வியாழன், 24 டிசம்பர், 2020

திருப்பாவை - 10 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பத்தாவது நாள்

கோதே, நாம் இத்தனை நாட்கள் நோன்பிருந்து வருகிறோமே நமக்கு நிச்சயம் சொர்க்கம் தான் கிடைக்கும்.


அடியே, சொர்க்கம் என்னடி சொர்க்கம்., நாம் நம் மன்னன் கண்ணன் திருவடி அடைந்தோமானால் சொர்க்கத்தைக் காட்டிலும் பெரிதான வைகுந்தத்தையேத் தருவான். பேரின்பத்தையே அவன் அள்ளித் தர சிற்றின்பம் எதற்கடி. சரி இன்று நம் பாவை நோன்பின் பத்தாவது நாளுக்கு வந்துவிட்டோம். இன்றாவது எல்லோரும் வந்துள்ளார்களா.


வழக்கம்போல் கோதை ஒருத்தி மட்டும் வரவில்லை. அவள்தான் நேற்று என்னிடம் சொர்க்கத்தைப் பற்றி கேட்டாள்.


அடியே, அழகான ஆடை ஆபரணங்கள் அணிய விரும்பும் அருங்கலமே, உன்னை இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் பிடிக்குமே. உன் பேச்சு, நடை, உடை பாவனை எல்லாம் அந்த கண்ணனுக்கே பிடிக்குமே. உனக்கு என்ன நேர்ந்தது. நோன்பு நோற்றவுடன் உனக்கு சொர்க்கத்தின் மேல் ஆசை வந்துவிட்டதோ. அந்த சொர்க்கத்தை பற்றி கனவுக் கொண்டு இருக்கிறாயா. நமக்கு கண்ணன் இருக்குமிடம் தானே சொர்க்கம். நாங்கள் உன் வீட்டுவாசலில் நிற்கின்றோம் எங்களுக்கு வாயிற்கதவையாவது திறக்கலாமே அல்லது ஏதாவது மறுமொழியாவது தரலாமே. பிள்ளாய் அவளுக்கு அந்த எண்ணமே இல்லை போலும்.

‘நாற்றத் துழாய் மாலை’ 


கோதே நாற்றம் என்றால் நறுமணம் என்ற அர்த்தத்தில் தானே...


ஆம் பிள்ளாய். நாற்றம் என்பது பழந்தமிழ் வார்த்தையிது. இதற்கு அர்த்தம் நல்ல நறுமணம். நம் மாதவன் நல்ல நறுமணம் வீசும் துளசி மாலை அணிந்து அருள் தரும் நாராயணன். 


கோதே துளசிக்கு அவ்வளவு விசேஷமா.


ஆம் பிள்ளாய் நாம் பகவானை நிந்தித்தாலும் பரவாயில்லை ஆனால் திருத்துழாய் எனும் துளசியை பழிக்கவோ அவமதிக்கவோக் கூடாது. நம் பகவான் பாகவதர்க்கு ஒன்று என்றால் விட்டுவிடுவானா. அவனை துளசிகளால் அலங்கரிப்பதுப் பற்றி நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒரு பாசுரத்தில் விளக்கியுள்ளார்,

‘தோளினை மேலும் நன் மார்பில்

மேலும் சுடர்முடி மேலும்

தாளிணை மேலும் புனைந்த

தன்னந் துழாயுடை அம்மான்.’

என்று எம்பெருமானின் திருமேனியில் எல்லா இடத்திலும் ஆடைப் போன்று சாற்ற வேண்டும். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது துளசி.


அவனை நாம் போற்றி பாடல் பாடப்பாட நமக்கு அருள் தருவான். நாம் கேட்கும் பகவத் கைங்கர்யத்தைத் தருவான். இவளென்ன முன்பொரு நாள் ராமனிடம் தோற்று தூக்கத்தையே வரமாகப் பெற்ற கும்பகர்ணனும், தான் இறந்தபின் தன் தூக்கத்தை இவளிடம் தந்துவிட்டானோ. மிக்க பெருந்தூக்கமுடைய அருங்கலமே துயில் எழாய்.


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்

போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக