தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபதாவது அத்தியாயம்
(வர்ஷ ருது, சரத் ருது : இவைகளின் வர்ணனம்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, இடையர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்று, ராம க்ருஷ்ணர்கள் தங்களையும், பசுக்களையும், காட்டுத் தீயினின்று விடுவித்த அற்புதச் செயலையும், ப்ரலம்பரஸுரனைக் கொன்ற வ்ருத்தாந்தத்தையும், கோபிமார்களுக்குச் சொன்னார்கள். வயது முதிர்ந்த கோபர்களும், கோபிகைகளும், பிள்ளைகள் சொன்ன அந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, மிகவும் வியப்புற்று, தேவ ச்ரேஷ்டர்கள் தாமே ராம க்ருஷ்ண ரூபர்களாய் கோகுலத்திற்கு வந்திருக்கிறார்களென்று நினைத்தார்கள். பிறகு, ஸமஸ்த ஜந்துக்களுக்கும் (எல்லா பிராணிகளுக்கும்) உத்பத்திக்கு இடமாயிருப்பதும், திசைகளெல்லாம் விளங்கப் பெற்றிருப்பதும், ஆகாயத்தில் மேக கர்ஜனங்கள் நிறைந்திருப்பதுமாகிய, வர்ஷருது (மழைக்காலம்) வந்தது.
மின்னல்களும், இடிகளும் அமைந்த காளமேகங்களால் முழுவதும் மறைக்கப்பட்ட ஆகாயம், ப்ரக்ருதியினால் மறைக்கப்பட்ட தர்ம பூதஜ்ஞானமுடையதும், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டிருப்பதுமாகிய, ஜீவாத்மஸ்வரூபம் போல் ப்ரகாசித்தது. மழைக்கு அபிமானி தேவதையாகிய ஸூர்யன், எட்டு மாதங்களாகத் தன் கிரணங்களால் பூமியினின்று இழுத்த ஜலமாகிற தனத்தை, மீளவும் தகுந்த காலம் சேர்ந்திருக்கையில், தன் கிரணங்களாலேயே விடத் தொடங்கினான். மின்னல்களோடு கூடிய பெரிய மேகங்கள், கொடிய காற்றினால் அசைக்கப்பட்டு, மன இரக்கமுற்றவை போன்று ப்ராணிகளின் ஜீவனத்தை விளைக்கவல்ல ஜலத்தை பெய்தன. பலனை விரும்பித் தவம்செய்யும் புருஷனுடைய சரீரம், தவம்செய்யும் பொழுது இளைத்திருந்து, தவத்தின் பலன் கை கூடினபின், காம போகங்களை அனுபவிக்கையால் புஷ்டியடைந்திருப்பது போல, க்ரீஷ்ம ருதுவினால் (கோடைக்காலத்தினால்) இளைத்திருந்த பூமி, மேகங்களால் மழை பெய்து நனைக்கப்பட்டு, மிகவும் செழிப்புற்றிருந்தது.
கலியுகத்தில், பாபத்தினால் வேதவிருத்தங்களான பாஷண்ட (வேதத்திற்கு எதிரான) ஆகமங்களே விளங்கி, வேதங்கள் விளக்கமற்றிருப்பது போல, ராத்ரியின் ஆரம்பங்களில் இருள் மூடிக் கொண்டிருக்கையால், மின்மினிப் பூச்சிகளே விளங்கினவன்றி, சந்த்ரன், குரு, சுக்ரன் முதலிய க்ரஹங்கள் மேகங்களால் மறைக்கப்பட்டு, விளக்கமற்றிருந்தன. சிஷ்யர்கள், ஆசார்யனுடைய நித்ய கர்மானுஷ்டானத்திற்கு முன்பு பேசாமல் படுத்திருந்து, அவனுடைய நித்ய கர்மானுஷ்டானம் முடிந்த பின்பு, அவன் குரலைக் கேட்டு அத்யயனம் செய்வது போல, தவளைகள் அதற்கு முன் பேசாதிருந்து, மேகத்தின் கர்ஜனையைக் கேட்டு, சப்தம் செய்தன. இந்த்ரியங்களை வெல்ல முடியாமல் அவற்றின் வழியே போகும் புருஷனுடைய வீடு, பணம் முதலிய ஸம்ருத்திகள் ஸத்பாத்ரங்களில் சேராமல் அதர்ம மார்க்கத்தினால் வளர்ந்து வருவது போல, சிற்றாறுகள் மழை ஜலங்களால் நிறைந்து, கரை புரண்டு பாயத்தொடங்கின. பச்சை நிறமுடைய இளம் புற்களால் நிறைந்து, பட்டுப் பூச்சிகளால் சிவந்து, நிலை வாழைகளின் பூக்களால் சோபையுடையதுமாகிய பூமி, பல நிறமான சித்ர த்வஜ படங்களால் (அழகிய கொடிகளால்) விளங்குகிற ராஜாக்களின் ஸைன்ய சோபையை (படையின் அழகை) ஒத்திருந்தது. கழனிகள், நெல்லு முதலிய பலன்கள் ஸம்ருத்தமாயிருக்கப் (செழிப்பாய் இருக்கப்) பெற்று, பயிரிடுகிற குடிகளுக்கு ஸந்தோஷத்தையும், தெய்வாதீனமாய்ப் பலன் உண்டாகிறதென்பதை அறியாமல் பிறருடைய ஸம்ருத்தியைப் (செழிப்பைப்) பொறாதவர்களுக்கு மன வருத்தத்தையும், விளைத்தன. ஜலத்திலுள்ள ப்ராணிகளும், தரையிலுள்ள ப்ராணிகளும், புதிய ஜலத்தை உபயோகப்படுத்தி, பகவானுடைய பக்தர்கள் அவனைப் பணிவதினால் அழகிய உருவம் பெறுவது போல, அழகிய மேனன்மையைப் பெற்றார்கள்.
யோகம் கைகூடப் பெறாத புருஷனுடைய மனம், சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) விருப்பமுற்று அவற்றையே நினைத்துக் கலக்கம் உற்றிருப்பது போல், ஸமுத்ரம், ஆற்று வெள்ளங்கள் வந்து விழப்பெற்று, பெருங்காற்றுகளால் அலைகளும் கிளம்பப்பெற்று, கலக்கமுற்றிருந்தது. பகவானிடத்தில் நிலை நின்ற மனமுடைய பெரியோர்கள், ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களால் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான துன்பங்களால்} பீடிக்கப்பட்டும் மனம் கலங்காதிருப்பது போல பர்வதங்கள் (மலைகள்), மழைத் தாரைகளால் அடிக்கப்பட்டும் சலனமற்றிருந்தன.
ப்ராஹ்மணர்கள் வேதங்களை அத்யயனஞ்செய்து, உருச்சொல்லாது விடுவார்களாயின், அவை சில காலத்தில் மறந்து போவது போல, வழிகள் ஜன ஸஞ்சாரமில்லாமையால் (மனித நடமாட்டம் இல்லாமையால்), புல் மூடி இப்படியோ அப்படியோ என்று ஸந்தேஹத்திற்கிடமாயிருந்தன. புதிது புதிதாகப் புருஷர்களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிற பெண்டிர்கள், குணமுள்ள தங்கள் கணவர்களிடத்தில் நட்பு குதிரப்பெறாமல் நிலையற்றிருப்பதுபோல, மின்னல்கள் உலகங்களுக்கெல்லாம் க்ஷேமம் விளைக்கையால், பந்துக்கள் போன்ற மேகங்களிடத்தில் நிலையற்றிருந்தன. சப்தத்தையே குணமாகவுடைய ஆகாயத்தில், குணமற்ற இந்த்ரதனுஸ்ஸு (வானவில்), ஸத்வாதி குணங்களின் பரிணாமமான தேஹத்தில் அக்குணங்களின் ஸம்பந்தமற்ற ஜீவன்போல் விளங்கிற்று.
ஜீவன், தன் ஜ்ஞானத்தினாலுண்டான தேஹாத்ம ப்ரமத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தினால்), தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் விலக்ஷணனாய்த் (வேறானவனாய்த்) தோற்றாதிருப்பது போல, சந்த்ரன், தன் நிலவினால் விளக்கமுற்ற மேகங்களால் மறைக்கப்பட்டு, அம்மேகங்களைக் காட்டிலும் விலக்ஷணனாய்த் (வேறாகத்) தோன்றவில்லை. இல்லறத்தில் இருக்கும் புருஷர்கள், ஸம்ஸார தாபங்களால் வருந்தி, பகவானுடைய பக்தர்களின் ஸேவை நேரப் பெற்று ஸந்தோஷிப்பது போல, மேகங்கள் தோன்றக் கண்டு ஸந்தோஷம் அடையும் தன்மையுடைய மயில்கள், அப்பொழுது ஸந்தோஷம் அடைந்து, நர்த்தனம் (நடனம்) செய்தன.
முன்பு தவஞ்செய்யும் பொழுது, தவத்தினால் வருந்தி இளைத்திருந்த புருஷர்கள், பிறகு காமபோகங்களை அனுபவித்து பருத்து, வலுத்த மேனியுடையவர்களாகி விளங்குவது போல, முன்பு உலர்ந்திருந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்), வேர்களால் ஜலங்களை இழுத்து, கிளை, தளிர், பூ, காய், பழம் முதலிய ஸம்ருத்திகள் அமையப் பெற்று, விளங்கின.
மன்னவனே! சிற்றின்பங்களில் விருப்பமுற்ற, கார்யங்கள் ஓயப் பெறாத க்ருஹஸ்தாச்ரமத்தில் வஸிப்பது போல, ஸாரஸப் பறவைகள் கலங்கின ஜலமுடைய தாமரைத் தடாகங்களில் வஸித்திருந்தன. கலியுகத்தில், வேதத்தை ஒப்புக்கொள்ளாத பாஷண்டிகளின் (வேதத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்கு எதிரான கொள்கை உடையவர்களின்) துர்வாதங்களால் (தவறான வாதங்களால்) வேதமார்க்கங்கள் உடைந்து அழிவதுபோல, மேகம் மழை பெய்கையில் வெள்ளம் கரைபுரண்டு வருகையால் அதைப் பொருக்க முடியாமல், அணைக் கட்டுகள் உடைந்து போயின. ராஜாக்கள், புரோஹிதாதிகளால் தூண்டப்பட்டு, காலந்தோறும் யாசகர்களின் விருப்பங்களைப் பெய்வது போல மேகங்கள், காற்றினால் தூண்டப்பட்டு, ப்ராணிகளின் ஜீவனத்திற்கு ஆதாரமான ஜலத்தைப் பெய்தன.
இவ்வாறு மழை பெய்கையால், வனம் முழுவதும் கர்ச்சூரிப்பழம், நாவல்பழம் முதலியன பக்வமாயிருக்கப் பெற்று, மிகவும் செழிப்பாயிருப்பதைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணன் பலராமனோடும், பசுக்களோடும், பசுபாலகர்களோடும் கூட விளையாட விரும்பி, அவ்வனத்திறகுள் ப்ரவேசித்தான்.
பசுக்கள், பெரிய மடியின் பாரத்தினால் மெல்ல மெல்ல நடக்கும் தன்மையுடையவைகளாயினும், ஸ்ரீக்ருஷ்ணனால் அழைக்கப் பெற்று, ப்ரீதியினால் பால் பெருக்கி கொண்டு, வேகமாகச் சென்றன.
கோப சிறுவர்கள் ஸந்தோஷமுற்ற குரங்கு முதலிய ஜந்துக்களையும், செழித்துத் தேனைப் பெருக்கிக் கொண்டிருக்கிற காட்டு வரிசைகளையும், பர்வதத்தினின்று பெருகி வருகின்ற அருவிகளையும், அவற்றின் த்வனிகளையும், ஸமீபத்திலிருக்கிற குஹைகளையும், கண்டார்கள்.
ஒருகால் மழைபெய்கையில் ஸ்ரீக்ருஷ்ணன், மரத்தடியிலும், குஹையிலும் ஒதுங்கி, கிழங்கு, வேர், காய், பழம் இவைகளைப் புசித்துக் களித்திருந்தான். பலராமனோடு கூடிய ஸ்ரீக்ருஷ்ணன் ஒருகால், க்ருஹத்தினின்று கொண்டு வந்த தத்யோதனத்தை (தயிர் சாதத்தை), ஜலக்கரையில் பாறையின் மேல் வைத்துக் கொண்டு, கூடியிருந்து புசிக்கத் தகுந்த கோபாலர்களோடு கலந்து, புசித்தான். அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மதித்துக் கண்ணை மூடிக்கொண்டு, புல்தரையில் அசைப்பிட்டுக் கொண்டிருக்கிற எருதுகளையும், கன்றுகளையும், பால் நிறைந்த மடியின் பாரத்தினால் ஓய்ந்திருக்கின்ற பசுக்களையும், ஸமஸ்த பூதங்களுக்கும் ஸந்தோஷத்தை விளைப்பதும், தன் ஸங்கல்பத்தினால் வளர்ந்திருப்பதுமாகிய வர்ஷ ருதுவின் (மழைக்காலத்தின்) சோபையையும் (அழகையும்), பார்த்து வெகுமதித்தான்.
அத்தகைய கோகுலத்தில், ராம க்ருஷ்ணர்கள் இவ்வாறு வஸித்துக் கொண்டிருக்கையில், மேகங்கள் தொலைந்து, ஜலமெல்லாம் தெளிந்து, ஸுகமான காற்று வீசப்பெற்றதுமாகிய சரத் ருது (இலையுதிர் காலம்) வந்தது. யோகத்தினின்று நழுவினவர்களின் மனம் கலக்கமுற்று, மீளவும் யோக அப்யாஸத்தினால் (யோகப் பயிற்சியால்) தெளிவது போல, முன்பு தெளிந்திருந்த ஜலங்கள், மழை பெய்தமையால் கலங்கி, மீளவும் சரத்ருதுவின் (இலையுதிர் காலத்தின்) ஸம்பந்தத்தினால் தெளிந்தன. ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் விளையும் பக்தி, ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், ஸன்யாஸி என்கிற நான்கு ஆச்ரமஸ்தர்களுடைய தோஷங்களையும் போக்குவதுபோல, சரத் ருது (இலையுதிர் காலம்) ஆகாயத்தில் மூடிக்கொண்டிருந்த மேகத்தையும், தேஜஸ்ஸு, ஜலம், காற்று இப்பூதங்களின் ஒன்றோடொன்றுக்கு உண்டான சேர்த்தியையும், பூமியின் சேற்றையும், ஜலங்களின் கலக்கத்தையும் போக்கிற்று. மேகங்கள் தங்கள் ஸர்வஸ்வமாகிய (சொத்தாகிய) ஜலத்தைத் துறந்து, வெளுத்த ஒளியுடையவைகளாகி, பகவானை த்யானிக்கும் தன்மையுடைய பெரியோர்கள், பெண்டிர், பணம், பிள்ளை இவற்றில் விருப்பத்தைத் துறந்து, ராக த்வேஷாதிகள் (விருப்பு, வெறுப்பு) கழிந்து, பாபங்களற்று விளங்குவது போல் விளங்கின.
