணர்களிருவரும் அவ்வாறு எதிர்த்து வருகின்ற அந்தக் கழுதைகளையெல்லாம் அவலீலையாகப் (விளையாட்டாக) பின்கால்களைப் பிடித்துச் சுழற்றி, பனைமரங்களில் வீசியெறிந்தார்கள். ராசி ராசியாக உதிர்ந்திருக்கின்ற பனம் பழங்களாலும், ப்ராணன்களை இழந்த அஸுர தேஹேங்களாலும், முறிந்து விழுந்த பனங்கொலைகளுடன் உள்ள பனை மரங்களின் நுனிகளாலும் நிறைந்திருக்கின்ற அவ்வனத்தின் பூமி, மேகங்களால் நிறைந்திருக்கின்ற ஆகாயம்போல் விளங்கிற்று. தேவதைகளும், ஸித்த சாரணாதிகளும், அந்த ஸ்ரீக்ருஷ்ண ராமர்கள் செய்த மிகவும் அற்புதமான அந்தச் செயலைக் கண்டு வியப்புற்று, பூமழை பொழிந்து, வாத்யங்களை முழக்கி, ஸ்தோத்ரம் செய்தார்கள். 

பிறகு மனுஷ்யர்கள், தேனுகனும் அவன் பந்துக்களும் முடிந்து, எவ்வித உபத்ரவத்திற்கும் (தொந்தரவிற்கும்) இடமில்லாத அந்தக் கானகத்தில் சென்று, பயமற்றுப் பனம் பழங்களைச் சாப்பிட்டார்கள். பசுக்களும் புல் மேய்ந்தன. கேட்ட மாத்ரத்தில் புண்யத்தை விளைக்கும்படியான புகழுடையவனும், தாமரையிதழ் போன்ற கண்களுடையவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தமையனான பலராமனுடன் கூடி, தன்னைப் பின்பற்றி வருகின்ற இடையர்களால் துதிக்கப்பெற்று, கோகுலத்திற்குச் சென்றான். 

தலைமயிர்களில் பசுக்களின் தூட்கள் படியப்பெற்று, மயில்தோகையை அணிந்து, காட்டுப் புஷ்பங்களைச் சூடி, பின் வருகின்ற இடையர்களால் தன் புகழ் பாடப் பெற்று, குழலை ஊதிக் கொண்டு வருகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கோபிகைகள் பார்க்க வேண்டுமென்னும் விருப்பமுற்ற கண்களுடையவர்களாகி, கூட்டம் கூடி எதிர்கொண்டார்கள். இடைச்சேரியிலுள்ள கோபிமார்கள் அனைவரும், தங்கள் கண்களாகிற வண்டுகளால், ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகமாகிற தாமரைமலரில், தேனைப் பருகி, பகலெல்லாம் பிரிந்திருந்தமையால் உண்டான தாபத்தைத் (துயரத்தைத்) துறந்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனும் வெட்கம், புன்னகை, வணக்கம் இவை அமைந்த கடைக்கண்ணோக்கங்களாகிற அந்தக் கோபிமார்களின் வெகுமதியைப் பெற்று, பசுக்களை ஓட்டிக்கொண்டு, தொழுவத்திற்குள் நுழைந்தான். யசோதையும், ரோஹிணியும், தங்கள் மன விருப்பத்திற்கும், காலத்திற்கும் தகுந்திருக்குமாறு தங்கள் பிள்ளைகளாகிய அந்த க்ருஷ்ண ராமர்களுக்கு மேலான உபசாரங்களைச் செய்தார்கள், அங்கு உடம்புக்கு எண்ணெய் தேய்த்துப் பிடித்து, ஸ்னானம் செய்விப்பது முதலிய உபசாரங்களால் பகலெல்லாம் வெளியில் அலைந்து வந்த ச்ரமம் முழுவதும் தீரப்பெற்று, அழகிய ஆடை உடுத்தி, திவ்யமான பூமாலைகளாலும், திவ்யமான சந்தனாதிகளாலும், அலங்கரிக்கப்பெற்று,  தாய்மார்கள் கொண்டு வந்த ருசியுள்ள அன்னத்தைப் புசித்து, உபலாலனஞ் செய்யப் (சீராட்டப்)  பெற்று, மேலான படுக்கையில் படுத்து, ஸுகமாகத் தூங்கினார்கள். 

மன்னவனே! இவ்வாறு ப்ருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருக்கிற மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஒருகால் பலராமனை விட்டு மற்ற நண்பர்களால் சூழப்பட்டு, யமுனைக்குச் சென்றான். பசுக்களும், அவற்றை மேய்க்கின்ற இடையர்களும், அப்பொழுது க்ரீஷ்ம ருதுவாகையால் (கோடை காலமாகையால்), கொடிதாகக் காய்கின்ற வெயிலால் பீடிக்கப்பட்டு, தண்ணீர் தாஹம் எடுத்து, அதைப் பொறுக்க முடியாமல், காலியன் என்கிற மஹா நாகத்தின் விஷ ஸம்பந்தத்தினால் தூஷிக்கப்பட்ட அந்த யமுனையின் ஜலத்தைக் குடித்தன. அந்த விஷ ஜலத்தைப் பானம் செய்தமையால், அவையெல்லாம் மூர்ச்சித்து, ப்ராணன்களை இழந்து, விழுந்தன. 

யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அவையெல்லாம் அவ்வாறு விழுந்திருப்பதைக் கண்டு, அம்ருதத்தை வர்ஷிக்கின்ற தன் கண்ணோக்கத்தினால், தன்னையே நாதனாகவுடைய அவற்றையெல்லாம் பிழைப்பித்தான். அவையெல்லாம் உடனே நன்றாக ப்ரஜ்ஞை (நினைவு) வரப்பெற்று, ஜலக்கரையினின்று எழுந்து, ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, மிகவும் வியப்புற்றன; விஷ ஜலத்தைக் குடித்து மரணம் அடைந்த தாங்கள், மீளவும் பிழைத்தெழுந்தது அந்த ஸ்ரீகோவிந்தனுடைய அருள் நிறைந்த கண்ணோக்கத்தின் கார்யமென்று தெரிந்து கொண்டன. 

பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக