ஏழாம் நாள்
(இன்றைய பாசுரத்திலும் ஆண்டாள் தன் தோழியை எழுபுவதற்கு அவள் இல்லத்திற்கே சென்றுவிட்டாள்.)
கோதே, நேற்று நீ பாடின ‘புள்ளும் சிலம்பின காண்’ பாசுரம் கேட்டு நம் தோழியர்கள் அனைவரும் பாவை நோன்பிற்கு வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.
இல்லையடி, ஒருத்தி மட்டும் வரவில்லை அவள் பேய்ப் பெண்.
என்னது அவளுக்கு பேய்ப் பிடித்துவிட்டதா.
ச்சீ இல்லையடி அவளுக்கு கோவிந்த நாமப் பேய் பிடித்திருக்கிறது. நாம் பாடும் கோவிந்த நாம சங்கீர்த்தனத்தில் நடு நாயகமாக அவளே நின்றிருப்பாள் நம் கீர்த்தனைகளை நன்றாய் ரசிப்பாள்.
சரி அவளை எழுப்புவோம் கோதை.
அடியே, பேய்ப்பெண்ணே, தன் குட்டிகளுக்கு இரைத் தேட புறப்படும் ஆண் பறவையை வழியனுப்ப, அதனுடன் கீசுகீசு என்று பேசிக் கொண்டிருக்கும் ஆனைசாத்தன் பறவைகளின் பேச்சரவம் கேட்கலையா.
கோதே ஆனைசாத்தன் பறவை எப்படியிருக்கும். எத்தனையோ பறவைகள் இருக்க இதை ஏன் நீ தேர்ந்தெடுத்தாய்.
நன்றாக கேட்டாய் போ. பெரும் தவயோகியான பரத்வாஜ முனிவர்தான் ஆனைசாத்தனாக மறுபிறவி எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றதே உனக்குத் தெரியாதா. அவை கீசுகீசு என்று சத்தமிடும்போது உற்று கவனித்தால் கேச கேச என்று நம் கேசவனின் நாமம் கேட்குமே. கரிச்சான், வலியன் என்றும் நம் மக்கள் இதனை அழைப்பர்.
ஓகோ அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா இந்த ஆனைசாத்தன்.
மேலும் கேள். நம் ஆய்ச்சிமார் விடிகாலையிலேயே எழுந்து குளித்து வாசனை திரவியங்களை தங்கள் கூந்தலுக்குப் பூசி, தங்கள் கைகளை முன்னும் பின்னும், மேலும் கீழும் அசைத்து மத்தினால் தயிர் கடைகின்றார்களே அப்பொழுது எழும் தயிரரவமும், உடன் அவர்கள் கழுத்தில் போட்டுள்ள காசு மாலையும் மற்ற அணிகலன்களும் உரசும்போது எழும் சத்தமும் கேட்கவில்லையா.
கோதே, தயிரரவமா தயிர் கடையும்போது அவ்வளவு சத்தமாகவா கேட்கும்.
இல்லையடி, கோபியர்கள் தயிர் கடையும்போது மட்டுமில்லை, தயிர் வாங்கும்போதும் விற்கும்போதும் ‘கோவிந்தா தாமோதரா மாதவா’ என்றே விளிப்பார்கள். தயிர் விற்கும்போது ‘கோவிந்தன் வாங்கலையோ, தாமோதரன் வாங்கலையோ மாதவன் ஒரு படி இவ்வளவு’ என்று எங்கும் எப்பொழுதும் ஹரி நாமம் தான். தயிர் கடையும்போது கேட்கவும் வேண்டுமா என்ன.
மேலும் இன்று வராதவள் சாதாரனவளல்ல நாயகப் பெண்பிள்ளாய். நாம் நாராயண நாமம் பாடும்போது நடு நாயகமாக அவளே நின்றிருப்பாள் எல்லாப் பாட்டையும் கேட்டு ரசித்து ஆடிக் கொண்டிருப்பாள். இவ்வளவு அரவமும் அவளுக்கு கேட்கவில்லையா அல்லது கேட்காதது போல் நடிக்கிறாளா. அல்லது நம் நாராயண மந்திரமும் நாம சங்கீர்த்தனமும் கேட்டுக்கொண்டு படுப்பது போல் நடிக்கின்றாளா அடியே பேய்ப் பெண்ணே, நாயகப் பெண்பிள்ளாய் எழுந்திராய்.
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங்குழல் ஆச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ..
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.