செவ்வாய், 22 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 237

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் வேணு (புல்லாங்குழல்) கானம் செய்தலும், கோபிகைகள் அதைக் கேட்டுக் காம விகாரங்கொண்டு, ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்ளுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், பசுக்களோடும், கோபாலர்களோடும் கூடி, இவ்வாறு சரத்   ருதுவால் (இலையுதிர் காலத்தால்) தெளிந்த ஜலமுடையதும், தாமரைத் தடாகங்களில் பட்டு வருகையால் நல்ல பரிமளமுடைய காற்றினால் வீசப்பெற்றதுமாகிய, வனத்திற்குள் (காட்டிற்குள்) ப்ரவேசித்தான். யாதவர்களுக்கு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், காடுகளெல்லாம் வரிசை வரிசையாய்ப் புஷ்பித்திருக்கப்பெற்றதும், மதுபானத்தினால் மதித்திருக்கின்ற வண்டுகளும் மற்றும் பல பறவைகளும் இனமினமாய்க் கூவப்பெற்ற தாமரைத் தடாகங்களும், ஆறுகளும், பர்வதங்களும் (மலைகளும்) அமைந்து, ரமணீயமாயிருப்பதுமாகிய, வனத்திற்குள் கோபாலர்களோடும், பலராமனோடும் ப்ரவேசித்து, பசுக்களை மேய்த்துக் கொண்டு, வேணு (புல்லாங்குழல்) கானம் செய்தான். 

இடைச்சேரியிலுள்ள சில கோபிமார்கள் மன்மத விகாரத்தை (காமக் கிளர்ச்சியை) விளைப்பதாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தைக்  கேட்டு, தங்கள் ஸகிகளுக்கு வர்ணிக்கத் (விவரிக்கத்) தொடங்கினார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், வேணுகானம் செய்யும் செயலை வர்ணிக்கத் தொடங்கின கோபிகைகள், அவனுடைய சேஷ்டைகளை நினைத்து, காம விகார (காமக் கிளர்ச்சியின்) வேகத்தினால் மன வ்யாகுலமுற்று (வருந்தி), அதை வர்ணிக்க முடியாமலே இருந்தார்கள். திறமையுடைய கூத்தாடுகிறவன், தன்னுருவம் தெரியாதபடி வேஷம் பூண்டு வருவதுபோல், கோபால வேஷத்தினால் தன்னுடைய அஸாதாரண ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணன், சிரஸ்ஸில் (தலையில்) மயில் தோகையாகிற அலங்காரத்தையும், காதுகளில் கர்ணிகார புஷ்பத்தையும் (கொன்றைப்பூவையும்), அரையில் பொன்னிறமுள்ள அழகான ஆடையையும், மார்பில் வைஜயந்தி என்னும் பூமாலையையும் தரித்து, நடச்ரேஷ்டனுடைய (சிறந்த நாட்டியக்காரன்) வேஷம் போன்ற வேஷமுடையவனாகி, வேணுவின் (புல்லாங்குழலின்) த்வாரங்களைத் தன்னுடைய அதரத்தின் (உதடுகளின்) அம்ருதத்தினால் நிறைத்துக்கொண்டு, தன்னைத் தொடர்ந்து வருகின்ற கோபாலர்களால் பாடப்பட்ட புகழுடையவனாகித் தன் அடிவைப்புக்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகாயிருக்கின்ற ப்ருந்தாவனத்திற்குள் நுழைந்தான். 

இவ்வாறு ஸமஸ்த ப்ராணிகளின் மனத்திற்கும் இனிதாயிருக்கும்படி பாடுகின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தை, கோபிகைகள் அனைவரும் கேட்டு, அவனுடைய சேஷ்டைகளை (செயல்களை) ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு, புத்தியில் ஸந்நிதானம் செய்கின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அணைத்து, மனக்களிப்புற்றிருந்தார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- தோழிகளே! நந்தகுமாரர்களான ராம க்ருஷ்ணர்கள், நண்பர்களான கோபாலர்களோடு பசுக்களை மேயத்துக்கொண்டு போகும் பொழுது, வேணுவோடு (புல்லாங்குழலோடு) கூடியதும், காண்போர்களுக்கும் மிகவும் ப்ரீதியை விளைப்பதும், அனுராகம் (அன்பு, பரிவு) பெருகுகின்ற கடைக் கண்ணோக்கங்கள் அமைந்ததுமாகிய அவர்கள் முகத்தைக் கண்டு அனுபவிப்பார்களாயின், அதுவே கண் படைத்தவர்களின் கண்களுக்கு ப்ரயோஜனமன்றி, மற்றொரு ப்ரயோஜனம் இருப்பதாக நாங்கள் அறியோம்.  

மாந்தளிர்கள், மயில் தோகைகள், பூங்கொத்துகள், நெய்தல்பூ, தாமரைப்பூ இவற்றின் மாலைகளால் இடையிடையில் கலந்திருக்கின்ற ஆடைகளை உடுத்து, விசித்ரமான வேஷம் பூண்டிருக்கிற அந்த ராம க்ருஷ்ணர்கள், ஒருகால் கோபாலர்களின் இடையில் பாடிக்கொண்டு, ரங்க ஸ்தலத்தின் (நாடக மேடையின்) மத்தியில் பாடுகிற  நடச்ரேஷ்டர்கள் (சிறந்த நடனக்காரர்கள்) போல் விளங்கினார்கள். 

கோபிமார்களே! ஸ்ரீக்ருஷ்ணனுடைய கையில் இருக்கின்ற இந்த வேணு (புல்லாங்குழல்), என்ன புண்யம் செய்ததோ! ஏனென்றால், கோபிகைகளான நமக்கும் கூடக் கிடைக்க அரிதான ஸ்ரீக்ருஷ்ணனுடைய அதரத்தின் (உதட்டின்) அம்ருதத்தை, தானே அனுபவிக்கின்றதல்லவா? அது அனுபவித்து மிகுந்த அதர (உதட்டின்) அம்ருத ரஸத்தை, நதிகளும், வ்ருக்ஷங்களும் (மரங்களும்) அனுபவிக்கின்றன. அவற்றுள் நதிகள் மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்களின் வ்யாஜத்தினால் மயிர்க்கூச்சம் உண்டாயிருக்கப் பெற்றவை போலத் தோற்றுகின்றன. வ்ருக்ஷங்கள் (மரங்கள்), தேன்களின் வ்யாஜத்தினால், ஆநந்த நீர் பெருக்குகின்றவை போலத் தோற்றுகின்றன. 

தோழீ! இந்த ப்ருந்தாவனம், பூ மண்டலத்திற்கெல்லாம் பெரிய புகழை விளைக்கின்றது. ஏனென்றால், இது தேவகியின் புதல்வனாகிய க்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களின் ஸ்பர்சனத்தினால், மிகுந்த சோபை (அழகு) உண்டாகப் பெற்றிருக்கின்றது. மற்றும், இதில் பசுக்களை மேய்த்துக் கொண்டு உலாவுகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தைக் கேட்டு, மயில்கள் மெதுவாகக் கர்ஜனை செய்கின்ற நீலமேகமென்று ப்ரமித்து மதித்து (மயங்கி), நர்த்தனம் (நடனம்) செய்ய, தாழ்வரைகளில் இருக்கின்ற மற்ற ஜந்துக்களெல்லாம், ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தைக் கேட்டு, அதற்குப் பொருந்துமாறு நர்த்தனம் (நடனம்) செய்கின்ற மயில்களையும் கண்டு, தத்தம் செயல்களையெல்லாம் துறந்து, பேசாதிருக்கின்றன. 

இந்தப் பூலோகம் தவிர மற்ற லோகங்களில் எங்கேனும் இத்தகைய விசேஷம் உண்டோ? திர்யக் (விலங்கு) ஜாதியில் பிறந்து, அழகென்றும் குரூபியென்றும் (அழகற்றது என்றும்), அறியும் விவேகமற்ற இந்த மான்பேடுகளுங்கூட (பெண் மான்களும்) மிகுந்த பாக்யமுடையவைகள். ஏனென்றால், இவை வேணு (புல்லாங்குழல்) கானத்தைக் கேட்டு, தங்கள் கணவர்களாகிய க்ருஷ்ணஸார ம்ருகங்களுடன் (கறுப்பு மான்களின்) அருகாமையில் வந்து, மயில் தோகை முதலியவற்றால் விசித்ரமான வேஷம் பூண்டிருக்கின்ற நந்தகுமாரனுக்கு ப்ரீதியமைந்த கண்ணோக்கங்களால் வெகுமதி செய்கின்றன. (அற்பர்களான நம் (கோபிகைகளின்) கணவர்களோவென்றால், தங்கள் எதிரில் அவ்வாறு நாம் கடைக் கண்ணோக்கங்களால் ஸ்ரீக்ருஷ்ணனை வெகுமதிக்கப் பொறுக்கமாட்டோம் என்கிறார்களே). இவை மதுரமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய வேணு (புல்லாங்குழல்) கானத்தை இஷ்டப்படி கேட்பதும், அழகிய கண்ணோக்கங்களால் அவனை வெகுமதிப்பதும், செய்ய நேரப்பெற்றமை பாக்ய மஹிமையேயல்லவா! மற்றும், அதற்குத் தங்கள் கணவர்களும் பொறாமையின்றி உதவியாயிருக்கப் பெற்றமையாகிய பாக்ய மஹிமையைப் பற்றி என்னென்று சொல்லுவேன்?  

ஆகாயத்தில் விமானத்தின் மேல் ஏறி ஸஞ்சரிக்கின்ற தெய்வ மடந்தையர்கள், மடந்தையர்களுக்கு ஸந்தோஷத்தை விளைக்கவல்ல உருவமும், ஸ்வபாவமும், உடைய ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டும், அவன் வாசிக்கிற அழகான வேணு (புல்லாங்குழல்) கானத்தைக் கேட்டும், மன்மதனால் தைர்யம் பறியுண்டு, தலைச் சொருக்குகளினின்று புஷ்பங்கள் நழுவவும், அரையாடையின் முடிச்சு அவிழவும் பெற்று, மோஹித்தார்கள். பசுக்களும், ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்ணால் கண்டு, அவனை மனத்தினால் அணைத்து, கண்ணீர் பெறுகப் பெற்று, அவனுடைய முகத்தினின்று கிளம்பி வருகின்ற வேணு (புல்லாங்குழல்) கானமாகிற அம்ருதத்தை மேல் நோக்கி நிமிர்த்திய காதுகளாகிற தொன்னைகளால் பானம் செய்து கொண்டு, பேசாதிருந்தன. 

தாய் முலையை ஊட்டத் தொடங்கின கன்றுகளும் கூட, ஊட்டுவதை மறந்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, அவனுடைய வேணு (புல்லாங்குழல்) கானமாகிற அம்ருதத்தை மேல் நோக்கி நிமிர்த்திய காதுகளாகிற தொன்னைகளால் பருகிக்கொண்டு, அவனை மனத்தினால் அணைத்து, கண்களினின்று ஆநந்த நீர் பெருகப்பெற்று, தாய் முலையினின்று தங்கள் வாயில் பெருகி விழுகின்ற பாலைப் பருகவும் மறந்து, அந்தப் பால் முழுவதும் அப்படியே வழியப் பெற்றுப் பேசாதிருந்தன. 

அம்மா! இவ்வனத்திலுள்ள பக்ஷிகள் பெரும்பாலும் முனிவர்களாயிருக்க வேண்டுமென்று தோற்றுகிறது. ஏனென்றால், இந்தப் பக்ஷிகள், அழகிய தளிர்கள் அமைத்த வ்ருக்ஷங்களின் (மரங்களின்) கிளைகள் மேல் ஏறி உட்கார்ந்து, தாங்கள் புசிக்க வேண்டிய பழம் முதலியவற்றையும் துறந்து, ஸ்ரீக்ருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்து, அவன் பாடுகிற அழகிய வேணு (புல்லாங்குழல்) கானத்தை ஆநந்தத்தினால் கண்களை மூடிக்கொண்டு, வேறொரு சப்தமும் செய்யாமல், ஊக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறே அறிவற்ற நதிகளுங்கூட ஸ்ரீக்ருஷ்ணனுடைய அத்தகையதான வேணு (புல்லாங்குழல்) கானத்தைக் கேட்டு, நீர்ச்சுழிகளால் சுழன்று, மூர்ச்சித்தாற் போலிருக்கின்றமையால் அறிவிக்கப்பட்ட மன்மத விகாரத்தினால் வேகம் அடங்கப்பெற்று, அலைகளாகிற புஜங்களால் தாமரை மலர்களை உபஹாரமாகக் கொண்டு, ஆலிங்கனத்தால் மறைந்திருக்கும்படி அவனுடைய பாதார விந்தங்களைப் பிடித்துக்கொள்கின்றன. 

யமுனையின் கரையில், வெயிலில் பலராமனோடும் கோபாலர்களோடும் கூடி, இடைச்சேரியிலுள்ள பசுக்களையெல்லாம் மேய்த்துக் கொண்டு, அவற்றின் பின்னே வேணு (புல்லாங்குழல்) கானம் செய்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, மேகம் கிளம்பி ப்ரீதியினால் வளர்ந்து, உலகங்களின் வருத்தங்களைப் போக்குகையாலும், நீல நிறத்தினாலும், தனக்கு நண்பனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பூமழைகளைப் பொழிந்து, தன் வடிவத்தினால் குடையும் பிடித்தது. வேடர் பெண்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் (பாக்யம் நிறைந்தவர்கள்); ஏனென்றால், முனிவர்களால் மிகுதியும் பாடப்படுகின்ற பெருமையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுடைய அன்பிற்கிடமான ஸ்ரீமஹாலக்ஷ்மியின் ஸ்தனங்களில் அலங்காரமாக அணியப்பட்டதும், அவற்றினின்று அவன் பாதார விந்தங்களில் படிந்து, அவற்றின் செவ்வியால் (சிவப்பு நிறத்தால்) மிகுந்த அழகுடையதும், அவன் வனத்தில் ஸஞ்சரிக்கும் பொழுது அப்பாதாரவிந்தங்களினின்று பூமியில் ஆங்காங்கு படிந்திருப்பதுமாகிய குங்குமத்தைக் கண்ட மாத்திரத்தில் காம வேட்கை  தலையெடுக்கப் பெற்று, அந்தக் குங்குமத்தை வழித்தெடுத்து, முகங்களிலும், ஸ்தனங்களிலும், பூசிக்கொண்டு காமவேட்கையைத் துறந்தார்கள். 

ஓ அவலைகளே! இந்த பர்வதம் (மலை), ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாஸர்களில் (பக்தர்களில்) சிறந்தது. ஆ! ஸ்தாவரங்களுக்குக் கூட ஸ்ரீக்ருஷ்ண தாஸ்யத்தில் (பக்தியில்) உண்டாயிருக்கும் ப்ரீதியைக் கண்டீர்களா! இந்தப் பர்வதம் (மலை), ராம க்ருஷ்ணர்களின் பாதார விந்தங்கள் தன்மேல் படப்பெற்று, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, நண்பர் கூட்டங்களோடு கூடிய அந்த ராம க்ருஷ்ணர்களுக்கு ருசியுள்ள ஜலங்களாலும், நல்ல புற்களாலும், குஹைகளாலும், கிழங்கு, வேர் இவைகளாலும் அவரவர்களுக்குத் தகுந்தபடி வெகுமதி செய்கின்றது. 

தோழிகளே! இடையர்களோடு கூட வனங்கள் தோறும் பசுக்களை மேய்த்துக் கொண்டு சஞ்சரிப்பவர்களும், சிரஸ்ஸில் (தலையில்) அணைக் கயிறுகளையும், தோள்களில் தலைக்கயிறுகளையும் தரித்து, இடையர்களின் அடையாளம் விளங்கப் பெற்றவர்களுமாகிய, அந்த ராம க்ருஷ்ணர்கள், மதுரமான சப்தங்கள் அமைந்திருக்கும்படி ஊதுகின்ற அழகிய குழலோசையைக் கேட்டு, அசைகிற விலங்குகள், ஆறுகள் முதலியன அசையாதிருக்கின்றன; அசையாத மரங்களோ, மயிர்க்கூச்சம் உண்டாகப் பெறுகின்றன. இதென்ன விசித்ரம்! கண்டீர்களா!

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபிகைகள், ப்ருந்தாவனத்தில் ஸஞ்சரிக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய இத்தகைய லீலைகளையும், மற்றும் பலவகையான லீலைகளையும் வர்ணித்து, ஸ்ரீக்ருஷ்ணனுடைய சிந்தையே தலையெடுத்திருந்தார்கள். 

இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக