ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருப்பாவை - 6 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஆறாம் நாள்


(முதல் ஐந்து முடிந்து அடுத்த ஐந்தாவது பாசுரத்திற்கு செல்கிறோம். வரும் பாசுரங்களில் கோதை நாச்சியார் இளம் கன்னிகையர்களை எழுப்புகிறாள். ஏன் அவள் இருப்பவர்களை வைத்தே நோன்பினைத் தொடரலாமே ஆனால் அவ்வாறு செய்யாமல் அவரவர் இல்லங்களுக்கேச் சென்று அவர்களை எழுப்புகிறாள். சுயநலமற்ற அவளின் செயல் போற்றக்கூடியதே. ஆச்சார்யர்களின் ஸ்வாபதேச உரையில் இவை ஒவ்வொரு ஆழ்வாரையும் ஆண்டாள் எழுப்புவதாக கூறுவர். இப்பாசுரங்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஆண்டாள் நிறைய உள்ளர்த்தங்களுடனே எழுதியுள்ளாள். அதை காலட்சேபத்தில் ஆசார்யர்களிடத்தில் கேட்கக் கேட்க இது எவ்வளவு புனிதமானது என்பது விளங்கும். நாம் மேலோட்டமாகப் பார்ப்போம்.)


“நான் இதுவரைக்கும் பாவை நோன்பு நோற்பது பற்றியும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் சொல்லிவிட்டேன். இதில் எந்த ஐயமும் இருக்காது என்று நம்புகிறேன். இன்று ஆறாம் நாள், நம் பாவை நோன்பிற்கு நிறைய பேர் வரவில்லை போலிருக்கிறதே. ஏன் என்னாயிற்று அவர்களுக்கு.”


“கோதே, வேறொன்றுமில்லை. ஐந்து நாளாக விடிகாலை தினமும் எழுந்து வந்த அவர்களுக்கு அசதி ஏற்பட்டிருக்கும் அதன் காரணமாக வராமல் இருக்கலாம். நாம் அவர்களைப் போய் எழுப்பலாம்.”


ஒரு கோபிகன்னிகையின் வீட்டின் கதவுமுன்.


“அடியே பிள்ளாய் (சிறுபெண்ணே), இத்தனை நாளாக நம் பாவை நோன்பிற்கு வந்திருந்தாய். இன்று வரவில்லை. நாம் சரியாக காலையில் எழுந்திருக்கத் தவறினாலும் ஒரு நாளும் பறவைகள் தவறுவதில்லை. கதிரவன் வருமுன்னே தன் இரைத் தேட கூட்டைவிட்டு கிளம்பிவிடும். ஆனால் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய். பறவைகளின் அரசனான கருடனின் தலைவனான எம்பெருமானின் கோயிலிலே வெள்ளை வெளேரென்று இருக்கும் சங்கின் பெரு முழக்கம் உனக்குக் கேட்கவில்லையா.”


“கோதே, சங்கு என்றாலே வெள்ளையாகத்தானே இருக்கும் இதில் எதற்கு வெள்ளை விளிச்சங்கு என்கிறாய்.”


“பிள்ளாய், சங்கிலும் பல நிறங்களுண்டு. தூய்மையின் அடையாளமாக நாம் வெள்ளையைத் தானே குறிப்பிடுகிறோம். அதனால் தான் வெள்ளை விளிச்சங்கென்றேன்.”


“கோதே, பேரரவம் என்றாயே சங்கு பேரரவமா?”

“பிள்ளாய், சங்கின் முழக்கத்துடன், கற்ற பண்டிதர்களின் வேத முழக்கமும் சேர்ந்து பேரரவமாய் கோயிலில் ஒலிக்கின்றதே கேட்கவில்லையா.”


“அருமை கோதே. மேலும் தொடரேன் கேட்க ஆவலாய் இருக்கிறது.”


“சிறு பெண்ணே, குழந்தைக் கண்ணனை கொல்வதற்கு கம்சன், அரக்கி பூதனையை அனுப்பினான். அவளோ அழகிய பெண் உருவம் தரித்து கண்ணனுக்கு நஞ்சு தடவிய முலைப்பாலூட்ட விரும்பினாள். அவனோ பாலுடன் அவள் உயிரையும் சேர்த்து குடித்தே விட்டான். மேலும் கம்சன் சகடாசுரனை வண்டி வடிவில் அனுப்பி கண்ணனை கொல்ல நினைத்தான். மாதவனோ தன் பிஞ்சுக் கால்களால் அதை உதைத்து சகடனை அழித்தான்.”


“ஆகா நம் கண்ணனின் லீலைகளே அலாதி.”


“ஆம் உண்மைதான். பிள்ளாய், நம் பாற்கடலில் பாம்பனையில் பள்ளிக் கொண்டுள்ள நம் நாரணனை தமது உள்ளத்தில் நிறுத்தி முனிவர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன் அரியென்ற பேரரவம் கேட்கலையோ.” 


“கோதே, இதை கொஞ்சம் புரியும்படி சொல்லேன்.”


“பிள்ளாய், நாம் அனைவரும் காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் ஹரிர் ஹரிர் என்று ஏழு தடவை அழைக்க வேண்டும். அப்படி அனைவரும் அழைக்கும் சத்தம் பேரரவமாக கேட்கிறதே. இதுகூட அவளுக்குக் கேட்கவில்லையா அப்படியென்ன உறக்கம். நம் நோன்பிற்கு அவளை எழுப்பி அழைத்துச் செல்வோம் வாருங்கள்.”


புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்,

உள்ளம் புகுந்து குளிந்தேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக