ஞாயிறு, 20 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 235

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் முஞ்சாரண்யத்தில் கோபாலர்களை காட்டுத் தீயினின்று பாதுகாத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபாலர்கள், ப்ரலம்பன் மாண்ட பின்பு மீளவும் விளையாட்டில் ஊக்கமுற்றிருக்கையில், அவர்களுடைய  பசுக்கள் இஷ்டப்படி மேய்ந்து கொண்டு, வெகுதூரம் சென்று, புல் மேய்வதில் விருப்பத்தினால் இஷீக வனத்திற்குள் (காட்டிற்குள்) நுழைந்தன. ஆடுகள், பசுக்கள், மனுஷ்யர்கள் இவையெல்லாம் ஒரு வனத்தினின்று (காட்டினின்று) மற்றொரு வனத்திற்குச் (காட்டிற்குச்) செல்லுவதும், அதினின்று மற்றொரு வனம் (காடு) செல்வதுமாகி, வெகு தூரம் சென்று, காட்டுத் தீயினால் தபிக்கப்பட்டு, கதறிக் கொண்டே இஷீக வனத்திற்குள் நுழைந்தன. அப்பால், விளையாடிக்கொண்டிருந்த க்ருஷ்ண ராமாதி கோபாலர்கள், அப்பொழுது அவ்விடத்தில் பசுக்களைக் காணாமல் மன இரக்கமுற்று, குளப்படிகளால் (கால் சுவடுகளால்) அவற்றின் வழியைக் கண்டு பிடிக்கலாமென்று தேடியும் புல் பூமியாகையால் குளப்படியைக் (கால் சுவடுகளைக்) காண முடியாமல் இருந்தார்கள். 

அந்தப் பசுக்களின் குளம்புகளாலும், பற்களாலும் துண்டிக்கப்பட்ட புற்களாலும், குளப்படிகளாலும் (கால் சுவடுகளாலும்) அடையாளஞ் செய்யப் பெற்ற பசுக்களின் வழியைக் கண்டுபிடித்துக் கொண்டு சென்று அங்கும் தங்களுக்கு ஜீவன ஸாதனமான பசுக்களை காணாமல் மனத்தில் விசனமுற்று (கவலைப்பட்டு), இஷீக வனத்தில் வழி தப்பி கதறுகின்ற பசு மந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், தண்ணீர், தாஹம் எடுத்து வருந்தி, தேடும் ப்ரயத்னத்தைத் (முயற்சியைத்) துறந்து, மீண்டு வந்தார்கள். அப்பொழுது ஸ்ரீக்ருஷ்ணன், மேகம் போல் கறுத்து, மிகவும் உயர்ந்திருப்பதுமாகிய ஒரு வ்ருக்ஷத்தின் மேல் ஏறிக் கொண்டு, கம்பீரமான தன் குரலால் பசுக்களின் பெயர்களைச் சொல்லி அழைத்தான். அந்தப் பசுக்கள், தங்கள் பெயர்களைச் சொல்லி அழைக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய குரலைக் கேட்டு மனக்களிப்புற்று, ப்ரதித்வனி (எதிரொலி) செய்தன. 

அப்பொழுது, திடீரென்று பெரிய காட்டுத் தீ வனத்திலுள்ள ஜந்துக்களையெல்லாம் அழிப்பதாகி,  காற்றினால் தூண்டப்பட்டுக் கிளர்ந்து, நன்றாகப் பற்றியெரிகின்ற கொள்ளிகளால் அங்குள்ள ஜங்கம ஸ்தாவரங்களை (அசையும் மற்றும் அசையாத பொருட்களை) எல்லாம் தொட்டுக் கொண்டு கிளம்பிற்று. கோபாலகர்கள், கோகுலத்துடன் நாற்புறத்திலும் நிரம்பி வருகின்ற காட்டுத் தீயைக்கண்டு பயந்து, மரண பயத்தினால் பீடிக்கப்பட்ட ஜனங்கள் தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பாரத்தைப் போக்கும் தன்மையுள்ள பகவானைச் சரணம் அடைந்து தங்கள் வருத்தத்தை விண்ணப்பம் செய்வது போல, பலராமனோடு கூடிய ஸ்ரீக்ருஷ்ணனை சரணம் அடைந்து, இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள்; 

“ஓ க்ருஷ்ணா! க்ருஷ்ணா! மஹாவீர்யமுடையவனே! ஓ, ராமா! மஹா பராக்ரம் உடையவனே! காட்டுத் தீயினால் கொளுத்தப்படுகின்ற உன் பக்தர்களான எங்களைப் பாதுகாப்பீர்களாக. உன்னையே பந்துவாகப் பற்றினவர்கள், வருந்துவதற்கு உரியவர்களன்றல்லவா? இது நிச்சயம். தர்மஜ்ஞனே! (எல்லா தர்மங்களும் அறிந்தவரே!) நாங்கள், உன்னையே நாதனாகவுடையவர்கள்; உன்னையே மேலான ரக்ஷண உபாயமாக (காப்பாற்றுபவனாக) நினைத்திருப்பவர்கள். ஆகையால், எங்களை வருந்தவிட்டு நீ உபேக்ஷிக்கலாகாது” என்று முறையிட்டார்கள். ஷாட்குண்யபூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், பந்துக்களாகிய கோபாலர்கள், மன இரக்கத்திற்கு இடமாயிருக்குமாறு மொழிந்த வசனத்தைக்கேட்டு, “ஓ, கோபர்களே! பயப்படவேண்டாம். கண்ணைமூடிக் கொள்ளுங்கள்” என்று மொழிந்தான். 

கோபாலர்கள் அனைவரும் அப்படியே கண்ணை மூடிக் கொள்கையில், யோகேச்வரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், எங்கும் பரந்தெரிகின்ற பயங்கரமான காட்டுத் தீயை தன் வாயினால் விழுங்கி, அவர்களை அந்த ஆபத்தினின்று விடுவித்தான். பிறகு, அந்தக் கோபாலர்கள், கண்களைத் திறந்து தாங்களும், தங்கள் பசுக்களும், காட்டுத் தீயினின்று விடுபட்டு, பாண்டீரம் என்னும் ஆல மரத்தின் அடியில் வந்திருக்கக் கண்டு, மிகவும் வியப்புற்றார்கள். அவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய யோக மாயையினால், அவன் ப்ரபாவத்திற்கு விஷயமாகும்படி செய்யப்பட்டு, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய யோக வீர்யத்தையும், தாங்கள் காட்டுத் தீயினின்று க்ஷேமமாய்த் திரும்பி வந்ததையும் கண்டு, அவனை தெய்வமென்று நினைத்தார்கள். அப்பால் ஸ்ரீக்ருஷ்ணன், ஸாயங்காலமாகையில் பசுக்களையெல்லாம் ஒரு மந்தையாகச் சேர்த்து, பலராமனுடன் குழலூதிக் கொண்டு, கோபர்களால் துதிக்கப்பெற்று, கோகுலத்திற்குச் சென்றான். ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்து ஒரு க்ஷணத்தைப் பலயுகங்களாக பாவிக்கின்ற கோபிமார்களுக்கு அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய காட்சி மஹானந்தத்தை விளைத்தது. 

பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக