தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்திரண்டாவது அத்தியாயம்
(கோபீ வஸ்த்ராபஹார (துகில் கவர்ந்த) வ்ருத்தாந்தம்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஹேமந்த ருதுவில் (பனிக்காலத்தில்) முதல் மாதமாகிய மார்கழி மாதத்தில் நந்த கோகுலத்திலுள்ள கோப கன்னிகைகள் அனைவரும் பரிசுத்தமான ஆஹாரத்தைப் (உணவை) புசித்துக்கொண்டு (உண்டு), காத்யாயனியின் ஆராதன ரூபமான வ்ரதத்தை ஒரு மாதம் வரையில் அனுஷ்டித்தார்கள். அக்கன்னிகைகள் அருணோதய வேளையில் (ஸூர்ய உதயத்திற்கு முன் 4 நாழிகைகள் – 1½ மணி நேரம் அருணோதய காலம்) யமுனாஜலத்தில் ஸ்னானஞ்செய்து, ஜலக்கரையில் மணலால் காத்யாயனியின் ப்ரதிமையை (திருவுருவம்) செய்து, நல்ல மணமுள்ள கந்தங்களாலும், அத்தகைய பூமாலைகளாலும், பலவகையான உபஹாரங்களாலும், தூப, தீபங்களாலும், தளிர்களாலும், பழங்களாலும், அக்ஷதைகளாலும், அந்தக் காத்யாயனீ தேவியை நன்றாகப் பூஜித்தார்கள்.
“காத்யாயனி! மிகுதியும் ஆச்சர்யமான சக்தியுடையவளே! தன்னுடைய ஆராதன ரூபமான மஹாயோகத்தை நிறைவேற்றும் தன்மையளே! தன்னை ஆராதிப்பவர்கள் விரும்பும் பலனைக் கொடுக்கும் திறமையுடையவளே! தேவீ! நந்தகோப குமாரனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை எனக்குக் கணவனாகச் செய்ய வேண்டும். உனக்கு நமஸ்காரம்” என்ற இம்மந்திரத்தை ஜபித்துக்கொண்டு அவர்கள் காத்யாயனிக்குப் பூஜை செய்தார்கள்.
அந்தக் கோப கன்னிகைகள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனம் செல்லப் பெற்று “நந்தகுமாரன் எங்களுக்குப் பதியாக (கணவனாக) வேண்டும். இவ்வாறு நீ அருள் புரிய வேண்டும்” என்று பத்ரகாளியை ஆராதித்துக் கொண்டு, ஒரு மாதம் முழுவதும் வ்ரதத்தை அனுஷ்டித்தார்கள். அந்த இடைக் கன்னிகைகள் தினந்தோறும் விடியற்காலத்தில் எழுந்து, ஒருவரையொருவர் பெயரைச் சொல்லி அழைத்தெழுப்பி, ஒருவரோடொருவர் கைகோத்து, ஸ்ரீக்ருஷ்ணனை உரக்கப் பாடிக்கொண்டு, யமுனையில் ஸ்னானம் செய்யப் (நீராடப்) போவது வழக்கம். இப்படி நடக்கையில் ஒருகால், யமுனா நதிக்கு வந்து, முன் போலவே கரையில் வஸ்த்ரங்களை (ஆடைகளை) அவிழ்த்து வைத்து, ஜலத்தில் இறங்கி, ஸந்தோஷத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனைப் பாடிக்கொண்டு விளையாடினார்கள்.
அப்பொழுது, யோகீச்வரர்களுக்கும் ஈச்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், அவர்கள் செய்யும் வ்ரதத்தையும் விளையாடுவதையும் அறிந்து, அவர்களின் வ்ரதத்தை நிறைவேற்ற விரும்பி, நண்பர்களுடன் அவ்விடம் வந்து அவர்கள் கரையில் வைத்திருந்த வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு, விரைவுடன் சென்று, கதம்ப மரத்தின் மேல் ஏறிக்கொண்டு, சிரிக்கின்ற இடைப் பிள்ளைகளுடன் தானும் சிரித்துக்கொண்டு, பரிஹாஸமாக (கேலியாக) இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- பெண்மணிகளே! நீங்கள் இவ்விடம் வந்து, உங்களிஷ்டப்படி தங்கள் தங்கள் வஸ்த்ரங்களைப் பெற்றுக் கொண்டு போவீர்களாக. நான் உண்மையாகச் சொல்லுகிறேன்; பரிஹாஸம் (கேலி) அன்று. நீங்கள் வ்ரதத்தினால் இளைத்திருக்கின்றீர்கள். ஆகையால், உங்களைப் பரிஹாஸம் (கேலி) செய்ய மாட்டேன். நான் ஒரு நாளும் பொய் சொன்னதே இல்லை. அது இவர்களுக்குத் தெரியும். அழகிய இடையுடையவர்களே! நீங்கள் தனித் தனியேயாவது வந்து வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, எல்லோரும் ஒன்று சேர்ந்தாவது வந்து வாங்கிக் கொள்ளுங்கள்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணன் அவ்வாறு பரிஹாஸம் (கேலி) செய்வதைக் கண்டு ப்ரீதி நிறைந்திருக்கின்ற கோபிகைகள், ஒருவரையொருவர் பார்த்து வெட்கமுற்றுச் சிரித்து, குளத்தினின்று புறப்படாமலேயிருந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு சொல்லுகையில் குளிர்ந்த ஜலத்தில் கழுத்து வரையில் அமிழ்ந்து, குளிரால் நடுக்கமுற்றிருக்கின்ற அவ்விடைப் பெண்கள், அவனுடய பரிஹாஸ (கேலி) வாக்யத்தினால் இழுக்கப்பட்ட மனமுடையவர்களாகி, அவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தார்கள்.
கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- இடைச்சேரியிலுள்ள அனைவராலும் புகழத் தகுந்தவனும், நந்தகோப குமாரனுமாகிய நீ, நாங்கள் அனுஷ்டித்த வ்ரதத்தினால் எங்களுக்கு அன்பு நாயகனாகப் போகிறாயென்பது தெரியும். ஆயினும், இப்பொழுதே நீ அநீதி (அந்யாயம், முறையற்றதை) செய்யத் தொடங்காதே. நாங்கள் குளிரால் நடுக்க முற்றிருக்கிறோம். ஆகையால், எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுப்பாயாக. நீ நந்த கோபகுமாரனாயிருந்து இவ்வாறு ந்யாயம் தவறுவது யுக்தமன்று (ஸரியன்று). மற்றும், நீ கோகுலத்திலுள்ளவர்கள் அனைவர்க்கும் புகழத் தகுந்தவன். இப்படி அநியாயம் செய்து உன் புகழைப் போக்கடித்துக் கொள்ளாதே. நீ எங்கள் அன்பிற்கிடமாயிருந்தும், குளிரில் வருந்துகிற எங்களை மேன்மேலும் வருத்துவது உனக்குத் தகுமா? ஆகையால், அநியாயம் செய்யாமல், எங்கள் வஸ்த்ரங்களைக் கொடுப்பாயாக.
கரியனே! அழகனே! நாங்கள் உன்னடிமைகள். இதுவொன்று தவிர, மற்ற நீ சொன்னதையெல்லாம் செய்ய ஸித்தமாயிருக்கின்றோம். தர்மஜ்ஞனே! (பஹிரங்கமான இடத்தில் (எல்லோரும் பார்க்கக்கூடிய பொது இடத்தில்), அரையிலாடையில்லாத பெண்களைப் பார்க்கலாகாதென்கிற தர்மம் உனக்குத் தெரியாதோ?) நீ எங்கள் வஸ்த்ரங்களைக் கொடாது போவாயாயின், நாங்கள் இதை ராஜனுக்குச் சொல்லுவோம்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- பரிசுத்தமான புன்னகையுடையவர்களே! நீங்கள் எனக்கு அடிமையாயிருப்பதும், நான் சொன்னபடி செய்வதும் உண்மையாயின், நீங்கள் இவ்விடம் வந்து, தங்கள் தங்கள் வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்வீர்களாக. ப்ரபு சொன்னவற்றில், அடியவர்கள் தங்களுக்கு இஷ்டமான சிலவற்றையே செய்யவேண்டுமென்னும் நியதி இல்லை. அவனுக்கு இஷ்டமானவற்றையெல்லாம் செய்யவேண்டிய அவச்யமே.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அழகிய அங்கமுடைய அப்பெண்மணிகள் அனைவரும், ஸ்வாமியின் இஷ்டத்தை அடிமைகள் செய்யவேண்டியது யுக்தமே (ஸரியே) என்று அபிப்ராயப்பட்டு (நினைத்து), குளிரால் நடுக்கமுற்று, யமுனையின் மடுவினின்று (நீர்நிலையிலிருந்து) கரையேறி வந்தார்கள். பிறகு, பகவான் பால்யத்திற்கும் (குழந்தை), யௌவனத்திற்கும் (இளமை) இடையிலிருக்கின்ற அந்தக் கோபகன்னிகைகளைக் கண்டு, தான் சொன்னதை அதிலங்கனஞ் செய்யாமல் (மீறாமல்) சொன்னபடி செய்த அவர்களை நல்லியற்கையினால் அருள்புரிந்து, வஸ்த்ரங்களை எல்லாம் மரத்தின் கிளையடியில் வைத்து, ப்ரீதியுடன் புன்னகை செய்து கொண்டு, அவர்களை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வ்ரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிற நீங்கள், அரையில் ஆடையின்றி ஜலத்தில் ஸ்னானம் செய்ய இழிந்தமையால், தேவதையிடத்தில் அபராதப்பட்டீர்கள். அந்தப் பாபம் தீரும் பொருட்டு, தலையில் அஞ்சலி செய்து, நமஸ்கரித்து, வஸ்த்ரங்களை வாங்கிக்கொள்வீர்களாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தர்மம் அமைந்திருக்கும்படி இவ்வாறு மொழிந்த வசனத்தைக் கேட்டு, கோப கன்னிகைகள் ஸ்ரீக்ருஷ்ணனை வணங்கினர்.
இளமை பருவமுடையவனும், மன இரக்கமுடையவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அவ்வாறு நமஸ்காரம் செய்த அவர்களைக் கண்டு, அதனால் ஸந்தோஷம் அடைந்து, அவர்களுடைய வஸ்த்ரங்களை அவர்களுக்குக் கொடுத்தான். அந்தக் கோபகன்னிகைகள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனால் வஞ்சனை செய்து, வணங்கும்படி நிர்ப்பந்தித்து, வெட்கத்தினின்று விடுவித்து, பரிஹாஸம் (கேலி) செய்து, பொம்மை போல ஆட்டுவித்து, வஸ்த்ரங்களையும் பறித்து, இவையெல்லாம் செய்யப் பெற்றவர்களாயினும், தங்கள் அன்பிற்கிடமான அவனுடைய இணக்கத்தால் ஸந்தோஷம் அடைந்து, தோஷங்களையெல்லாம் மறந்து, அவன் மேல் சிறிதும் குற்றம் காணாது இருந்தார்கள்.
பிறகு, அக்குமாரிகள் தங்கள் தங்கள் வஸ்தரங்களை உடுத்துக்கொண்டு, மிகவும் அன்பனாகிய அவனுடைய ஸஹவாஸத்தினால் அவனுக்கு உட்பட்டு, அவனால் மனம் பறியுண்டு, அவன் மேல் வெட்கத்துடன் பரவுகின்ற கண்ணோக்கமுடையவர்களாகி, அவ்விடத்தினின்று பேராமல் நின்றிருந்தார்கள். ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், தன் பாதாரவிந்தங்களில் தொண்டு செய்ய விரும்பி, அவ்விருப்பம் நிறைவேறும் பொருட்டு, வ்ரதத்தை அனுஷ்டித்த கோப கன்னிகைகளின் அபிப்ராயத்தை அறிந்து, அபலைகளான (பலம் குறைந்தவர்களான) அவர்களைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நல்லியற்கையுடையவர்களே! என்னுடன் கலந்து விளையாடுகையாகிற என் பூஜையில் நீங்கள் அபிப்ராயம் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். அதை நான் அனுமதியும் செய்தேன். அது உண்மையாகவே நிறைவேறும். என்னிடத்தில் மனப்பற்றுடைய உங்களுக்கு, என்னிடத்தில் உண்டாயிருக்கும் காமம், கேவலமான விஷய போகத்தைப் பெறக் (உலகியல் இன்பங்களை அடைய) காரணமாகாது; மோக்ஷத்தையும் விளைத்தே தீரும். நன்றாகப் புழுக்கி வறுத்து இடிக்கப்பட்ட அவல்கள், விதைக்கு உபயோகப்படாது அல்லவா? ஸம்ஸாரமாகிற விதை வீர்யமற்று, மீளவும் ஸம்ஸாரமாகிற முளையை விளைக்கவல்லது அன்று. பெண்களே! ஆகையால், நீங்கள் உங்கள் மனோரதம் கைகூடப்பெற்று, கோகுலத்திற்குப் போவீர்களாக.
நல்லியற்கையுடையீர்களே! நீங்கள் என்னோடு கலந்து விளையாடுகையாகிற ப்ரயோஜனத்தை உத்தேசித்து அல்லவோ காத்யாயனி பூஜையென்னும் ஆராதனத்தை அனுஷ்டித்தீர்கள். அப்படியே, நீங்கள் இதோ வரப்போகிற சரத் கால (இலையுதிர் கால) இரவுகளில் என்னுடன் கூடி விளையாடப் போகிறீர்கள். ஆகையால், உங்கள் மனோரதம் (விருப்பம்) நிறைவேறி விட்டது. நீங்கள் இப்பொழுது கோகுலம் போய்ச் சேருவீர்களாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானால் இவ்வாறு கட்டளையிடப் பெற்ற கோப கன்னிகைகள், தங்கள் மனோரதம் (விருப்பம்) கைகூடப் பெற்று, அவனுடைய பாதார விந்தங்களையே த்யானித்துக்கொண்டு, அவனை விட்டுப் பிரியமுடியாமல், மன வருத்தத்துடன் கோகுலம் போய்ச் சேர்ந்தார்கள். அப்பால் ஒருகாலத்தில், ஸ்ரீக்ருஷ்ணன் கோபாலர்களால் சூழப்பட்டு, தமையனான பலராமனுடன் கூடி, பசுக்களை மேய்த்துக் கொண்டே, ப்ருந்தாவனத்தினின்று வெகுதூரம் சென்றான்.
அப்போது, க்ரீஷ்ம ருது (கோடைக்காலம்) வந்தது. அதனால் வெயில் மிகவும் கொடிதாகக் காய்ந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட அந்த வெயிலில் பசுக்களை மேய்த்துக்கொண்டு போகின்ற நந்தகுமாரன், தங்கள் நிழல்களால் தனக்குக் குடைபோன்றிருக்கின்ற வ்ருக்ஷங்களைப் (மரங்களைப்) பார்த்து, கோபாலர்களைக் குறித்து மேல் வருமாறு கூறினான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அட! குட்டி க்ருஷ்ணா! அம்சூ! ஸ்ரீதாமா! ஸுபலா! அர்ஜுனா! விசாலா! ருஷபா! தேஜஸ்வீ! தேவப்ரஸ்தா! வரூதப! மிகுந்த பாக்யமுடைய இந்த வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) கண்டீர்களா? இவை பிறர்க்காகவே பிழைத்திருக்கின்றன. இவற்றிற்குத் தங்களுக்கென்று ஒரு ப்ரயோஜனமும் (பயன்) இல்லையல்லவா? இவை காற்று, மழை, வெயில், பனி இவற்றையெல்லாம் தாங்கள் பொறுத்துக்கொண்டு, நமக்கு அவற்றையெல்லாம் தடுத்து, ஸுகம் கொடுக்கின்றன.
ஆ! ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஜீவனத்தைக் கொடுத்து உபகரிக்கின்ற (உதவுகின்ற) இவற்றின் ஜன்மம் மேலானது. ஸாதுக்களிடம் சென்ற யாசகர்கள் போல, இவற்றினிடம் வந்த யாசகர்கள் ஒருகாலும் தங்கள் ப்ரயோஜனம் கைகூடாமல் திரும்பிப் போகமாட்டார்கள் அல்லவா? ஸாதுக்களைப் போல இவை, தங்களிடத்தில் உள்ளவற்றை வேண்டினவர்களுக்கு இல்லையென்று சொல்லிப் போகவிட மாட்டா அல்லவா? தங்கள் ஸொத்தையெல்லாம் பறித்துக் கொண்டு போயினும், ஏன் இப்படி செய்கிறீர்களென்று கேட்கவும் கூட மாட்டா அல்லவா?
இலை, பூ, காய், பழம், நிழல், வேர், பட்டை, கட்டை, வாஸனை, சாறு, நீறு, தணல், தளிர், முளை இவை முதலியவற்றால் இவை ப்ராணிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகின்றன அல்லவா? விசித்திரமான பல தேஹங்களையுடைய ப்ராணிகள், ப்ராணன், பணம், புத்தி, வாக்கு இவற்றினால் தம்மைப் போலவே விசித்திரமான பல தேஹங்களையுடைய மற்ற ப்ராணிகளுக்கு நன்மையைச் செய்வார்களாயின், இவ்வளவே அவர்கள் ஜன்மம் பெற்றதற்குப் பயன். ப்ராணாதிகளால் (உயிரினால்) பிறர்க்கு உபகரிப்பார்களாயின், அப்பொழுதே அவர்கள் ஜன்மம் பெற்றதன் பயன் ஏற்படும்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு புகழ்ந்து கொண்டே, தளிர், பூங்கொத்து, காய், பழம், இலை இவற்றின் ஸமூஹங்களால் கிளைகள் வணங்கித் தழைத்திருக்கின்ற வ்ருக்ஷங்களின் (மரங்களின்) நடுவில் நுழைந்து, யமுனைக்குச் சென்றான். மன்னவனே! அங்குச் சென்று கோபாலர்கள் அனைவரும் குளிர்ந்து, தெளிந்து ருசியுள்ளதுமான அந்த யமுனையின் ஜலத்தைப் பசுக்களுக்குக் காட்டி, பிறகு தாங்களும் ருசியுள்ள அந்த ஜலத்தைப் பானம் செய்தார்கள். ராஜனே! பிறகு அந்த இடையர்கள் யமுனைக்கரையிலுள்ள வனத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கையில், பசியினால் பீடிக்கப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ண ராமர்களிடம் வந்து இவ்வாறு மொழிந்தார்கள்.
இருபத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.