ஞானிகள், சிலர்க்கு ஜ்ஞானோபதேசம் செய்து, சிலர்க்குச் செய்யாமல் மறுப்பது போல, பர்வதங்கள் (மலைகள்) சில இடங்களில் நிர்மலமான ஜலத்தைப் பெருக்கி, சில இடங்களில் ஜலத்தைப் பெருக்காதிருந்தன. பிள்ளை, பெண்டிர் முதலிய குடும்பத்தைப் போஷிப்பதில் ஊக்கமுற்ற மூடர்கள், தங்கள் வாழ்நாள் கழிவதை அறியாதிருப்பது போல், அற்ப ஜலத்தில் இருக்கின்ற மீன்கள், நாள்தோறும் ஜலம் குறைவதை அறியாதிருந்தன. இந்த்ரியங்களை வெல்ல முடியாமல் அவற்றின் ஸுகங்களை விரும்புகின்றவனும், தரித்ரனும் (ஏழையும்), பிள்ளை, பெண், மனைவி முதலிய பெரும் குடும்பமுடையவனும், முகம் வாடி மனக்களிப்பற்றவனுமாகிய புருஷன், ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களை {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்வீகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான துக்கங்களை} அனுபவிப்பதுபோல, அற்பமான ஜலத்தில் ஸஞ்சரிக்கின்ற ஜலஜந்துக்கள், சரத் ருதுவில் (இலையுதிர் காலத்தில்) ஸூர்யகிரணங்களால் விளையும் தாபத்தை அடைந்தன.
ஜ்ஞானிகள், தேஹத்திலும், தேஹத்தைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலும், அஹங்கார மமகாரங்களை மெல்ல மெல்லத் துறப்பது போல, தரைகள் சேற்றையும், செடி, கொடிகள் பசுமையையும் இழந்தன. பரமபுருஷனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிக்கும் முனிவன், அன்னபானாதிகளின் உபயோகம் நீங்கி, தேஹம் (உடல்) அழியத் தொடங்குகையிலும் அசையாதிருப்பது போல, சரத் ருது (இலையுதிர் காலம்) வந்திருக்கையில், ஸமுத்ர ஜலம் அசையாமல் கோஷம் (ஓசை) அற்றிருந்தது. யோகிகள், ப்ராணன்கள் (உயிர்கள்) மூலமாய் நழுவுகின்ற ஜ்ஞானத்தை, அந்த ப்ராணன்களைத் தடுத்து நிறுத்திக் கொள்வதுபோல, பயிரிடும் குடிகள் (விவசாயிகள்), பெருகிப் போகின்ற ஜலத்தை, திடமான அணைக் கட்டுக்களால் கழனிகளுக்காக நிறைத்து வைத்துக் கொண்டார்கள், (கழனிகளினின்று பெருகிப் போகிற ஜலத்தை, திடமான அணைக்கட்டுக்களால் நிறுத்திக் கொண்டார்கள்).
தேஹாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தினால்) உண்டாகும் வருத்தத்தை தேஹ, ஆத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு போக்குவது போலவும், கோப ஸ்த்ரீகளின் மன்மத தாபத்தை (காதல் வேதனையை) ஸ்ரீக்ருஷ்ணன் போக்குவது போலவும், ப்ராணிகளுக்குச் சரத் காலத்து (இலையுதிர் காலத்து) ஸூர்யனுடைய கிரணங்களால் உண்டாகும் தாபத்தைச் (வெம்மையை) சந்த்ரன் போக்கினான். ஆகாயம், சரத் ருதுவினால் (இலையுதிர் காலத்தினால்) மேகங்களின் மூடலின்றி, நக்ஷத்ரங்களெல்லாம் நிர்மலமாய் விளங்கப் பெற்று, ஸத்வ குணம், ரஜஸ், தமோ குணங்கள் தொலைந்து, வேதங்களால் நிரூபிக்கப்படுகிற) அர்த்த பஞ்சகம் தெளிவாய் தோன்றப் பெற்ற மனம் போல், ப்ரகாசித்தது.
முக்தியைப் பெற விரும்புபவன் அர்த்தபஞ்சகம் எனப்படும் ஐந்து பொருட்களை முக்யமாக அறிய வேண்டும். அவையாவன:-
1. நம்மால் அனுபவிக்கப்பட வேண்டிய எம்பெருமானின் ஸ்வரூபம் (இயற்கைத் தன்மை)
2. அனுபவிக்கும் ஜீவாத்மாவாகிய நம்முடைய ஸ்வரூபம் (இயற்கைத் தன்மை)
3. எம்பெருமானை அடைய முடியாமல் இதுவரை உள்ள இடையூறு
4. மோக்ஷத்திற்காகச் செய்யும் உபாயம்
5. முக்கிய பலனான பகவத் அனுபவம்.
ஆகாயத்தில் பரிபூர்ணமான மண்டலமுடைய சந்த்ரன், நக்ஷத்ரங்களால் சூழப்பட்டு, பூமியில் யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன் யாதவர்களின் படைகளால் சூழப்பட்டு விளங்குவது போல, விளங்கினான். சீதம், உஷ்ணம் இவை ஸமமாயிருக்கப்பெற்று, நிரம்பவும் புஷ்பித்திருக்கிற வனத்தினின்று வருகின்ற காற்றை ஜனங்கள் அனுபவித்து, தாபத்தைத் (வெம்மையைத், சூட்டைத்) துறந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனால் மனம் பறியுண்ட கோபிமார்களோவென்றால், அந்தக் காற்றை அனுபவித்து, தங்கள் தாபம் (காதல் வேதனை) வளரப் பெற்றார்களேயன்றி, சிறிதும் தீரப்பெறவில்லை.
சரத் ருது (இலையுதிர் காலம்) வந்திருக்கையில், பசுக்கள், ம்ருகங்கள், பக்ஷிகள், மடந்தையர்கள் ஆகிய இவையெல்லாம், தங்கள் தங்கள் அன்பர்களால் தொடரப்பெற்று, பகவத் ஆராதன ரூபமான செயல்கள், தர்ம, அர்த்த, காமாதி பலன்களால் தொடரப்பெற்று, ஸமஸ்த போகங்களையும் உட்கொண்டிருப்பது போல, கர்ப்பம் தரித்தன. திருடர்கள், புலி, ஸிம்ஹம் முதலியவை தவிர மற்ற ஜனங்களெல்லாம் ராஜாவைக் கண்டு நிர்பயமாய் (பயமின்றி) ஸந்தோஷிப்பது போல, நெய்தல் முதலிய சில புஷ்பங்கள் தவிர, ஜலத்தில் உண்டாகிற தாமரை முதலிய மற்ற புஷ்பங்களெல்லாம், ஸூர்யனைக் கண்டு, ஸந்தோஷம் அடைந்தன. ஸமஸ்த தான்யங்களும் நிறைந்திருக்கின்ற பூமி, பட்டணங்களிலும், க்ராமங்களிலும், புதிய பண்டங்களுக்கு ஸம்ஸ்காரமாக (குறைகளை நீக்கி பண்படுத்த) நடத்துகிற ஆக்ரயணமென்னும் யாகங்களாலும் (மழைக்கால முடிவில் புதியதாய் விளைந்த தான்யங்களால் செய்யப்படும் ஹோமம்), இந்த்ரியங்களுக்கு ஸந்தோஷத்தை விளைப்பவைகளான மற்றும் பல மஹோத்ஸவங்களாலும், விளக்கமுற்றிருந்தது.
பரம புருஷனுடைய அவதாரங்களான ராம க்ருஷ்ணர்களால் பூமியில் பயிர்கள் மிகவும் விளக்கமுற்றிருந்தன. தவத்தில் ஸித்தி பெற்றவர்கள், அதன் பலனை அனுபவிக்கும் காலம் வரப்பெற்று, இவ்வுலகத்தினின்று புறப்பட்டுத் தங்கள் தவத்தின் பலனான போகங்களை அனுபவிப்பது போல, க்ரய (வாங்குதல்), விக்ரய (விற்றல்) வ்யாபாரம் செய்கிற வர்த்தகர்களும், ஊர் ஊராகத் திரிகிற ஸந்யாஸிகளும், சத்ருக்களின் (எதிரிகளின்) மேல் படையெடுக்க விரும்பும் மன்னவர்களும், தீர்த்த யாத்ரை செய்பவர்களும், வர்ஷா (மழை) காலத்தினால் தடைபட்டிருந்து, சரத் ருது (இலையுதிர் காலம்) வருகையில் புறப்பட்டு, தங்கள் ப்ரயோஜனங்களைப் பெற்றார்கள்.
இருபதாவது அத்தியாயம் முற்றிற்று.