திருப்பாவை - 9 - கோமான் ஶ்ரீ பாலாஜி

ஒன்பதாம் நாள்


“கோதை இன்று நாம் பாவை நோன்பின் ஒன்பதாம் நாள் வந்துவிட்டோம். இன்று அனைவரும் வந்துவிட்டனர் என்றே நினைக்கின்றேன்.”


“அருமை அனைவருக்கும் பகவதனபவம் விரைவில் கிட்டும். சரி எங்கே என் மாமன் மகளைக் காணவில்லையே. அவள் வரவில்லையோ. நாள்தோறும் யாராவது ஒருவர் வராமல் இருக்கிறார்கள். நம்மில் இருப்பவர்களில் ஒருத்தி நடுநாயகப்பெண் மற்றொருத்தி குதூகலம் உடையவள் இவளோ செல்வ செழிப்பில் புரளும் சீமாட்டி. நம்மை இணைக்கும் ஒரே மந்திரம் ஹரி நாமம் தான். கண்ணன் மேல் கொண்ட அளவில்லாக் காதல் தான். அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவர் இல்லமாகச் சென்று அழைக்கிறேன்.”


“ஆம் கோதை நீ சொல்வது வரிதான். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே மந்திரம் கண்ணன் தான். உன் மாமன் மகள் இன்று வரவில்லை, நாம் அவள் இல்லத்திற்கு செல்வோம்.”

“வாருங்கள் செல்வோம். அவள் இல்லம் மிகவும் அருமையாக தூய்மையான மணிகள் கட்டப்பட்ட மாடத்தில் எல்லாத்திசைகளிலும் விளக்குகள் எரிய, நல்ல நறுமணமான வாசனைப் புகை எங்கும் நிரவியிருக்கும். அங்கே இவ்வளவு வெளிச்சத்திலும் அவள் நன்கு தூங்கிக் கொண்டிருப்பாள், இதோ அவள் வீடு வந்துவிட்டது.”


“அடியே, மாமன் மகளே நன்றாயிருக்கிறது உன் நியாயம். காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு உறங்கிக் கொண்டிருக்கிறாயா. நீ எழுந்து வந்து கதவைத் திற. மாமி, நான் சொன்னது கேட்கவில்லையா. அவளை எழுப்புகிறீரா. நேற்றுவரை நன்றாகத் தானே இருந்தாள் இன்று உமது மகள் என்ன ஊமையா அல்லது செவிடா இல்லை சோம்பேறியா. நாங்கள் அனைவரும் வந்துவிட்டோம் அவள் ஏன் வரவில்லை ஏதாவது மந்திரத்தால் கட்டுப்பட்டு மயக்கம் அடைந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளா. அவளை எழுப்புங்கள் மாமி.”


“மாயைகள் பல புரியும் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று நாங்கள் பலவித நாமங்களை உச்சரித்த வண்ணம் இருக்கிறோம். ஆனால் அவள் எப்படி அப்படி ஒரு பெருந்தூக்கம் போடுகிறாளே. மாமி எழுப்புங்கள்.”


“அடியே மாமன் மகளே துயிலெழாய்.”


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்

ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை