திருப்பாவை - 8 - கோமான் ஶ்ரீ பாலாஜி

எட்டாம் நாள்


“கோதே, நேற்று அவளை நீ பேய்ப்பெண்ணே என்று அழைத்தது அவளுக்கு மிகவும் வருத்தமாயிருந்ததாம்.”


“ஏன் அவள் இன்று வரவில்லையா”


“வந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு சற்று வருத்தம். அதை போக்கிட ஏதாவது செய்யேன்.”


“கண்டிப்பாக. பார் பேசிக் கொண்டே இருந்ததில் கீழ்வானம் வெளுத்துவிட்டது. நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்களா.”


“இல்லை இன்றும் ஒருத்தி வரவில்லை.”


“ஓகோ அப்படியா அவள் இல்லத்திற்கே செல்வோம். அவளை பேய்ப்பெண்ணே என்றெல்லாம் அழைக்க மாட்டேன்.”


அவளின் வீட்டு வாசலில் கோதை மற்றும் அவளின் தோழிகள்.


“அடியே, அழகுச்சிலையே, என்றும் எப்பொழுதும் மகிழ்ச்சியை முகத்தில் நிறைந்திருப்பவளே கீழ்வானம் வெளுத்துவிட்டது.”


அந்த இல்லத்திலிருந்து மிக மெல்லிய குரலில்…..

“இல்லை நான் நம்பமாட்டேன் என்னை ஏமாற்றுகிறீர்கள். சதா சர்வகாலமும் கண்ணனையே நினைத்து உங்கள் முகம் பூரிப்பில் வெளுத்து வெளிறி விட்டது அதனால் உங்களுக்கு எல்லாமும் வெளுத்தது போல் உள்ளது.”


“அடியே, எங்களுக்கு அது தெரியாதா சரி மேலும் கேள். எருமைகள் புல் மேய்வதற்கு சிறுவீடு வந்துவிட்டன.”


“இல்லைல்லை, இதுவும் என்னை ஏமாற்றுவதற்கே நீங்கள் சொல்கிறீர்கள்.”


“சரி அதையும் விட்டுவிடு. நம் எல்லாத் தோழிகளும் நீராட வந்துவிட்டார்கள். உடனே குளிக்கச் செல்ல வேண்டும் என்றிருக்கிறார்கள். கண்ணனை காண்பதற்கு அவ்வளவு ஆசை அவ்வளவு வேகம். ஆனால், நீ மட்டும் எழுந்திருக்கவேயில்லை.”


“எனக்கும் அவனை பார்க்க ஆசைதான். ஆனால் இதுவும் ஏமாற்றி என்னை எழுப்புவதற்கு சொல்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இன்னும் சிறிது நேரம் தூங்கி விட்டு வருகிறேனே.” 


“உண்மைதானடி நீராடப் போவோரை நான் உனக்காகத் தான் நிறுத்தி வைத்துள்ளேன் வந்து பாரேன். ‘கேசி’ என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை அதன் வாயை கிழித்துக் கொன்ற நம் கேசவனை காண வேண்டாமா. முஷ்டிகாசுரன் மற்றும் சானுரன் என்கின்ற மல்லர்களை வீழ்த்திய நம் தேவாதி தேவன் மாதவனை போய் சேவித்தால் நாம் கேட்கும் பறையை (கைங்கர்யத்தை), ஆகா இவர்கள் பக்தி என்னவென்று சிலாகித்துத் தருவான் அல்லவா, அதற்காகத் தான் உன் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறோம். உடனே புறப்பட்டு வாடி குதூகலமுடையவளே.


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை