வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருப்பாவை - 11 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினொன்றாவது நாள்


“நாம் பாவை நோன்பு ஆரம்பித்து இன்று 11வது நாள் வந்துவிட்டோம். எனக்குத் தெரிந்து நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். ‘அருங்கலப் பாவாய்’ நான் சொல்வது சரிதானே.”


“ஆம் கோதை நம் வயதொத்த கோபியர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். நேற்று நம் வீட்டின் அருகில் உள்ள செல்வப் பெண்டாட்டி நம் நோன்பை பற்றி விசாரித்தார்கள். நானும் தெரிவித்தேன். அவருக்கும் நம் கண்ணன் மேல் தீராக் காதலாம். நோன்பு நோற்க வருகிறேன் என்றார்கள். அவரது இல்லம் செல்வோமா.”

“செல்வோம் பாவாய்.”

செல்வப் பெண்டாட்டியின் இல்லத்தின் முன்…..


“அக்கா, என் வயதொத்த கன்னிகள் வந்துவிட்டோம். நீங்கள் நோன்பு நோற்க வருகிறேன் என்றீர்களாம். வைகுண்டத்தில் உறைபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும் கார்மேகவண்ணன் கண்ணனின் நாமங்களைப் பாடிக் கொண்டு உன் வீட்டு முற்றத்தில் நிற்கிறோம். 

என் தோழிகள் சொன்னார்கள், உங்கள் இல்லத்தில் கன்றுகள் பல ஈன்று வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள் நிறைந்துள்ளது என்றார்கள். அவற்றை பாதுகாப்பதற்கு, எதிரிகள் வந்தாலும் அவர்கள் செருக்கழிய செய்யும் காவலர்கள் உண்டென்றார்கள். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத நல்ல குணங்கள் படைத்த கோவலரின் பொற்க் கொடியே, புற்றில் பாம்பு படமெடுத்து வளைவது போன்று இடையைக் கொண்டவளே., பெருங்காட்டில் தன் இஷ்டப்படி நடனமாடும் மயில் போன்று சாயல் கொண்டவளே, செல்வ வளம் மிக்க சீமாட்டியே., உன் வீட்டு முற்றத்தில் வந்திருக்கிறோம் நம் கண்ணன் முகில்வண்ணன் நாமம் பாடிக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல் படுத்துக் கொண்டிருக்கிறாயே நியாயமா அக்கா. இப்படி இருப்பதால் உனக்கு என்ன பலன் கிட்டப் போகிறது. நீ தானே நோன்பிற்கு வருகிறேன் என்று சொன்னாய். புனமயிலே துயிலெழாய்.”


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக